பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

இரு சக்கர வாகனத்தில் விரையும் பெண்

இரு சக்கர வாகனம் ஓட்டுவது
மிகவும் பிடிக்கும் அவளுக்கு
மிக வேகமாக ஓட்டுவாள்
தனக்கு முன்னே செல்லும்
ஆடவர் ஓட்டும் இரு சக்கர வாகனம்
பேருந்து, லாரி, ஆட்டோ என எல்லாம்
முந்திச் செல்கிறாள்

சொல்வனம்


முதலுதவி வாகனமும் தீயணைப்பு வண்டியும்கூட
அவளுக்காக வழிவிட்டு ஒதுங்கிச் செல்கின்றன
நகரின் எல்லாப் பகுதிகளிலும்
லாகவமாக வண்டியோட்டும் அவள்
சிக்னலில் பச்சை விழுந்த மறுகணம்
சீறிப் பாய்கிறாள்.
வாகனத்துக்கு எரிபொருள் போடும் இடத்தில்
புரவி மீது அமர்ந்திருக்கும்
தேவதையாகக் காட்சி தருகிறாள்
அவள் இன்னும்
வேகமாக வண்டியோட்ட வேண்டும்
என்பதற்காகவே
அரசாங்கம்
தேசிய நெடுஞ்சாலைகளை
அமைத்துக் கொடுத்துள்ளது
தன் முன்னே
நீண்டு செல்லும் அந்தச் சாலையை
எப்படியும் முந்திச் சென்றுவிட வேண்டும்
என்பதே அவள் இலக்கு!

- தபசி

துபாய்க்கார மாமா

சொல்வனம்

ஊருக்கு வரும்போதெல்லாம்
எங்களுக்கு குருவி வெடி வாங்கி வருவார்
ஆச்சிக்கு கோடாலித் தைலம்
தாத்தாவுக்கு பாட்டில் மருந்து
சித்திக்கு ஏதோ ஒரு வாசனைத் திரவியம்
அம்மாவுக்கு ஒரு மோதிரம்
உங்களுக்கு ஒண்ணுமில்லையா என்றால் மட்டும்
எனக்கு வேண்டியது
இந்தூர்லதான்டா இருக்கு என்று
சிரித்துக்கொண்டே சொல்வார்!

- லதாமகன்

ஆண் பாவம்

சொல்வனம்

உள்ளதிலேயே
சிறந்த புகைப்படத்தைத்தான்
பெண் வீட்டுக்கு அனுப்பினேன்

வந்ததிலேயே
சிறந்த புகைப்படத்தைத்
தேர்வு செய்திருப்பார்கள்போல
பதில் இல்லை!

- பா.ராஜாராம்

சாரதிக்கு ஒரு குறுஞ் செய்தி...

சொல்வனம்

சென்ற மாதத்தின்
கோர விபத்தில்
இறந்துபோனான்
சாரதி - என் நண்பன்

இன்னும் என்
அலைபேசியில்
அழிக்கப்படாமல் இருக்கிறது
99...................

அவன் அனுப்பிய
வாழ்த்துக்கள், வணக்கங்கள்,
நகைச்சுவைகள், இன்னும்
இருக்கின்றன இன்பாக்ஸில்

காலை வணக்கமும்
இரவு வணக்கமும்
எல்லாருக்கும்
அனுப்பும்போது

சரவணன் எண்ணைக்
கடக்கும்போது
சாரதி
99..........க்கு
அனுப்பாமல்
கடக்க முடியவில்லை.

கண்களும் மனசும்
தேங்கிவிடுகிறது
அங்கேயே.

ஆகவே...
இன்றும்
அனுப்பிக்கொண்டிருக்கிறேன்
அதே எண்ணுக்கு.

நிச்சயம்
காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
என் குறுஞ்செய்திகளை
படித்துக்கொண்டிருப்பான்...

பதில் செய்தி
அனுப்ப இயலாத
சாரதி (எ) பார்த்தசாரதி!

- இரா.பூபாலன்

முன் வரவு

சொல்வனம்

கதறியழும்
சாவு வீடுகளுக்குச்
செல்கையிலும்
வாசலில்
விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தைகளின்
கன்னம் கிள்ளிக்
கொஞ்சப் பிடிக்கிறது!

- மு.முருகேஷ்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு