பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

யானைக் கனவு

கனவில்
யானை துரத்தத்
திடுக்கிட்டு விழித்தேன் -
தூக்கம் கலைந்து.

யானைக் கனவு
நல்லதென
நம்பிக்கை அளித்தாள் பாட்டி.

எதற்கும்
பிள்ளையாருக்கு
ஒரு அர்ச்சனை பண்ணிவிடு
என்றாள் அம்மா.

கனவுகளுக்கு எல்லாம்
அர்த்தம் தேடி
அலையாதே
அரியர் பேப்பர்ஸை
கிளியர் செய்யப் பார்
அட்வைஸ் வழங்கினார்
அப்பா.

'யானை என்பது
காமத்தின் குறியீடு
உன் காமமே
உன்னைக் கனவில் துரத்துகிறது'
உளவியல் படித்த நண்பனின்
உளறல் இது.

இப்படியாகவும்
இன்னுமாகவும்
கனவு குறித்த
கணிப்புகளும்
கவலைகளும்.

ஒருநாள் எதிர் வந்தது
ஒப்பிலியப்பன் கோயில் யானை
பயந்து நடுங்கி விலகுகையில்
தும்பிக்கை தூக்கி
ஆசீர்வதித்தது.

நல்ல வேளையாய்
என்னைத் துரத்துவதுபோல்
கனவேதும்
கண்டிருக்கவில்லை
யானை!

-ஆர்.எஸ்.பாலமுருகன்

நேற்று நடந்தது

தளர்ந்த உன் கரங்களைத்
தடவியபடி கேட்டேன்
நாம் கடந்த வாழ்வை
எவ்விதம் நீ உணர்கிறாய்?

சொல்வனம்

திறந்திருந்த கதவில்
பிணைத்திருந்த பூட்டைப்போல என்றாய்
எனக்கும்
அந்தப் பதில்
சம்மதமாகத்தான் இருந்தது!

- காலத்தச்சன்

ஏக்கம்

அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியில் இருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயில் இருந்து
எச்சிலாக வடிகிறது!

- நாவிஷ் செந்தில்குமார்

சகுனம்

அப்பா
இறந்துபோன பிறகு
சகுனம் பார்ப்பதில்லை
எதிரில்
வருவோரெல்லாம்
அம்மாவாகவே
தெரிகிறார்கள்!

- கோ.பாலமுருகன்

ஆ... காட்டு!

ஆ... காட்டு
ஆ... காட்டு என
நிலவைக் காட்டிச்
சோறு ஊட்டுவாள் அம்மா.

ஒவ்வொரு முறையும்
ஆ... காட்டி
ஆ... காட்டி
ஏக்கத்துடன் பார்த்திருக்கும்
நிலா!

- பா.விஜயராமன்

நிகழ்ச்சித்
தொகுப்பாளினியின்
ஒரு மணி நேரம்

தொலைக்காட்சி வரலாற்றில்
ஆயிரத்து ஆயிரமாவது முறையாக
சொல்லப்படும்
அழகுக் குறிப்பை
அருமை என்கிறாள்.

நலம் விசாரிப்பவர்களிடம்
நலமாயிருப்பதாகச்
சொல்லிச் சொல்லியே
நலமிழக்கிறாள்.

ஆபாசப் பாடலைப் பாடிக்காட்டும்
பால்வாடிப் பாப்பாக்களிடம்
கீப் இட் அப் என்கிறாள்.

கவிதை சொல்கிறேன் என்று
உளறுபவர்களிடம்
ஆஹாவெனக்
கை தட்டுகிறாள்.

'அழகாயிருக்கீங்க' என்பதற்கும்
'டிரெஸ் நல்லாயிருக்கு' என்பதற்கும்
அவஸ்தையாகச் சிரித்துவைக்கிறாள்.

பாடுவதாகச் சொல்லி
கத்துபவர்களிடம்
கட்டை விரல் உயர்த்திக் காட்டி
'சூப்பர்ப்' என்கிறாள்.

முன் வந்து விழும்
முடியை
முப்பத்தி இரண்டாவது முறையாகப்
பின்னிழுத்துவிடுகிறாள்.

வெறுப்பேற்றும்
அறுவை மன்னர்களிடம்...
பேசியதில் மகிழ்ச்சி என்று
சொல்லிவிட்டு...
அடுத்த நாளும்
அதே நேரம்
அதே நிகழ்ச்சியில்
சந்திப்பதாகக் கூறி
விடைபெறும்
அவளைப் பார்க்கப்
பாவமாகத்தான் இருக்கிறது!

- சுமதி ஸ்ரீ

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு