பிரீமியம் ஸ்டோரி
விக்கி சைலா ஜீபா

விக்கி, சைலா, ஜீபா மூவரையும் அந்த நிஞ்சா முகமூடிகள் ஒரு பிரமாண்டமான கண்ணாடி அறையில் அமர வைத்தார்கள். அந்த அறையில் வேறு யாருமே இல்லை. 'இங்கேயே இருக்கவும்’ என்பது போல சைகை செய்துவிட்டு மூவரும் சென்றுவிட்டார்கள். அவர்கள் வெளியே நடந்துசென்று வேனில் ஏறிக் கிளம்பியது கண்ணாடி வழியாகத் தெரிந்தது. ஜீபா அந்த அறையை நோட்டமிட்டது. அறுங்கோண வடிவில் இருந்த அந்த அறையின் சுவர்கள் எல்லாம் கண்ணாடி போல காட்சி அளித்தாலும் எல்லாமே மானிட்டர்கள். பிரமாண்டமான சைஸில் மானிட்டர்களே சுவர்களாக இருந்தன. மிக ரகசியக் குரலில் ஜீபா கிசுகிசுத்தது, ''இது நம்மைக் குழப்புவதற்காக வெச்சிருக்கிற ரூம். இந்தக் கண்ணாடி வழியா தெரியறது எதுவுமே நிஜம் கிடையாது. இப்ப, நம்மை விட்டுட்டு அந்த முகமூடிகள் வேன் ஏறிப் போனதுகூட வெறும் இமேஜ்தான்! அவங்க

##~##

இங்கேயேதான் நம்மைக் கண்காணிச்சுட்டு இருக்காங்க...'' என்றது. ''சரி... அதுக்கு ஏன் இப்படி ஹஸ்க்கி வாய்ஸ்லே பேசி பயமுறுத்துறே?'' என்றான் விக்கி. ''இங்கே இருக்கிற சென்ஸார்கள் நாம் பேசறதை ஒட்டுக் கேட்டு, அதை அப்படியே அவங்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லிட்டு இருக்குது. ரகசியமா இந்த வால்யூம்ல பேசினா நம்ம வாய்ஸை அந்த சென்ஸாரால ரீடு பண்ண முடியாது...'' என்றது ஜீபா. விக்கியும் சைலாவும் இந்த டெக்னாலஜியைப் பார்த்து அசந்து போயிருந்தார்கள். ''இதுக்கே வாயைப் பிளக்காதீங்க... இன்னொரு விஷயத்தையும் நான் கண்டுபிடிச்சுட்டேன். நீங்க அதை ஃபீல் பண்ணும்போது சொல்றேன்'' என்று ஜீபா சஸ்பென்ஸ் வைத்தது.

''சரி ஜீபா, நாம இப்போ எதுக்காக இங்கே வெயிட் பண்றோம்?'' என்று கேட்டாள் சைலா. ''நாம இங்கேயிருந்து தப்பிக்க முயற்சி செய்றோமா... இல்ல பிரதீப் அங்கிளைச் சந்திக்க வேறு ஏதும் வழி வெச்சிருக்கோமான்னு பாக்கறாங்கன்னு நினைக்கறேன். நாம எதுவும் செய்யாம இருக்கறது நல்லதுன்னு படுது. கொஞ்சம் பொறுமையா இருந்தாதான் அங்கிளையும் கண்டுபிடிக்க முடியும். அந்த இன்னொரு பாதையைப் பத்தியும் தெரிஞ்சுக்க முடியும்...'' என்றது ஜீபா. மூவரும் அங்கே போடப்பட்டிருந்த கண்ணாடி நாற்காலிகளில் அமர்ந்து காத்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருக்கும். அறைக்கு வெளியே இரண்டு நிஞ்சா முகமூடிகள், ஒருவரைக் கைத் தாங்கலாக நடத்தி வந்தார்கள். அந்த நபர் பேன்ட் மட்டும் அணிந்தபடி வெற்றுடம்போடு இருந்தார். அவரது சட்டையாலேயே அவரது முகத்தை மூடிக் கட்டி இருந்தார்கள். ''அவரைப் பார்க்க நம்ம பிரதீப் அங்கிள் மாதிரியே இருக்கே...'' என்றாள் சைலா. ''ஆமாம், ஏற்கனவே நடந்த காட்சிதான்! இப்ப இந்த சுவர் மானிட்டர்களில் போட்டு ரியலா வெளியிலே நடக்கற மாதிரி காட்றாங்க'' என்றது ஜீபா ரகசியக் குரலில்.

விக்கி சைலா ஜீபா

பிரதீப் அங்கிளின் உடம்பில் நிறைய காயங்கள் இருந்தன. அவரை ஒரு வேனில் ஏற்றி, எங்கோ அழைத்துச் சென்றார்கள். இதைப் பார்த்ததும் விக்கி, ''ஜீபா! இதுக்கு மேலே வெயிட் பண்ண வேணாம்...'' என்று உரக்க ஏதோ சொல்ல வந்தவனைத் தடுத்து, ''மெள்ளப் பேசு...'' என்றது ஜீபா ரகசியமாக. விக்கியும் சுதாரித்துக்கொண்டு மெள்ளப் பேசினான், ''இதுக்கு மேலே வெயிட் பண்ண வேணாம் ஜீபா... அந்த இன்னொரு வழி எப்படியாச்சும் போகட்டும். அங்கிளை உடனே காப்பாத்தணும்! இவனுங்க அவரை ஏதாவது செஞ்சுடப் போறாங்க...'' என்றான் பதறலாக.

ஜீபா அவனை ஆசுவாசப்படுத்தியது. ''அதோ ஒரு கதவு இருக்கு விக்கி!'' என்றாள் சைலா. உடனே விக்கி ஓடிச் சென்று அந்த கதவைத் திறந்தான். அடுத்த நிமிஷம் அந்தப் பகுதியே திறந்த வெளியாக மாறியது. அறைக்கு வெளியே மூன்று பேரும் இருந்தார்கள். கரடு முரடான மலைப் பாதை ஒன்று எதிரே தெரிந்தது. விக்கி நடக்க ஆரம்பிக்க, அவனோடு ஜீபாவும் சைலாவும் பின்தொடர்ந்தார்கள்.  

சட்டென்று விக்கியை நிறுத்தியது ஜீபா. என்ன என்பது போல பார்த்தவனிடம், ''ஒரு நிமிஷம் தரையை நல்லா உற்றுப் பார்... இவ்வளவு தூரம் நடந்தும் நாம் அதே இடத்தில்தான் நின்றிருக்கிறோம்'' என்றது ஜீபா. அவர்கள் இருந்த அறையின் தரை அடையாளங்கள் அப்படியே இருக்க விஷயம் புரிந்தது...

விக்கி அந்தக் கதவைத் திறந்ததுமே அந்த அறையில் ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட்டே நடந்திருந்தது. சுற்றிலும் இருந்த மானிட்டர் சுவர்கள் அந்த இடத்தை ஒரு அறைபோல இல்லாமல் திறந்தவெளி போலக் காட்டியது. தரை அப்படியே கரடு முரடு மலைப் பாதை போல ஏற்றம் இறக்கத்தோடு மாறியது. விக்கியும் மற்றவர்களும் நடக்க நடக்க அந்தத் தரையும் அதற்கேற்றபடி அசைந்து கொடுத்து, 'ட்ரெட் மில்’ மாதிரி நகர்ந்திருக்கிறது. அவர்கள் போகப் போக மானிட்டர் சுவர்களில் மரங்களும் பாறைகளும் நகர்ந்து, நிஜம் போல கிராஃபிக்ஸ் செய்திருக்கிறது. இவை அனைத்தையும் ரொம்பத் துல்லியமாக கவனிக்காவிட்டால், எல்லாமே நிஜமாக நடப்பது போலவே தோன்றி ஏமாற்றி இருக்கும். நல்லவேளையாக ஜீபா உஷாராகி மற்றவரையும் சுதாரிக்க வைத்துவிட்டது.

விக்கி சைலா ஜீபா

''ரொம்ப அட்வான்ஸ் டெக்னாலஜியா இருக்கு ஜீபா... இதுதான் நீ சொன்ன சஸ்பென்ஸ் விஷயமா ஜீபா? இப்படி எல்லாம் இவங்க கண்டுபிடிச்சு வெச்சிருக்கிறது நல்லதுக்கா கெட்டதுக்கா?'' என்று கேட்டாள் சைலா. ''நல்லதுக்குனா உடனே எல்லாருக்கும் அறிவிச்சு இருப்பாங்களே... இந்த மலை முழுக்க விஷ ஜந்துக்கள் இருக்குன்னு சொல்லி... மக்கள் இந்தப் பக்கமே வராம செஞ்சுட்டு, ஒட்டுமொத்தமா வளைச்சு  ஆக்கிரமிச்சுக்க மாட்டாங்களே!'' என்றது ஜீபா.

''சரி ஜீபா, இப்படி ஒரு மேஜிக் ரூம்லே நம்மை எதுக்கு அடைச்சு வைக்கணும்?'' ''இதைப் பத்தி தெரியாதவங்க ஒரே இடத்தில் நடந்து நடந்தே சோர்ந்து போயிடுவாங்க எதிராளியை ஒரு குழப்பமான நிலையில் வெச்சு ஸ்தம்பிக்க வைக்கற திட்டம் இது'' என்றது ஜீபா.

''நான் நினைக்கிறேன், இதே மாதிரி நிறைய மேஜிக் ரூம்ஸ் இந்த மலைலே ஆங்காங்கே வெச்சிருப்பாங்கன்னு. யார் இவங்களைப் ஃபாலோ பண்ண வந்தாலும் இந்த மேஜிக் ரூமுக்குள்ளே மாட்டிப்பாங்க. அதுக்கப்புறம் ஜீபா சொன்ன மாதிரி பைத்தியமா திரிஞ்சு டயர்டாக வேண்டியதுதான்...''

''சரி, இப்ப நாம எப்படி வெளியே போறது?'' என்று கேட்டான் விக்கி. ''ரொம்ப சிம்பிள்... இந்த மானிட்டர்களை எல்லாம் உடைச்சுட்டா போச்சு!'' என்றாள் சைலா. ''அதுதான் இல்லை! இந்த மானிட்டர்ஸ் எல்லாம் நம்ம வீட்டில் இருக்கிற டிவி பெட்டி மாதிரி இல்லே... இரும்பு மாதிரியான ஏதோ ஒரு புது மாதிரியான மெட்டல் ஃப்ரேம்ல செஞ்சிருக்காங்க... லேஸில் உடையாது'' என்றது. விக்கியும் சைலாவும் ஷாக்காகி மிரண்டார்கள். ''அய்யோ! அப்ப நம்ம கதி...?'' என்றாள் சைலா.

அப்போது, பின்பக்கத்திலிருந்து தடாலென்று ஒரு சத்தம் கேட்டது. அந்த அறைக்குள் ஒரு உருவம் உருண்டு வந்து விழுந்தது. பேன்ட் மட்டும் அணிந்தபடி முகத்தை சட்டையால் சுற்றிக் கட்டி இருந்தார்கள். ''அய்யோ! அங்கிள்..!'' என்று பதறியபடி விக்கியும் சைலாவும் அங்கே ஓடினார்கள். ''வெயிட்! நான் வர்றேன்...'' என்ற ஜீபா, அருகில் சென்று சர்வ ஜாக்கிரதையாக அந்த உருவத்தின் தலையில் சுற்றி இருந்த சட்டையை அவிழ்த்தது.

அது பிரதீப் அங்கிள் இல்லை.

விக்கி சைலா ஜீபா

''நான் ஒரு மிலிட்டரி ஆபிஸர். பிரிகேடியர் செல்வகுமார் என் பேரு. இவங்களோட பவர் என்னன்னு தெரிஞ்சுக்க அரசு என்னை இங்கே ரகசியமா அனுப்பி இருந்துச்சு. எல்லாத்தையும் ரொம்ப சாமர்த்தியமா கண்டுபிடிச்சுட்டு திரும்பற நேரத்துல இந்த மாதிரி ரூம்ல மாட்டிக்கிட்டேன்'' என்றார்.

''நம்ம கவர்மென்ட்டுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கா... ரகசியமா எல்லாம் நடக்குது போல!'' என்றாள் சைலா.

''ஆமா! இப்ப பிரதீப்னு ஒரு ரிப்போர்ட்டரையும் பிடிச்சு இருக்காங்க. அவர்கிட்டே நிறைய ஆதாரங்கள் இருக்கு. அவரையும் இதே மாதிரி ஒரு ரூம்லதான் அடைச்சு வெச்சிருக்காங்க!'' என்றார்.

''பிரிகேடியர் சார், இவங்களுக்கு இன்னொரு வழி இருக்கணுமே...'' என்று  ஜீபா இழுத்ததுமே அவர் சொன்னார், ''ஆமா! இருக்கு. அந்த வழியைக் கூட நான் பாத்துட்டேன்... இங்கே இருந்து வெளியே போயிட்டாப் போதும். எல்லாத்தையுமே நாம எல்லாரும் சேர்ந்து சமாளிச்சுடலாம்!'' என்றார்.

விக்கியும் சைலாவும் ஜீபாவைப் பார்த்தார்கள். 'சரி போவோம்!’ என்பது போல தலையை ஆட்டியது ஜீபா...

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு