பிரீமியம் ஸ்டோரி

அது !

நச் கதைகள் !
##~##

உச்சி வெயில் மண்டையைத் தாக்கியது. நான் அந்த ஹோட்டலுக்கு எதிர்ப்பக்கம் நின்றிருந்தேன். உள்ளே இருந்து ஒரு பெரியவர் வந்தார். அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். கழுத்தில் செயின், விரலில் மோதிரம் என வசதியானவர். ஆனாலும் நடந்தே வருவார். சில அடிகள்தான் சென்றிருப்பார்... திடீர் எனத் தடுமாறி விழுந்துவிட்டார். அவரிடம் இருந்து அது நழுவி, உருண்டு சென்றது. நான் உடனே அங்கே சென்றேன். அந்த இடம் பரபரப்பானது. நான்கு பேர் சூழ்ந்தார்கள்.

''அடடா... பெரியவர் விழுந்துட்டாரு... சோடா கொண்டு வாங்கப்பா...'' ''ரொம்ப வெயில் இல்லே... அதான்!'' என்றார்கள்.

பெரியவருக்கு சோடா கொடுத்து மயக்கம் தெளிவித்தார்கள். முகவரியை விசாரித்து, ஆட்டோவில் ஏற்றினார்கள். யாருமே அதைக் கவனிக்கவில்லை. எல்லோரும் சென்றதும் சட்டென அதை எடுத்துக் கொண்டேன். 'பெரியவரே... மன்னிச்சுடுங்க. பசி என்னை இப்படி செய்ய வைக்குது. உங்களுக்கு எதுவும் ஆகாது. நீங்க நல்லா இருக்கணும்’ என நினைத்தபடி ''கா...கா'' என கத்தியவாறு அந்த வடையுடன் பறந்தேன்!

                  -யுவா

சக்கரம் !

நச் கதைகள் !

கடுமையான டிராஃபிக். அப்பா கார் ஓட்டிக்கொண்டிருந்தார். அம்மா, அக்கா, பாட்டி எல்லோரும் காரில் இருந்தார்கள். பின்னாலேயே... ரஞ்சித் வேன் ஓட்டியபடி வந்துகொண்டிருந்தான். திடீரென்று வேனின் முன் சக்கரம் கழன்று ரோட்டில் ஓடியது. ரஞ்சித் இதை எதிர்பார்க்கவே இல்லை. சக்கரம் ரோட்டில் உருண்டோடிச் செல்வதை காரில் இருந்த எல்லோரும் பார்த்துக் கத்தினார்கள். அப்பா காரை ஓரம் கட்டி நிறுத்தினார். டிராஃபிக்கை கை காட்டி நிறுத்தியபடி ஓடிச் சென்று சக்கரத்தை எடுத்து வந்தார்.

பதட்டமாக உட்கார்ந்திருந்த ரஞ்சித்திடம் சக்கரத்தைக் கொடுத்தவர், ''நான் அப்பவே சொன்னேன்... கேட்டியா? ஆயிரம் ரூபா பொருள்... வீணாப் போயிருக்கும். கொண்டா அதை'' என்று ரஞ்சித்திடமிருந்து வேன் பொம்மையை  வாங்கி முன் சீட்டில் வைத்துக்கொண்டார் அப்பா.

இரவு நேரம் !

நச் கதைகள் !

இரவு நேரம். அந்த பங்களாவின் முன் மூன்று பேர் வந்து நின்றார்கள். ''இந்த வீடுதானா?'' முதலாவது ஆள் கேட்டான்.  

''ஆமா!'' என்றான் அடுத்தவன். ''பிரச்னை வராதே?'' இது மூன்றாவது ஆள்.

''வீட்டிலே இருக்கறது வயசான தாத்தா பாட்டிதான். பசங்க வெளிநாட்டில். தைரியமா வாங்க'' இது ரெண்டாவது ஆள்.

''இந்த நேரம் சரியா இருக்குமா?'' என்றான் முதலாமவன்.

மூன்றாவது ஆள், பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தபடி, ''அதுக்கு என்ன செய்யறது? கதவைத் திறந்ததும் உள்ளே போனோமா... காரியத்தை முடிச்சோமான்னு இருக்கணும்'' என்றான்.

''அது உங்க சாமர்த்தியம். எனக்கு சேர வேண்டியதை சரியா கொடுத்துடணும்'' என்றான் ரெண்டாவது ஆள்.

வாசல் கேட்டைத் திறந்து, கதவை நெருங்கி காலிங்பெல்லை அழுத்தினார்கள். கதவு மெதுவாகத் திறந்து, அந்த வயதான ஆண் முகம் எட்டிப் பார்த்தது.

இரண்டாவது ஆள் பேசினான்... ''வணக்கம் சார். நான்தான் புரோக்கர் மணி. மேல் வீட்டு வாடகைக்கு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கேன். கையோடு அட்வான்ஸ் கொண்டுவந்திருக்கார். ஸாரி... டிராபிக் ஜாம்ல லேட் ஆயிடுச்சு'' என்றான்.

-யுவா

லேட் !

நச் கதைகள் !

வழக்கமாக எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுகிற ஸ்கூல் வேன் அன்று எட்டு பத்து ஆகியும் காணவில்லை. 'என்ன ஆகியிருக்கும்?’ என வேனை எதிர்பார்த்து இருந்தான் சிவக்குமார். எட்டே கால் மணிக்கு ஸ்கூல் வேன் வந்து நின்றது. காத்திருந்த சிவக்குமார் தயாரானான். ''ஹாய் சிவா!'' என்று வேனில் இருந்த சுட்டிகள் எல்லோரும் மாற்றி மாற்றிக் குரல் கொடுத்தார்கள். சிவக்குமாருக்கு சந்தோஷமாக இருந்தது. எல்லோருக்கும் பதிலுக்கு ''ஹாய்'' என்ற சிவக்குமார், ''என்னண்ணே லேட்டு?'' என்று டிரைவரைக் கேட்டான். ''தோ! இந்த சௌம்யா வர லேட் பண்ணிட்டா!'' என்ற டிரைவர், ''சரி சரி, நீயும் லேட் பண்ணாதே... சட்டு புட்டுன்னு பத்து லிட்டர் டீசலை நிரப்பு!'' என்று பரபரத்தார்.

பரீட்சை !

நச் கதைகள் !

பரீட்சை ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. புருஷோத்தமன் ரொம்பவே டென்ஷனாக இருந்தான். முன்னதாகவே பள்ளிக்கு வந்துவிட்டான். அவனுக்கு முன்னரே சில மாணவர்கள் அங்கே படித்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தமன் இன்னொரு முறை எல்லாவற்றையும் திரும்பப் பார்த்தான். சந்தேகமாக இருக்கிற எல்லா இடங்களையும் இன்னொரு முறை பார்த்து வைத்தான்.

சரியாக கால் மணி நேரம் இருக்கும்போது பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளே நுழைந்தார். ''எந்த வழியாவும் எந்தத் தப்பும் நடந்துடக் கூடாது... காம்பவுண்டு, ஜன்னல் பக்கம் எல்லாம் செக் பண்ணியாச்சா?'' என்றபடி நடந்தவர், ''நீதான் புதுசா சேர்ந்திருக்கிறவனா? பேரு என்ன சொன்னே?'' என்று கேட்டார். ''புருஷோத்தமன்... சார்'' என்றபடி அவர் பின்னால் பணிவாக ஓடினான் அந்த பியூன்.

கும்பல் !

நச் கதைகள் !

சாலை ஓரமாக நின்றிருந்தேன். ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் தடதடவென என்னைச் சூழ்ந்துகொண்டது. எல்லோரது கையிலும் ஆயுதங்கள். என்னைக் குறிவைத்துதான் வந்திருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அந்த வழியாகப் போகிற யாராவது எனக்கு ஆதரவாக உதவிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தேன். எல்லோரும் ஏதோ சினிமா ஷூட்டிங் போல வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள். ஒருவன் என்னை எட்ட இருந்தே கயிற்றை வீசி இழுந்தான். இன்னொருவன் என்னை ஓங்கி வெட்டினான்.

''அய்யோ! இப்படி அநியாயம் பண்றீங்களேடா... விடுங்கடா!'' என்று கத்தினாள் ஒரு பாட்டி. ''சும்மா கத்தாதேமா... ஒரு கோடி ரூபா ப்ராஜெக்ட்டு! இந்த ரோடை அகலப்படுத்த திட்டம் போட்டா... நந்தி மாதிரி குறுக்கே இடஞ்சல் பண்ணா இதான் கெதி!'' என்றவன் உரக்கக் கத்தினான், ''சீக்கிரம் வெட்டிச் சாய்ங்கடா அந்த மரத்தை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு