பூஜ்ஜியங்கள்
ஆறாவது வகுப்பு
இ பிரிவில் மறக்க முடியாதவன்
வே.அரங்கநாயகம்
வருடத்துக்கு நாலு முறை
கணக்குப் பாடத்தில்
முட்டை எடுப்பான்.
ஒரு தேர்வில்
பத்தோடு பத்தைப் பெருக்கி
பத்துக்குப் பிறகு
பத்து பூஜ்ஜியங்களைப் போட்டது
உலகப் பிரசித்தம்
வாத்தியார் வெங்கடரமணி
அதைச் சுழித்து
பத்து முட்டைகள் போட்டது
கூடுதல் சுவாரஸ்யம்.
கோழிப் பண்ணை வைக்கலாம்டா
கிண்டலடித்தாலும் வைய மாட்டான்
பூஜ்ஜியங்களுக்கு மதிப்புள்ளன
புன்னகையோடு சொல்வான்
பத்தாம் வகுப்பில்
பாதியைத் தாண்டாத
அரங்கநாயகம் போட்டோவை
வெகு நாட்களுக்குப் பிறகு
செய்தித்தாள்களில் பார்க்க நேரிட்டது
மத்திய அமைச்சராம்
ஆயிரம் கோடி ஊழலாம்
சட்டென எண்ண வரவில்லை
எத்தனை பூஜ்ஜியங்கள்?
- என்.விநாயக முருகன்
அர்த்தம்
ஆட்டோவில் ஏறியதும்
டைகர் குரைத்த குரைப்பை
ஊருக்குப் புறப்படுவதால்
பிரிய மனமின்றி
குரைப்பதாக
அர்த்தப்படுத்திக்கொண்டாள்
மைவிழி.
டைகரின் குரைப்புக்கு
அர்த்தம்
'அடிப்பாவி...
ஊருக்குப் போறியே
நேரத்துக்கு யாரு எனக்கு
சோறு போடுவாங்க'
என்பதாகவும் இருக்கலாம்!
- வீ.விஷ்ணுகுமார்
ஞானம்
கண் தானம்பற்றிய
விளம்பரங்களில்
அந்தப் புகைப்படமும்
அந்த வார்த்தைகளும்
புத்திசாலித்தனமும்
அழகாய் இருந்தன
எல்லாவற்றையும்
தெளிவாகப் பார்க்க முடிவதுதான்
குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது!
- லதாமகன் |