"சீக்கிரம் முடிவைச் சொல். பிறவிப் பெருங்கடல் நீந்துவதை விட்டு, உன்னுடன் பேசிப் பொழுதை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம்" என்றார் ஃபிகரர்.
நான் பீதியடைந்து "விட்ருங்க சார்... நான் ஓடிப்போயிடறேன்" என்றேன்.
"ஆனால், உன் பிரச்னைகளில் இருந்து எங்கே ஓடுவாய்? நாளை வினோத்தின் பழியை ஏற்றுக்கொள். உன் கடை மூடப் படுவதைப் பார். காதல் தோல்வியைப் பெறு. உன் நண்பன் குணாவின் மரணத்தைப் பார். கடைசியில் ஜோசப்பால் நீயும் இறந்து போ! லீடரே, இவன் வேஸ்ட். நான் பி.பெ. கடல் நீந்தப்போகிறேன்..." என்ற ஃபிகரர்,
"ஓவர் இருபது ஆட்டமாய் வாழ்வு
ஃபீவர்கூட கேட்டிடும் நம்மைக் காவு
எவர் தடுப்பினும் வரும் மூப்பு - தைரியத்தை
கவர் செய்தால் லைஃபே டாப்பு!" என்று முடித்தார்.
"லீடர், என் பாடல்களைப் புஸ்தகமாபோடட் டுமா?"
"வ்யாக்ரம் நைவ ச நைவ ச; அகாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர் பல காத..." என்றார் ஸைட்டர்."
புலிகளும் சிறுத்தைகளும் பிரியாணிக்காகக் கொல்லப்படுவது இல்லை. சிங்கம்-65 எங்கும் கிடைப்பது இல்லை. பலவீனமான ஆடுகள்தான் டைனிங் டேபிளுக்கு வருகின்றன. வீரர்கள்தான் வெற்றி நங்கையின் படுக்கையறைக்குச் செல்ல முடியும். கோழைகள் அவளை ஸைட் அடிப் பதோடு திருப்தி அடைய வேண்டியதுதான். நீ தைரியமாக முடிவெடுப்பாய் என நம்புகிறேன்!"
எனது இன்றைய, நாளைய தினங்களை யோசித்தேன். எப்படிப் பார்த்தாலும், தப்பிக்க வழியற்று இருக்கிறேன். எப்படியும் ஜோசப்பால் நாளை இறக்கத்தான் போகிறேன். முடிந்த அளவு இந்த இரவல் வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்தால் என்ன? எனது வாழ்க்கையைச் சற்று நகர்த்திப் பார்த்தால் என்ன?
"இப்போது மணி, இரவு 10. நீ எதிர்காலத்தில் சஞ்சரித்துவிட்டு, அதிகாலை 6 மணிக்குள் திரும்பிவிடலாம்!"
கண்களை மூடிப் படுத்திருந்தேன். குளித்த உடலில் இருந்து நீர் லேசாகச் சொட்ட, இடுப்பில் சிறு துண்டு. வேர் ஒன்றை மெல்லக் கொடுத்தார்கள். ஸைட்டர் அருகில் அமர்ந்து எதையோ முணுமுணுக்க, ஃபிகரர் அவருக்கு உதவியாக ஓடிக்கொண்டு இருந்தார். "உயிருக்கோ, உடம்புக்கோ ஓர் ஆபத்தும் வராதே?"
"எத்தனை தடவை சொல்லியாயிற்று! உன் உயிருக்கு ஆபத்து வராது. உன் உடல் இங்கே சிரத்தையுடன் பாதுகாக்கப்படும்."
"வலிக்குமா லீடர்?"
ஸைட்டர் சிரித்தார். "உடலில் இருந்து இயல்பாக வெளியேறுபவை பரவசத்தையே தரும். மல ஜல வெளியேற்றம்போல, சூக்கும உடலின் வெளியேற்றமும் அப்படியே!"
"பிறகு என்னங்க நடக்கும்?"
"மெள்ள நீ உடலில் இருந்து விடுபட, உன் சூக்கும உடல் நீ விரும்பும் எதிர்காலத்தை அடையும். கனவில் பயணிப்பதுபோல் உணர்வாய். அரூபமாக மிதந்தவாறே அங்கு நடப்பவற்றைக் காண்பாய். நீ அவற்றில் பங்கு பெறவோ, உன் இருப்பை உணர்த்தவோ முடியாதே தவிர, அனைத்தையும் காண்பாய்; கேட்பாய்,நிகழ்ச்சி களை உள்வாங்கிக்கொள்வாய்!"
"பிறகு?"
"காலை 6 மணிக்கு என் மந்திர சக்தியால் உன் சூக்கும உடல் இழுக்கப்பட்டு உன் உடலை அடையும். ஒருவேளை, 6 மணிக்கு முன்னதாகவே நீ திரும்பவேண் டும் என்றால், ஒரு மந்திரம் உபதேசிப்பேன். அதை மூன்று முறை உச்சரித்தால் போதும், நீ உன் உடலை அடைவாய்" என்றார் ஸைட்டர். உபதேசித்தார். "இதைவிட ஒருத்தனால எப்படிப்பா உதவ முடியும்?"
"நாளை காலை 6 மணிக்கு வந்துரலாம்ல?"
"ஷ்யூர். 5.59-க்கு வந்துவிடுவாய். அப்புறம் நாளைய தினத்தில் நீ அடிப்பது எல்லாமே சிக்ஸர்கள்!"
"சீக்கிரம் எதிர்காலத்தை எட்டிப்பார்த்துட்டு, காலை 6 மணிக்குத் திரும்பி, பொழப்பப் பாருப்பா" என்றார் ஃபிகரர்.
"எவ்வளவு காலம் முன்னோக்கிப் போகணும்? அதுக்குத் தகுந்த மாதிரி குளிகை தயார் பண்ணணும்; மந்திரம் உச்சரிக்கணும்."
எவ்வளவு காலம் தாண்டலாம்? நாளை மறுநாள்? வேண்டாம், அதற்குள் என்ன பெரிய மாறுதல் இருக்கப் போகிறது? ஒரு வருடம்... இன்று இருக்கும் அதே வாழ்க்கையைப் பார்க்க நேர்ந்தால், நான் நொந்து விடுவேன். ம்... ராமாயணத்தில் முக்கியப் பங்கு வகித்த காலம்! அதுதான் சரி. இந்த இடைவெளியில் மனிதனின் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் பிறந்து, அவனே புதிய மனோபாவத்துடன், புதிய பிறவியை உணர்ந்திருப்பான். எல்லாமே மாறி இருக்கும்!
"14 வருடங்கள் தாண்டிச் செல்ல விரும்புகிறேன்!" என்றேன்.
|