அந்த டி.வி-க்காரன் காட்டியதை எல்லாம் அப்படி அப்படியே நம்பிவிட்டது உங்கள் குற்றமே அன்றி, எங்கள் குற்றம் எள்ளளவும் இல்லை. வருஷத்துக்கு ஒரு ராத்திரி, ஒரே ஒரு ராத்திரி மட்டும் அதுவும் மூன்று விடலைப் பயல்களை மட்டும் மஞ்சள் குளிப்பாட்டி, ருத்திரனின் ஆவேசத்தை அவர்கள் மீது பாய்ச்சி, 'ஆடுங்கடா மச்சி... ஆடுங்கடா' என்று குதிம்குதிம் எனக் குதிக்கவிட்டு, கும்பலாக அவர்கள் பின்னால் ஓடுவோம். இங்கே போக வேண்டும், இந்தக் குழியைத் தோண்ட வேண்டும் என்பதாக எந்தக் கட்டளையும் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் ஓடுகிற பக்கம் நாங்க ளும் ஓடுவோம். ஆனால், அந்த ஓட்டம் மயானத்திலேயே போய் முடிவது யாருடைய செய்கை? ருத்திரனுடைய செய்கை அல்லவா? வீரசண்டி மாதேவி அல்லவா அவர்களைக் கைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகிறாள். அவளுக்குக் குறுக் கேவா நீங்கள் லத்தியை நீட்டப் போகிறீர்கள்?
மயானத்துக்குப் போனதும் கொஞ்சம் துள்ளாட்டம் ஆடிவிட்டு, எரிந்த சாம்பலை உடம்பெங்கும் பூசிக்கொள்ளும்போது அவர்கள் ருத்திரனாகவே ஆகிவிடுகிறார்கள். அவர்கள் மீதா நீங்கள் ரப்பர் குண்டால் சுடப்போகிறீர்கள்? அப்புறம் ஏதோ கொஞ்சம் தோண்டிக் கிடைக்கிற எலும்புகளைப் பல்லில் கடித்துக்கொண்டு திரும்பவும் வீரசண்டி மாதேவியின் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்களானால், முடிந்தது கொடை. கூட வருகிற இளவட்டப் பயல்கள் மாத்திரம் சும்மா இருப்பார்களா? அவர்களுக்கும் ஆசையாகத்தானே இருக்கும்? தங்கள் இஷ்டத்துக்குக் கிடைக்கிற குழிகளைத் தோண்டவும் எலும்பைக் கடிக்கவுமாகத்தானே இருப்பார்கள்! இதெல்லாம் ஒரு குற்றம் என்று எங்களைக் காட்டுமிராண்டிகள், காபாலிகர்கள் என்று குற்றம்சாட்டி னால் அது எந்த ஊர் நியாயம்?
காவலாம் காவல்! எங்கள் ஊரில் மட்டுமா... உங்கள் ஊரிலும்தான் மயானத்தில் எத்தனையோ நல்லதும் கெட்டதும் நடக்கிறது. அதை எல்லாம் இந்த கலெக்டரும் போலீஸும் கண்டுகொண்டா இருக்கிறார்கள்? புதுப் பிணம் வந்துவிட்டால், பழைய பிணங்களைத் தோண்டி எடுப்பது உங்கள் மயானங்களில் நடப்பது இல்லையா? நாட்டுச் சாராயமும் மலிவு விலை மாதர் வழிபாடும் ஏதோ சமூகம் சமூகம் என்கிறார்களே... அதற்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்களே, அவர்களின் நடமாட்டம் எல்லாம் உங்கள் மயானங்களில் நடப்பது இல்லையா? ஆமாம், இந்தக் கூத்தெல்லாம் எங்கள் மயானத்திலும் நடக்கத்தான் செய்கிறது. உண்மையில் இந்த எலும்பு கடிக்கும் திருநாள் அன்றுதான் மயானம் எந்தத் தப்புத் தண்டாவும் நடக்காமல் சுத்தபத்தமாக இருக்கிறது. இதற்குப்போய்த் தடை போட்டால்?
டி.வி-க்காரன் ஏதோ 50, 60 பேர் சேர்ந்து ஒருத்தனை வெட்டிப் புதைத்து, பிறகு தோண்டி எடுத்து தின்னப் போவதுபோல இஷ்டத்துக்குப் பயமுறுத்தினால், அதை ஆளாளுக்கு நம்பவா செய்வது? வரவர இந்த டி.வி-க்காரன்களால் ஒரு சாமியார்கூடச் சந்தோஷமாக இருக்க முடியவில்லை இந்த தேசத்தில்!
அவன் காட்டினாலும் காட்டினான், ஏதோ மனித உரிமை கமிஷனாம், மாட்டு கமிஷன், வண்டி கமிஷன் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம், மனித உரிமைக்குக்கூடவா கமிஷன் வாங்குவார்கள்? போயும் போயும் அவர்கள் குரல் எழுப்பினார்களாம். அப்புறம் ஏதோ சுகாதாரத் துரையாம். ஜாக்சன் துரை தெரியும், சினிமாவில் பார்த்திருக்கிறோம். அவர் யார் சுகாதாரத் துரை? அந்த துரையைத் தவிர, வேறு யாரும் சுகாதாரமாக இல்லை என்று சொல்கிறார்களா? அவரும் இது சுகாதாரம் இல்லை என்று சொல்லிவிட்டாராம். விஷயம் இப்படித்தான் கலெக்டர் காது வரைக்கும் போய்ச் சேர்ந்து தொலைத்ததாம்.
போலீஸ் வண்டிகளில் ராத்திரி யாரும் மயானத்துப் பக்கம் போகக் கூடாது என்று மைக்செட்வைத்து கத்திக்கொண்டு போனார்கள். ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் வண்டியை மறித்துச் சண்டை போட்டுப் பார்த்தார்கள். இப்படியே பொழுதும் விழுந்துவிட்டது.
வீரசண்டி மாதேவியின் கோயிலில்கூட இரண்டொரு போலீஸ்காரர்கள் தென்பட்டார்கள். சுடுகாட்டுப் பக்கம் ஒரு பெட்டாலியனே வந்து இறங்கியிருப்பதாக நோட்டம் பார்த்துவிட்டு வந்தவர்கள் தெரிவித்தார்கள். ராத்திரி 12 மணிக்குத்தான் சுடுகாட்டுக்கு ஓடுவது வழக்கம். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. ஏனென்றால், இந்தச் சடங்கு தடைபட்டால், அந்த வருடத்தில் மூன்று இளைஞர்களைத் தெய்வம் பலி கொண்டுவிடும் என்பது புராதன நம்பிக்கை. நம்பிக்கை மட்டுமல்ல; கண் கூடான உண்மை. இதைத்தான் அந்த டி.வி-க்காரன் பிரமாதமாகப் போட்டுக் காட்டினானே. நீங்கள்கூடப் பார்த்திருப்பீர்களே... அப்புறம் சொல்வதற்கு என்ன இருக்கிறது!
வழக்கமாக நடக்கிற சடங்குகள் முடிந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இளவட்டப் பயல்களின் மீது மஞ்சள் தண்ணீரும் ஊற்றியாகிவிட்டது. அவர்களும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டார்கள். அதைப் பார்த்ததும் இன்னும் கொஞ்சம் பேருக்கும் அருள் வந்துவிட்டது. அவ்வளவுதான், இளவட்டங்கள் மூவரும் ஓட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் ஓடுவார்களா... மாட்டார்களா என்பதில் எங்களுக்கே ஒரு குழப்பம் இருந்ததால், அவர்கள் கொஞ்ச தூரம் போன பிறகுதான் விழித்துக்கொண்டோம். இதனால் கூட்டமாக நாங்களும் பின்னால் ஓட ஆரம்பித்தோம். நடப்பது நடக்கட்டும். இனி தெய்வம் விட்ட வழி!
எச்சரிக்கையையும் மீறி நாங்கள் ஓட ஆரம்பித்ததை எதிர் பாராத அங்கிருந்த சொற்ப போலீஸ்காரர்களும் எங்கள் பின்னால் ஓடி வந்துகொண்டு இருப்பதை நாங்கள் பார்த் தோம். தெய்வமா இல்லை, துப்பாக்கியா என்பதை இன்று பார்த்துவிடலாம் என்று ஊரே தீர்மானித்துவிட்டதைப்போலப் புழுதி கிளப்பிக்கொண்டு ஓடினோம். தூரத்தில் சுடுக்காட்டுக்கான திருப்பத்தில் இளவட்டங்கள் மூன்று பேரும் திரும்பிவிட்டார்கள். அங்கிருந்து கூப்பிடுகிற தூரம்தான். நாங்களும் எங்களால் முடிந்தவரைக்கும் வேகமாகத்தான் ஓடினோம். அந்தத் திருப்பத்தை நெருங்கும்போது அத்தனை வருடமாக நிகழ்ந்திராத ஓர் அதிசயம் நிகழ்ந்ததை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம்.
முதலில் மாடுகள் மிரண்டு ஓடுவது போன்ற காலடி ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து, எதிரில் இளவட்டங்கள் மூன்று பேரும் பின்னங்கால் பிடறியில் மிதிபட திரும்ப ஓடி வந்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் போலீஸ் படை திமுதிமுவென வந்துகொண்டு இருந்தது. கையிலோ லத்தி. அதைவிட ஆபத்தாக, காலிலோ கடுமையான பூட்ஸ்கள். அப்படியானால், அது மாடுகளின் குளம்படி ஓசை இல்லையா? சரிதான், இன்றைக்கு எலும்பைக் கடிக்கப்போவது இந்த லத்திகள்தான் என்பது அடுத்த கணமே எங்களுக்குப் புலனாகி விட்டது.
|