தடை தாண்டும் ஓட்டத்தை நினைவூட்டும் வகையில், எங்கள் வீட்டு வெளித் திண்ணையில் செயல்படும் மாலை நேர புரோட்டாக் கடையைத் தான் ஏற்று நடத்துவதாகச் சொன்னான். எந்த ஒரு பரிசோதனையையும் தாங்கக்கூடிய வன்மையை அது பெற்றிருந்ததால், நான் அதற்குச் சம்மதம் சொன்னேன்.
சூடேறாத காலைப் பொழுது ஒன்றில் இளங்காற்றின் இசைப் பின்னணியில் எனக்கும் அவனுக்குமான உரையாடல் இவ்விதமாக இருந்தது. ''அண்ணா! ஃபர்ஸ்ட் நாம செய்யவேண்டியது பக்காவா ஒரு போர்டுண்ணா. வினைல் போர்டே வெச்சுக்கலாம்'' என்றான் புவனராஜன்.
''முதல்ல நாம செய்ய வேண்டியது ஒரு நல்ல மாஸ்டரைப் பிடிக்கணும்.''
''அது பாத்துக்கலாம். நம்ம கடைக்கு ஒரு பேரு சொல்லுங்க?''
''புவனராஜன் புரோட்டா ஸ்டால். இதைவிட ஒரு சூப்பர் பேரு கிடைக்குமா?"
''விளையாடாம வேற பேரு சொல்லுங்க?''
''ஹோட்டல் சுதமதி.''
''இது யாரு?''
''மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெருமந்திரம் இரும்பசி அறுக்கும்... அதாவதுடா, மணிமேகலை இருக்கா இல்லியா. அவ வந்து மாதவி சாயல்ல மட்டும் இல்லாம சுதமதி சாயல்லையும் இருக்கறா. சுதமதி வந்து...''
''நாம தமிழ் வளர்ச்சிக் கழகம் நடத்தலைண்ணா. ஹோட்டல் நடத்தப்போறோம்.''
''சரி, விடு தம்பி. சிந்தாதேவின்னு வெச்சிடுவோம். அமுத சுரபியை மணிமேகலைக்குத் தந்தது ஆபுத்திரன். அந்த ஆபுத்திரனுக்கே தந்தது சிந்தாதேவி.''
புவனராஜன் கோபப்படவில்லை என்றாலும் கூட உடனடியாக இடத்தைக் காலி செய்தான். அன்றைய மாலை நேரத்தில் இருந்து அவனது கடமைகள் தொடங்கின. நாள் கூலிக்கு புரோட்டா போட வந்தவன் என் முன்னாள் மற்றும் எந்நாளுக்குமான ஒரு நண்பன். நாளின் சம்பளத்தை நள்ளிரவுக்கு முன்பாக நான்கு பிரிவாகப் பிரித்து வாங்கிக்கொண்டான். எங்கள் கடையை அடுத்தே மதுக் கடை இருந்தது இதற்குக் காரணம்.
அடுத்த முறை நான் ஊருக்குச் செல்லும்போது இரண்டு ஆடுகள் இறந்துபோய்விட்ட தாக அப்பா கூறினார். அப்போது புவன ராஜனும் அருகில் இருந்தான். 'ஆடுகள் ஏன் இறந்தன' என்ற கேள்விக்கு அப்பா சொன்ன பதில் ஆச்சர்யமாக இருந்தது. கடையில் மீதியான புரோட்டாக்களை ஆடுகளுக்குப் போட்டதாகவும், மைதாவின் நொதித்தல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஆடுகள் வயிறு உப்பி உயிர் இழந்ததாகவும் சொன்னார்.
(ஆலோசனை-2: ஆடுகளுக்கு புரோட்டாவை உணவாக அளிக்கக் கூடாது.)
''யாருக்கு இப்படி ஆட்டுக்கு புரோட்டா போடுற ஐடியா வந்துச்சு?'' என்றபோது அப்பா, புவனராஜன் இருவருமே ஒருசேர அறியாமையை ஒப்புக்கொண்ட தொனியில் புன்சிரிப்பை உதிர்த்தார்கள்.
அப்போது அவர்களைப் பார்க்கும்போது நாகஸ்வர இரட்டையர்கள்போலக் காட்சி அளித்தனர். மணிமேகலைக் காப்பியத்தில் இருந்து கடைக்குப் பெயர் சூட்டியிருந்தால் நிகழ்ந்திருக்கப் போகும் உயிர் அபாயங்களை நினைத்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.
புவனராஜன் சீக்கிரம் வேறொரு தொழிலுக்குச் சென்றான். அடுத்த முறை ஊருக்குப் போனபோது குளிர்ந்த மாலையில் அப்பா ஆடுகள் இரண்டு இறந்துவிட்டதாகச் சொன்னார். எனக்குக் கோபம் வரவில்லை. நாங்கள் குடும்பத்தில் சண்டையெடுக்க யாரும் எதிர்பாராத காரணிகளைக் கையாளுவது பழக்கம். நீலநாக்கு, கோமாரி போன்ற நோய் களால் அவை இறந்திருக்காது என்பதை அறிவேன். ''எப்படிங்கப்பா செத்துச்சு?''
''ஒரு ரூபா ரேஷன் அரிசி இருக்குல்ல. அம்மா ஆட்டுக்கு அரைச்சு ஊத்தினப்ப கொஞ்சம் அதிகமா ஊத்திட்டா!''
ஒரு ரூபாய் அரிசியால் நஷ்டப்படவும் ஆள் உண்டு என எண்ணியபோது, அதன் புதிர்த் தன்மையால் அமைதி ஆனேன்.
(ஆலோசனை-3: நஷ்டச் செய்திகளை மாலை நேரம் அல்லது குளிர்ந்த சூழலில் ஏ.சி. அறைகளில் அறிவியுங் கள்.)
(ஆலோசனை-4: மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக எது ஒன்றையும் மிதமிஞ்சிப் பிரயோகிக்காதீர்கள்.)
இதற்கு இடையில்தான் என் நண்பர்கள் சிலர் லட்சக் கணக்கில் முதலிட்டு ஆட்டுப் பண்ணை வைத்தது. சமவெளிக்காரர்கள் சேர்ந்து தமது பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட ஒரு மலையடிவாரத்தில் வைத்த பண்ணை அது. அந்த ஆடுகளின் தன்மை, அப்புறம் அந்தப் பகுதி மனிதர்களின் தன்மை இரண்டையும் கண்டடைவதற்கு முன்னமே உற்சாகத்தில் முக்கால்வாசி போய்விட்டது. அப்புறம் பட்டாபட்டி டவுசருக்கு மேல் வெள்ளைவேட்டி கட்டின மேலாளர்கள் பலர் பார்வையிட்டு, விதவிதமான நடைமுறைகளை அங்கு அமல்படுத்தினார்கள். ஆட்டுப் பண்ணையின் மீது செலுத்தப்படும் ஆதிக்கக் கரங்களின் எண்ணிக்கை ஆடுகளைக் காட்டிலும் அதிகமாக இருந் ததால், பண்ணை தனது செயல்பாட்டை இழந்தது.
அதனால்தான் சமீபத்தில் தோழி ஒருவர் ஆட்டுப் பண்ணைபற்றிப் பேசியபோது நான் சொன்னது ஒரே வாக்கியம்தான்.
''பண்ணைக்கு ஒரு மேலாளர் மட்டும் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.''
(ஆலோசனை-5: மேலாளர் என்பவர் பலரது யோசனைகளைக் கேட்டு இறுதியாக சரியான முடிவை எடுத்து, அதை ராணுவ நிர்தாட்சண்யத்துடன் அமலாக்குகிறவராக இருப்பார். இப்படி எவ்வளவு அதிக மேலா ளர்களைப் பெறுகிறீர்களோ அவ்வளவு பெரிய அதிபர் நீங்கள்!)
எட்டு மாதங்களுக்கு முன்னால் மாமனார் மூன்று செம்மறி ஆடுகள் வாங்கினார். எண்ண அலைகள் வேலை செய்கிறது என நினைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் தேனீ வளர்ப்பதில் வல்லவரான அவர், இந்த வேலையில் ஈடுபடவேண்டியது இல்லை.
ஆடு ஒவ்வொன்றும் 1,400 ரூபாய். மொத்தம் 4,200 ரூபாய். என் கண் முன்னால்தான் விலை பேசி வாங்கினார். உண்மைகளைத் தெரிவிக்க 900 வார்த்தைகளுக்கும் அதிகமாக எழுதிக்கொண்டு இருப்பவனின் சொல் அவர் முன்னால் எடுபடாது என்பதனை நான் நன்கு அறிவேன். |