முன்பொரு காலமிருந்தது
ஈழத்தில் அழுத கண்ணீர்
இங்கே பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஓடி
தீயை உசுப்பிவிட்ட காலம்
முன்பொரு காலமிருந்தது
துவக்கு, லோறி, சப்பாத்து, சாரம் என
நாமும் கதைத்து
நண்பர்களைப் பார்த்து
விசரோ? எனக்கேட்டு வேடிக்கை செய்த காலம்
முன்பொரு காலமிருந்தது
குப்பி அணிந்த சிறுவர்கள்
ஒரு கையில் துவக்கும்
மறு கையில் புல்லாங்குழலுமாய்
புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட காலம்
முன்பொரு காலமிருந்தது
'தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை'
முழக்கங்களின் கவர்ச்சியில்
மூழ்கிக்கிடந்த காலம்
முன்பொரு காலமிருந்தது
கேப்றன், கேணல்
தேசியத் தலைவர், மாவீரர்
பட்டங்களே அடையாளங்களாய்
மாறிவிட்டிருந்த காலம்
முன்பொரு காலமிருந்தது
செய்தியாளர் சந்திப்புக்கு
உலகமே திரண்டுவந்து
முண்டியடித்து நின்ற காலம்
அப்படியரு காலமிருந்தது!
|