''ஆனந்த்னுலாம் யாரும் இங்கே கிடையாது. திலக்னு வந்தா மட்டும் கொடு'' என்றான். நான் அந்தக் கொரியருக்காகத்தான் காலையிலிருந்து காத்திருந்தேன். உடல், பொருள், ஆவி அலறப் பதறித் துடித்துக் கொரியர் பையனைத் தடுத்து என் கொரியரைக் கொய்தேன்.
''ஃப்ரெண்ட் உங்க பேர் ஆனந்தா? சொல்லவே இல்ல!''
சும்மா கணக்குக்கு 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் டப்பா சேனலில் வேலை என்பதால், அலுத்துச் சலித்துக் கொள்ளும் அளவுக்கு வேலைப் பளு கிடையாது திலக்குக்கு. நியூஸ் பைட்டுகளின் எடிட்டிங், மிக்ஸிங் வகையறா வேலைகளுக்குத்தான் அவன் சென்னைக்கு வந்தது. ஆனால், கூச்சம் பார்க்காத அவன் கலகலப்பு காரணமாக, இரண்டே மாதங்களில் நியூஸ் ரிப்போர்ட்டருடன் கேமராவோடு அவனை அனுப்ப ஆரம்பித்தார்கள். பின்னாட்களில் ரிப்போர்ட்டிங்கும் செய்யத் துவங்கிவிட்டான். பல இடங்கள், பல சந்தர்ப்பங்கள், பல சந்திப்புகள் என 'ஸ்பீட் பெட்ரோல்' நிரப்பியது கணக்காக அவனுடைய காதல் ஸ்பீடாமீட்டரும் தறிகெட்டுத் துடிக்கத் தொடங்கியது.
ஏதோ ஒரு கல்லூரி கல்ச்சுரலுக்குச் சென்று வந்தவன் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் மொபைலைப் பார்த்தபடியே இருந்தான். மிகச் சரியாக எட்டு மணிக்கு 'மாமா, மெசேஜ் வந்திருக்கு பாரு' என்று கூவியது அவன் மொபைல். ''ஹுர்ரேய்!'' என்றபடி கோல் அடித்த ஃபுட்பால் பிளேயர் கணக்காக டி- ஷர்ட் கழற்றிச் சுழற்றினான். ஆனால், மீண்டும் மொபைலைச் சீண்டவில்லை. நல்ல தூக்கத்தில் இடிச் சிரிப்பு கேட்கவும் முழிப்பு வந்தது எனக்கு. இரவு இரண்டு மணிக்கு மொபைலில் பேசிக்கொண்டு இருந்தான் திலக். ''ஸாரி காயத்ரி. ஆபீஸூக்கு பைட்ஸ் கொடுக்கணும்னு வேகமா வந்துட்டேன். போறபோக்குல எட்டு மணிக்கு மெசேஜ் அனுப்புன்னு சொன்னது சுத்தமா மறந்தேபோச்சு. ஜஸ்ட் நௌ உன் மெசேஜ் பார்த்தேன். வெரி ஸாரி குட்டி. வீடு எங்கே இருக்குன்னு சொன்ன காயூ..?''
மறு நாள் என் அலுவலகம் வந்து நின்றவன், கெஞ்சிக் கூத்தாடி என் பைக்கைக் கவர்ந்து சென்றான். 'வருவான் வருவான்' எனக் காத்திருந்து கடுப்பாகி, ஷேர் ஆட்டோ ஏறி வந்தேன். காலையில் எழுந்தபோது பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான். ''காயத்ரி திடீர்னு மாயாஜால் போகணும்னு சொல்லிட்டா. அவ மாயாஜால் பார்த்ததே இல்லையாம். ஒவ்வொண்ணையும் குழந்தை கணக்கா ரசிச்சுச் சிரிச்சுப் பாக்குறா தோஸ்த். அதுக்காகவே சொத்தை எழுதி வைக்கலாம். இந்தக் குட்டி பொம்மை வாங்கிக் கொடுத்தா தோஸ்த். பி.இ., தேர்ட் இயர். ப்ச்ச்... கிளம்புறப்போ, 'கிளம்புறியா?'ங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தா தோஸ்த். 'இதயத்தில் ஈட்டியைச் சொருகியது போல இருந்தது'ன்னு சொல்வாங்களே... அது உண்மைதான் தோஸ்த்!'' - அப்போதுதான் கவனித்தேன். நான் ஆசைப்பட்டு வாங்கி அணியத் தயங்கி மடித்து வைத்திருந்த 900 ரூபாய் சிக்ஸ் பேக் கார்கோஸ் பேன்ட் கசங்கிச் சுருங்கி ஹேங்கரில் தொங்கிக்கொண்டு இருந்தது. ஒரு ஸாரி, ஒரு தேங்க்ஸ்... ம்ஹும் எதுவும் இல்லை!
ஒரு வாரம் மிக மிகத் தீவிரமாக காயத்ரி ஜெபம் படித்தான். எங்கே உருகிக் கரைந்து, வழிந்து காணாமல் போய்விடுவானோ என்று தோன்றியது. அஷ்டலட்சுமி கோயில், மெரினா பீச், சரவணபவன், ரங்கநாதன் தெரு, 23 சி, எலெக்ட்ரிக் டிரெயின், ஆர்குட், ஆல்பட் தியேட்டர் கதைகள் கதைத்தான். இந்த இடைவெளியில் அடித்துப் பிடித்து ஒரு செகண்ட் ஹாண்ட் யமஹா வாங்கியிருந்தான். (சைலன்சர் ஆல்டர் செய்து எக்ஸ்ட்ரா பீட் உறுமல்!) ஒரு மாதத்தில் காயத்ரி ஃபீவர் குறைந்தது.
அன்று அதிசயமாக என் மொபைலில் அழைத்து அவசரகதியில் பேசினான்... ''தலைவா தாஸ்தாவேஜ், யான் போத்தீஸ்லாம் எங்கே கிடைக்கும் தலைவா?''
''தஸ்தாவேஜ்னா ஃபைல்தானே... அதுக்கு எதுக்கு போத்தீஸ் போகணும்?''
''உங்களுக்கும் தெரியாதா? ஓ.கே. பை!'' பதிலுக்குக் காத்திராமல் கட் செய்துவிட்டான். ஒரு நிமிடம் குழம்பிப் பிறகு மறந்துவிட்டேன்.
வீடு திரும்பினால் புதிதாக ஒரு ஜோடி கட் ஷூ இருந்தது. மெல்லிய சிகரெட் நெடி. நிச்சயமாக திலக் குக்கு சிகரெட் பழக்கமில்லை. புதுப் புத்தக பண்டல் அருகில் சாதுப் பசுவாக அமர்ந்திருந்தான் திலக். பாத்ரூமில் தண்ணீர் சத்தம். ''கெஸ்ட் வந்துருக்காங்க தோழர். என் இருப்பிடச் சூழலை அவதானிக்கணும்னு சொன்னாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன்.'' பாத்ரூம் கதவு திறந்து வந்தவன் ஜீன்ஸ், குர்தா அணிந்திருந்தான். மாநிறத்தில் ஒல்லியாக, கழுத்தில் மெல்லிய செயின் அணிந்து, வெயிட் வெயிட்... அவன் அல்ல... அவள்!
பாய்கட், வெடவெட தேகம், அழுத்தப்பட்ட மார்பு. ''இவங்கதான் சத்யா. பரந்து விரிந்த எண்ணங்கள் பறைசாற்றும் குறும்படங்கள் பண்ணுவாங்க. கலை விழாவுல அறிமுகம். சிற்றிலக்கிய வட்டாரத்துல கனல் சத்யான்னா பளிச்சுனு தெரியும். இவங்களுக்காகத்தான் உங்ககிட்ட தாஸ்தாயெவ்ஸ்கி, ழான் போத்ரியா நூல் கள் பத்திக் கேட்டேன் தோழர். ('அடங் கொய்யால!') பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பெண்மணி!'' செயற்கை அலட்டலையும் மீறி, சத்யாவின் முகத்தில் சின்ன வெட்கத்தைக் கவனித்தேன்.
''அதுல பாருங்க தோழர் (இந்தத் தோழர் 'அனல்' சத்யாவுக்கு!) 'ஆதிசமூகம் உற்பத்தி முறையில் மதிப்பின் அமைப்பு விதிகள் சமூக அமைப்பின் கூறுகளைத் தாக்கும்போது, விதிமுறைகளே தீர்மானகரமான பங்கைச் செலுத்துகின்றன'ன்னு ழான் எழுதினதுக்கு இந்தியாவுல ஒரு பய பக்கத்துல வர முடியாது!'' என்று படீர் ஆவேசம் காட்டினான். தொடர்ந்து தோழர்கள் தமிழில்தான் பேசிக்கொண்டார் கள். ஆனாலும், எனக்குத்தான் எதுவும் புரியவில்லை. பெரியார் திடல், பிரிட்டிஷ் கவுன்சில், தியேட்டர் நாடகங்கள், வலைப்பதிவர் சந்திப்புகள், உலக சினிமாக்கள், வீதி நாடகங்கள் (இவனுக்கு நாற்காலி கேரக்டராம்!) என்று பரபரப்பானான். ''தோழர் சத்யா என்கூட இத்தனை ஈஸியா பழகுறது மற்ற தோழர்கள் காதுல புகை!''
|