Published:Updated:

குமாரசம்பவம்

குமாரசம்பவம்

குமாரசம்பவம்

குமாரசம்பவம்

Published:Updated:

01-04-09
கதைகள்
குமாரசம்பவம்
குமாரசம்பவம்
 
குமாரசம்பவம்
குமாரசம்பவம்
- காசீ.சிவகுமார், ஓவியம்: ஸ்யாம்

குமாரசம்பவம்
குமாரசம்பவம்

த்தனையும் பாலகிருஷ்ணன்!

ஏழு அழைப்புகள், இரண்டு குறுந்தகவல்கள். இரண்டு தகவல்களும் ஒரே செய்தியைச் சிந்தின.. 'அரசு மருத்துவமனைக்கு அவசரமாக வரவும் -பாலா.'

லோகுவிடமும் அருளிடமும் தகவலைச் சொல்லிவிட்டு, பாலகிருஷ்ணனுக்கு போன் அடித்தான் முருகானந்தன்.

''எங்கடா தொலைஞ்சே?'' என வசவுடன் தொடங்கினான் பாலா.

''முதல்ல விஷயத்தைச் சொல்லு?''

''ராமமூர்த்திய உடனடியா அட்மிட் பண்ணணும். சீக்கிரம் வாங்க.''

''என்னடா ஆச்சு? எதும் சீரியஸா?''

''அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இப்ப எங்க இருக்கே?''

''திண்ணப்பா தியேட்டர்.''

''பதறாம ஜி.ஹெச்சுக்கு வந்து சேரு. நேர்ல விவரமா சொல்றேன். அஞ்சு நிமிஷத்துல வந்திடலாம்... வா.''

பாலா தொடர்பைத் துண்டித்தான். திண்ணப்பா தியேட்டரின் வெளிச் சுவர் வேலைப்பாட்டில், 'உழைப்பால் வெல்க உலகு' என்ற சாயம் போன வாக்கியத்தின் கீழ் சுதைச் சிற்பத்தில் பாரதியாரின் கண்கள் காட்டுகிற திசையில் நடந்தால், மருத்துவமனைக்குப் போய்விடலாம்.

மூவரும் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். என்னதான் நடந்திருக்கும் எனக் கண்டுபிடிப்பதில் யூகங்கள் தோரணம் கட்டித் தொங்கின. கால்களும் மூளையும் ஒருங்கே களைப்படைய, ராமமூர்த்தியை மனதில் நினைத்த அருள், ''அந்தக் கிறுக்கு என்ன பண்ணிவெச்சான்னு தெரியலியே?'' என வாய்விட்டுப் புலம்பினான்.

மருத்துவமனையின் அகன்ற வாசல் கடந்து இலைகள் உதிர்ந்த வளாகத்துக்குள் வந்ததுமே பாலா எதிர்ப்பட்டான்.

''ராமனுக்கு என்ன ஆச்சு?'' மூவரும் ஒருமித்த குரலில் கேட்கவும், ''அதா, அங்க நிக்கறாம் பாரு. அவனையே கேளுங்க... மடப் பய'' என்றான்.

பத்தடி தூரத்தில் நின்றிருந்த ராமமூர்த்தி தளர் நடை நடந்து, தயங்கிய கால்களுடன் நால்வரையும் சமீபித்தான்.

லோகு ஆகத் தழைவான குரலில், ''என்னடா இவன், குருதிப்புனல் கமல்ஹாசன் மாதிரி வர்றான்'' என்றான். வலது கன்னம் கதுப்பு வரை வீங்கியிருந்தது. மூன்று ரூபாய் பன்ரொட்டி ஒன்றை அதக்கினால் மட்டுமே, அந்தப் பரிமாணம் சாத்தியம். மேல் பட்டனைப் பிடிமானம் வைத்துவிட்டு முக்கால் அடிக்கு சட்டை கிழிந்திருந்தது. முருகானந்தன் பதறிப்போய் ஜோடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற பாவனையில் அருகில் சென்று, ''என்னடா ஆச்சு?'' என்று பக்கவாட்டில் நின்று வலது தோளை அணைத்தான்.

''ஐயோ தொடாதே. வலிக்குது. எவனெவன் எங்கெங்க குத்துனான்னே தெரியலடா.''

''என்ன ஆச்சுன்னு சொல்லு?''

ராமமூர்த்தி, பாலகிருஷ்ணனைப் பரிதாபமாக ஏறிட்டான். பாலா அசம்பவத்தைக் கூற ஆரம்பித்தான். ''நேத்து ஈவினிங் சின்ன தாராபுரம் போயிட்டு வந்திருக்கான். பெரிய தாதம்பாளையத்துல ஏதோ திருவிழா போல இருக்குது. டியூப் லைட்டும் சீரியல் பல்புமா இருக்க, அங்கயே பஸ் எறங்கீட்டான். நைட் ஏதோ புரொகிராம் இருக்குன்னு யாரோ சொல்லவும், அங்கியே சுத்திக்கிட்டுத் திரிஞ்சிருக்கான். அப்படியே அப்பப்ப சார் லைட்டா லேடீஸை லுக் விட்டுக்கிட்டு இருந்துருக்காரு. உள்ளூர்ப் பயலுக நோட் பண்ணி, 'யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க?'ன்னு கேட்டுருக்காங்க. 'யாரு வீட்டுக்கும் வரல, திருவிழாப் பாக்க வந்திருக்கேன்'னு சொல்லியிருக்கான். 'வாடா மாப்ள, நாங்க காட்றோம் திருவிழா'ன்னு ஓரமாக் கூட்டிப்போயி ஒதைச்சு அனுப்பிச்சிருக்கானுக.''

''எந்த இடத்துல நடந்துச்சு. எத்தன மணிக்கு?'' - லோகு கேட்கவும்... பாலா, ''எட்டு மணிக்கு. அந்த ஊரு ஸ்கூலுக்குக் கெழக்குப்பொறமா மதிலு ஒண்ணு இருக்குது. அந்த ஊர்ல அந்த இடத்த அதுக்குன்னே வெச்சிருப்பானுகளாட்டம் இருக்குது'' என்றான்.

''இப்படியே கிழிஞ்ச சட்டையோடயே வந்தியாடா?'' - முருகானந்தத்தின் குரல் கம்மியிருந்தது.

''அப்புறம், அடிக்கறவனுக சட்டை-வேட்டியெல்லாம் எடுத்துக் குடுத்தா அனுப்புவானுக?''

ராமமூர்த்தியின் பதிலால் கடுப்பான அருள் ''உன்னஎல்லாம் எலும்ப முறிச்சு அனுப்பிச்சிருக்கணும்டா. அப்பதான் புத்தி வந்திருக்கும். தெரியாத ஊர்ல போயி அப்படி என்ன திருவிழா உனக்கு? சரி, இங்க எதுக்கு வந்தே... பக்கத்துல வேற ஆஸ்பத்திரியே இல்லியா?''

''நானும் அப்படித்தான் சொன்னேன். இவந்தான் போலீஸ் கேஸ் கொடுக்கணும். அதுக்காக இங்க அட்மிட் ஆகணுமின்னுட்டான்'' - பாலா இப்படிச் சொன்னதும் சூழலில் லேசாகச் சூடு பரவியது.

''போலீஸூ என்ன போலீஸூ? உனக்கு அடிச்சவனுகள அடையாளம் தெரியுமா?'' ராமமூர்த்தியையே அடிக்கப் பாய்கிறவன் போல லோகு கேட்டான்.

அரையிருட்டு உருவங்களின் மீது தீப்பொறிகள் பறந்தாற் போன்ற காட்சிதான் அவனது தடயத்தில் இருந்தது. ஆனாலும், ''உம்... தெரியும்! பாத்தா அடையாளம் சொல்லிடுவேன்'' என்றான்.

''இரு'' என்று ஆசி கூறுகிறவன் போலக் கையமர்த்திய லோகு, அடுத்து ஆவேசமாகத் தனது கைப்பேசியில் எண்களை அழுத்தினான்.

''யாருக்குடா போன்?'' என்றான் அருள்.

''எங்க ஊருக்குத்தான். சுக்காலியூருக்கு. கார்த்திகேயனுக்குப் பேசறேன். போய் அவனுகளத் தொவச்சு எடுத்துற வேண்டியதுதான்.''

''அப்படியும் பண்ணலாம்'' என்றான் ராமமூர்த்தி. கை எறி குண்டுகள் கிடைத்தால், 'கெடுக இவ்வூரே!' எனச் சபித்து, அந்த ஊரின் மீது அப்போது எறியச் சித்தமாயிருந்தான்.

''ஊருகளுக்கிடையில கலவரத்தைக் கொண்டாந்துராதீங்கடா...'' என்ற முருகானந்தன், லோகுவின் கைப்பேசியில் 'லவுடர்' வாய்ப்பை ஏற்படுத்தினான்.

லோகு பேச ஆரம்பித்தான்.

''கார்த்தி, நான் லோகு பேசறேன்.''

''லோகுதேம் பேசறே... தெரியுது, சொல்லு...'' அவனது பதிலே சரியான ரவுடிக்குரிய அணுகுமுறையுடன்தான் தொடங்கியது.

லோகு மிகத் தெளிவாக, அடுக்கடுக்காக அடுத்தடுத்து நடந்தவற்றை நிரல்படுத்தி விவரித்தான். ''இவன் என்னடா இவ்வளவு நிதானமாப் பேசறான்'' என பாலா ஆச்சர்யப்பட்டான்.

கார்த்தி இவ்வளவையும் கேட்டுவிட்டு அழுகைக் குரலில், ''டேய்! உனக்கு எதாவது பிரச்னையாடா?'' என்றான்.

''இல்ல கார்த்தி, நம்ம ஃபிரெண்டுக்கு.''

''இல்லடா லோகு! எதிரியை எங்க கண்டாலும் கண்டந்துண்டமா வெட்டணும். ராஜேஷ் அங்கதான் எங்காச்சும் இருப்பான். இப்பவே போன் பண்ணு!''

''அவன் நம்பரச் சொல்லு?''

''அவன் நம்பரு இன்னொரு செல்லுல இருக்குடா. அத வீட்டுல வெச்சிட்டு நான் கடைக்கு வந்துட்டனேடா... காரப் பொரி ஒண்ணு குடுப்பா.''

உடனே தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான வீறிடல் கேட்டது.

''நீ ஒரு ஆளு... உனக்கு ஒரு ஆளு... த்தூ!'' என்று அருள் தரையில் எச்சில் படாமல் உமிழ்ந்தான்.

அருள் பிரகாஷ் ரொம்பக் குழப்பமான நிலையில் இருந்தான். காவல் துறை, புகார், வழக்கு என்பது மாதிரியான சமாசாரங்களில் இதுவரை ஈடுபட் டது இல்லை. சினிமாவில் பார்த்த போலீஸ்காரர்களை மனதில் வைத்துக்கொண்டு காரியத்தில் இறங்க முடியாது. புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகுதான் பின்னந்தலை முடியை ஒட்ட வெட்டிக்கொள்ள வேண்டும் என்கிற புத்தி சினிமா போலீஸூக்கு வந்திருக்கிறது. நிஜ போலீஸ்காரர்கள் டீக்கடையில், மளிகைக் கடையில் காணப்படும் தோற்றத்திலும் தோரணையிலும் காவல் நிலையத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பலவிதமாக யோசிக்கையில் ராஜேந்திரனின் நினைவு வந்தது. ராஜேந்திரனுக்கு போன் செய்து விவரத்தைச் சொன்னான்.

குமாரசம்பவம்

''நல்லவேளையா சனிக்கிழமையா இல்லாம மத்த நாளா இருக்கப் பரவாயில்லப்பா. சனிக்கிழமைன்னா பணம் பட்டுவாடா பண்ற நாளு... நடுராத்திரிக்குத்தே மூச்சுவிட முடியும். இன்னிக்குப் பரவாயில்ல. சரி, பத்து இல்லீனா பதினஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்.'' இந்த உரையாடல் முற்றுப் பெறுவதற்கு முன்பாகவே ராமமூர்த்தி, முருகானந்தன், பாலா மூவரும் ரிசப்ஷன் பகுதியில் நின்றிருந்ததைக் கண்டு லோகுவும் அருளும் அருகில் சென்றனர்.

''காலைல வாங்க!'' என்று ராமமூர்த்தியிடம் கூறிய செவிலியின் விழிகள் தூக்கத்துக்குத் தூது விட்டுக்கொண்டு இருந்தன.

''அவசரக் கேஸூன்னா எந்த நேரமானாலும் எடுக் கணும்'' என்றான் பாலா.

''இது ஒண்ணும் அவசரக் கேஸூ இல்ல. கொஞ்சம் டிஞ்சர் தர்றேன். தடவிக்கிட்டு, காலைல வாங்க.''

''டிஞ்சரா? இது டேஞ்சரான மேட்டருங்க. அவசரம்னுதான் உங்ககிட்ட வந்தது.''

''அவசரம்னா எங்களுக்குத் தெரியாதா சார்? ஆயிரம் கேஸ் பாத்திருக்கோம். கேஸைப் பாத்ததும் எது முக்கியம், எது முக்கியமில்லைன்னு கண்டுபிடிச்சுடுவம்.''

கேஸ்... கேஸ் என இரண்டு முறை செவிலி சொல்லி யதில், போலீஸ் பிராது பற்றிய ஞாபகோதயம் எய்திய வனாக ராமமூர்த்தி, ''ஆமாங்க மேடம்! அதுக்குத்தான் அட்மிட்.'' என்றான்.

புருவம் நெரித்த செவிலி, ''எதுக்குங்க அட்மிட்..?பெட்ல படுக்கற அளவுக்கு இது பெரிய வூண்டு ஒண்ணும் கிடையாது. மூணு நாள்ல சரியாயிடும்.''

''அதில்லங்க சிஸ்டர், போலீஸ் கேஸ் கொடுக்கணும் அதுக்குத்தான் இந்த அட்மிட். சீக்கிரம் அட்மிட் போட்டீங்கன்னா, அடுத்து போலீஸ் ஸ்டேஷன் வேற போகணும்.''

நர்ஸ் நாற்காலியிலிருந்து பட்டென எழுந்துகொண்டார். ''இங்க அட்மிட் போட்டுட்டு, போலீஸ் ஸ்டேஷனும் போறதுன்னா எப்படி?'' என அரசாண்மை விதிகளை நினைத்து வாய்விட்டுக் குழம்பினார். பிறகு ராமமூர்த்தியைப் பார்த்து, ''ஏங்க முதல்ல போயி டாக்டரைப் பாத்துப் பேசீட்டு வாங்க. இதென்ன ரயில் டிக்கெட் புக் பண்ற மாதிரின்னு நெனச்சீங்களா?''என்று ரவுண்ட்ஸில் ஒற்றையாக இருக்கிற மருத்துவரின் இடம் தேடி நடந்தார்.

அருள், பாலாவிடம், ''ஏன்டா அவனுக் குத்தான் அறிவில்லைன்னா, உனக்கு அறிவு எங்க போச்சு? அட்மிட்டு... கேஸூன்னு... ராஜேந்திரண்ணன் இப்ப வந்துருவாரு. எல்லாம் பாத்துக்கலாம். வாங்கடா எல்லாரும் வெளியில...'' என்று மரத்தடிக்கு அனைவரையும் இட்டு வந்தான்.

மரத்தடிக்கு வந்ததும் ராமமூர்த்தி பசிஉணர்வு பெற்றான், '' டீ குடிச்சாப் பரவாயில்லடா... மத்தியானம் சாப்பிட்டது. அப்புறம் அதுக்கு முன்னாடி ஒரு டீ குடிச்சது...''

''எதுக்கு முன்னாடி?'' உள் நோக்கம் எதுவும் இன்றி எதேச்சையான தொனியில் முருகானந்தன் கேட்டுவிட்டான்.

ராமமூர்த்தி, ''நீயுமாடா பாவீ!'' என்று அடிக்கும் பாவனையில் கை ஓங்கியவன், பிறகு ஓங்கிய வலது கையின் தோளை இடது கையால் பிடித்துக்கொண்டு ''ஐயோ!'' என அலறினான்.

வெளியில் வந்து தேநீர் குடித்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, அவர்களை எதிர்கொண்டு நர்ஸூம் இளம் மருத்துவர் ஒருவரும் வந்தார்கள். பயிற்சி மருத்துவரிடம் 'ஐந்து ஆடவர்களின் அட்டகாசம்' என்கிற விதமாக செவிலி எடுத்து இயம்பியிருந்தார். அது மருத்துவரின் முகத்தில் பீதி பாதி, குழப்பம் பாதியாகக் கவிந்திருந்தது.

''என்னங்க விஷயம்?''

அருள் பிரகாஷ் பணிவாகவும், மெதுவாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொன்னதும் அவர் முகம் தெளிவடைய ஆரம்பித்தது. ஆசுவாசம் மேலிட்ட அவர், உச்சுக்கொட்டி நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். வழக்கு தொடுப்பது ஒரு நோக்கம் என்றதும், ''அப்படின்னா போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வாங்க. நானும் சீஃப் டாக்டரைக் கன்சல்ட் பண்றேன். எனக்கென்னவோ நீங்க கேஸ் குடுக்கறது வேஸ்ட்னு படுது. உள்ளூர்க்காரங்க அவங்கள எதுத்து சாட்சி சொல்லுவாங்களா?'' என்றார்.

''நீங்க அட்மிட் போடுங்க. ஸ்டேஷன்ல நாங்க பேசிக்கிறோம். ஒரு தப்பும் இல்லாம அடிச்சவங்களைச் சும்மா விடறதா டாக்டர்?'' என்றான் ராமமூர்த்தி, குரலில் வேகம் காட்டி.

''உடனே அட்மிட் போடற அளவுக்கு நீங்க அன்கண்டிஷன்ல இல்லியே...'' - இப்போது வழக்கறிஞரைப் போன்ற தோரணைக்கு மாறி அனைவரையும் ஏக காலத்தில் டாக்டர் பார்த்தார்.

''என்னைக் கேட்டீங்கன்னா... அட்மிட் பண்றதுகூட பாஸிபிள் தான். ஆனா, இதுக்குன்னு கேஸெல்லாம் போடுறதுன்னா, தட்ஸ் நாட் அட்வைஸபிள்'' - லோகுவைத் தீர்க்கமாகப் பார்த்து இதைச் சொன்னார்.

டிகிரி படித்த பையன்களையெல்லாம் விட்டுவிட்டு தன்னைப் பார்த்து டாக்டர் இப்படிச் சொன்னதும் தனக்குள் இருக்கும் ஆங்கிலமும் அகமும் சிலிர்க்க, ''யெஸ் சார். யு ஆர் கரெக்ட் சார்!'' என்றான்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அடிதடிக்கு ஆள் பிடிக்கத் தயாரானவன், இப்படி ஒரு உள் பல்ட்டி போடுகிறானே என்று லோகுவை நால்வரும் முறைக்க ஆரம்பித்தனர். பத்து வாக்கியம் இங்கிலீஷ் பேச வாய்ப்பு வந்தால், எல்லாரையும் தூக்கில் போடவும் அஞ்ச மாட்டான் போலிருந்தது.

அனல் தாங்காமல் லோகு தவித்துக்கொண்டு இருந்த நேரம் ராஜேந்திரன் வந்து சேர்ந்தார்.

ராமமூர்த்தியைச் சட்டையைக் கழற்றச் சொல்லி காருக்குள் தேடி டி-ஷர்ட் ஒன்றை எடுத்துத் தந்தார்.

செவிலியிடம் முதலுதவி தருமாறு கேட்டுக்கொண்டதும் சிகிச்சை அளித்த செவிலி, இது ஒன்றும் பெரிய காயமில்லை என்று இருபத்தேழாவது முறையாகச் சொல்லி வலி கூட்டினார்.

ராஜேந்திரன் இந்தப் பிரச்னைக்கு வழக்கு தொடுப்பது என்பது வண்டிக் கூலி கொடுத்து அவமானத்தைச் சுமக்கிற வேலையாகும் என்றார்.

அனைவரையும் ஏற்றிக்கொண்டு ராஜேந்திரன் காரைக் கிளப்பினார். லோகுவும் பாலாவும் பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொண்டார்கள். கள்ளுக்கடை முக்கில் வண்டி மேற்கில் திரும்பியது. ராமானுஜ நகரில் அருள் இறங்கிக்கொள்ள, காரை நிறுத்திவிட்டு ராஜேந்திரனும் பின்னால் இறங்கினார்.

அருளைத் தனியாக அழைத்துச் சென்று, ''இன்னிக்கு ராமமூர்த்தி, அவங்க வீட்டுக்குப் போக வேண்டாம்'' என்றார்.

''ஏண்ணா அப்படிச் சொல்றீங்க?''

''அதெல்லாம் காரணம் இருக்குப்பா!''

 
குமாரசம்பவம்
- தொடரும்...
குமாரசம்பவம்