Published:Updated:

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
தொடர்கதை: குமாரசம்பவம்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
 
க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

ருங்கால மாப்பிள்ளை மதிவாணன் பேருந்து நிலையத்தில் இறங்கி, அருள் பிரகாசுக்கு செல்போன் பேசினான். கடை இருக்கும் இடத்தை விசாரித்து அறிந்து, அடுத்த எட்டாவது நிமிடத்தில் கடைக்குள் நுழைந்தான். மதிவாணனின் கக்கத்தில் தோல் பை இருந்தது.

"அசல் கந்துக் கடைக்காரன் மாதிரியே இருக்கடா" என்று எழுந்து வந்து லேசாக அணைத்துக்கொண்டான் அருள். முருகானந்தனுக்கும் செல்லமுத்துவுக்கும் முகமன் பூத்த மதிவாணன், பையில் இருந்து திருமணப் பத்திரிகையை எடுத்து நீட்டினான்.

பிரித்துப் படித்தபோது, வியப்பில் விழி விரிந்தது அருள் பிரகாசுக்கு. மணமகள் பெயரில் இருந்தது வியப்புக்கான சங்கதி. நாகம்பள்ளி ராஜலட்சுமி.

ஹசீனாவை அருள் பிரகாஷ் சந்திப்பதற்காக அணைக் கருப்பணசாமி கோயிலுக்கு அழைத்து வந்த பெண். அருளை அங்கு அழைத்துச் சென்ற மதிவாணன்தான் இன்று மாப்பிள்ளை.

"கடவுள் அமைத்துவைத்த மேடைங்கறது இதுதானாடா?" என்றான் அருள், வியப்பும் சிரிப்புமான குரலில்.

"அன்னிக்குக் கோயில்ல அவகூடப் பேசிக்கிட்டு இருக் கறப்பவே அவளைத்தான் கல்யாணம் பண்ணணும்னு தோணிருச்சு. பணம், காசு சேக்காம காரியம் ஆகாதுங்கறதும் தெரியும். படிப்பு முடிஞ்சதும் ஸ்ட்ரெயிட்டா பாலக்காடு போய் வட்டிக் கடை ஆரம்பிச்சேன். அப்பா-அம்மாவ விட்டு அவளைப் பொண்ணு கேட்டேன். அவங்க குடும்ப ஜோசியருக்கு ரகசியமா ஆயிரம் ரூபா பணத்தை அடிச்சேன். மேட்டர் முடிஞ்சது."

சொல்லி முடித்தவன் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாலக்காடு வந்துவிடுமாறு அருள் பிரகாஷ், செல்லமுத்து, முருகானந்தன் மூவரையும் அழைத்தான். மேலும், இரண்டு அத்யந்த நண்பர்கள் அரவக்குறிச்சியில் இருந்து வருவார்கள், ஜீப் எடுத்துக்கொண்டு மலம்புழா அணைக்கு ஒரு ஜாலி டிரிப் அடிக்கலாம் எனும் விருப்பத்தைத் தெரிவித் தான்.

செல்லமுத்து மட்டும் மறுத்து, "நான் கடைல இருக்கேன், நீங்க போய்ட்டு வாங்க!" என்றான்.

அருள் பிரகாஷ், "ரெண்டு நாள்தான... கங்காதேவியும் கடைல இருக்கிறவங்களும் பாத்துக்குவாங்க. நீ சும்மா முனிவர் மாதிரி பண்ணிட்டிருக்காதே" என்று கூறி செல்ல முத்துவையும் சம்மதிக்கவைத்தான்.

மதிவாணன், "கண்டிப்பா வந்திடணும், கட்டாயம் வந்திடணும்" எனப் பலமுறை வலியுறுத்தி சத்தியம் வாங் காத குறையாக விடைபெற்றுச் சென்றான்.

வெள்ளிக்கிழமை மத்தியானச் சாப்பாட்டை அடுத்து பேருந்து ஏறிய செல்லமுத்து, அருள் பிரகாஷ், முருகானந்தன் மூவரும் மாலை ஆறு மணிக்கு பொள்ளாச்சியை அடைந் தனர்.

பாலக்காட்டுக் கணவாயின் காற்று மந்தமாருதமாகவும் மனோரம்யமாவும் வீசிக்கொண்டு இருந்தது. பள்ளி, கல்லூரிப் பெண்கள் மூன்று மூன்று பேராக நடந்து வந்து பேருந்து நிலையத்தைப் பரிமளம் செய்துகொண்டு இருந்தனர். அருள் பிரகாஷ் அவர்களில் கிருபாவின் சாயல் உள்ள பெண்களைத் தேடிக்கொண்டு இருந்தான்.

முருகானந்தன், "ஏம்ப்பா, இந்த ஊர்ல எந்த செட்டு பொண்ணுகளைப் பார்த்தாலும் மூணு மூணு பேராவே நடந்து வர்றாங்களே, ஏதாவது உளவியல் காரணம் இருக்குமா இதுக்கு?" என்றான்.

"நீங்க ஆராய்ச்சி எல்லாம் பண்ணுங்க. எனக்குத் தலைவலி. முதல்ல ஒரு மாத்திரை வாங்கிப் போட்டு டீ குடிக்கணும்" என்று செல்லமுத்து பேருந்து நிலையத்தில் இருந்து வெளிவந்தான். உலக ரட்சகர் ஆலயத்தின் சிலுவையின் வலது சிறகு காட்டுகிற திசை நோக்கி நடந்து மருந்துக் கடை தேடினான்.

செல்லமுத்துவை இருவரும் பின் தொடர்ந்தனர்.

அருள் பிரகாஷ், "பொள்ளாச்சி ஊருக்குள்ள பொருள்காட்சி நடக்குதய்யா..." என்று பழைய பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டு வந்தான்.

"இது என்ன படம்?"

"பண்ணைபுரத்துப் பாண்டவர்களோ என்னமோ... எங்கப்பான்னா கரெக்டா சொல்லிருவார்."

செல்லமுத்து மாத்திரையை வாங்கிக்கொண்டு இருந்த தருணத்தில் இருவரும் மருந்துக் கடை யைச் சமீபித்தனர். மருந்துக் கடையில் இருந்த பெண், முகம் மட்டும் தெரியபர்தாஅணிந்து இருந்தாள்.

செல்லமுத்துவுக்கு மீதிச் சில்லறையைத் தந்துவிட்டு, அருகில் வந்து நின்ற அருள் பிரகாஷை அவள் ஏறிட்டுப் பார்த்தாள். 'எங்கேயோ பார்த்த முகம்' என்று அவனுக்குத் தோன்றிய ஒரு விநாடி கடந்தது. அடுத்து வந்த அரை நிமிடம் காலத்தின் கருங்குழியில் விழுந்து தொலைந்தது. எப்போதும் நிரூபிக்க முடியாத காலத்தின் நிச்சலனத்தை அழித்துக்கொண்டு ஹசீனாவின் குரல் மெள்ள எழுந்தது.

"அருள்..."

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

விழிப்பரப்பின் விவரிக்க இயலாத மூலாதாரத்திலிருந்து துவர்ப்பின் சிற்றோடை கசிந்து பெருகி கன்னங்களில் ஓடியது. உபரியாகத் தொங்கும் கறுப்புத் துணியின் ஒரு பகுதியில் முகத்தைத் துடைத்தவள், பற்களைக் காட்டாமல் புன்னகை செய்தாள்.

அரும்பிய கண்ணீரைத் துடைக்க அருள் பிரகாசுக்கு இடது கை விரல்கள் போதுமானதாக இருந்தது.

"நல்லா இருக்கியா?" என்றான்.

"நல்லா இருக்கேன். நீ?"

"ம்... பூகூட வெச்சிக்கிறது இல்லியா நீ?"

"பூ வைக்கிறது... பொட்டுவைக்கிறது எல்லாம் அரவக்குறிச்சியோடு போச்சு. எல்லா ஆம்பளையும் காஜாமைதீன் மாதிரி சுதந்திரமா இருக்க அனுமதிக்க மாட்டாங்கப்பா."

"நல்லா இருக்கியா?" - மறுபடியும் கேட்டான்.

"நல்லாத்தான் இருக்கேன். இது சொந்தக் கடை. அவரும் நல்லா பாத் துக்கறாரு."

"இல்ல... அழுதியேன்னு கேட்டேன்?" - அருள் பிரகாஷ் இதைக் கேட்டபோது முருகானந்தனும் செல்லமுத்துவும் சாலைக்கு எதிர்ப்புறம் வந்து நின்றவாறு இருந்தனர். அருள் பிரகாஷின் கேள்விக்கு முறைப்பும் சோகமான கண் வீச்சையும் பதிலாகத் தந்தாள்.

"ஸாரி..." - ஹசீனா முறுவலித்து

மேடிட்ட வயிற்றை நீவிக் காட்டினாள்.

"உம்" என்று மலர்ச்சியின் ஆமோதிப்பை வெளிக் காட்டினான்.

"ஆறு மாசம்" என்றாள் ஹசீனா. உள்ளுக்குள் ஓர் உயிர் லேசாக உதைத்துச் சலசலத்தது. உயிர் அணுக்கள் சலனித்த பகுதியை உள்ளங்கையின் ரேகைகள்கொண்டு பொத்தி கண் செருகி நின்றாள்.

அவளது அந்தக் கையையும் பற்றி வயிற்றைத் தடவிக்கொடுக்க வேண்டும் போலத் தோன்றியபோது, வழியும் கண்ணீரைத் துடைக்க மறந்து "ஜீசஸ்!" என்றான். ஆறாவதும் ஆறாததுமான காயங்களைக்கொண்டு நிற்கிற காதல் சிலுவையிலிருந்து வழியும் கண்ணீர்.

"பச்ச்... பிரகாஷ்!" என்று ஹசீனா சத்தமிட்டபோது தலை குலுக்கி இயல்பு நிலைக்கு வந்தவன், பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்துக்கொண்டான்.

"ஆமா, நீங்க எல்லாம் எங்கே இந்தப் பக்கம்?"

"நம்ம மதிவாணனுக்குக் கல்யாணம். பாலக்காடு போய்க்கிட்டு இருக்கோம். பொண்ணு யாரு தெரியுமா... நம்ம ஸ்நேக் ராஜ லட்சுமி."

ஒரு கணம் திக்கித்தவள், பிறகு வாய்விட்டுச் சிரித்தாள். அருள் பிரகாஷின் கண்களைப் பார்த்துச் சிரித்தாள். "அதுக ரெண்டும் எனக்கு இன்விடேஷன் தரல. நேர்ல பார்த்தா தோல உரிப்பேன்னு சொல்லு."

எதிர்ச்சாரியில் நின்றுகொண்டு இருந்த முருகானந்தனைக் கை காட்டி அழைத்தாள் ஹசீனா. அவனும் செல்லமுத்துவும் கடைக்கு அருகில் வந்ததும் உதட்டருகில் பெருவிரல் வைத்து, "காபி குடிச் சிட்டுப் போங்க... பக்கத்து கடைல சொல்றேன்" என்றாள்.

"இல்லப்பா, நாங்க பஸ் ஸ்டாண்ட் பக்கம் போய் குடிச்சிக்கிறோம். வர்றோம்" என்ற அருள் திரும்ப நடந்தான்.

"சீக்கிரம் உங்க இன்விடேஷன்..." என்ற சத்தத்துக்குத் திரும்பியபோது, ஹசீனா கல்லாவின் இழுப்பறையைத் திறந்து எதையோ பார்த்துக்கொண்டு இருந்தாள்.

மூவரும் தேநீர் குடித்துவிட்டுப் பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது, சிவப்பு பெயின்ட் அடித்த பாலக்காடு போகும் பஸ் நின்று கொண்டு இருந்தது.

பாலக்காட்டில் சந்திரா நகரில் மதிவாணனுக்கு வாடகை வீடு. மாடியில் விசாலமும் நீர்வளமும் வீட்டை நிகர்த்த வெற்றிடமும் பொருந்திய அமைப்பு. சுவர் எல்லாம் கிளிப் பச்சை. விளிம்புகள் எல்லாம் அடர்பச்சை. முன்னம் மதி அழைத்திருந்த இரண்டு நண்பர் களும் வந்திருந்தனர். தொலைக்காட்சி, சீட்டாட்டம் என உவகை யுடன் இரவு 11 மணி வரை நேரம் கடந்தது.

அருள் பிரகாஷ் மட்டும் உலகத்தோடு ஒட்டாத உலோகமாக உலவினான். பரிதவிப்பின் பாதரசம். உறங்க எத்தனித்தவனின் போர்வை துளைத்து... மண்டை துளைத்து நரம்புள்ள இடமெல்லாம் சாரம் கட்டி இறங்கியது.

தூக்கமற்ற இரவென்று சொல்ல முடியாதபடி ரசமான கனவொன்று வந்தது அவனுக்கு.

தூக்கத்தின் ஏதோ ஒரு கோட்டுத் துண்டில் இருந்து அவன் அந்தக் கனவை அடைந்திருக்கக்கூடும்.

நீர் நிலைக்குள் செயல்படுகிறவர்கள் போல, இரண்டு பெண்கள் கனவில் வந்தார்கள். எந்த நேரத்தில் கண்டாலும் நிதர்சனத்தில் பலிக்க இயலாத கனவு.

ஹசீனா, வக்கீல் கவுன் அணிந்திருந்தாள்.

கிருபா, பர்தா அணிந்திருந்தாள்!

 
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
-தொடரும்...
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு