Published:Updated:

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தொடர்கதை
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

ராஜேந்திரனின் கார் - அவர் அலைபேசி முடித்த அரை மணி நேரத்துக்குள்ளாக கிரேஸ் கலர் லேப்பின் முன்னால் நின்றது.

உள்ளே வந்தவர், சடாரென விஷயத்துக்கு வந்தார்.

''அருள்! லோகநாதன் எங்கே போனான்னு உங்கள்ல யாருக்கும் தெரியாதா?''

''எங்களுக்கு எப்படிண்ணா தெரியும். இப்படி இழுத்துக்கிட்டு ஓடறது எல்லாம் எங்ககிட்ட சொல்வானா?'' என்றான் அருள்.

''அது போகட்டும். அவனைக் கண்டுபிடிக்கிற விஷயத்துல நாம அவருக்குக் கொஞ்சம் ஹெல்ப் செஞ்சாகணும்.''

''அவருக்குன்னா?''

''அவ ஹஸ்பெண்டுக்குப்பா. மொத்தப் பணமும் நகையையும் அஞ்சு லட்சத்துக்கு மேலே வருது. அதெல்லாம் போகட்டும் விடு... ரெண்டு குழந்தைகளும் அநாதைப் புள்ளைக மாதிரி நிக்குது.''

''ஏன் போலீஸ்கிட்ட சொல்லியே புடிக்க வேண்டியதுதான. எங்களைப் புடிச்சு உள்ளவெச்ச மாதிரி'' - செல்லமுத்து ஆவேசப்பட்டான்.

ராஜேந்திரன் குரலில் குழைவைக் கொணர்ந்தார். ''என்ன செல்லமுத்து. நீயே இப்படிப் பேசுனா எப்படி? இவ்வளவு பெரிய மேட்டர் நடக்கும்போது இப்படி ஒண்ணு ரெண்டு மிஸ் ஃபயர் ஆகறது தான்.''

''நான் அதுக்காகவும் சொல்லலீங்ணா. போலீஸ் பெரிய நெட்வொர்க். எங்கே இருந் தாலும் கண்டுபுடிச்சிடுவாங்க. நம்ம நாலு ஆள் என்ன பண்ண முடியும்?''

''போலீஸ்கிட்ட கேஸ் குடுத்தா காசும் போய் மானமும் போயிரும்ப்பா. அவரும் அன்அஃபீஷியலா சில பெரிய ஆபீஸர்கிட்ட சொல்லிவெச்சிருக்காரு. என்கிட்டயும் சொல்லிஇருக்காரு. நம்ம சைடுலயும் டிரை பண்ணுவம்.''

''பண்ணலாங்ண்ணா...''

''சரி... இப்ப வாங்க! அவரு வீட்டுக்கு வரச்சொல்லி இருக்காரு. ஒரு நடை போய்ட்டு வந்துடுவம்.''

காரை ராஜேந்திரன் ஓட்ட... முருகானந்தன், அருள் பிரகாஷ், செல்லமுத்து மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

முருகானந்தன் ராஜேந்திரனிடம், லோகுவுக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள் தனக்குத் தெரியும் என்பதையும் ரவி, கதிரேசன் என்பது அவர்கள் பெயர் என்பதையும் சொன்னான். அந்த வழியில் முயற்சிக்கலாம் என்று ராஜேந்திரன் சொன்னார்.

அவர்களை எப்படித் தெரியும் என்று அவர் கேள்வி கேட்காமல் இருந்ததற்காக முருகானந்தன் ஆசுவாசப்பட்டான். நிகழ்ந்த தருணத்தில் மகிழ்ச்சியோடு அல்லது உணர்வுபூர்வமாகக் கிளர்ந்த நிமிஷங்கள் இப்போது கசப்பான உணர்வை வருவித்தன.

ராஜேந்திரனின் கார் நின்றது. பெரிய வீடு அவர் களைத் துயரமயமாக வரவேற்றது. முருகானந்தன் வந்து சென்ற அதே வீடு. அடி எடுத்துவைக்கவே அவனுக்குத் தயக்கமாக இருந்தது.

நால்வரும் உள்ளே சென்று சோபாக்களில் அமர்ந்த பிறகு, வீட்டின் உரிமையாளர் தனி இருக்கையில் அமர்ந்தார். கைலி மட்டும் கட்டி இருந்தார். பருத்த உடலானாலும் தோள்கள் தளர்ந்து இருப்பது போலப் பட்டது. சமீபத்தில் அவமானத்தின் சுமை அதன் மேல் அழுந்தியதால் இருக்கக்கூடும். வெள்ளைச் சேலை அணிந்த கிழவி காபி வைத்துவிட்டு, ''காபி எடுத்துக் குடுப்பா வந்தவங்களுக்கு'' என்று மகனைப் பணித்தார். மருமகள் ஓடிப்போனதும் கிராமத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழவி.

காபியைக் கொடுத்துவிட்டு அமர்ந்த அந்த மனிதர் தழுதழுக்கும் குரலில் ஆரம்பித்தார். ''குழந்தை பேசற இங்கிலீஷ்கூட எங்க அம்மாவுக்குப் புரிய மாட்டேங்குது ராஜேந்திரன். எப்படிச் சமாளிப்பேன்னு தெரியல. ஒரு பொம்பளப் புள்ளையையும் விட்டுட்டு இப்படிப் பண்ணிருச்சே.''

''போனதை விடுங்க பரமசிவம்! இப்ப திரும்பக் கூட்டியாற என்ன ஏற்பாடுன்னு பார்ப்போம்.''

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

''நானும் கூட வந்து தேடலாம்னா குழந்தைக ரொம்ப ஏங்கிப் போயிரும். கார் எடுத்துக்கங்க ராஜேந்திரன். பணம் எவ்வளவு ஆனாலும் சரி... எந்த மூலைல இருந்தாலும் புடிச்சுக் கூட்டியாங்க, என்ன ஆனாலும் நான் பாத்துக்கறேன். அவளைப் பார்த்ததும் வெட்டிப்புடுவனோன்னு பயமா இருக்கு...''

அவர் ஓடினவளைத் திரும்ப அழைத்து வந்து வாழப் போகிறாரா... வெட்டித் துண்டம் போடப் போகிறாரா என்பது சந்தேகமாக இருந்தது. செல்லமுத்துவையும் அருளையும் பார்த்து பரமசிவம், ''மன்னிச்சிருங்கப்பா. நீங்க போலீஸ் ஸ்டேஷன் போறாப்ல பண்ணிட்டேன்'' என்று கேட்டுக்கொண்டார்.

செல்லமுத்துவும் அருள் பிரகாசும் இளகிய புள்ளியாக அது இருந்தது. ''எங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்றோம்'' என்று ஒரே குரலில் சொன்னார்கள். ராஜேந்திரன் பதவிசாக விடைபெற்றார்.

முதுகில் தட்டி ஆறுதல் சொல்ல முடியாத சீனியாரிட்டியை வயசு அந்தஸ்துகளில் பரமசிவம் பெற்றுஇருந்தார். கார் அடுத்து லோகநாதனின் நண்பன் கதிரேசன் வேலை பார்க்கும் கடையை நோக்கி விரைந்தது. கதிரேசன், கள்ளுக்கடை முக்கில் இருந்து செல்லும் பழைய திருச்சி சாலையில் ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் இருந்தான். காரில் நாலு பேர் போய் இறங்கி அவனை, ''வெளியே ஒரு பத்து நிமிஷம் வந்துட்டுப் போ!'' என அழைக்கவும் கடை முதலாளி ரத்தக் கொதிப்புக்கு ஆளானார். ஆசுவாசம் கொள்ள வைத்ததும் மாத்திரை விழுங்கித் தண்ணீர் குடித்து சீரான சுவாச நிலைக்குத் திரும்பினார். கதிரேசனின் கண்களில் மிரட்சி தெரிந்தது. முன்னுக்குப் பின் முரணாக உளறத் தொடங்கி, ''சாயந்திரம் வீட்டுக்குப் போகாட்டி அம்மா பயந்துக்கும்'' என்கிற ரீதியில் பிதற்ற ஆரம்பித்தான்.

'இப்படி ஒரு முதலாளியும் தொழிலாளியும் சேர்ந்து எப்படிக் கடை நடத்துகிறார்கள்?' என்று ராஜேந்திரனுக்கு வியப்பாக இருந்தது.

அவனைக் குளிரப் பண்ணிய பின் 'இப்படியாப்பட்ட தொடர்பு' லோகுவுக்கு இருந்தது தனக்குத் தெரியும் என ஒப்புக்கொண்டான். 'இது மட்டும் ரெடின்னா இப்பவே திருப்பூர் கூட்டிக்கிட்டுப் போயிடுவேன்' என்று அவன் சொல்லி வந்ததையும் தெரிவித்தான்.

அவனிடம் திருப்பூரில் இருக்கும் ஒரு நண்பனின் செல் நம்பரையும் ரவியின் விலாசத்தையும் வாங்கி னார்கள். கொசுவலை கம்பெனி ஒன்றில் இருந்த ரவியும் திருப்பூரை வழிமொழிந்து மேலும் ஒரு செல் போன் எண் கொடுத்தான்.

''அவன் இருக்கிற இடம் தெரிஞ்சா மரியாதையா சொல்லிடு!'' என்று மிரட்டியதற்கு லோகு ஒரு பூடகமான ஆள் என்பதையும் யாரிடமும் உண்மையாக இருக்க மாட்டான் என்றும் தெரிவித்தான். அவன் போன இடம் எதுவெனத் தெரியாதென்று மாதா, பிதா, தெய்வங்கள் மீது சத்தியமிட்டான். வெள்ளிக்கிழமை வரை காத்திருந்தால் அதிகாலையில் குளித்து முடித்து வந்து குலக் குறுந் தெய்வத்தின் முன்னால் சூடமேற்றிக் கையால் அணைக்கிறேன் என்றான். அவனிடம் பேசுவது வீண் என்று உறுதியான பின் ராஜேந்திரன் காரைக் கிளப்பி ஆசாத் பூங்காவுக்கு வந்தார். கறுப்பு நிறம் உள்ள நீளமான சிமென்ட் பெஞ்ச்சில் 'மகாத்மா காந்தி' நிலையின் வலது காதைப் பார்த்தவாறு நால்வரும் அமர்ந்தனர்.

ராஜேந்திரன், ''ஏம்ப்பா, திருப்பூர்தான் போயிருப்பானா?'' என்று பொதுவாக காற்றைப் பார்த்துக் கேட்டார்.

செல்லமுத்து, ''அவன் அறிவுக்கு அங்கேதான் போயிருப்பான்'' என்றான்.

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

ராஜேந்திரன் ஒரு நீளமூச்சு விட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார். ''சரி, இப்ப நாம பதற்றப்பட்டு ஒண்ணும் ஆகப் போறதில்ல. இன்னிக்குள்ள ஒண்ணும் புதுசா எதுவும் நடந்துறப் போறதில்ல. திருப்பூர் போறத நாளைக்குக் காலைல வெச்சுக்கலாம்.''

''வெச்சுக்கலாம். அப்புறம் இங்கே?'' - செல்லமுத்துவின் கேள்வியில் அன்றாடத்தின் கொக்கி இருந்தது. அது ராஜேந்திரன் உணராததும் அல்ல.

''காலைல கார் ஏற்பாடு பண்றேன். நான் கூட வரத்தான் முடியாது. எம் மச்சினனை அனுப்பறேன். காசும் அவனே கொண்டாருவான். இப்ப நீங்க ரெண்டு பேரும் வர முடியாது. செல்லமுத்து நீ வர்றியா... இல்லீன்னா அருளா?''

செல்லமுத்துவும் அருளும் எதுவும் பேசிக்கொள்ளாமல் எட்டு விநாடிகள் கண்ணோடு கண் பார்த்துக்கொண்டார்கள். மூச்சுக் காற்றில் இரண்டு உள்ளிழுப்புக்கு இடைப்பட்ட நேரம் அது.

செல்லமுத்து, ''சரி... நான் போயிர்றனுங்ணா'' என்றான். அருள் பிரகாசுக்கு செல்லமுத்து காபிரியேல் போலத் தோன்றினான். ராஜேந்திரன் அவர்கள் இருவரையும் நினைத்து ஒரு கணம் வியப்பெய்தி இயல்பானார்.

''முருகானந்தா நீயும் போயிட்டு வந்துடேன். ஒரு நாள் இல்லீன்னா... ரெண்டு நாள்தானே?''

''சரிங்கண்ணா!'' மற்ற இருவரையும்விட லோகுவைத் தேடிப்போக வேண்டிய கடமை தனக்கே இருப்பதாக முருகானந்தனுக்குப் பட்டது. விட்ட குறை... தொட்ட குறை.

''அவனுங்கள்ல யாரையாவது கூப்டுக்குவோம்'' என்றான் செல்லமுத்து. ராஜேந்திரன் ஆமோதித்துச் சொன்னார்.

''ரவியை இழுத்துக்குவோம். அவன்தான் உருப்படியா இருப்பான். கதிரேசன் தேற மாட்டான்.''

அதற்குப் பின் லோகநாதன் வீட்டில் ஒரு மோது மோதிவிட்டு வரலாம் என்று சென்றபோது, அவர்கள் பெற்ற மகனை விட்ட பெற்றோர்களாகக் காட்சி தந்தார்கள். லோகநாதன் படத்துக்கு மாலை போட்டு பொட்டுவைக்க அவனது அப்பா தயாராக இருந்தார். அம்மா ஒரு குறுகலான ஒப்பாரிக்குப் பிறகு, ''அவனைப் பெத்ததுக்கு வெறகுக்குப் போயிருக்கலாம்'' என்று மூக்கு சிந்தினார்.

காலையில் அம்பாஸடர் கார் லேப்பின் முன்னால் வந்து நின்றபோது, அதில் டிரைவரும் ராஜேந்திரனின் மைத்துனனும் இருந்தார்கள். ரவி, முருகானந்தன், செல்லமுத்து மூவரும் ஏறிக் கொள்ள... கார் கிளம் பியது.

இந்நேரம் திருப்பூர் போயிருப்பார்களா?'' என்று அருள் பிரகாஷ் யோசித்துக்கொண்டு இருக்கும் வேளையில் செல்லமுத்து போன் செய்தான்.

''கொஞ்சம் பதற்றப்படாமல் கேட்டுக்க. ஒரு பிரச்னையும் இல்ல. ஒரு சின்ன...''

''சொல்லு... சொல்லு செல்லமுத்து...''

''கார் ஆக்சிடென்ட்ப்பா...''

 
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
-தொடரும்...
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்