Published:Updated:

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்


08-07-09
தொடர்கதை: குமாரசம்பவம்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
க.சீ.சிவகுமார்
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

நெய்யும் தறியில் நெருங்கும் நூல் போல கிருபாவும் அருளும் கிட்டக்கிட்ட அமர்கிற தருணத்தில் காதலைச் சொன்னான்.

"உங்களைத்தா...''

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

காற்றிலும் நேற்றிலும் இல்லாத மாற்றங்கள் உள்ளத்துகளைச் சூழ்ந்தன. வாக்கிய அமைப்புகள் மற்றும் பேசும் இடைவெளிகள் தாறுமாறான தாள லயத்தில் இருந்தன. ஆனால், யாவும் சுகமாக இருந்தன. முன்னம் நிகழ்ந்த கதைகள், ஆசைகள், அபிலாஷைகள், அதி ரூபக் கனவுகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். கோயில் நடை சாத்தும் நேரம் நெருங்கியதும் இருவரும் வெளி வந்து வீடுகள் நோக்கி, உடலால் பிரிந்து சென்றனர்.

அன்றிரவு அருள் பிரகாஷின் மூடிய இமைகளுக்குள் விண்மீன்கள் தெரிந்தன. அதனாலென்ன என்று அவன் மேகங்களிடையே துஞ்சினான்.

காலையில் கடைக்குப் போகும் முன் சாப்பிட்டு முடித்தவன் கை கழுவும் வேளையில், வாஷ்பேசினுக்கு முன்னால் கண்ணாடியைப் பார்த்து...

"அன்பென்னும் மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே!'' என்று பாடினான். அவனது துள்ளல்களைக் கவனித்தவாறு இருந்த அம்மா சாந்தாடெய்சி லீலா, "உங்கிட்ட ஏதோ விசேஷம் தெரியுதுடா?'' என்றார்.

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

நேற்று அம்மாவும் பசுபதீஸ்வரன் கோயிலுக்கு வந்திருந்து தன்னைப் பார்த்துவிட்டதோ என ஒரு கணம் துணுக்குற்றான். அந்தச் சிந்தனையில் தர்க்க நியாயம் எதுவும் இல்லை என்று பட்டபோது உற்சாகத்தின் ஊற்று அடைபடாமலே இருந்தது.

"நான் வளர்கிறேனே மம்மி'' என்று பாடினான். சாந்தா டெய்சிக்கு அப்போது அவனைப் பார்க்கையில் 'குருத்தோலைத் திருநாளி'ல் தளிர்ப் பச்சையின் சிறு கீற்றெடுத்து நடந்து செல்லும் ஒரு சிறுவனைப் போல இருந்தது. 'ஓசானா ஓசானா தாவீதின் புதல்வன் ஓசானா...' அருள் பைக்கை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்தான். முருகானந்தன் கடைக்குள் நுழைந்த நேரம், ஜெயக்குமார் தேநீர் அருந்தும் சாக்கில் வெளியே போனான். வெளியேறும் வாயில் கதவைப் பார்த்துக்கொண்டு, "டீ குடிச்சிட்டு வந்துடறனுங்க'' என்று சொல்லக் கற்றிருந்தான். வாசலுக்கு வெளியில் இருந்தே ஜெயசித்ராவின் முகம் அவனுக்கு ஞானக் கண்ணில் தெரிய ஆரம் பித்துவிடுமாயிருக்கும்.

நேரம் பதினொன்றரையைக் கடந்து நொடித்து ஓடிக்கொண்டு இருக்கையில், லேப்பைத் தாண்டி ஒரு கார் கிறீச்சிடாமல் நின்றது. காரின் நிலையும் விலையும் அதிக ஒலித் தொல்லைக்கு வாய்ப்பளிக்காததாக இருந்தது. ஓட்டுநர் இருக்கையில் ஒரு பெண் இருந்தாள். அடுத்த ஸீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியும் இருந்தனர்.

காரின் பின் கதவைத் திறந்து, லோகநாதன் இறங்கிக் கடைக்குள் வந்தான். பேன்ட் பாக்கெட் டுக்குள் இருந்த ஃபிலிம் ரோலை எடுத்து டேபிளில் வைத்தான்.

பின்னால் சில விபரீதங்களை உண்டுபண்ணப் போகிற எந்த அசைவையும் அது அப்போது காட்டவில்லை.

"என்ன இது?'' என்றான் அருள் பிரகாஷ்.

"காப்பி போட்டுக் குடு.''

"போட்டுடலாம். என்ன போட்டோன்னு கேட்டேன்?''

லோகநாதனின் முகத்தில் பெருமிதப் புன்னகை எழுந்தது.

"அது டெவலப் பண்ணிப் பாத்தா, உனக்கே தெரிஞ்சுடும்.''

"வெளில என்ன கார் ஒண்ணு நிக்குது?'' என முருகானந்தன் கேட்கவும்,

"அது நம்ம கார் மாதிரிதான்னு வெச்சுக்க'' என்றான்.

செல்லமுத்து உள்ளிருந்த ரம்யாவை அழைத்து ஃபிலிம் சுருளைக் கொடுத்துவிட்டவன், பில் புக்கில் எண்ணும் லோகநாதனின் பெயரும் எழுதிக்கொண்டு, "அட்வான்ஸ் எவ்வளவு தர்ற?'' என்றான். செல்லமுத்துவை 'எங்கிட்டயே அட்வான்ஸ் கேட்குறியா?' என்பது போலப் பார்த்தவன், மறு விநாடியே பர்ஸை எடுத்து, அதில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கான ஒற்றைத்தாளை எடுத்து நீட்டிவிட்டு, வேகமாக வெளியேறினான்.

வெளியில் செல்லும் முன், "முருகானந்தா! உனக்கு அப்புறம் போன் பண்றேன்'' என்றான்.

கார் கிளம்பிச் சென்றது.

முருகானந்தனுக்கு லோகநாதன் செய்வதாகச் சொல்லி இருந்த தொலைபேசி அழைப்பு மூன்று நாட்கள் கழித்து வந்தது.

"நைட் எட்டு மணிக்கு, திண்டுக்கல் பைபாஸ் திரும்பற எடத்துல நில்லு.''

இதை மட்டும் உறுதியாகச் சொன்னான். மேற்கொண்டு முருகானந்தன் துருவி விசாரித்ததற்கு 'சஸ்பென்ஸ்!' 'ட்ரீட்' என்று மாறி மாறிச் சொன்னான்.

ஆர்வ மிகுதி காரணமாக முருகானந்தன் ஏழே முக்கால் மணிக்கே குறிப்பிட்ட இடத்துக்கு வந்துவிட்டான். சரியாக எட்டு மணி கடந்ததும் பரபரப்பு அதிகமாகிவிட்டது அவனுக்கு.

எட்டு பத்துக்கு இரண்டு பைக்குகள் அவனைச் சமீபித்து நின்றன. ஒன்றில் லோகநாதனின் இரண்டு நண்பர்கள். ஒரு நீலப்பட ராத்திரிக்காரர்கள். பிறிது ஒன்றில் லோகநாதன்.

லோகு, "சாப்பிட்டியா?'' என்றான் முருகானந்தனிடம்.

"இல்ல...''

"வா, முதல்ல எல்லோரும் சாப்பிடுவோம்.''

லோகநாதனின் பைக்கில் முருகானந்தன் ஏறிக்கொண்டான். வண்டிகள் பைபாஸ் சாலையில் தெற்குத் திசையில் விரைந்தன. ஒரு சாலையோர, பச்சைக் குழல் விளக்கு சுடர்ந்து வரவேற்ற உணவகத்தில் காற்ற£ட அமர்ந்து புரோட்டா, தோசை, முட்டையின் பாசக வகைகளைச் சாப்பிட்டு முடித்தனர். மீண்டும் கிளம்பிய வண்டிகள் அமராவதி ஆற்றுப்பாலம் தாண்டி செட்டிபாளையம் போகிற பாதையில் மேற்கு முகம் கண்டு ஓடின.

முருகானந்தன், "லோகு! எங்கேதான் போறோம்?'' என்றான்.

"ஏரிக் கரைக்கு.''

"எதுக்கு?''

"நீ பாப்பா. உனக்கு ஒண்ணும் தெரியாது. இன்னம் பத்தே நிமிஷத்துல புரிஞ்சிடும், இரு!''

ஏரிக்கரை ஓரமாக வண்டிகள் நிறுத்தப்பட்டன. சுற்றிலும் சீமைக் கருவேல முட்கள் அடர்ந்த பிரதேசம். நிலவொளி எங்கணும் வீசியும் கன்னங்கரிய இரவைப் பட்டப்பகல் ஆக்க முடியவில்லை.

உரித்துப்போட்ட பாம்புத் தோல் போல ஒற்றையடித் தடம் ஒன்று முட்பரப்பினூடாகச் சென்றது.

"சைடுல முள்ளு கிழிச்சுக்காம பாத்து வாங்க'' என்று லோகு முதலில் நடக்க... மற்ற மூவரும் பின்னே நடந்தனர். தவளைகளின் கூப்பாட்டுச் சத்தம் 'கர்ரக் கிர்ரக்' எனத் தமக்கான இடைவெளிவிட்டுக் கேட்டவண்ணம் இருந்தது.

குரல் கேட்டு வருவது துணையாகவும் இருக்கலாம், பாம்பு ரூப மரணமாகவும் இருக்கலாம் எனத் தெரிந்தோ தெரியாமலோ அவை தொண்டையின் துருத்திப் பையை அசைத்து இசைத்தவாறு இருக் கின்றன.

லோகு தயங்கி நின்ற இடத்து மற்ற மூவரும் அப்படியே இருக்க... பார்வை மறைவுப் பிரதேசத்தில்இருந்து ஒருத்தி வெளிப்பட்டாள்.

வயதோ, வாலிபமோ, வாளிப்போ கணிக்க முடியாததாக இருந்தது.

"எவ்வளவு நேரமாக் காத்திருக்கிறது?''

"சாப்பிட்டுட்டு வர வேண்டாமா?'' என்றான் லோகு.

"ஆமா, சொன்ன டயத்துக்கு வராம நான் இங்க ஒத்தையில எவ்வளவு நேரம் நிக்கறது... பூச்சி பொட்டு புடுங்குச்சுன்னா..?''

"சரி... சரி... அடங்கு!''

லோகு தன் நண்பன் ஒருவனிடம், "நீ போ!'' என்றான்.

"ஏன், நீ...''

"நானுந்தான். நீ ஃபர்ஸ்ட் போடா! நாங்கள்லாம் ஏற்கெனவே பாத்தவங்க.''

அவன் தயக்கத்துடன் அந்தப் பெண்ணை நாடிச் சென்றான். அவள் மறைவை நெருங்குகையில் தயக்கம் புலிப் பாய்ச்சலாக இருந்தது. லோகு முருகானந்தனிடம் "அடுத்து நீ போறியா?'' என்றான்

"ம்ஹூம்...''

"அப்புறம்?''

"அதுக்கும் அடுத்து. படபடப்பா இருக்குது.''

"முதல்ல அப்படித்தான் இருக்கும்'' என்றான் லோகு, முதுகில் தட்டிக் கொடுக்காத குறையாக. இரண்டாமவன் போய் வந்ததும், முருகானந்தன் மறைவு தேசம் நோக்கி நடந்தான். சேலையை ஒரு திரைத் துணியாக மாற்றி அந்தப் பெண் நின்றிருந்தாள். முருகானந்தன் சென்று பின்னாலிருந்து அவளைக் கட்டிப் பிடித்தான். நுனி கருத்த மல்லிகை இதழ்களின் உள்ளிருந்து சல்லாப தூபத்தின் கடுமணம் கமழ்ந்தது. முருகானந்தன் அவளது முகப்புறம் வந்து, இதழ்களால் நாடினான்.

அவள் அவனது கைகளை விலக்கி, "ச்சீ... அடுத்த வேலையப் பாரு!'' என உந்தி உருவேற்றினாள்.

"ஏன்?''

குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்

"குழந்தை குடிக்கப் பாலு வேணும்!'' - மார்புத் திரட்சியின் பரிமாண அர்த்தம் விளங்கியது. அகம் புறம் அந்தரங்கம் யாவும் சுருங்கிய முருகானந்தன் விடுவித்துக்கொண்டு வெளியேறி நடந்தான். முதுகுப் பக்கம் 'அந்த ஆளை வரச் சொல்லு' என முனகல் கேட்டது. முருகானந்தன் வருவதைப் பார்த்தும் அவனது பின்னூட்டங்களைப் பற்றி விசாரிக்காமல் லோகு உள்ளே நுழைந்து, சற்று நேரம் கழித்து வெளியே வந்தான்.

முருகானந்தன் நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அது ஒரு கீழ் நோக்கு நாள். வளர்பிறைத் தசமி. அவனது பார்வைச் சித்திரிப்பில் நிலவில் நீலத் தவளை ஒன்று கால்பரப்பிக் கிடந்தது. செத்து விறைத்த தவளை. பொங்கி அழலாம் போல இருந்தது அவனுக்கு. அழவும் காரியம் உள்ளது போலவும் தோன்றவில்லை. வந்திருந்தவள் மறைவு வழியே தன் கிராமம் ஏகினாள். வண்டிகள் வந்த வழி மீண்டன.

லோகுவின் பின்னால் முருகானந்தன் அமர்ந்திருந்தான்.

"பிடிக்கலையா முருகானந்தா?''

"அப்படின்னு சொல்ல முடியாது.''

"கவலைப்படாத விடு. இது போனா இன்னொண்ணு.''

முன்பு பைக் ஏறிய அதே இடத்தில், லோகு அவனை இறக்கிவிட்டான். அயல் கிரகத்தில் நிற்பது போலத் தோன்றியது முருகானந்தனுக்கு.

இரண்டு நாட்கள் கழித்துக் கொடுத்த சுருளை படங்களாக மாற்றிக்கொண்டு லோகநாதன் சென்றான்.

அதற்கடுத்த மூன்றாம் நாள் சாயந்திரம் அருள் பிரகாஷூம் முருகானந்தனும் திரைப்படம் பார்க்கப் போகலாம் எனத் திட்டமிட்டு இருந்தனர். முதலாம் ஆட்டமா, இரண்டாம் ஆட்டமா என முடிவு செய்ய முடியாத நிலையில், அவர்கள் லேப்பில் அமர்ந்திருந்தபோது கடையை மறித்து சாலையில் வந்து நின்றது காவல் வாகனம்.

 
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்
-தொடரும்...
குமாரசம்பவம் -க.சீ.சிவகுமார்