பிரீமியம் ஸ்டோரி

தாரிக்

(இதுவரை: பிரபல துப்பறியும் நிருபர் பிரதீப்.  வடக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பதுங்கி இருக்கும் தீவிரவாத கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். அவரைக் காப்பாற்ற வந்த விக்கி, சைலா ஜீபா மூவரும் அங்கே இருக்கும் அதிநவீன அறையில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தத் தீவிரவாத கும்பலைப் பற்றி அறிய வரும் ராணுவ அதிகாரி செல்வக்குமாரும் அங்கே அடைக்கப்படுகிறார். அவர் அந்தத் தீவிரவாதிகளின் செயல்பாடுகளோடு பிரதீப் பற்றியும் அறிந்திருந்தார். அந்த அதிநவீன அறையிலிருந்து தப்பித்து பிரதீப்பைக் காப்பற்றி, தீவிரவாதக் கும்பலைச் சுற்றி வளைக்கத் திட்டமிடுகிறார்கள்...)

விக்கி சைலா ஜீபா !

மானிட்டர் சுவர்களின் பக்கம் ஜீபா சென்று எதையோ சுரண்டியது. ''என்ன ப்ளான் ஜீபா?'' என்று கேட்டான் விக்கி. ''இது ஒரு புது மாதிரியான மெட்டல்னு சொன்னேன் இல்லையா... அதோட கெமிக்கல் ரியாக்ஷன்ஸ் என்னன்னு பார்த்தேன்'' என்றது. ''என்ன ஜீபா, உன்னால கூடவா இந்தச் சுவரை உடைக்க முடியாது?'' என்று வம்பிழுத் தாள் சைலா. ''முடியாதுன்னு எதுவும் இல்லை. அந்த சத்தத்துல அவங்க உஷாராகி திரும்ப நம்மை வளைச்சுடுவாங்க. ரகசியமா போறதுதான் பெஸ்ட்! ஒகே, விக்கி... உன் வாட்ச்சை கொஞ்சம் கழட்டித் தா'' என்றது. ''எதுக்கு ஜீபா?'' புரியாமல் கேட்டான் விக்கி. ''அதுலே இருக்கிற நைட் க்ளோ வேணும்!'' என்றது. ''வாட்! நைட் க்ளோவை எடுக்கணுமா? அப்படினா வாட்சை உடைக்கப் போறீயா...? நோ... நோ... நோ வே!'' என்றபடி தள்ளி நின்றான் விக்கி. ''டேய்! குடுடா... இப்ப உயிர் முக்கியமா வாட்ச் முக்கியமா?'' என்றாள் சைலா. வாட்சைக் கழற்றிய விக்கி, ''இந்தச்  சுவரை உடைக்க வழி சொல்வேனு பார்த்தா... இவ்ளோ நேரம் யோசிச்சு என் வாட்சை உடைக்கத்தான் ப்ளான் போட்டியா ஜீபா? என்ன வில்லத்தனம்!'' என்று பொய்யாகக் கோபப்பட்டான். ஜீபா மும்முரமாக வேலையில் இறங்கியது. வாட்சில் இருந்த ஒளிரும் துகள்களைச் சுரண்டி எடுத்தது. ''இந்த ரேடியத்தை வெச்சு என்ன செய்யப்போறே ஜீபா?'' என்று கேட்டார் செல்வக்குமார். ''இது ரேடியம் இல்லை அங்கிள்.

விக்கி சைலா ஜீபா !

ரேடியம் மாதிரி ஒளிரும்  கெமிக்கல்... 'துத்தநாக சல்பேட்’டும் 'ஸ்ட்ரான்சியம் அலுமினேட்’டும் கலந்த  தனிமக் கலவை. இதுல கொஞ்சம் போல யுரோபியம், அலுமினியம் பை ஃப்ளோரைட் மாதிரியான தனிமங்களும் சேர்ந்திருக்கும். இந்தச் சுவர் மானிட்டர்களில் உள்ள மெட்டல்களோடு இந்தக் 'க்ளோ’ கலவை சேர்ந்து ரியாக்ட் ஆனா...  ஸ்ட்ராங்கா இருக்கிற இந்த மெட்டல்  மெழுகா உருகும்!'' என்றது ஜீபா. ''வ்வா£££வ்வ்வ்..!'' என்றார்கள் விக்கியும் சைலாவும். கடிகாரத்தில் இருந்து எடுத்த பவுடரை மானிட்டரில் ஆங்காங்கே ஒரு புள்ளிபோல தொட்டது ஜீபா. தொட்ட இடங்கள் உருக ஆரம்பித்தன. உருகிய திரவம் பட்ட இடங்களும் உருக... மானிட்டர் சுவரில் செவ்வக வடிவத் துண்டு கைக்கு வந்தது. ஜன்னல் போல வழி கிடைக்க, நால்வரும் அதன் வழியாக நுழைந்து, வெளியே வந்தார்கள்.

''அப்பாடா! ஒருவழியா இந்த மேஜிக் ரூம்லேந்து வெளியே வந்துட்டோம்!'' என்றாள் சைலா. பக்கத்தில் நின்றிருந்த விக்கி, ''அடடா! வாட்ச் போச்சே!'' என்றான். அவன் தலையில் தட்டி, ''ஓடு! ஓடு! ஜீபா முன்னே போயிடுச்சு'' என்று அவசரப்படுத்தினாள்.

பக்கத்தில் இருந்த புதர் மாதிரியான ஒரு மறைவிடத்தில் நான்கு பேரும் ஒளிந்தார்கள். ''செல்வா அங்கிள்! ஃபஸ்ட்டு நாம இவங்களோட இன்னொரு வழியை அடைச்சுட்டு, அப்புறம் பிரதீப் அங்கிளை காப்பாத்தணும்'' என்றது.

''வாங்க வழி காட்டறேன்'' என்று பிரிகேடியர் செல்வக்குமார் முன்னே செல்ல, ''அவசரமா எந்தப் பக்கமும் நுழைஞ்சுடாதீங்க. எங்கே வேணும்னாலும் மேஜிக் ரூம் இருக்கலாம், உஷாரா நடங்க!'' என்றது ஜீபா. ''மேஜிக் ரூம் எங்கே இருக்கோ... அந்த இடத்துக்குக் கொஞ்சம் முன்னே பாறைகளை முக்கோணம் மாதிரி போட்டு வெச்சிருக்காங்க. அந்த அடையாளம் நமக்கு யூஸ் ஆகும்'' என்றார் செல்வக்குமார். நால்வரும் ஒருவரை ஒருவர் பிடித்தபடி மிகக் கவனமாக முன்னேறினார்கள். ''அதோ பெரிய சைஸ் கிணறு மாதிரி தெரியுதே... அதுதான் இவங்க உருவாக்கி இருக்கிற இன்னொரு வழி இருக்கிற குகை'' என்றார் செல்வக்குமார். ''நீங்க மூணு பேரும் இங்கேயே இருங்க. வந்துடறேன்'' என்ற ஜீபா, அந்தக் குகையை நெருங்கியது.

மறைவான இடத்தில் நின்று நோட்டமிட்டது. அந்த வழியாக வருகிற, போகிறவர்களை நான்கு பேர் அடங்கிய நிஞ்சா டீம் செக் செய்து அனுப்பிக்கொண்டு இருந்தது. ஜீபா  துதிக்கையை மெள்ள அங்கே நீட்டியது. துதிக்கையின் நுனிப் பகுதியை மலைப்பாம்பின் தலைபோல ஆக்கிக் கொண்டு ஊர்ந்ததைப் பார்த்த அந்த 'செக்கிங்’ குழு மிரண்டு விலகியது. ஒருவன் ஓடிச்சென்று துப்பாக்கியை எடுத்தான். மற்றவன் அவனைத் தடுத்து, தீப்பந்தத்தைக் கொளுத்தினான். ஆனால், இவ்வளவு அவகாசம் எல்லாம் ஜீபா கொடுக்குமா என்ன..! அந்த நான்கு பேரோடு செக்கிங்குக்காக நின்றிருந்த ரெண்டு பேரையும் சேர்த்து ஒரே சுருட்டாகச் சுருட்டி, ஒரு பார்சல் போல வெளியே இழுத்துப் போட்டது. தூரத்தில் நின்றிருந்த விக்கி, சைலா, செல்வக்குமார் மூவரும் ஓடிவந்து அந்தப் 'பார்சலை’ புதருக்குள் இழுத்துச் சென்றார்கள். அவர்கள் தலையில் ரெண்டு தட்டு தட்டினார் செல்வக்குமார். அவர்களின் உடைகளை எடுத்து மூவரும் தங்கள் உடை மேலேயே போட்டுக் கொண்டார்கள்.

விக்கி சைலா ஜீபா !

அதற்குள், ஜீபா அந்த வாசலை அடைந்தது. ஒரே சமயத்தில் இருபது பேர் நுழைகிற அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது அந்த வழி. மலையைக் குடைந்து உள்ளே படிகள் இருந்தன. அந்த வழி எதுவரை செல்கிறது என்பதை அறிய ஜீபா விரும்பினாலும், அவகாசம் இல்லாததை உணர்ந்து வாசலை இழுத்து மூடியது.

'வாசல் அடைக்கப்பட்டது தெரிஞ்சு சுதாரிக்கறதுக்குள்ளே நம்ம வேலைகளை முடிச்சிடணும்’ என்று நினைத்த ஜீபா, மின்னலாகச் செயல்பட்டது. மீண்டும் திறக்க முடியாதபடி வாசலை அடைத்து, பெரிய பெரிய மரங்களைப் போட்டது. அந்தக் குகை முழுக்க பாறைகளை உருட்டிவிட்டு மூடியது.

கைகளைத் தூசி தட்டியபடி திரும்பி வந்த ஜீபா, நிஞ்சா காஸ்ட்யூமில் இருந்த விக்கி, சைலா, செல்வக்குமார் மூவரையும் பார்த்து, ''வாவ்! சூப்பரா இருக்கீங்களே! அடுத்து பிரதீப் அங்கிள் இருக்கிற ரூமுக்குப் போவோம்!'' என்றபடி செல்வக்குமாரைப் பார்த்தது. ''அது நாம இருந்த மேஜிக் ரூமுக்கு அந்தப் பக்கம் இருக்கு'' என்றார். ''அது ஆபத்து!  நாம எஸ்கேப் ஆனதை இந்நேரம் அங்கே கண்டுபிடிச்சு இருப்பாங்க'' என்றாள் சைலா.

ஜீபா மற்ற மூவரையும் அழைத்து, ''அதோ அந்த உயரமான இடத்துக்குப் போயிடுவோம். அங்கிருந்து அந்த மேஜிக் ரூம் தெரியுதான்னு பார்த்து எனக்கு காட்டுங்க'' என்றது. எல்லோரும் அங்கே சென்று பார்த்தார்கள். ''நம்ம அதிஷ்டம், அதோ அந்த மரத்துக்கு பின்னாடி லேசா தெரியுது பாருங்க ஒரு கொடி... அதுதான் பிரதீப்பை வெச்சிருக்கிற ரூம்'' என்றார் செல்வக்குமார்.

அப்போது, ''அம்மாடி... இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்க'' என்று சைலா காட்டிய திசையைப் பார்த்து விக்கியும் கத்திவிட்டான். அவர்கள் நின்றிருந்த உயரமான இடத்துக்கு அருகில் அதள பாதாளமாக பெரிய பள்ளத்தாக்கு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அதன் ஆழம் போய்க்கொண்டே இருந்தது. ''ரொம்ப உத்துப் பார்த்தா தரை மாதிரி தெரியுது... தண்ணி ஓடற மாதிரியும் இருக்கு'' என்றார் செல்வக்குமார். இவர்களின் பேச்சில் கவனம் செலுத்தாமல், ஜீபா சற்று தள்ளி வேறு எதையோ உற்று கவனித்துக் கொண்டு இருந்தது. ''என்ன ஜீபா அது?'' என்று நெருங்கினான் விக்கி. ''இது இங்கே இருக்கிற விஷப் பூச்சிகள்ல ஒண்ணு. இதோட முன் பக்கத்தைப் பார்த்தியா... எவ்வளவு கூர்மையா இருக்கு!'' என்றது ஜீபா. எல்லோரும் அதை அதிசயமாகப் பார்த்தார்கள்.

ஜீபா சொன்னது... ''இது இருட்டுல மட்டுமே இருக்கிற பூச்சி. வெளியே ரொம்ப நேரம் இதுங்களால உயிரோடு இருக்க முடியாது. ஸோ, இருட்டான இடம்... கருப்பா எங்கே தெரிஞ்சாலும் அதுக்குள்ளே நுழைய ட்ரை பண்ணும்'' என்று சொன்ன ஜீபா, ஏதோ யோசித்துவிட்டு, ''ஒரு நிமிஷம் இருங்க'' என்று சொல்லி, அந்த அதள பாதாளத்தில் எட்டிப் பார்த்து ஏதோ செய்தது.

திரும்பி வந்த ஜீபா ''ஃபாஸ்ட்டா போகணும்!'' என்றது. பக்கத்தில் ஷெட் மாதிரி ஓர் அறை தென்பட, அதற்குள் எட்டிப் பார்த்தார் செல்வக்குமார். ''இங்கே ஒரு பேட்டரி கார் நிக்குது'' என்றார் உற்சாகமாக. ''வெரிகுட் அங்கிள்!'' என்றபடி ஜீபா, அந்த பேட்டரி காரை மெள்ள வெளியே இழுத்தது. டிரைவர் சீட்டில் ஜீபா உட்கார்ந்துகொள்ள, மற்ற மூவரும் ஏறிக்கொண்டார்கள்.

நிறிஸிஷி டெக்னாலஜியோடு செயல்பட்ட ஜீபா, பிரதீப் அங்கிளை அடைத்து வைத்திருக்கிற ரூமை நோக்கி மிகத் துல்லியமாக பேட்டரி காரை செலுத்தியது. வழியில் நிறைய நிஞ்சாக்கள் நடமாட்டம் இருந்தாலும் நிஞ்சா உடையில் விக்கி, சைலா, செல்வக்குமார் மூவரும் இருந்ததால் வழக்கமாகப் போகிற வண்டி என யாரும் கண்டுகொள்ளவில்லை.

அடுத்த பன்னிரண்டாவது நிமிஷம் பேட்டரி கார், பிரதீப் இருக்கும் மேஜிக் ரூமை அடைந்தது. ஜீபா கொஞ்சம் முன்னாடியே இறங்கிக் கொண்டது. மேஜிக் ரூமின் வாசலில் இரண்டு நிஞ்சாக்கள் பேட்டரி காரை கை அசைத்து நிறுத்தினார்கள். அடுத்த கணம், அவர்கள் தொப்பென்று தரையில் விழுந்தார்கள். 'என்ன நடந்தது?’ என திரும்பிப் பார்த்தால்... ஸ்டைலாக நின்றிருந்தது ஜீபா. வாயில் ஸ்ட்ரா மாதிரி செடியின் தண்டு ஒன்றை 'பைப்’ போல வைத்திருந்தது. ''அட... என்ன பண்ணே இவங்களை? எப்படி இருந்த இவங்க இப்படி ஆயிட்டாங்க!'' என்றான் விக்கி. ''வாங்க... வாங்க! லேட் பண்ணக் கூடாது'' என்று சட்டென்று உள்ளே போனது ஜீபா. உள்ளே இரண்டு நிஞ்சாக்கள் இவர்களைப் பார்த்ததும் எழுந்து ஓடி வர, அதற்குள் சோப் பபிள் விடுவதுபோல, ஜீபா தன் வாயில் வைத்திருந்த ஸ்ட்ராவை ஊதியது. ஓடிவந்த நிஞ்சாக்கள் தரையில் கிடந்தார்கள். அந்த பரபரப்பான டென்ஷனிலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் ''இது என்ன மேஜிக்?'' என்று கேட்டான் விக்கி. ''விஷம் தடவின முள் அவங்க கழுத்து நரம்புல குத்தினா என்ன ஆகும் பின்னே?!'' என்றது ஜீபா. ''நீ ஊதினதுல முள் போனது எங்களுக்குத் தெரியவே இல்லை ஜீபா... செம ஸ்பீடு!’' என்று வியந்தாள் சைலா. இந்த சந்தர்ப்பத்தில் செல்வக் குமார் உள்ளே நுழைந்து அங்கே இருந்த ஒரு நிஞ்சாவைத் தாக்கி, தரையில் வீழ்த்தினார். அங்கே கைகள் கட்டப்பட்டு தரையில் மயக்கமாகக் கிடந்த பிரதீப்பைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்த செல்வக் குமார், ''ம்ம்ம்... சீக்கிரம் வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க'' என்று கத்தினார்.

அடுத்த நிமிஷம், சைலா ஓடிப்போய் பேட்டரி காரை கிளப்ப, எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். ''எங்கேயும் நிறுத்தக் கூடாது... நேரா மெயின் கேட் பக்கத்தில் நிற்கிற நம்ம ஜீப் வரைக்கும் ஒரே அழுத்தா போகணும்'' என்றது ஜீபா. ''ஓகே ஜீபா!'' என்ற சைலா, காரின் வேகத் தைக் கூட்டினாள். மயக்கத்தில் இருந்த பிரதீப் பைக் கன்னத்தில் தட்டி எழுப்பினார் செல்வக் குமார். நினைவு திரும்பியது பிரதீப் அங்கிளுக்கு.

''வரும்போது நான் ஒரு வேலை செஞ்சுட்டு வந்திருக்கேன். அந்த அதல பாதாளத்துல இருக்கிற விஷப் பூச்சிகளை எல்லாம் அதுங்க கூட்டைக் களைச்சு கிளப்பிவிட்டுட்டேன். இந்நேரம் அதுங்க மேலே வந்திருக்கும்'' என்ற ஜீபா, ''உடனே நீங்க எல்லாரும் உங்க கருப்பு டிரஸ்ஸைக் கழட்டி வீசிடுங்க. உங்க தலைமுடி, கண்ணு, புருவம்... எந்தக் கருப்பும் வெளியே தெரியக்கூடாது... மறைங்க சீக்கிரம்!'' என்றது.

அடுத்த செகண்டு மூவரும் பரபரப்பாக இயங் கினார்கள். சைலாவுக்கு தலையில் துணியைக் கட்டிவிட்டான் விக்கி. ''என் லேப் டாப்பை அவங்க எடுத்துக்கிட்டாங்க. அதுல என் உழைப்பு முழுசும் இருக்கு'' என்று கண்கலங்கினார் பிரதீப் அங்கிள். எல்லோரும் சமாதானம் செய்தார்கள். ''இதுவா பாருங்க அங்கிள்'' என்ற ஜீபாவின் கையில் லேப்டாப் இருந்தது. ''நீங்க இருந்த ரூம்ல இருந்தது... எடுத்துட்டேன்!'' என்றது கண்ணடித்தபடி!

அப்போது, ஹோவென பயங்கர சத்தம். பதட்டமாக நிறையபேர் தூரத்தில் ஓடிவருவது தெரிந்தது. ''ஜீபா! விஷப் பூச்சிங்க வர ஆரம்பிச்சுடுச்சு!'' என்று கத்தினார் செல்வக்குமார். விஷப்பூச்சிகள் கருப்பு உடையில் இருந்த நிஞ்சாக்களைப் பதம் பார்த்தன. அவர்களின் கண்களையும் தலையையும் தங்கள் கூரான முகத்தால் குத்தி, உள்ளே நுழைந்தன. நிஞ்சாக்கள் அவற்றைச் சமாளிக்க முடியாமல் கதறியபடி ரகசிய வழியை நோக்கி ஓடினார்கள். அங்கே வழி இல்லை என்று தெரிந்ததும் மெயின் கேட்டை நோக்கி ஓடிவந்தார்கள்.

''ஜீபா! பூச்சி நம்மை நோக்கி வருது!'' என்று கத்தினார் பிரதீப் அங்கிள். ''பயப்படாதீங்க! அதுங்க இவ்வளவு தூரம் பறந்து வரதுக்குள்ளே செத்துடும். இந்த விஷயம் நிஞ்சாக்களுக்குத் தெரியாதவரை நல்லது!'' என்றது ஜீபா.  மெயின் கேட்டை நோக்கி எல்லோரும் ரத்தக் களறியாக ஓடி வருவதைப் பார்த்து மிரண்ட செக் போஸ்ட் ஆட்களும் மிரண்டு ஓடினார்கள்.

இந்தப் பரபரப்பில் ஜீபா டீமை யாரும் கவனிக்கவில்லை. பேட்டரி காரை ஜீப் அருகே நிறுத்தினாள் சைலா. எல்லோரும் ஜீப்பில் ஏறிக் கொள்ள, மரப்பாலத்தை நோக்கி வண்டியைக் கிளப்பியது ஜீபா.

மரப்பாலத்தின் மறுமுனையில் பச்சை நிற உடையில் ராணுவப் படை தயாராக நின்றிருந்தது. வெளியே ஓடிவரும் நிஞ்சாக்களைக் கொத்தாகப் பிடித்தது ஒரு படை. மரப் பாலத்தைக் கடந்து எல்லாவற்றையும் துவம்சம் செய்ய தடதடவென முன்னேறியது இன்னொரு படை.

''இதெல்லாம் எப்படி..?'' என்று குழம்பிய நண்பர்களைப் பார்த்த ஜீபா, ''ஏற்கனவே  மிலிட்டரி தயாரா இருக்கறதாவும், எப்ப சிக்னல் கொத்தாலும் உள்ளே வந்துடும்னும் செல்வா அங்கிள் சொல்லி இருந்தாரே... அதான் பிரதீப் அங்கிளோட லேப்டாப் மூலம் அவங்களுக்கு சிக்னல் கொடுத்துட்டேன். எப்பூடி!?'' என்றது சற்றும் அலட்டல் இல்லாமல்!

எல்லோரும் ஜீபாவை கைத்தட்டிப் பாராட்டினார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு