பிரீமியம் ஸ்டோரி

முடிவு !

நள்ளிரவு. எல்லோரும் உறக்கத்தில் இருந்தார்கள். 'சே! எவ்வளவு அவமானம்! தாத்தாவில் தொடங்கி தங்கை வரை  சிரிக்கும்படி ஆகிவிட்டதே. அதற்கு வருந்தும்படி செய்ய வேண்டும்’ என்று சுந்தர் முடிவு செய்தான். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து 'விறுவிறு’ என எழுதினான். ஒன்றுக்கு மூன்று முறை படித்துப் பார்த்தான். அதையே மேலும் நான்கு தாள்களில் எழுதினான். 'அனைவரும் ஒரே சமயத்தில் பார்க்க வேண்டும்’  

நச் கதைகள் !
##~##

அப்பாவின் மேஜை... தாத்தாவின் பைஜாமா... பாட்டியின் சின்னப் பெட்டி... தங்கையின் புத்தகப் பை... காலையில் அம்மா சாமி கும்பிட வருவதால் பூஜை அறை... எல்லா இடங்களிலும் வைத்துவிட்டு கதவைத் திறந்தான். எல்லோரையும் ஒருமுறை பார்த்தான்... போய்விட்டான் சுந்தர்.

மறுநாள் காலை... வீடே பரபரப்பானது. நினைத்ததைப் போலவே அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தங்கை என எல்லோரும் ஒரே சமயத்தில் அவரவரது கடிதத்தைப் படித்து பரபரப்பானார்கள். ''என் பேரன் ரொம்ப ரோஷக்காரன்'' என்றார் தாத்தா. அதே சமயம். மொட்டை மாடியில் இருந்து படுக்கையுடன் கீழே இறங்கி வந்த சுந்தரை எல்லோரும் சூழ்ந்துகொண்டார்கள்.

''ஸாரி சுந்தர்... 'தாத்தா, அப்பா எல்லாரும் தமிழ் ஆசிரியர்களா இருக்காங்க. அவங்களோட வாரிசு நீ இப்படி பத்து வரியில நாலு பிழை செய்து இருக்கியே’ன்னு ரொம்ப கிண்டல் பண்ணிட்டோம். ஆனா, நீ  ஒரு வைராக்யத்தோட ஒரு பிழைகூட இல்லாம அழகா ஒரு கட்டுரை எழுதி அசத்திட்டே!'' என்று அப்பா சுந்தரை அணைத்துக் கொண்டார்.

மதிய உணவு

மதிய உணவுக்கான நேரம்... அந்தப் பள்ளியின் மரத்தடி, வராண்டா எங்கும் சுட்டிகள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். நித்யா வகுப்பு அறையைவிட்டு வெளியே வர, கையில் சாப்பாட்டுப் பையுடன் அம்மா. ''எல்லோரும் வந்து பத்து நிமிஷம் ஆச்சு... நீ ஏன்டி இவ்வளவு நேரம் கழிச்சு வரே?'' என்று கேட்டாள் அம்மா. ''அது...வந்து...'' என்று நித்யா தயங்க...

நச் கதைகள் !

  ''தெரியும் சொல்லாதே! எழுதிகிட்டு இருந்திருப்பே'' என்ற அம்மா, ஒரு சுட்டியிடம் ''உன் பேர் என்ன?'' என்று கேட்டாள்.

  ''அனிதா'' என்றாள் அவள். ''என்ன படிக்கறே?'' ''தேர்ட் ஸ்டாண்டர்ட்''

  ''ஓ! நித்யா கிளாஸ்தானா?''  ''ஆமா!'' என்றாள். உடனே நித்யா பக்கம் திரும்பிய அம்மா ''இவளைப் பாரு! கரெக்டா வந்து க்ளீயரா சாப்பிட்டுகிட்டு இருக்கா. நீ இப்ப பெல் அடிச்சுடுவாங்கன்னு அரைகுறையா சாப்பிடுவே. ஒருநாள் பிரின்ஸ்பால் கிட்ட சொன்னாதான் நீ சரிப்படுவே'' என்றாள்.

''போதும் நிறுத்தும்மா! இவங்க ஹோம் ஒர்க்கைப் பார்த்து கரெக்ஷன் போட லேட்டாயிடுச்சு. சாப்பாடு கொடுத்தாச்சு இல்லே. கிளம்பு'' என்றார் மூன்றாம் வகுப்பு மிஸ் நித்யா.

போலீஸ் !

நேரம் செல்லச் செல்ல பாலுவுக்கு டென்ஷன் அதிகமானது. பத்து மணிக்கே எஸ்கேப் ஆவதாகப் பிளான். ''நீ எப்படியாவது வந்துடு பாலு... உன் திறமை மேலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எல்லாத்தையும் நாங்களே கொண்டுவரோம். அவங்களை அடிச்சு நொறுக்கிடணும்'' என்று சொல்லி இருந்தார்கள்.

நச் கதைகள் !

வெளியே இருந்து மூன்று முறை சிக்னல் வந்துவிட்டது. மெதுவாக எட்டிப் பார்த்தான் பாலு. 'ஒரு நிமிஷம் கிடைச்சாலே போதும். எஸ்கேப் ஆயிடலாம். ஆனா, இந்தப் போலீஸ்... இடத்தைவிட்டுக் கொஞ்சமும் அசையலையே’ என்று தவித்தான். அப்போது தொலைபேசி ஒலித்தது. வாசலில் இருந்த அவர் எழுந்தார். பாலு சட்டெனப் பதுங்கினான். அவர் உள்ளே வந்து போனை நெருங்க...

  அந்த சில நொடிகளில் 'குபீர்’ என வெளியே பாய்ந்துவிட்டான். திரும்பிப் பார்த்த அவர், ''டேய்... டேய்!'' என்று கத்தினார். ''என்ன... கோட்டை விட்டுட்டியா? என்ற இன்ஸ்பெக்டரிடம், ''ஸாரி சார்... ரொம்பக் கவனமா பார்த்துட்டு இருந்தேன்... அப்படியும் டிமிக்கி கொடுத்துட்டு ஓடிட்டான் சார்!'' என்றார் அந்த கான்ஸ்டபிள். ''பாருடீ உன் பையனை... எங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாட ஓடிட்டான்!'' என்று நொந்து

கொண்டார் அந்த இன்ஸ்பெக்டர் அப்பா.

எக்ஸ்பிரஸ் !

''அம்மா நான் கிளம்பறேன்'' என்றான் முரளி. ''சீக்கிரம் போ! நேத்து மாதிரி எக்ஸ்பிரஸ் வந்துடப் போகுது!'' என்றாள் அம்மா.

''இல்லேம்மா அதுக்குள்ளே போய்டுவேன்'' என்றபடி கிளம்பினான்.

நச் கதைகள் !

நேற்று கிளம்பும் நேரத்தில் சைக்கிள் டியூப் பஞ்சர். கடைக்குப் போனால் பஞ்சர் ஒட்டுபவர் எங்கோ போய் இருந்தார். பிறகு ரெடி செய்துகொண்டு போவதற்குள் எக்ஸ்பிரஸ் போய்விட்டது. இன்று எழுந்ததும் சைக்கிளை சரி பார்த்துவிட்டான். அதனால் தவற விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டே தெரு முனைக்கு வந்தான். கடைசி வீட்டு, பாட்டி நின்றிருந்தார். ''முரளி ரெண்டு நாளா காய்ச்சல். என்னை ஆஸ்பத்திரியில விட்டுடறியா?'' என்றார்.

ஆஸ்பத்திரி இருப்பது எதிர் திசையில்... பாவம் பாட்டிக்கும் வீட்டில் யாருமில்லை. அதனால், மறுக்க முடியாமல் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்று ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தினான். அடுத்த நொடியே மின்னலாக கிளம்பினான். ''நன்றிப்பா'' என்ற பாட்டியின் குரல் காற்றில் கரைந்தது. சரியான நேரத்துக்கு வந்து, சைக்கிளை நிறுத்தினான். எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. டயம் இருந்தது.

அந்த லெவல் கிராஸிங்கில் காத்திருந்த பேருந்துகளில் தூக்கு பாத்திரத்தோடு ஏறியவன், ''சுண்டல்! சுண்டல்'' என்று விற்க ஆரம்பித்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு