பிரீமியம் ஸ்டோரி

எட்டாம் வகுப்பு படிக்கும் கண்ணனின் அப்பா ஒரு வனத் துறை அதிகாரி. கண்ணன் அடிக்கடி அப்பாவோடு காடு அருகே இருக்கும் அலுவலகத்துக்குப் போவான். இப்பவும் அப்படித்தான், எக்ஸாம் டென்ஷனில் இருந்து ரிலாக்ஸ் செய்துக்க வந்தான். விடியற்காலையில் வெளியே வர, ''ஹாய் கண்ணன்... எப்படி இருக்கே?'' என்றபடி ஒரு குரங்கு, ஒரே தாவலில் அவன் முன்னால் வந்து நின்னுச்சு.

காட்டு நடப்பு !
##~##

''அட! என் பேரு உனக்கு எப்படி தெரியும்?'' என்று கேட்டான் கண்ணன்.

''நீ அடிக்கடி இங்கே வந்து விளையாடுவே... அப்பா உன் பேரைச் சொல்லி கூப்பிடுவார். பை தி வே, என் பேரு தொக்கை. பத்திரிகை நிருபர். எக்ஸாம் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?'' என்று கேட்டது தொக்கை.

''இதுவரை நல்லா எழுதி இருக்கேன். நடுவில் ரெண்டு நாள் லீவு'' என்றான்.

''வாயேன்... காட்டை ஒரு ரவுண்டு அடிப்போம். எங்க காட்டு நடப்பு  எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க. திரும்ப பத்திரமா கொண்டுவந்து விட்டுடறேன்'' என்றதும், கண்ணன்  தொக்கையுடன் கிளம்பினான்.

இருவரும் பேசிக்கொண்டே நடந் தார்கள். ஆங்காங்கே கரடி கிட்டு நடிக்கும் '  'மா மனிதன்’, முயலும் ஒட்டகமும் இணைந்து மிரட்டும் 'குள்ள மனிதனும் உயர்ந்த மனிதனும்’, புதுமுகங்கள் கலக்கும் 'ஆறு மனிதர்கள்’ என்ற தலைப்புகளில் சினிமா போஸ்டர்கள். ''என்ன... தலைப்பு எல்லாம் மனிதர்கள் பெயரா இருக்கு?'' என்று கேட்டான் கண்ணன்.

காட்டு நடப்பு !

''சிங்கம், சிறுத்தை, சிங்கம் புலி, ஆடு புலி, குள்ளநரி கூட்டம்ன்னு நீங்க தலைப்பு வைக்கறீங்க இல்லையா... அதான், நாங்க இப்படி வைக்கிறோம்'' என்றது தொக்கை. சினிமா போஸ்டர்கள் தவிர, 'உங்கள் வைரமான வாக்குகளை நிலா சின்னத்துக்கு அளியுங்கள்!’ 'ஏழைகளின் சின்னம்... நான்கு கிளை’ இப்படி  கட்சிகளின் அறிவிப்புகள்.

''அட! இங்கே எலக்ஷன் நடக்குதா?'' என்று கேட்டான் கண்ணன்.

''ஆமா! நிலா, நான்கு கிளை, விரல் சின்னம் கட்சிகள் இங்கே ஃபேமஸ்'' என்றது தொக்கை.

அப்போது ஓரிடத்தில் கும்பல் நின்றது. சைக் கிளுடன் ரெண்டு நரிகள். அவற்றின் எதிரே ஒரு யானை. அந்த யானையைச் சுற்றி மூன்று கரடிகள். ''கண்ணா... அவர்தான் தேர்தல் அதிகாரி. கட்சிகள் இலவசப் பொருட்கள் கொடுக்கறதைத் தடுக்க, காடு முழுக்க ரெய்டு வந்து கலக்கறார். வா... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்'' என்றபடி தொக்கை தாவித் தாவி ஓட, கண்ணனும் பின்னாலே சென்றான்.

அந்த ரெண்டு நரிகளும் திருட்டு முழியுடன் நின்றிருந்தன. கேரியரில் செய்தித்தாள்கள். யானை கையில் பால் பாக்கெட். ''டேய்... மரியாதையா சொல்லுங்க, உங்களை யார் அனுப்பினது?'' என்று கேட்டது.

''யாரும் அனுப்பலைங்க... நாங்க ரெகுலரா பால் பாக்கெட், பேப்பர் வாங்கற இடத்துல இருந்துதான் இதை வாங்கிட்டு வரோம்'' என்று ஒரு நரி சொன்னது.

''இப்படி எல்லாம் கேட்டா சொல்ல மாட்டீங்க... எங்க இடத்துக்குக் கொண்டுபோய் கவனிச்சாதான் சரியா இருக்கும்'' என்று யானை சொன்னதும், அந்த நரிகளை மூன்று கரடிகளும் ஜீப்பில் ஏற்றின.

''சார் வணக்கம்'' என்றது தொக்கை.

காட்டு நடப்பு !

''ஹாய் தொக்கை... எப்படி இருக்கே? இது யாரு?'' என்று கேட்டது யானை.

''பேரு கண்ணன். காட்டிலாகா அதிகாரி பையன். இங்கே என்ன நடக்குது?'' என்று கேட்டான் கண்ணன்.

''பால் பாக்கெட்ல வாக்காளர்களுக்கு லஞ்சம் தராங்க. இதோ பார்'' என்ற யானை, ஒரு பால் பாக்கெட்டை உடைக்க, அதில் இருந்து மோதிரம் ஒன்று கீழே விழுந்தது. ''இப்படித்தான் முயல்களுக்கு கேரட், கரடிகளுக்கு தேன் பாட்டில், பறவைகளுக்கு பருப்புன்னு கட்சிக்காரங்க பல வழிகளில் கொடுக்கறாங்க. அதைத் தடுக்க ராத்திரி பகலா திரியறேன். ஒரு மாசமா தூக்கமே இல்லை. சரி தொக்கை, நான் கிளம்பறேன். அடுத்த தெருவுல இட்லிக்குள்ளே செயினை வெச்சுக் கொடுக்கறதா தகவல்'' என்றபடி கிளம்பியது.

நரிகள் விட்டுச் சென்றிருந்த சைக்கிளில் இருந்து ஒரு செய்தித்தாளை எடுத்தது தொக்கை. கண்ணனும் எட்டிப் பார்த்தான். விளையாட்டுப் பகுதியில், 'உலகக் காட்டுக் கோப்பை இறுதிச் சுற்றில் அமேசான் காட்டுடன் இன்று மோதல்’ என்ற கொட்டை எழுத்துகள்.

''ஓ! வேர்ல்ட் கப் மேட்ச்கூட நடக்குதா?'' என்று கேட்டான் கண்ணன்.

''ஆமா! பக்கத்துல இருக்கிற மைதானத்துல, இன்னும் கொஞ்ச நேரத்துல மேட்ச் ஆரம்பிக்கும். பத்து ஓவர் போட்டி. பார்க்கலாம் வர்றியா?'' என்று கேட்டது தொக்கை.

''கண்டிப்பா'' என்ற கண்ணன் தொக்கையுடன் சென்றான்.

அந்த இடத்தை அடைந்து, டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்கள்.  மிருகங்கள் கூட்டம். விசில், மேளதாளத்துடன் மைதானம் கலக்கியது. இந்தியா காடுதான் முதல் பேட்டிங். இந்திய சிறுத்தையும் சிங்கமும் களத்தில் இருந்தார்கள். அமேசான் காட்டுக் குதிரை, மின்னல் வேகத்தில் ஓடிவந்து போட்ட பந்தை, சிங்கம் ஓங்கி அடிக்க... ஃபோர்! தொக்கை குஷியுடன் ஒரு குதி குதித்து, கண்ணன் முதுகில் தட்டியது.

ஒரு வழியாக... பத்து ஓவரில்  123 ரன்களை எடுத்தது நம்ம டீம். பிறகு ஆடிய அமேசான் காடு 122 ரன்களே எடுத்தன. ஒரு ரன்னில் வெற்றி. மைதானமே உற்சாகத்தில் அதிர்ந்தது.

தொக்கையுடன் கண்ணன் வெளியே வந்தான். எதிரே குட்டி விலங்குகள் எல்லாம் எக்ஸாம் எழுத பள்ளிக்குச் சென்றுகொண்டு இருந்தன. ''பசங்களா நேத்து எக்ஸாம் எப்படி இருந்தது?'' என்று கேட்டது தொக்கை.

''நேத்து மேக்ஸ். பின்னி பெடல் எடுத்துட்டோம் இல்லே...'' என்றது ஒரு சுட்டிப் புலி.

''அடடா! தொக்கை, எனக்கும் அடுத்து மேக்ஸ் எக்ஸாம்தான். போய்ப் படிக்கணும்'' என்றான் கண்ணன்.

''இதோ ஷேர் ஆட்டோ வருது, ஏறிக்க'' என்றது தொக்கை. ஒரு மான் ஆட்டோவுடன் வந்தது.  இருவரும் ஏறிக் கொண்டார்கள்.

''பரவாயில்லையே... இங்கே குட்டிங்க இவ்வளவு அமைதியா இருக்காங்களே...'' என்றான் கண்ணன்.

''நீ வேற... எக்ஸாம் இருக்கறதால காடு அமைதியா இருக்கு. லீவுல வந்து பாரு... இப்ப மைதானத்துல பார்த்தியே அமர்க்களம்... அதைவிட பல மடங்கு இருக்கும். இவங்க பண்ற கலாட்டாவுல நிம்மதியா எழுதவே முடியாது'' என்றது தொக்கை.

இருவரும் அலுவலக வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். தொக்கை ''ஓகே கண்ணன்... நான் போய் மேட்ச் விமர்சனம் எழுதணும் பை!'' என்றது. ''உன்னோடு ஒரு ரவுண்ட் வந்தது உண்மையிலேயே சூப்பரா இருந்துச்சு. நன்றி தொக்கை'' என்ற கண்ணன் உற்சாகத்துடன் கை அசைத்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு