Published:Updated:

தேவதைக் கதைகள் - 8

அன்னப் பறவைகளும் அன்பு சகோதரியும் !கே.முரளிதரன், ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'வீர தேசம்’ என்ற நாட்டின் ராஜாவுக்கு ஆறு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. திடீரென ராணி இறந்துவிட, ராஜா ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணோ, ஒரு சூனியக்காரி. குழந்தைகளிடம் அவள் மோசமாக நடந்துகொண்டாள். இதனால், ராஜா ஒரு முடிவுசெய்தார்.

அவருக்குச் சொந்தமான கோட்டை ஒன்று நடுக் காட்டில் இருந்தது. மந்திர நூல் உருண்டை ஒன்றை உருட்டிவிட்டு, அதன் பின்னால் சென்றால்தான் அந்தக் கோட்டைக்குச் செல்ல முடியும். அந்தக் கோட்டைக்குள் தன் குழந்தைகளை வைத்து, அவ்வப்போது சென்று பார்த்து வந்தார்.

இது சூனியக்கார ராணிக்குத் தெரிந்துவிட்டது. ராஜா இல்லாத நேரமாகப் பார்த்து, அந்த நூல் உருண்டையை எடுத்தாள். அதை உருட்டிவிட்டு, கோட்டையை அடைந்தாள். வெளியே இருந்தபடியே, 'குழந்தைகளே, அம்மா வந்திருக்கிறேன்' என்றாள். இதைக் கேட்டு, ஆறு இளவரசர்களும் வெளியே வந்தார்கள். அவர்கள் மீது மந்திரத்தை ஏவினாள் சூனியக்காரி. அவர்கள் அன்னப்பறவைகளாக மாறி, பறந்துபோனார்கள். இளவரசி வெளியே வராததால், அரண்மனைக்குத் திரும்பிவிட்டாள்.

அடுத்த நாள், கோட்டைக்கு வந்த ராஜா நடந்ததை அறிந்து அழுதார். 'கவலைப்படாதீர்கள் அப்பா, நான் அண்ணன்களை மீட்டு வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் இளவரசி.

காட்டுக்குள் சென்றபோது மழை கொட்ட ஆரம்பித்தது. மழையில் நனைந்தபடியே, 'எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?' என்று வாய்விட்டுக் கதறினாள் இளவரசி.

தேவதைக் கதைகள் - 8

அப்போது தேவதை ஒன்று தோன்றி, 'அழாதே, இந்த ஒற்றையடிப் பாதையில் சென்றால், ஒரு வீடு இருக்கும். அங்கே உன் சகோதரர்களைச் சந்திப்பாய். அவர்கள் ஒவ்வொருவருக்கும் உன் கையால் ஒரு சட்டையைப் பின்ன வேண்டும். ஒரு சட்டையைப் பின்னுவதற்கு ஆறு மாதங்கள் ஆகும். முழுமையாக முடியும் வரை நீ யாருடனும் பேசக் கூடாது' என்றாள்.

இளவரசி தொடர்ந்து நடந்தாள். தேவதை சொன்ன வீடு வந்தது. மாலை நேரத்தில் ஆறு அன்னப்பறவைகள் வீட்டுக்கு வந்தன. தான் அவர்களைக் காப்பாற்ற வந்திருப்பதாகத் தெரிவித்த இளவரசி, தேவதை கூறியதையும் அவர்களிடம் சொன்னாள்.

பிறகு அண்ணன்களுக்காக  அவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் தொடர்ந்து சட்டையைப் பின்னிக்கொண்டிருந்தாள்.

ஒருநாள், பக்கத்து நாட்டு இளவரசன் வேட்டைக்கு வந்தான். காட்டுக்குள் வழி தவறியவன், இளவரசி இருந்த வீட்டை வந்தடைந்தான். 'ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?' என்று கேட்டான்.

இளவரசி பதில் பேசாமல், உணவை அளித்தாள். அவளின் அழகும் அமைதியும் அவனுக்கு பிடித்துப்போயின. 'நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்கிறாயா?' என்று கேட்டான்.

தேவதைக் கதைகள் - 8

இளவரசி பதில் சொல்லவில்லை. அந்த இளவரசன், அவளைத் தன் நாட்டுக்கு தூக்கிச்சென்றான். அவள் போகும் வழியில் நூல் உருண்டையை உருட்டியபடியே சென்றாள். மாலையில் வீட்டுக்கு வந்த அன்னப்பறவை சகோதரர்கள், அவள் விட்டுச்சென்ற நூல் உருண்டையைப் பார்த்து, அதன் வழியே அரண்மனையை அடைந்தனர்.

அங்கே இளவரசன், இளவரசியை மணம் முடித்திருந்தான். அன்னப்பறவைகள் தினமும் மாலையில் வந்து தங்கையைப் பார்த்துவிட்டு, அருகில் இருந்த மரங்களில் தங்கிக்கொண்டன. இளவரசிக்குக் குழந்தை பிறந்தது.

அந்த நாட்டு மந்திரிக்கு இளவரசியைப் பிடிக்கவேயில்லை. அதனால், இளவரசி தூங்கும்போது, குழந்தையை திருடிச்சென்று காட்டில் போட்டுவிட்டான். அந்தக் குழந்தையை அன்னப்பறவைகள் எடுத்துச்சென்றன.

அடுத்த நாள், 'குழந்தை எங்கே?’ என இளவரசன் கேட்டபோது, அவள் பதில் சொல்லாமல் சட்டையைப் பின்னிக்கொண்டிருந்தாள். அதற்கு மேல் இளவரசன் ஏதும் கேட்கவில்லை. இரண்டாவது குழந்தைக்கும், மூன்றாவது குழந்தைக்கும் இதேபோல நடந்தது. அப்போதும் இளவரசி பேசவில்லை. ஆத்திரமடைந்த இளவரசன், அவளைக் கொல்வதற்கு உத்தரவிட்டான்.

அப்போது இளவரசி சட்டைகளைப் பின்னி முடித்திருந்தாள். ஆறாவது சட்டையில் கை மட்டுமே பாக்கி. அவளைக் கொலைக் களத்துக்கு அழைத்துச்சென்றபோது ஆறு அன்னப்பறவைகள் பறந்து வந்தன. இளவரசி தன் கையில் இருந்த சட்டைகளை அவற்றின் மீது வீசினாள்.

அன்னப்பறவைகள், மனிதர்களாக மாறின. ஆறாவது சட்டையில் கை இல்லாததால், ஆறாவது அண்ணனுக்கு  கைக்குப் பதிலாக, அன்னத்தின் இறக்கையே இருந்தது.

சகோதரர்கள், சாபம் விலகி மனித உரு எடுத்ததும் அவர்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்து, பேச ஆரம்பித்தாள் இளவரசி. நடந்ததை அறிந்த இளவரசன், மந்திரியைச் சிறையில் அடைத்தான். அன்னப்பறவைகளின் பாதுகாப்பில் இருந்த குழந்தைகள் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டன.

பிறகு அவர்கள், தந்தையைச் சந்தித்து நடந்ததைச் சொன்னார்கள். ராஜாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அப்படியானால், அந்தச் சூனியக்கார ராணி? அவள் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு