Published:Updated:

கிரிக்கெட் குளம் !

மா.பிரபாகரன் கண்ணா

##~##

கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்ததும் 'ஹேய்ய்ய்ய்ய்ய்’ என்று நண்பர்கள் உற்சாகத்துடன் கோகுலைத் தூக்கிப் பாராட்டினார்கள்.

''நாளைக்கும் பிராக்டீஸுக்கு வந்துருடா... இந்த முறை  டோர்னமென்ட்ல நாம வின் பண்றோம்'' என்றான் பிரசாத்.

நண்பர்கள் கிளம்பிவிட்டார்கள். அந்தக் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து, கிளவுஸ் மற்றும் ஷூக்களைக் கழற்றி, பைக்குள் வைக்க ஆரம்பித்தான் கோகுல்.

அப்போது திடீரென அழுகுரல் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். அவனுக்குக் கீழ் படிக்கட்டில் ஒரு பெண் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார்.

''ஆன்ட்டி யார் நீங்க... ஏன் அழுறீங்க?'' என்று கேட்டான் கோகுல். 'இவங்க எப்படி திடீர்னு இங்கே வந்தாங்க?’ என்ற பயக் கேள்வியும் அவன் மனதில் ஓடியது.

''நீங்கள் தினமும் விளையாடும்போது, நான் இங்கேதான் அமர்ந்திருப்பேன். இத்தனை நாட்களாக உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன் என்றால், எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது'' என்றார் அந்தப் பெண்.

கோகுல், அவளை உற்றுப் பார்த்தான். ஒருகாலத்தில், அந்தப் பெண் தோற்றப்பொலிவுடன் இருந்திருக்க வேண்டும். இப்போது மிகுந்த வாட்டத்துடனும் சோர்வுடனும் காணப்பட்டார். கோகுல் அருகில் சென்று, ''நீங்கள் யார் என்று சொல்கிறீர்களா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், ''நான் இந்தக் குளத்தின் தேவதை. எனது நிலையை எண்ணி அழுதுகொண்டிருக்கிறேன். நீ விரும்பினால், எனது கதையைச் சொல்வேன்'' என்றார். கோகுல் தலையாட்டினான்.

''இந்தக் குளத்தின் பெயர் தெரியுமா உனக்கு?'' - இது, தேவதையின் கேள்வி.

''வந்து... 'கிரிக்கெட் குளம்’னு நாங்க சொல்வோம். உண்மையான பெயர்...'' என்று தடுமாறினான் கோகுல்.

கிரிக்கெட் குளம் !

''மாக்குளம்'' என்று சொல்லித் தேவதை தொடர்ந்தார். ''இதற்கு எப்படிப் பெயர் வந்தது தெரியுமா? இந்தக் குளத்தின் ஆழம் 20 அடிக்கும் அதிகம். இந்தப் பகுதியை ஆண்ட மன்னன், இந்தக் கிராமத்து மக்களின் நீர் தேவைக்காக இதை வெட்டினான். முழுமையாக இதில் தண்ணீர் நிரம்பியிருக்கும்போது நீரின் மேற்பரப்பில் அலைகள் புரளும். கடல் போல் இந்தக் குளத்தில் அலைகள் பொங்கியதால், இதற்கு 'மாக்குளம்’ என்று பெயரிட்டார்கள்!'' என்றார் தேவதை.

''அப்படியா?'' என்றவாறு குளத்தைப் பார்த்தான் கோகுல். வறண்ட தரையில் ஆங்காங்கே புற்களும் புதர்களுமாக இருந்தன. இவர்கள் கிரிக்கெட் விளையாடும் இடம் மட்டும் சமமாக இருந்தது.

தேவதை தொடர்ந்தார். ''சுற்றியுள்ள கண்மாய்களிலிருந்து இந்தக் குளத்துக்கு நீர் ஊறும் ஊற்றுகள் உண்டு. கடும் வறட்சிக் காலத்திலும் இந்தக் குளத்தில் தண்ணீர் இருக்கும். இதில், மீன்கள் கூட்டமாக நீந்துவதைக் காண்பது கொள்ளை அழகு. இதோ, நாம் உட்கார்ந்திருக்கிறோமே... இதற்கு 'கிழக்குப் படித்துறை’ என்று பெயர்.  குளத்துக்கான பிரதான நுழைவாயில் இதுதான். இங்கே ஆண்கள், பெண்கள் நீராட தனித்தனியே வசதிகள் இருந்தன. இதோ, படித்துறையின் வாயிலில் இடிந்துகிடக்கிறதே விநாயகர் கோயில், இதற்கு 'மாக்குள விநாயகர்’ என்று பெயர். ஒருகாலத்தில் இந்தக் கோயிலில் மூன்று கால பூஜைகள் நடைபெற்றன'' என்றார் தேவதை.

''ஓகோ..!'' என்றான் கோகுல்.

''குளத்தைச் சுற்றிலும் ஆல், அரசு, அத்தி என ஓங்கி வளர்ந்த மரங்கள் இருக்கும். அதோ, வடக்குப் பக்கத்தில் ஒரு பொட்டல் காடு தெரிகிறதே... அதுதான் அன்றைய களத்துமேடு. அந்தக் களத்துமேட்டில் கதிரடிக்கும் சத்தம் ஓயாமல் கேட்கும். ஒருகாலத்தில் முப்போகம் விளைந்த மண். கதிர் அடிப்பவர்கள், கட்டு சுமப்பவர்கள், வண்டியில் பாரம் ஏற்றிச் செல்பவர்கள் என்று கோழி கூவ ஆரம்பித்து, பொழுது சாயும் வரை என்னைச் சுற்றி மனிதர்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்'' என்றபடி பெருமூச்சுவிட்டார் தேவதை.

கிரிக்கெட் குளம் !

''உங்களின் வருத்தம் புரிகிறது. நான் சின்ன வயதில் ஆசை ஆசையாக ஒரு பொம்மை வைத்திருந்தேன். அது உடைந்தபோது, மூன்று நாட்கள் சரியாகச் சாப்பிடவில்லை. ஒரு பொம்மைக்கே இப்படி என்றால், உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்'' என்றான் கோகுல்.

''இப்போதுகூட மனிதர்கள் நினைத்தால் இங்கே குளத்தை உருவாக்கலாம். முட்புதர்களை அகற்றித் தூர் வாரினால் நீர் கிடைக்கும். ஆனால், யார் செய்வது? சரி, நேரமாகிவிட்டது. நீ கிளம்பு'' என்ற தேவதை மறைந்துவிட்டார்.

கோகுல் யோசனையுடன் நடந்தான். நாட்கள் சென்றன. பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த கோகுலின் டீம், வெற்றிபெற்றது.

போட்டியின் சிறப்பு விருந்தினராக மேயர் வந்திருந்தார். அவரை நெருங்கிய கோகுல், ''சார், உங்களிடம் பேச வேண்டும்'' என்றான்.

''என்ன விஷயம் தம்பி?'' என்று கேட்டார் மேயர்.

''எங்கள் பகுதியில் 'மாக்குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. அதைத் தூர் வாரி, சரி செய்ய வேண்டும்'' என்றான் கோகுல்.

''அட... இந்தச் சின்ன வயதிலேயே சமூகம் பற்றிய பொறுப்புடன் பேசுகிறாயே! நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன் தம்பி'' என்றார் மேயர்.

அடுத்த சில மாதங்களில் மாக்குளம் தூர் வாரப்பட்டது. மழைக்காலமும் தொடங்க, குளத்தில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.

சைக்கிளில் அந்தப் பக்கமாக வந்தது கோகுல் டீம்.  ''முன்னாடி, பக்கமா இருந்த இங்கே கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோம். இப்போ, ரெண்டு கிலோமீட்டர் தாண்டி கிரவுண்டுக்குப் போகவெச்சிட்டியே கோகுல்'' என்றான் பிரசாத்.

''கிரிக்கெட் எங்கே வேணும்னாலும் விளையாடலாம்டா. ஆனா, குளத்தை நினைச்ச இடத்தில் உருவாக்க முடியாது இல்லையா?'' என்றான் கோகுல்.

அவர்கள் மைதானத்தை நோக்கிச் சென்றார்கள். கோகுல் திரும்பிப் பார்த்தான். படித்துறையில் பொலிவுடன் நின்றிருந்த தேவதை, அவனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு