Published:Updated:

எங்கே என் மகள் சாரதா ?

எங்கே என் மகள் சாரதா ?

பிரீமியம் ஸ்டோரி

வாசகி சிறுகதை
சிரிஷா மாதவி
எங்கே என் மகள் சாரதா ?
எங்கே என் மகள் சாரதா ?
ஓவியங்கள் ம.செ

எங்கே என் மகள் சாரதா?

நாளைக்கு தீர்ப்புங்கறதால, 'கோயிலுக்கு போகலாம்மா'னு சொன்னாள். சரினு கூட்டிட்டு வந்தேன். சாமி கும்பிட்டுட்டு என் கூடவே வந்தவ, திடீர்னு செருப்பு கவுன்ட்டர்ல காணாம போயிட்டா. ரெண்டு மணி நேரமா தேடறேன். எங்க போனானே தெரியலே..."

இப்போது பதற்றம் எனக்குள்ளும் இறங்கியது. எங்கே போயிருப்பாள்? தானாக எங்குமே போனதில்லை இதுவரை. யாரும் எங்கும் அழைத்துப் போனதும் இல்லை. பின் வீட்டு அம்சாவுடன் ஓரிருமுறை துணிக்கடைக்குப் போயிருக்கிறாள். மற்றபடி நாள் முழுக்க சமையலறையில் அடைந்து, விதவிதமாக சமைப்பது தவிர வேறொன்றும் தெரியாது அவளுக்கு. இப்போது மட்டும் எப்படி?

எங்கே என் மகள் சாரதா ?

"நம்ம வீட்டுக்குத்தான் போய் உக்கார்ந்திருக்குதா... பாரு!"

"அட, வீட்டுக்கு வந்துதாங்க உங்களுக்கு போன் பண்றேன்..."

நான் அலுவலகத்தில் இருந்து நேராக கோயிலுக்குச் சென்றேன். அங்கேயிருக்கும் பூக்கடை, பழக்கடை, ஆட்டோ ஸ்டாண்ட் என்றுகூட அலைந்தேன். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. போன மாத மழையில் கோயில் குளம் நிரம்பி வழிகிறதே... ஒருவேளை மனம்உடைந்து போய்... குளத்தைச் சுற்றி வந்தேன். ஒரே இருட்டு.

அவளுக்குத் தனியாக வேறு எங்கும் போகத் தெரியாது என்பது ஒரு தைரியத்தைக் கொடுத்தது. ஆனாலும், நாளை 'டைவர்ஸ்' தீர்ப்பு வருவதற்கு பயந்து ஏதாவது... கடவுளே!

'காலையில் மறுபடி போய் குளத்திலேயே பார்க்க வேண்டியதுதான்...'

- குழப்பங்களைச் சுமந்தபடி வீட்டுக்கு நடந்தேன்.

மனைவி மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள். மகன்கள் இருவரும் கோபத்தை அடக்கிக்கொண்டு, என்னிடம் பேசாமல் முறைத்தபடி இருக்க, சின்ன மருமகள் மட்டும் "பாவம்... பாவம்னீங்க. இப்ப பாத்தீங்களா..?" என்றாள் வெறுப்புடன்.

"போலீஸ்ல வேணா..." என்று நான் ஆரம்பிப்பதற்குள்,

"போலீஸ§க்குப் போனா, மொத கேள்வி 'யார் கூடப் போச்சு'னு கேப்பான். மானம் போவும்" என்று இடைமறித்த பெரியவன், தொடர்ந்தான்-

"குரங்கு மூஞ்சின்னு நெனச்சீங்க... இப்ப அதுவே பரவாயில்லைனு எவனாவது இழுத்துட்டுப் போயிட்டான்போல..."

"வாய்க்கு வந்தபடி பேசாதடா! பாவம்..." என்றாள் என் மனைவி.

இரவு 11.00 மணிக்கு ஒவ்வொருவராக தூங்கப் போய்விட்டார்கள். நான் மட்டும் இருளில் தனியாக ஈஸி சேரில் சாய்ந்தபடி கிடந்தேன்.

முதல் குழந்தையாகப் பிறந்தவள்தான் சாரதா. பிறக்கும்போதே முகம் வித்தியாசமாக இருந்தது. "ஆயுத கேஸ்னா அப்படித்தான் இருக்கும். பாயில போடுங்க... குழந்தை தலையை உருண்டு, கோணல் சரியா போயிடும்" என்றார்கள். கடைசிவரை அப்படி எதுவும் ஆகவில்லை.

நெற்றி மிகவும் சிறுத்து, அடர்ந்த புருவங்களும், பக்கவாட்டில் விலகியிருந்த மாறு கண் பார்வையுமாக முகம் விகாரமாகிப் போனது. உடலில் சதை பிடிக்கவே இல்லை. எவ்வளவோ டானிக்குகள், மாத்திரைகள் கொடுத்தும்கூட எலும்பும் தோலுமாகவே இருந்தாள்.

ஒன்பதாம் வகுப்பில் துவங்கி அடுத்த இரண்டு வருடங்களும் வலிப்பு வேறு அடிக்கடி வரவே, படிப்பும் தொடரவில்லை. ஆனால், அவளின் பள்ளிக்கூட வாண்டுகளால் 'குரங்கு குசலா' என்ற பெயர் நிலைத்துப் போனதுதான் மிச்சம்.

வருடக் கணக்கில் வரன் பார்த்தோம். எதுவும் சரிப்படவில்லை. கடைசியாக தூரத்து உறவினர் ஒருவர்தான், 'சொந்தமாக கார் வைத்து ஓட்டுகிறான்' என்றபடி அழைத்து வந்தார்! சினிமா அடியாட்கள் போல கொடூர முகம்தான். இருந்தாலும், சாரதாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொன்னதே, ஆச்சர்யம்... ஆனந்தம்தான்.

மாப்பிள்ளை 'டிராவல்ஸ்' விஷயமாக டூர் போகிறார் என்று அவ்வப்போது வீட்டுக்கு வருவாள் சாரதா. கடைசியாக வந்தபோது, மாப்பிள்ளை கர்நாடகாவில் பத்து நாள் 'டூர்' போவதாகச் சொல்லி, அழைத்து வந்து விட்டுச் சென்றார். அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களாக அவர்... அவர் என்ன அவர்... அவன் வரவே இல்லை.

வெளியூரிலிருந்து ஒரு முறை போன் பண்ணினான். "என்னால நேர்ல சொல்ல முடியல... தப்பா நினைக்காதீங்க. எங்கம்மா கட்டாயப் படுத்தினதாலதான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஒரு வருஷத்துக்கு முன்ன எங்கம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க. அதுக்கு மேலயும் உங்க பொண்ணோட என்னால பல்லைக் கடிச்சுட்டு வாழ முடியல. வாழப் புடிக்கல. சீக்கிரமே விவாகரத்து வாங்கிக்கறேன். ஆள விடுங்க..."

அவனின் தூரத்து உறவினர் ஒருவர் இருப்பதை அறிந்து, அவரிடம் சென்றேன் நியாயம் கேட்க...

"அவனுக்கு கல்யாணத்துக்கு முன்னாலயே பொம்பளைங்க சோக்கு ஜாஸ்தினுதான் கேள்விப்பட்டேன். இப்போ அந்த சோக்குல ரொம்ப ஆடுறானும் கேள்விப்பட்டேன். ஆனா, அவன் சொன்னா திருந்தற கேஸ் இல்லீங்க..."

அவர் கொடுத்த புதுத் தகவல் இன்னும் அதிர்ச்சியூட்ட, வீடு திரும்பினேன். என் மனைவியிடம் சொல்லி சாராதாவிடம் 'உண்மையா' என்று விசாரிக்கச் சொன்னேன். கண்ணீர் ததும்ப ஒப்புக்கொண்டாள். மணமான யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பாம். தவிர, இன்னும் பல தொடர்புகளாம். 'உன் குரங்கு மூஞ்சிய வச்சுட்டு என்னையே கேள்வி கேட்கறியா...?' என்பானாம் இவள் ஏதாவது பேசினால். இந்த ஃப்ளாஷ்பேக்குடன்தான் இரண்டு வருடங்களாக எங்கள் வீட்டில் இருக்கிறாள் சாரதா.

'நாளைக்கு விவாகரத்து வழக்கில் தீர்ப்பு. மகன்கள் இருவரையுமே நம்ப முடியாது. இவளை எங்காவது அநாதை இல்லத்தில்தான் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ஒரு தொகையை நன்கொடையாக கொடுத்து, இவளுடைய ஆயுள்காலம் முழுவதும் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்...' என்றெல்லாம் கணக்குப் போட்டு வைத்திருந்த நிலையில்தான் இப்படி ஒரு 'திடுக்' திருப்பம்.

அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து கோயிலுக்கு ஓடினேன். குளத்தங்கரையில் ஒரே கூட்டம். விசாரித்தபோது, ஒரு பிணம் மிதப்பதாகச் சொன்னார்கள். 'திக்' என்றது எனக்கு.

'அவசரப் பட்டுவிட்டாளே? ஒருவேளை இதுதான் நல்ல முடிவோ? ' - குழப்பங்களுடன் கூட்டத்தை முண்டியடித்துச் சென்றேன். அது ஒரு ஆண் பிணம். ஒரு நிமிடம் அடங்கி எழும்பிய என் உயிரை, மீண்டும் 'சாரதா எங்கே..?' என்ற கேள்வி துரத்த ஆரம்பித்தது.

'டேய் பாவி... உன்னால என் பொண்ணு என்ன முடிவெடுத்தானே தெரியலயேடா...' என்று சாரதா கணவனின் சட்டையைப் பிடித்து கத்த வேண்டும்போல் ஆத்திரம் பொங்க, ஒரு ஆட்டோவில் போய் அவன் வீட்டில் இறங்கினேன். திகைத்தேன். வாசலில் சாரதா!

"உள்ள வாங்கப்பா..." என்று அழைத்துச் சென்றவள், படி தாண்டியதும் 'தடால்' என்று காலில் விழுந்தாள்.

"மன்னிச்சுடுங்கப்பா! நான் உங்ககிட்ட பேசினதே இல்ல. தயவு செஞ்சு இப்பவாவது பேசிக்கறேன்பா!" எனத் துவங்கியவள், மழையாகப் பொழிந்தாள்.

"என்னைக் கல்யாணம் பண்ணி அனுப்ப அம்மாவும் நீங்களும் என்ன பாடுபட்டீங்க? குரங்கு குசலாவுக்கு மாப்பிள்ளை அமையறது என்ன லேசுப்பட்ட விஷயமா? ஆனா அது நீடிக்கல.

பெரியவன், 'ஒரு குழந்தையையாவது பெத்திருந்தா அதுக்குனு வாழலாம்னு தோணும். அதுகூட இல்ல. இனி என்ன இருக்கு உனக்கு வாழ்க்கையில'னு ஒரு நாள் திட்டுனான். அவனுக்குத் தெரியாதுப்பா... நான்தான் குழந்தை வேண்டாம்னு முடிவெடுத்தேன். இன்னொரு குரங்கு குசலா பொறந்துட்டா?'' குலுங்கி அழுதவளைத் தேற்றினேன்.

"பெரியவன் சம்சாரம், 'காலைல எழுந்து வரும்போது முன்னாடி வராத சாரதா... எங்க வீட்ல இதெல்லாம் ஒரு திடமான நம்பிக்கை...'னு சொன்னதுலருந்து, ஹால்ல படுக்காம கிச்சன்லதான் தூங்கினேன்.

சின்னவன் பெண்டாட்டி, 'நீ அடுப்பு பத்த வைக்காதே. துளசிச் செடிக்கு நீ தண்ணி ஊத்தாதே''னு அடுக்கினா. அதுக்காக, காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து துணி துவைக்கவும் பாத்திரம் தேய்க்கவும் பின்கட்டுக்குப் போயிடுவேன்! கூடவே, ஒரு நாள் அம்மாவும் நீங்களும் 'நம்ம காலத்துக்குப் பிறகு சாரதா என்ன கதியோ'னு கவலைப்பட்டதும் கேட்டது..."

"அது வந்தும்மா..."

"இருங்கப்பா... நான் முடிச்சுடறேன். அப்பதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். இங்கயும் நான் வேலைக்காரிதான். ஆனா, எஜமானி. அவர் என்னை அங்க இங்கனு வெளியயெல்லாம் கூட்டிக்கிட்டு போக மாட்டாருதான். அதை அவமானமா நெனைப்பாருதான். அது உங்களுக்கே, என்னைப் பெத்தவங்களுக்கே இருந்ததுதானே..."

"இல்லம்மா... உன்னையக் குறையாப் பேசுவாங்கன்னுதான்..." என்ற என்னை மறுபடியும் தடுத்து,

"அப்படியில்லப்பா... அதையும் மீறி நீங்க என்னை வெளியில கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாமே? எனக்கு உலகம்னா என்னனு காட்டியிருக்கலாமே? எதிர்படற கேலிகளை எல்லாம் பழக எனக்கு கத்துக் கொடுத்திருக்கலாமே? சரி விடுங்கப்பா.

அதான்... நான் முடிவு பண்ணிட்டேன். அவர் எங்க வேணும்னாலும் போகட்டும். யாரை வேணும்னாலும் வீட்டுக்கே அழச்சிட்டு வரட்டும். ரெண்டு பேருக்குமா சமைச்சுப் போடறேன். வர்றவள ஒரு விருந்தாளிய நெனச்சுக்கறேன். இதை அவர்கிட்ட சொல்லித்தான் இங்க இருக்க கெஞ்சி கூத்தாடி சம்மதம் வாங்கியிருக்கேன். இதைவிட வேற நல்ல முடிவு எனக்குத் தெரியல..."

- கோணிய முகத்தில் நேராக வழிந்தன கண்ணீர் துளிகள்!

எங்கே என் மகள் சாரதா ?
 
எங்கே என் மகள் சாரதா ?
எங்கே என் மகள் சாரதா ?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு