Published:Updated:

அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)

அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)

அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)

அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)

Published:Updated:

வாசகி சிறுகதை
மல்லிகா
அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)
அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அகி எனும் கனவுக்குட்டி!

மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்தவள் வசந்தி. ஆனால், ஏதோ... இப்போதுதான் குழந்தை என்ற ஒன்றை பார்ப்பதுபோல் அகி குட்டியின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்து வசந்தி பிரமித்தாள். அது, நிர்மலாவுக்கே சலிப்பைத் தந்துவிட்டது.

'ஒருவேளை என் கசப்பான கடந்த காலத்தை, நான் எந்த நொடியும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, அகியைப் பற்றி ஓவராக சொல்லி என்னை உற்சாகப் படுத்துகிறாளோ அம்மா' என்ற சந்தேகம்கூட நிர்மலாவுக்கு உண்டு.

வசந்திக்கு மூன்றும் பெண் குழந்தைகள். நிர்மலாதான் கடைசி. வசந்தியின் கணவர் ஆசிரியராக பணியாற்றி, தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்று, இரண்டு பெண்களுக்கு மணமுடித்து, மாமனாராக... தாத்தாவாக... இந்த உலகிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டவர். அதனால், நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு வசந்தி தலையில்.

"நாங்க இருக்கறப்ப எதுக்கு கலங்கறே?" என்று இரண்டு மகள்களும், மருமகன்களும் கொண்டு வந்த மாப்பிள்ளைதான் சுரேஷ். "மும்பையில பெரிய கம்பெனியில வேலை. பெரிசா எதுவும் எதிர்பார்க்கல" என்றார்கள்.

அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)

பெண் பார்க்க வந்தபோதே பையனும் சரி, பெற்றோரும் சரி... ஒருவித பதற்றத்தை மறைத்துக் கொண்டு பேசுவதுபோல் நிர்மலாவுக்கு தோன்றியது. அதை அவள் வசந்தியிடம் சொல்ல, அவர், தயக்கத்துடன் மற்ற இரு மகள்களிடமும் சொல்ல... "வீணா கற்பனை செய்யாதே நிர்மலா. ஏனோ தானோனு எவனையாவது கொண்டு வந்தா நிறுத்துவோம்? உன் மாமா மும்பைக்கே போய் வந்தாரு தெரியுமா?" என்றாள் பெரிய அக்கா. ஒருவாறாக சமாதானமானாள் நிர்மலா!

மணமான முதல் நாளிலிருந்தே சுரேஷின் நடவடிக்கைகள் புதிராகவே இருந்ததை நிர்மலா கவனிக்கத் தவறவில்லை. அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத்தான் சில மாதங்கள் தேவைப்பட்டன. அதற்குள் பூமிக்கு புதிதாக ஒரு மனித உயிர் தேவைப்படவே, அகி அவள் வயிற்றில் கருவாகி இருந்தாள்.

அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியை ஒருத்தியை சுரேஷ் ஏற்கெனவே திருமணம் செய்திருக்கிறான். அவளின் அண்ணனோடு அவளுக்குச் சொத்துத் தகராறு... வழக்கு நடக்கிறது. அது முடிந்து சொகுசான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைத்ததும், அவளுடன் போய்விடுவான் சுரேஷ். இடையில் பெற்றோரின் வற்புறுத்தலில் நடந்ததே நிர்மலாவுடனான திருமணம். எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டாள் நிர்மலா.

"என்ன பண்ணட்டும்?" என்று அம்மாவிடம் கேட்டபோது... வளைகாப்புக்கு நான்கு நாட்களே இருந்தன.

"நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் துணை நிப்பேன்டி" என்றாள் வசந்தி. விவாகரத்துக்கு பதிவு செய்துவிட்டு, கண வன் இல்லாமலே வளைகாப்பு நடந்தது. அகி பிறந்த ஆறாவது மாதம், வேலைக்குப் போக ஆரம்பித்தாள் நிர்மலா. வேலைக்குப் போவது.... சந்தோஷமாக இருந்தது. தினமும் வீடு திரும்பியதும் அம்மாவின் அகி புராணம்... சந்தோஷ சலிப்பாக இருந்தது.

அகி குட்டியிடம் வசந்தியோடு சேர்ந்து நிர்மலா வியக்கும் விஷயமும் உண்டு. அது... கனவுகள். கைக்குழந்தையாக இருந்தபோது அகி குட்டி தூக்கத்தில் சிரிக்கையில் எல்லா பாட்டிகளைப் போலவே வசந்தியும், "கடவுள் கனவுல வந்து விளையாட்டு காட்டறார்" என்றாள்.

அகி குட்டி பேச ஆரம்பித்த பின், வாரத்தில் இரண்டு நாட்களாவது காலையில் எழுந்ததும், "ம்மா... ரஞ்சிதா ஆன்ட்டி வந்தாங்களா... அவங்ககூட பீச்சுக்கு போனோமா... ஐஸ்க்ரீம் சாப்பிட்டோமா... ஸீல டால்ஃபின் ஃபிஷ் ஜம்ப் பண்ணுச்சா..." என்று எல்லா வார்த்தைகளுக்கும் 'ஆ'வன்னா போட்டு ஒரு கனவு சொல்வாள்.

"கனவு கண்டா விடியறதுக்குள்ளே நமக்கு மறந்துடுது. மூணு வயசு... மறக்காம சொல்றா பாரேன்" என்பாள் பெருமையாக வசந்தி.

"சும்மா ரீல் விடறாம்மா."

"சீ! குழந்தைங்க பொய் சொல்லாதுடி."

"இவ சொல்வா" என்று நிர்மலா வெளியே சொன்னாலும், அவளுக்கும் ஆச்சர்யம்தான். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், அகி குட்டியின் பல கனவுகள் நடந்தேறி விடுவதுதான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தற்செயலாக வரும் நிர்மலாவின் தோழி ரஞ்சிதாவிடம், மறக்காமல் தனது கனவைச் சொல்வாள் அகி குட்டி. அவள் சட்டென முகம் மலர்ந்து, "ஏன் நிர்மலா... இந்த சண்டே பீச்சுக்குப் போலாமா?" என்பாள். அந்த ஞாயிற்றுக் கிழமை பீச்சில் இரு குடும்பங்களும் ஐஸ்கிரீம் சுவைத்தவாறு கடல் அழகை ரசிக்கும்.

அகி குட்டி கொஞ்சம் வளர்ந்து விட்டாள். அன்று ஒரு நாள் காலை "அம்மா... ஒரு கனவு. பக்கத்து வீட்டு ஆன்ட்டி மாதிரி நீயும் என்னை ஸ்கூட்டியில ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போய் விடற. ஆனா, நம்ம ஸ்கூட்டி மட்டும் ஸ்கையில ஃப்ளை பண்ணுதுமா!" என்றாள்.

"ம்... இருக்கற இருப்புக்கு ஸ்கூட்டி ஒண்ணுதான் குறைச்சல்" என்றாள் நிர்மலா சலிப்பாக.

"ஒரு டூ-வீலர் வாங்கிட்டா... அகி குட்டியை ஸ்கூல்ல விட்டுட்டு, நீயும் நிதானமா ஆபீஸ் போகலாமே!"

"நடக்கறதை பேசும்மா. வர்ற வருமானத்துல ஸ்கூல் ஃபீஸ், வாடகை, மளிகைனு சரியா இருக்கு. இதுல வண்டி தவணை வேறயா?"

"வீட்டுச் செலவுல மாசம் ரெண்டாயிரம் நான் மிச்சம் பண்ணித் தர்றேன்..." என்றாள் வசந்தி.

அப்படித்தான் ஸ்கூட்டி வந்தது. முதல் சவாரியாக அம்மாவையும் அகி குட்டியையும் கோயிலுக்கு அழைத்துச் சென்றாள்.

அகி குட்டி இப்போது மேலும் கொஞ்சம் வளர்ந்துவிட்டாள். கனவுகளும் வளர்ந்தன. அன்று அவளுக்கு பத்தாவது பிறந்த நாள். நிர்மலாவின் அக்காக்கள், அக்கம் பக்கம், அலுவலகம் எல்லாம் கேக் வெட்ட வந்து சேர்ந்தது. இவர்களோடு கோபியையும் அழைத்திருந்தாள் நிர்மலா.

"யாரும்மா இவன்?" என்று தாயிடம் கிசுகிசுத்தாள் மூத்தவள்.

"அகி குட்டியோட ஸ்கூல் பஸ் ஸ்டாப்லதான் கோபியும் அவன் ஆபீசுக்கு பஸ் ஏறுவான். வலது கால் கொஞ்சம் ஊனம். ஒரு தடவை அகியை ஸ்டாப்ல விட்டுட்டு டர்ன் பண்ணப்போ, ஒரு பைக் பரதேசி நிர்மலா ஸ்கூட்டியில மோதிட்டான். கோபிதான் ஆட்டோவுல அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் ரொம்ப உதவி செய்தான். நிர்மலாவுக்கு பக்கத்து ஆபீஸ்தான்."

"தினமும் வண்டியில கூட்டிட்டுப் போறாளாமே?"

"தினமும் இல்ல... போற நேரத்துல அங்கே இருந்தா கூட்டிட்டுப் போவா..."

"அடிக்கடி வீட்டுக்கு வரானாமே!''

"அடிக்கடி இல்ல... சில சமயம். நல்ல பையன். எப்பவும் கலகலப்பா பேசுவான். பாவம்... 'வேண்டாம் வேண்டாம்'னு இவன் சொல்லியும், அக்கா பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவ, ஊனத்தைக் காரணம் காட்டியே வேற ஒருத்தனோடு போயிட்டா..."

"நாங்க உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. பார்த்துக்க..."

அனைவருக்கும் ஒருவித இறுக்கத்துடன் கழிந்தது அந்த இரவு. காலை அகி குட்டி பாட்டியிடம் வந்தாள்.

"பாட்டி, ஒரு கனவு..."

"ஆரம்பிச்சுட்டியா..?"

"கேளு பாட்டி... ப்ளீஸ்..."

"ம்ம்ம்..."

"கோபி அங்கிள் இருக்காரில்லே... அவர் பர்த் டே முடிஞ்சதும் எல்லோரையும் வழி அனுப்பிட்டு நம்ம வீட்லயே இருக்கார். என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போறார்..."

அக்காக்கள் அறையில் சட்டென அமைதி... கிசுகிசுப்பு. வேகமாக சமையறையில் நுழைந்த நிர்மலா 'பளார்' என அறைந்தாள் அகியை. "காலையில எழுந்ததும் போர்வையை மடிச்சு வை. வாயை கொப்பளி. கழுதை வயசாகுது. அப்படியே வந்து நிக்கறே. கனவாம்... கனவு!"

ஊருக்கு கிளம்பிய அக்காக்கள் எகத்தாள பார்வையுடன் ஆட்டோ ஏறினார்கள்.

அதுவரை அமைதியாக இருந்த வசந்தி, நிர்மலாவிடம் வந்தாள். "ஏழு மாச வயித்தோட நீ வந்து நின்னப்ப, 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்'னு எந்த உபதேசமும் பண்ணல. உன்னோடு வக்கீலை பார்க்க வந்தேன். ஏன்னா, ஊருக்குப் பயந்த நடிப்பு உங்கிட்ட அப்ப இல்ல. அது பிடிச்சது. இப்ப உன்னைப் பிடிக்கல. ஏன்னா நடிக்கறே" என்ற அம்மாவையே பார்த்தாள் நிர்மலா.

"என்ன... உலகமே தெரியாதவ தத்துவம் பேசறாளேனு பார்க்கறியா? அனுபவம் எல்லாத்தையும்கத்துத் தந்துடும்டி. ஒரே வார்த்தையில பதில் சொல்லு. கோபி வீட்ல பேசட்டுமா... வேண்டாமா?"

வடபழனி கோயிலில் மிக எளிமையாக திருமணம் நடந்தது. நிர்மலாவின் அலுவலக சகாக்கள், கோபியின் பெற்றோர், நண்பர்கள், சில உறவுகள். பிராகாரத்தை வலம் வந்தபோது, வசந்தியை நெருங்கி "தேங்க்ஸ் பாட்டி!" என்றாள் அகி.

"அதெல்லாம் வேணாம். எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லு. எப்ப இருந்து நீ பொய் பேச ஆரம்பிச்சே?"

தலையை சற்றே உயர்த்தி, உதட்டில் விரல் வைத்து யோசித்தாள். "ம்ம்ம்ம்..." என்று இழுத்தவள், பதில் சொல்லாமல் பாட்டியின் பிடியில் சிக்கிவிடாதபடி லாகவமாக விலகி ஓடினாள்!

அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)
-ஒவியம் ஸ்யாம்
அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)
அகி எனும் கனவுக்குட்டி! (வாசகி சிறுகதை)
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism