இரண்டுங்கெட்டான் நேரமென்பதால் சாப்பாடும் இல்லை. டிபனுக்கு வேலை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்க பப்ஸ், கேக், ஸ்லைஸ் என வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள். ஆட்டோவில் அடுத்ததாக நகைக்கடை.
"வெள்ளி குங்குமச் சிமிழ் முதல்ல வாங்குங்கோ..."
"சரிடி... வாங்கு. உன்னிஷ்டம்."
சாதாரண மாடலில் இல்லாமல் மூடியில் தங்க கோட்டிங்கில் மகாலஷ்மி படம் போட் டிருந்தது. "எப்படித்தான் ருக்குவுக்கு மட்டும் இப்படி அயிட்டங்கள் கண்ணில் மாட்டறதோ!" - மாமி அசந்து போனாள்.
பழைய கொலுசை, நகைக் கடைக்காரர் சொன்னதை விட அதிக விலையில் கொடுத்து... புது கொலுசை, அவர் சொன்ன விலையை விட கம்மியாகக் கொடுத்து பேரம் பேசி முடித்தாள் ருக்கு.
"ஐயோ அக்கா! இந்தக் கொலுசு என் காலுக்கு எவ்வளவு பொருத் தமா இருக்கு...?" என்று ருக்குவின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றாத குறையாகப் பூரித்தாள் கீதா.
என்னதான் நாச்சியாரும் கீதாவும் பூஸ்ட் ஏற்றினாலும், ருக்கு கொஞ்சம் தளர்ந்துதான் போயிருந்தாள். அவர்கள் கொடுத்த கூல்டிரிங்க்ஸை குடித்துவிட்டு, அதே மாடியில் இருந்த தங்க நகைப் பிரிவுக்கு வந்தார்கள். அதிகமாக ஜில்லிட்ட ஏ.சி. குளிரும், விளக்கு வெளிச்சத்தில் பளிச்சிட்ட நகை களும் மீண்டும் கொஞ்சம் உற்சாகத்தை மீட்டுக் கொடுத்தன ருக்குவுக்கு. குஷன் சேரில் அமர்ந்து விட்டாள். 'ஒரே ஒரு நெக்லெஸ் மட்டும்தான்... முடிந்தது வேலை' என நினைத்துக் கொண்டாள். ஷோகேஸில் இருந்த நகைகளில் சில கண்களை உறுத்தின. கூச்சப்படாமல் பணிப் பெண்ணிடம் கேட்டு வாங்கி கழுத்தில் போட்டுப் பார்த்துக் கொண்டாள்.
ஒருவழியாக 28 கிராமில் குந்தன் வொர்க்ஸில் ஜொலி ஜொலித் தது நெக்லெஸ். அதில் செயின், கொக்கி எல்லாம் சரியாக உள்ளதா என்று செக் செய்தாள். அதன் பிறகு, பில் போட கொடுத்தாள்.
"மாமி கிரெடிட் கார்டு மறக்கலியே... கொடுங்க மாமி!"
- கவுன்ட்டர் நோக்கி செல்லவும்... ஒரு பணிப்பெண் ஒரு சில்வர் தட்டும் ஒரு ஹேண்ட் பேக்கும் நீட்டினாள். அந்தக் கடையின் மூன்றாவது ஆண்டு விழாவாம். உடனே உஷாரா னாள்.
"நாங்க ரெண்டு ஃபேமிலி. எனக்கும் தனியா கொடும்மா..."
- முகத்தை மிகவும் கனிவாக்கிக் கொண்டாள் ருக்கு. காலையில் துணிக்கடையிலே 2 பிக்ஷாப்பர், வெள்ளிக்கடையில் ஒரு வெல்வெட் மணிபர்ஸ், இங்கே எவர்சில்வர் தட்டு, ஒரு ஹேண்ட் பேக், ஒரு ஸ்வீட் பொட்டலம், கொஞ்சம் மல்லிப்பூ என்று தனக்கென்று தனியாக நேத்திக் கொண்டாள்.
கண்ணாடிக் கதவை வாட்ச்மேன் மிகவும் பணிவுடன் திறந்துவிட, வெளியே வந்தார்கள். வெளியே இருள் கவிழ்ந்திருப்பதைப் பார்த்ததுமே... ருக்குவின் முகம் இருண்டு போனது.
"அடடா, மணியாகிடுச்சு போலிருக்கே... அவரு ஆபீஸ் விட்டு வந்திருப்பாரே! இவ்வளவு லேட்டாகும்னு நினைக்கலியே. மனுஷன் நரசிம்மாவதாரம் எடுத்திடுவாரே..." என்று கலவர மானாள் ருக்கு. அவளின் கவலை யிலும் நியாயம் இருப்பதை மாமி உணராமல் இல்லை.
"ஆட்டோதானேடி... கால்மணி நேரம்... நானே உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி, விட்டுட்டு வர்றேன்."
"ஆமா... நான் அண்ணாகிட்டே சொல்றேன். நான்தான் கூட்டிட்டு வந்தேன்னு..."
- கீதாவும் தைரியம் கொடுத்தாள்.
"அதெல்லாம் வேண்டாம். இத்தனை வருஷமா குப்பை கொட்டியிருக்கேனே... கொஞ்ச நேரம் கத்துவாரு. அப்புறம் சரியாகிடுவாரு. நீங்க வாங்கின ஜாமானை எல்லாம் பத்திரமா எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போங்க. நாளைக்கு பார்க்கலாம் மாமி!" என்று கையாட்டியபடி வாசலில் இறங்கிக் கொண்டாள்.
"அப்பா... அம்மா வந்துட் டாங்க..."
- கோபி உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தான்.
சுவாமி அறையில் விளக்கேற்றப்பட்டிருந்தது. கேசவ், புக் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்ன... ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுடுச்சா... ஏன் இவ்வளவு லேட்?"
"கொஞ்சம் லேட்டாகிடுச்சு. ஒரு நிமிஷம் அடை சுடறேன்."
"அம்மா... அப்பாவே அடை சுட்டு, காபியும் போட்டுத் தந்துட்டாரு. உனக்கும் ஹாட்பாக்ஸ்ல இருக்கு."
"மாவுல வெங்காயம் வதக்கி தட்டல, உப்பு போடல..."- ருக்கு பதற்றமானாள்.
"அதெல்லாம் அப்பா கரெக்ட்டா போட்டு செஞ்சார். நீ பண்றதைவிட மொறுமொறுனு டேஸ்டா இருந்ததுமா..."
முகம் கழுவிவிட்டு சமையல் கட்டுக்கு வந்தவள் கண்களில் சமையல்கட்டு மேடையில் சிந்தியிருந்த சிறிது காபித்தூளும் அடுப்பில் சில அடை மாவு துளிகளும் கண்ணில் பட்டன.
"ச்சே... ஒருநாள்... ஒரே ஒருநாள் அத்திப்பூத்த மாதிரி வெளியில போறேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சுனா... 'காணலை'னு டி.வி-யிலயே போட்டிடுவீங்க போலிருக்கே? வரவேமாட்டானு முடிவு பண்ணிடுவீங்க போலிருக்கே? ம்... காபித்தூள் விக்கற விலையில இப்படி கொட்டி வச்சு... அடுப்படியை எல்லாம் மாவாக்கி... நீட்டா கிடந்த சமையலறை ரணகளமா கிடக்கு. இப்படி ஒரு பொண்ணா பொறந்து புலம்ப வச்சிட்டியே கட வுளே..!"
'வந்தாள் மகாலட்சுமியே... என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே' என்று அந்த 'நரசிம்மாவதாரம்' கத்தி பாட ஆரம்பித்தது!
|