Published:Updated:

காவியத் தலைவன் பைரன் !

காவியத் தலைவன் பைரன் !


16-05-09
 
காவியத் தலைவன் பைரன் !

ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடம் லார்டு பைரனுக்குத்தான்...

1788-ஆம் ஆண்டில் ஜான்பைரனுக்கும் கேத்தரின் கார்டனுக்கும் காலில் லேசான குறைபாடுடன் பிறந்தார் பைரன். மூன்று வயதில் தந்தை இறந்துவிட, ஏழ்மையிலேயே வளர்ந்தார். பத்து வயதுவரை பள்ளி செல்ல வசதி இல்லாத பைரன், பிற்காலத்தில் எழுதியவைதான் இன்று உலகம் முழுக்க ஆங்கிலம் படிப்பவர்களுக்கு பாடங்களாக உள்ளன. இவரது தூரத்து உறவினர் ஒருவர் இறக்கும்போது தன் சொத்துக்களை பைரனுக்கு எழுதி வைத்த பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து முறைப்படி படித்தார். தன் காலுக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

சிறு வயதில் இருந்தே கூர்மையான சிந்தனையும், இரக்க குணமும் உள்ளவர் பைரன். ஒருமுறை இவருடைய நண்பனை அவனை விடப் பெரிய சிறுவன் ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அப்போது பைரன் அங்கு வந்து, "நீ அவனை இன்னும் எத்தனை அடி அடிக்கப்போற?"என்றான். இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவன் ஆச்சரியத்தோடு... "ஏன் கேக்குற?" என்றான். "அதுல பாதி அடிய நான் வாங்கிக்கிறேன்... தயவு செஞ்சி அவன விட்டுடு!" என்றார் பைரன். அடித்துக்கொண்டிருந்தவன் அதிர்ந்துபோய் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டான்.

விலங்குகளிடமும் அதீத பாசம் கொண்டிருந் தார் பைரன். இவர் வளர்த்த நாய் ஒன்று இறந்தபோது "நான் செத்தால் இதன் பக்கத்திலேயே புதையுங்கள்" என்றார். கல்லூரியில் படித்தபோது நாய் வளர்க்க அனுமதி இல்லாததால் கரடி வளர்த்த புரட்சிக்காரர் இவர். அதுதவிர நரி, முதலை, கொக்கு, குரங்கு, மயில் இப்படி விதவிதமான உயிரினங்களை வளர்த்தார் பைரன்.

காவியத் தலைவன் பைரன் !

1807-ல் ஒரு மோசமான கவிதைத் தொகுப்போடு துவங்கியது இவருடைய இலக்கிய வாழ்க்கை. ஆர்வம் இருக்கும் அளவுக்கு தனக்கு உலக அனுபவம் இல்லை என்ற காரணத்தைத் தெரிந்துகொண்ட பைரன், பலநாடுகளுக்குச் சென்று வந்தார். 1814-ல் அவர் வெளியிட்ட 'தி கொர்சயர்' புத்தகம் முதல்நாளிலேயே 10,000 பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அடுத்தடுத்து அவர் எழுதிய 'சில்லோன் கைதி', 'டான் ஜுவான்' ஆகியவை சிறந்த இலக்கியங்களாகின.

ஒரே வேலையைத் தொடர்ந்து செய்வது இவருக்குப் பிடிக்காது. சில காலம் பி.பி. ஷெல்லியுடன் ஒரு பத்திரிகையில் பணி புரிந்துள்ளார். கிரேக்க தளபதி ஒருவருடன் சேர்ந்து துருக்கியர்கள் ஆக்கிரமித்த கோட்டை ஒன்றை புரட்சியின் மூலம் பெற நினைத்தார். முறையான ராணுவப் பயிற்சி பெறாததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பைரன் 1824-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி மறைந்தார்.

உலகின் முதல் கணிப்பொறி ப்ரோக்ராமரான லேடி ஆடா லவ்லேஸ் பைரனின் மகள்தான்.

-ஆர்.மன்னர் மன்னன்
     
   
அடுத்த கட்டுரைக்கு