Published:Updated:

மன்னிப்போம்.... மறப்போம்!

மன்னிப்போம்.... மறப்போம்!

பிரீமியம் ஸ்டோரி

01-05-2008
 
மன்னிப்போம்..... மறப்போம்!
கோடைக்காலம்...

ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. சிறிதளவு தண்ணீர் மட்டுமே ஆற்றின் ஒரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்தது.

மன்னிப்போம்.... மறப்போம்!

மாது என்ற யானை, தழைகளை தின்றுவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தை அடைந்த மாது, தண்ணீரை உறிஞ்சிட துதிக்கையை நீட்டியது.

அப்போது...

"யாருடா அங்கே?'' என்று அதட்டிக் கொண்டே ஓடி வந்தது கருப்பன் என்ற கரடி.

"தாகம் எடுத்தது. ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்தேன்'' என்றது மாது.

"இந்த பக்கத்தில் தண்ணீர் குடிக்கக்கூடாது... போடா'' என்றது கருப்பன்.

"ஆற்று நீர் அனைவருக்கும் பொதுவானது. ஏன் குடிக்கக்கூடாது என்கிறாய்?'' எனக் கேட்டது மாது.

"குடிக்கக்கூடாது என்றால் திரும்பி போகாமல் எதிர்த்து பேசுகிறாயா?'' என்று சொல்லிக் கொண்டே மாதுவின் கன்னத்தில் அறைந்தது கருப்பன்.

மாதுவுக்கும் கோபம் வந்து கண்கள் சிவந்தன. ஆனாலும், கோபத்தை அடக்கிக்கொண்டு திரும்பியது.

பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த சில விலங்குகள் மாதுவிடம் வந்து, "நடந்ததை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். அவன் இதுபோல் அடிக்கடி பலரிடம் சண்டையிட்டு வருகிறான். நீ அவனை அடிக்காமல் வந்திருக்கக் கூடாது. அடித்தால்தான் திருந்துவான்'' என்றன.

"பொறுத்திருந்து பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு காவல்நிலையத்தை நோக்கி நடந்தது மாது.

காவல்நிலையத்தில் புலியான வரிக்கோடன் கம்பீரமாக அமர்ந்திருந்தது. நடந்ததை எழுதி புகாராக வரிக்கோடனிடம் கொடுத்தது மாது.

அருகிலிருந்த இரு காவலர்களை அழைத்து, "அந்த கருப்பனை இழுத்து வாருங்கள்'' என்றது வரிக்கோடன்.

சற்று நேரத்தில்...

காவலர்கள், கருப்பனை கொண்டு வந்து நிறுத்தினார்கள். மாது கொடுத்த மனுவை கருப்பனுக்கு படித்துக்காட்டிய வரிக்கோடன், "மாது சொல்வது உண்மையா..?'' என்று கேட்டது.

தலையை குனிந்து கொண்டே, "உண்மைதான்'' என்றது கருப்பன்.

"பொதுவான தண்ணீரை குடிக்க தடுத்ததோடு மட்டுமில்லாமல் மாதுவை அடித்தும் இருக்கிறாய். நீ செய்தது தண்டனைக்குரிய குற்றம்'' என்று கோபமாக கூறியது வரிக்கோடன்.

"ஆமா, அந்தநேரத்தில் புத்தி கெட்டு நான் அவ்வாறு நடந்துகொண்டேன். தவறுதான். ஒப்புக் கொள்கிறேன்'' என்றது கருப்பன்.

"கருப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவனுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம்?'' என்று மாதுவிடம் கேட்டது வரிக்கோடன்.

'எப்படிப்பட்ட கடுமையான தண்டனை கொடுக்கச் சொல்லப்போகிறதோ..?!'என்று அச்சத்துடன் மாதுவை பார்த்துக்கொண்டே நின்றது கருப்பன்.

"ஊம்...சொல்லுங்க...'' என மாதுவிடம் மீண்டும் கேட்டது வரிக்கோடன்.

"தான் செய்தது குற்றம் என்பதை கருப்பன் ஒப்புக்கொண்டதே போதும். அதற்கு மேல் வேறு எந்த தண்டனையும் அவனுக்கு கொடுக்க வேண்டாம்'' என்று அமைதியாகச் சொல்லிவிட்டு வெளியேறியது மாது.

மாது அப்படிச் சொன்னது கருப்பனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"அவர் நல்ல மனம் படைத்தவர். குற்றத்தை ஒப்புக்கொண்ட நீ திருந்திடுவாய் என்ற நம்பிக்கையில் உன்னை விடச் சொல்லிவிட்டார். நீ போ'' என்று சொல்லி கருப்பனை அனுப்பியது வரிக்கோடன்.

மாதுவிடம் வந்த மற்ற விலங்குகள்... "உன்னை அடித்த அவனை நீ திருப்பியும் அடிக்கவில்லை; தண்டனையும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் என்ன காரணம்?'' என்று கேட்டன.

அதற்கு மாது,"அடித்தவனை திருப்பி அடிப்பதாலோ, அல்லது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுப்பதாலோ குற்றம் செய்தவரை திருத்திவிட முடியாது. மாறாக, பகைதான் உண்டாகும். அந்த பகை குடும்ப பகையாகத் தொடரும். தொடக்கத்தில் சிறு குற்றம் செய்துவிட்ட ஒருவனை கடுமையாக தண்டித்து பெரும் குற்றவாளியாக்கி விடக்கூடாது. குற்றம் செய்தவரை மன்னிப்போம்... அதை மறப்போம். கருப்பனிடம் அன்பைச் செலுத்தி, அவனையும் அன்புள்ளம் கொண்டவனாக செய்வதுதான் அன்பு வழி. அதைத்தான் இப்போது செய்தேன்'' என்றது மாது.

சிறிதுநேரம் அமைதியாக இருந்த விலங்குகள் பிறகு ஒருமித்த குரலில், "மாது சொல்வது சரிதான்'' என்றன.

அப்போது அங்கு வந்த கருப்பன் மாதுவை வணங்கி, "நீங்கள் என் மீது காட்டிய அன்பு என்னை மிகவும் பாதித்துவிட்டது. நான் திருந்தி விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்'' என்றது.

மாது புன்னகையுடன், "நீ செய்தது குற்றம் என்று உணர்ந்துவிட்ட போதே நீ நல்லவனாகி விட்டாய். எல்லோருடைய அன்பையும் பெற்று விட்டாய்'' என்றது.

கூடி இருந்த விலங்குகள், "ஆமாம்...'' என்று மீண்டும் மகிழ்ச்சியில் குரல் எழுப்பின.

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு