பிரீமியம் ஸ்டோரி

01-05-2008
 
கூடா நப்பு!
பாவண்ணன்

''சிங்கம் ஆபத்தான விலங்கு'' என்று அம்மா சொன்னதை நம்ப முடியலையே என யோசித்தது குட்டி மான். அந்த சமயம் அழகான வண்ணத்துப் பூச்சி ஒன்று குட்டி மானை சுற்றி வட்டமடித்தது. அதன் அழகை மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தது குட்டி மான். அப்போது திடீரென்று நாணல் புதரிலிருந்து சிங்கம் ஒன்று வெளிப்பட்டு கம்பீரமாக நடந்து சென்றது. சிங்கத்தை பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது குட்டி மான்.

கூடா நட்பு

'எப்பவுமே பயந்துட்டே இருப்பதால் யாரை பார்த்தாலும் அம்மா சந்தேகிக்குது. இதோ, அமைதியா இருக்கிற சிங்கங்களைக்கூட அம்மா தப்பாத்தான் நினைக்குது' என்று மீண்டும் ஒருமுறை அம்மாவை தனக்குள் விமர்சித்துக் கொண்டது.

''சிங்கத்தோட பார்வையில அகப்பட்டுடாதே! தூரத்துல சிங்கம் வர்றது தெரிஞ்சவுடனே ஓடி புதருக்குள்ள மறைஞ்சுக்கோ. சிங்கத்தோட பல்லு ரொம்ப கூர்மையா இருக்கும். சிங்கத்துக்கு காலுல பலம் ஜாஸ்தி. ஒரே பாய்ச்சலில் நம்மை அடிச்சு தாக்கி புடிச்சுடும். நம்மை போலவே சிங்கமும் சூப்பர் வேகத்துல ஓடும்'' என சிங்கத்தை பற்றி தன் அம்மா சொன்ன தகவல்களில் ஒன்று கூட நிஜமில்லை என நினைத்தது குட்டி மான். தன்னை பார்த்தபடியே சென்ற சிங்கத்தை கற்பனை செய்து பார்த்தது.

'புதர், செடி, கொடி, கல், மரம் போன்ற வற்றை பார்ப்பது போலத்தான் நம்மையும் சிங்கம் பார்த்ததே தவிர, நம் உயிரை பறிக்கிற எண்ணத்தில் பார்க்கவில்லை' என குட்டி மான் எண்ணியது. இதனால் சிங்கத்தின் மீது குட்டி மானுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது. அடுத்த நாளும் அதே இடத்தில் வந்து சிங்கத்தின் வருகைக்காக புதரின் மறைவில் காத்திருந்தது. சற்று நேரத்தில் ஆடி அசைந்து ஒய்யாரமாக நடந்து வந்த சிங்கம், அருகிலிருந்த குளத்தில் தண்ணீர் குடிக்க சென்றது. இதை மறைவில் இருந்து பார்த்து ரசித்தது குட்டி மான்.

கூடா நட்பு

'ச்சே... சூப்பர்! தலையை சிலுப்பிட்டு தண்ணீர் குடிக்கிற சிங்கத்தோட ஸ்டைலே ஸ்டைல்தான்! வில் மாதிரி அதோட வால் வளைஞ்சு இருக்குற அழகே அழகுதான்! இதனால்தான் அதை எல்லோருமே காட்டு ராஜான்னு சொல்றாங்களோ...' என்று சிங்கத்தை பற்றி பெருமைகொண்டது குட்டி மான். தண்ணீர் குடித்ததும் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்வையை சுழற்றியது சிங்கம். பின்னர் சாதாரணமாக நடந்து சென்றது. புதரின் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குட்டி மானுக்கு பக்கத்திலேயே சிங்கம் நடந்து சென்றது. 'சிங்கத்தின் பின் தொடர்ந்து செல்லலாமா..?!' என ஆசைப் பட்டது குட்டி மான். இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்க, ஆசையை கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியது. 'சிங்கத்தை பற்றி அம்மாவுக்குத் தெரியாத விஷயங்கள்கூட நமக்குத் தெரியுமே..!' என நினைத்து சந்தோஷப்பட்டது குட்டி மான்.

மறுநாளும் சிங்கத்தின் வருகைக்காக நாணல் புதரில் வந்து காத்திருந்தது. சிறிது நேரம் கழித்து சிங்கம் வருவதை உணர்ந்த குட்டி மான், அதன் கண்களில் படவேண்டும் என்பதற்காகவே புதரில் சலசலப்பை உண்டாக்கியது. புதர் பக்கம் தன் பார்வையை திருப்பி ஒரு கணம் நின்றது சிங்கம். சில வினாடிகள் குட்டி மானை அலட்சியமாக பார்த்துவிட்டு எப்போதும் போல் வாலை ஆட்டிக்கொண்டே குளத்தை நோக்கிச் சென்றது சிங்கம். இதையடுத்து குட்டி மானுக்கு ஒரே குஷி!

சிங்கத்தின் பார்வையில் நன்றாக படும்படி புதரைவிட்டு வெளியே வந்து நின்றது. குளக்கரையை நெருங்கிய நிலையில் மீண்டும் ஒருமுறை குட்டி மானை திரும்பி பார்த்த சிங்கம், தண்ணீரை குடித்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டது. இதன் பின்னர் குட்டி மானுக்கு சிங்கத்தை மிகவும் பிடித்துப் போனது. அதனுடன் எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டது. சிங்கத்தின் வருகைக்காக அடுத்த நாளும் காத்திருந்தது. ஆனால், நீண்ட நேரமாகியும் சிங்கம் வரவேயில்லை. 'சிங்கத்துக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ, உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்குமோ..?' என பலவாறாக கற்பனைகள் செய்தது குட்டி மான்.

அந்த சமயம் பார்த்து புதருக்கு வெளியே 'விர்'ரென்று ஒரு மான் வேகமாக ஓடியது. 'ஏன் இப்படி இவன் தலை தெறிக்க ஓடுகிறான்?' என்று ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குட்டி மானுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கூடா நட்பு

மானை துரத்திக் கொண்டு வேகமாக ஓடியது ஒரு சிங்கம். ஆம்... அதே சிங்கம்! முடி எல்லாம் சிலிர்த்துக் கொண்டு பூமிஅதிர ராட்சசனை போல பயங்கரமாக இருந்தது சிங்கம். 'ஐயோ, சிங்கம்னா இப்படித்தான் இருக்கும்னு தெரியாம போச்சே... நம்ம ஃபிரெண்டை இப்படி கொலை வெறியோட துரத்திட்டுப் போகுதே... இந்த பயங்கர மிருகத்தோட நட்பு வெச்சுக் கலாம்னு யோசிச்சோமே...' என பயத்தில் வெடவெடத்து உறைந்தே போனது குட்டி மான்.

'சிங்கம் அபாயகரமானது' என அம்மா சொன்னது எல்லாமே சரிதான்... அம்மா சொல்வதை இனிமேல் அலட்சியமாக நினைக்கக் கூடாது என எண்ணிய படியே அம்மாவை பார்க்க ஓடியது குட்டி மான்...

 
     
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு