Published:Updated:

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!


01-05-2008
சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!
"வேணாம், வேணாம்..."என்று வோன்கா கத்த கத்த கொஞ்சம்கூட கண்டுக்காமல் வயலட் அந்த சூயிங்கம்மை மென்று சாப்பிட ஆரம்பித்தாள்.

"ம்... ம்... ம்..., சூப்பரா இருக்கு. தக்காளி ரசத்தோட சுவை, சூப் மாதிரி இருக்கு. சுடச்சுட நல்ல காட்டமா இருக்கு. ஆஹா, இதோட அற்புதமான ருசி என் தொண்டைக்குள்ளார வரைக்கும் உணர முடியுது" என்றாள் வயலட் சப்புக் கொட்டியபடி.

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"ஏய், பொண்ணு சாப்பிடறதை நிறுத்து. சொல்றது புரியலையா..?! இந்த சூயிங்கத்தை இன்னும் நாங்க முழுசா செஞ்சு முடிக்கலை. நீ பண்றது சரியில்லை. ஆமாம் சொல்லிட்டேன்" என்றார் வோன்கா.

"என்ன சரியில்லை?! இதுல, எல்லாமே சூப்பராத்தான் இருக்கு. அற்புதமான இந்த சூயிங்கத்தை குறையே சொல்ல முடியாதுப்பா. எவ்வளவு ஜோரா இருக்கு தெரியுமா?!" என்றாள் வயலட்.

"துப்பிடு வயலட்" என்றார் வோன்கா.

"ஆங், மாறுது மாறுது..." என சவுக்... சவுக்-ன்னு சூயிங்கத்தை அரைத்து சுவைத்தபடியே கத்தினாள் வயலட்.

"இதோ, அடுத்த அயிட்டம் வருது. ஆஹா, இந்த வறுத்த கறி என்ன சுவை... என்ன சுவை?! இளசா, பதமா எப்படி இருக்கு தெரியுமா?! ம்... ம்... ம்.., இதோ, அவிச்ச உருளை வந்திடுச்சு. என்ன ஒரு அற்புதமான ருசி?! ம்ம்ம்ம்ம்ம்... மொறு மொறுன்னு... அப்பாடி... அதுக்குள்ள வெண்ணெயை வேற தடவி வச்சுருக்காங்க..." உறிஞ்சி உறிஞ்சி அவள் சாப்பிடுவதை எல்லோரும் பார்த்து கொண்டிருந்தார்கள்.

"வயலட், நீ சொல்றதெல்லாம் கேட்கவே நல்லாயிருக்கு. நீ என் தங்கமாச்சே... புத்திசாலி" என்று பெருமிதத்துடன் பாராட்டினாள் திருமதி ப்யூரகார்ட்.

"சாப்பிடு, சாப்பிடு... செல்லம். நிறுத்தாதே..." என்று ஒத்து ஊதினார் திரு.ப்யூரகார்ட்.

"இன்னிக்கு நம்ம ப்யூரகார்ட் குடும்பத்துக்கு பெருமை கிடைச்சிருக்கற சிறந்தநாள். நம்ம குட்டி பொண்ணுதான் உலகத்துலேயே முதல் முதலா சாப்பாடு சூயிங்கத்தை சாப்பிட்டிருக்கா..."

"அவுக்... அவுக், சபக்... சபக்"கென்று சூயிங்கத்தை அரைத்து தள்ளிக்கொண்டிருந்த வயலட் ப்யூரகார்ட்டின் வாயை, மற்ற எல்லாரும் வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவளுடைய அந்த ரப்பர் போன்ற வாய் மேலும், கீழும் அசைவதை பார்த்து கொண்டிருந்த சார்லி பக்கெட், ஆச்சர்யத்தில் அப்படியே உறைந்து போனான்.

சார்லியின் அருகிலிருந்த ஜோ தாத்தாவும், அவளை விழிகள் விரிய பார்த்து கொண்டிருந்தார்.

வோன்கா தன் கையை உதறினார். பதறியபடியே சொன்னார்.

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி!

"வேணாம்னு சொல்லிக் கிட்டே இருக்கேன். மதிக்குதா பாரேன். சூயிங்கத்தை இன்னும் சரிப்படுத்தணும். முழுசா சாப்பிடறதுக்கு அது தயாராகலை வயலட். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே. இப்படி யெல்லாம் நீ செய்யக்கூடாது" என்றார்.

"ஹை, இப்போ நாவல் பழரசத் தோட க்ரீமும் சேர்ந்து ஒரு வித்தியாசமான சுவை கிடைக்குது. ஆஹா, ஆஹா... பிரமாதம். அட்டகாசமா இருக்கு. பிரமாதம்! அப்பா, நேரடியா அதை முழுங்கற மாதிரியே இருக்கு. இந்த உலகத்திலேயே சுவையான சூப்பரான க்ரீம் நிறைஞ்ச பழச்சாற்றை இப்ப நான் அப்படியே சாப்பிடறேன்" என்றாள் வயலட் பெருமை பொங்க!

"ஐயோ, தெய்வமே என்ன கொடுமை இது?!" என்று திடீரென திருமதி.ப்யூரகார்ட் கத்தினாள்.

மேலும் தொடர்ந்து,"வயலட்... வயலட் என்னாச்சும்மா..? என் செல்லத்தோட மூக்கை பாருங்களேன்" என்றாள் பதட்டத்துடன்.

"அம்மா, கொஞ்சநேரம் சும்மாயிருக்கியா. நிம்மதியா சாப்பிடவுடு" என்றாள் வயலட் அலட்சியமாக.

"அவ மூக்கு, அவ மூக்கு... இப்ப... நீலநிறமா மாறிட்டு வருது. அந்த நவ்வாப் பழ நிறத்துலேயே..." வீறிட்டாள் திருமதி. ப்யூரகார்ட்.

"ஆமாம்மா, உன் அம்மா சொல்றது சரிதான், உன் மூக்கு இப்ப கருநீல நிறமா மாறிடுச்சு" என்று கத்தினார் திரு.ப்யூரகார்ட்.

வயலட் சூயிங்கத்தை விடாப்பிடியாக மென்று கொண்டே, "என்ன சொல்ல வர்றீங்க?!" என்றாள் அலட்சியமாக.

"ஏய் உன் கன்னம் கூட இப்ப அதே நிறமா மாறிடுச்சு. இப்ப உன் வாயைச் சுற்றி எல்லாம் நீலம் பரவுது. ஆத்தாடி உன்னோட மூஞ்சியே நீலக்கலரா மாறுது" என திருமதி. ப்யூரகார்ட் பயந்து போய் அலறினாள்.

"அந்த சூயிங்கத்தை உடனே துப்புடி, குட்டிப்பிசாசே..!" என்று திரு.ப்யூரகார்ட் அதட்டினார்.

"கடவுளே, மகாகொடுமையா இருக்கே?! காப்பாத்துங்க. என் அழகான பொண்ணு வயலட் பேருக்கு ஏத்த மாதிரி இப்படி வயலட் கலராவே மாறிவிட்டாளே. ஐயோ, அவ முடி கூட அந்த கண்றாவி கலர்ல மாறிட்டே வருதே. வயலட், செல்லம், கண்ணு, என்னம்மா... ஆச்சு உனக்கு?" என்று திருமதி. ப்யூரகார்ட் பெருங்குரலுடன் அழ ஆரம்பித்துவிட்டாள்.

"நான் முன்னாடியே சொன்னேன் இல்லே. நான் இன்னும் இதை முழுசா செஞ்சு முடிக்கலை-ன்னு... கேட்டாத்தானே!" சோகமாக தலையாட்டியபடி வருந்தினார் வோன்கா.

"நீங்க என்னத்தைச் சொன்னீங்க?! உருப்படியா, ஏதாவது சொன்னீங்களா..?! இப்ப பாருங்க என் பிள்ளை எப்படி ஆயிட்டான்னு?" என்றாள் திருமதி. ப்யூரகார்ட் ஆதங்கத்துடன்.

எல்லோரும் வயலட்டையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.

'ச்சீ, எவ்வளவு விசித்திரமான, அசிங்கமான காட்சி அது. அவள் முகம், கை, கால்கள், கழுத்து மற்றும் அவள் தோல், ஏன் அவளுடைய சுருட்டை முடி கூட பின்னலுடன் சேர்த்து ஒரே அடர் நீலத்தில் மாறிவிட்டிருந்தது. அவள் குடித்த அந்த நாவல் பழச்சாறு நிறத்தில்.'

"இப்படித்தான் எப்போதும் கடைசி நேரத்துல கழுத்தை அறுத்திடும். ச்சை, அந்த உருப்படாத நவ்வா பழத்தால வந்த வினையை பாருங்கப்பா" என்றார் கூட்டத்தில் ஒருவர்.

"ம்... விட்டேனா பாரு. ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் இதை நான் சரி செஞ்சே தீருவேன்" என்று கறுவிக் கொண்டார் வோன்கா.

"ஏய் வயலட்" என்று மறுபடியும் திருமதி. ப்யூரகார்ட் அலறினாள்.

"நீ... நீ... வீங்க ஆரம்பிச்சிட்டு இருக்கே" என்றாள்.

"எனக்கு முடியலம்மா. ஏதோ பண்ணுது" என்றாள் வயலட் பரிதாபமாக.

அவளுக்கு தலைசுற்றுவது போல் இருந்தது.

"நீ இப்ப உப்பிக்கிட்டே வர்றே" என்றாள் திருமதி. ப்யூரகார்ட் மறுபடியும்.

"அம்மா, எனக்கு ஏதோ வினோதமா இருக்கும்மா" என்று முணுமுணுத்தாள் வயலட்.

"எனக்கு இதுல எந்த ஆச்சர்யமும் இல்லே. 'காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா..." என்று தத்துவம் பேசினார் திரு. ப்யூரகார்ட்.

"ஐயோ, சாமி... அம்மாடி, நீ இப்போ பலூன் மாதிரி உப்பி பெரிசாயிட்டே வர்றே" என்று அலறினாள் திருமதி.ப்யூர கார்ட்.

"ஆமா, ஒரு பெரிய்ய்ய்ய்ய... நவ்வாப் பழம் மாதிரியாகிட்டா நம்ம வயலட்" என்றார் வோன்கா.

"யாராவது டாக்டரை கொஞ்சம் கூப்பிடுங்க. சீக்கிரம்..." என்றார் திரு.ப்யூரகார்ட்.

"ஒரு ஊசியை வெச்சு லேசா அவ மேலே குத்திப் பாருங்களேன். காத்து இறங்கினாலும் இறங்கும்" என்றார் ஒரு அப்பா.

"சே, அவளை எப்படியாவது காப்பாத்துங்க" என்று தன் கையை உதறியபடி அழுகையுடன் சொன்னாள் திருமதி.ப்யூரகார்ட்.

ஆனால் அவளை யாரும் காப்பாத்த முடியாத அளவுக்கு ஒரே நிமிடத்தில் அவள் உடல் ஊதி ஊதி ஒரு பலூன் போல பருத்துவிட்டது. அவள் இப்போது மிக மிகப்பெரிய, அதி பிரமாண்டமான நாவல் பழ உருண்டையாக உருமாறி இருந்தாள். அந்த பெரிய பழத்தின் மேலெழும்பியவாறு இருக்கும் குட்டியான முகமும், பக்கவாட்டில் ஒட்டிக் கொண்டிருந்த குட்டிக் கைகளும், குட்டிக் கால்களும்தான் சாட்சி! அந்த உருவம் வயலட் என்பதற்கு...

"ஹ்ஹ்ம்..." என பெருமூச்சு விட்டார் வோன்கா.

 

-(தித்திப்பு தொடரும்...)