என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

##~##

போதனை

 லையாய்
உதிர்ந்தது காலம்
காலத்தை
உதிர்த்தது இலை.

 இலையற்ற
மரமாய் காலம்
காலம் தாண்டிய
இலையில் மரம்.

சொல்வனம்!

புத்தர்கள்
வருவார்கள்
இளைப்பாறிப் போவார்கள்
போதனை
தந்தபடியே இருக்கிறது
இலையும்
மரமும்
காலமும்!

- கவிஜி

துயரம்

மரணம் நிகழ்ந்த வீட்டின்
முதல் வார முடிவில்
மிகக் குறைந்த நீரில்
நீந்திக்கொண்டு இருக்கின்றன
கண்டுகொள்ளப்படா
தொட்டி மீன்கள்!

- ஜா.பிராங்க்ளின்குமார்  

ரோட்டிலொரு நாடகம்

ம்மா விரலைப் பிடித்தபடி
நடந்து போய்க்கொண்டிருந்த
சிறுவனைப் பார்த்து
சிரித்துத் தொலைத்துவிட்டேன்.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
போய்க்கொண்டிருக்கிறான்.

திருப்பித் திருப்பி
சிரிக்க வேண்டியிருக்கிறது!

- பா.ராஜாராம்

சொல்வனம்!