ஸ்பெஷல் -1
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

நேர்காணல்

##~##

எல்.கே.ஜி. வகுப்பில் சேர
எல்லோரையும்போல்
தன்யாவுக்கும் நேர்காணல்

பெயர்கள், நிறங்கள்
வடிவங்கள் எல்லாம்
சரியாகச்
சொல்லிக்காட்டினாள்
வீட்டில்

இதேபோல் நேர்காணலில்
சரியாகச் சொன்னால்
சாக்லேட்டும் ஐஸ்க்ரீமும்
வாங்கித் தருவதென்ற
வாக்குறுதியுடன்
அழைத்துச் செல்லப்பட்டாள்

எந்தக் கேள்விக்கும்
வாயைத் திறக்காமல்
மௌனம் சாதித்துவிட்டு
வந்தாள்.

'ஏன் சொல்லவில்லை’
என்றதற்கும்
எந்தப் பதிலும் இல்லை

'புது இடம் கண்டு
பயந்திருப்பாள்’
என்றாள் பாட்டி.

'மிரட்டுகிற மாதிரி
கேட்டார்களா?’
என்றாள் அத்தை.

'மற்ற குழந்தைகள்
எல்லாம்
எப்படிச் சொன்னார்கள்?’
ஒப்பிட்டார் தாத்தா.

பக்கத்து வீட்டுக்
குழந்தையிடம்
தெளிவாகச்
சொல்லிக்கொண்டிருந்தாள் தன்யா
'எனக்குத் தெரியும்.
ஆனா, சொல்லலியே!’

ஒரு குழந்தையிடம்
தோற்றவர்கள்
தொடர்ந்து
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
நேர்காணல்களை!

- க.ஆனந்த்

ராஜா ராணி

நானும்
என் மனைவியும்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தோம்

அவளுக்கு கறுப்புக் காய்கள்
எனக்கு வெள்ளைக் காய்கள்

அவள் ஆசை மகளும்
என் ஆசை மகனும்
அருகில் வந்தமர்ந்தனர்

எங்களது ஆட்டத்தில்
வெட்டுப்பட்ட காய்கள்எல்லாம்
அவர்கள் ஆட்டத்தில்
இடம்பெற்றன

என் மனைவியின்
யானையைக் கொன்றேன்
மகளுக்கு யானை கிடைத்தது
குதிரையைக் கொன்றேன்
குதிரை கிடைத்தது
சிப்பாய்களைக் கொன்றேன்
சிப்பாய்கள் கிடைத்தார்கள்

என்னுடைய வெட்டுப்பட்ட    
சில காய்கள் எல்லாம்
மகன்வசம் இருந்தன

ராணியைத் தவிர
எல்லாக் காய்களையும்
இழந்துவிட்ட என் மனைவி
ராணியைப் பேருக்கு
வைத்துக்கொண்டு
ஒப்பேற்றினாள்

ஆட்டம் வெகுநேரம்
நீடித்தது

பொறுமை இழந்த மகள்
ஒரு கல்லை ராஜாவாக்கிவிட்டு
தானே ராணியாகிவிட்டாள்

இப்போது
மகனின் கோபம் எல்லாம்
என் மீதுதான்!

- புதிய பரிதி

சொல்வனம்

பாசத் தீ

ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
சொல்லுவார் அப்பா
'உடம்பைப் பார்த்துக்கப்பா.’

எனக்கும் ஆசைதான்
சேர்ந்தாற்போல்
நான்கு நாட்கள் விடுமுறையில்
அருகிலேயே இருந்து
அப்பாவைக் கவனித்துக்கொள்ள
என்றாலும்
ஒருபோதும் முடிந்ததில்லை

ஒவ்வோர் இரவிலும்
கட்டிப்பிடித்தபடி
தூக்கத்தில்
மேலே போடும்
மகனின் கால் பிடித்து
அமுக்கிவிடுவேன் இதமாக
அப்பாவை எண்ணிக்கொண்டு!

- ஆர்.சி.மதிராஜ்

விடுதி மாணவன்

நாளை பள்ளிக்குத் திரும்புகிற
விடுதி மாணவனிடம்
முந்தைய மாலையில்
கோபித்துக்கொள்ளாதீர்கள்
அடுத்த விடுமுறை வரை
அதையே நினைத்துக்கொண்டிருப்பான்
அவனுக்குப் பிடிக்குமென்று சொல்லி
வறுத்த மீன் வாங்கித் தருகிறீர்கள்
கடையில் வாங்கிய தின்பண்டங்களை
அவனுக்கு மட்டுமென்று சொல்லிவைக்கிறீர்கள்
படிப்புதான் முக்கியமென்று
நூறாவது முறையாகத் திரும்பச் சொல்லி
அவனின் கண்ணீரை அடக்குகிறீர்கள்
ராத்திரி தூங்கும் முன்
அதிகாலைக்கென அலாரம்வைக்கிறீர்கள்
தயவுசெய்து
இவையெதுவும் செய்யாதீர்கள்
எதுவும் தேவையில்லை அவனுக்கு
முடிந்தால் அவனை
அடுத்த நாள் காலையிலிருந்து
வீட்டிலிருந்து பள்ளிக்கு அனுப்புங்கள்!

- ப.ராமச்சந்திரன்

சொல்வனம்