ஸ்பெஷல் -1
Published:Updated:

தொடர்கதை : ஒன்று

தொடர்கதை : ஒன்று

##~##

யேசுவுக்கு சில விநாடிகள் முன்பாகவோ, பின்பாகவோ பிறந்தவள் நான்!

மார்கழிக் குளிரில் மாநகரம் வெடவெடக்க, கடற்கரையோர ஹவுஸிங் போர்டு குவாட்டர்ஸில், படுக்கையில் கிடக்கிறேன்.

''காயு... காயூ... காயூஸ்!'' - என் புருவங்கள் வருடி,  கன்னங்கள் அள்ளி, தலை கோதி, காதுக்குள் மந்திரம் சொல்கிறான் கதிர். காயத்ரி மந்திரம். ''ஹேப்பி பர்த் டே காயூஸ்!''  

''காயூஸ்... உன் பர்த் டேயை உலகமே வீட்டுக்கு வீடு ஸ்டார் கட்டி, கேக் வெட்டிக் கொண்டாடுது. பாவம்டி ஜீஸஸ்... அதை அவர் பிறந்த நாள்னு நினைச்சுட்டு இருக்கார்'' என்றான் கதிர். நான் சிணுங்கினேன், சிரித்தேன், சிலிர்த்தேன்.

21 வயசு, அதை நம்பச் சொல்கிறது. இரவின் பனி, ஈரக் கைகளோடு கொஞ்சுகிறது. இமைகள் திறக்க மறுத்த என்னை இன்னும்  நெருக்கமாக இழுத்தான் கதிர். ஏராளமான மெழுகுவத்திகள் தகதகக்க, கிறிஸ்துமஸ் தாத்தாவின் பின்னால் ஓடும் குழந்தைகளின் கூச்சலில் திடுக்கிட்டு விழித்தேன். கனவு!

தொடர்கதை : ஒன்று

ஹேப்பி பர்த் டே என் செல்லக் குட்டி, தங்கக் கட்டி, வைரப் பொட்டி  காயத்ரிம்மா!'' - ஸ்டூல் மீது சரவண பவன் கேக் வாங்கி, அதன் மேல் ஒரே ஒரு மெழுகுவத்தி ஏற்றிவைத்துச் சிரிக்கிறாள் கலையரசி அம்மா.

''வாவ்... உம்ம்ம்மா என் கலை'' என எழுந்தேன். குளிருக்கு, ஸ்வெட்டர் போட்டு, மங்கி கேப் மாட்டிய அப்பாவி அம்மா. அப்பா, அந்த ரூமில் குறட்டைவிடுவது கேட்டது.

பாவம், என் செல்ல அம்மா. போன தலைமுறைப் பொண்டாட்டி. ஒரே ஒரு பெண் குழந்தையைத் தந்துவிட்டு, உர்ரென்றே திரியும் அப்பாவுக்கு பணிவிடைகள் செய்ய மட்டுமே படைக்கப்பட்ட பாவப்பட்ட மனுஷி. அதனால்தான், காதல் கல்யாணம்தான் பண்ணுவது என நான் முடிவெடுத்தேன்.

ம்ம்... அம்மாவுக்கு நான்னா உசிரு! ''தேங்க் யூ கலை. மை ஸ்வீட் ஹார்ட்!'' - இறுக்கிக் கட்டிக்கொண்டேன்.  அம்மாவின் கதகதப்பு, எத்தனை இதமான சூடு!

கேக் வெட்டி மாறி மாறி ஊட்டினோம். அவ்வளவு சிரிப்பிலும் அரை ஸ்பூன் கண்ணீராவது விடுவது கலை ஸ்பெஷல். இதோ... குங்குமம் பூசிவிடுகிறாள் பாருங்கள். எத்தனை கோயில் போய் வந்தாய் கலையரசி!

தொடர்கதை : ஒன்று

ழுந்து முகம் கழுவி, மறுபடியும் படுக்கையில் சாய்ந்த நான், தலையணைக்கு அடியில் இருந்து மெசேஜ் ஒளிர்ந்த மொபைலை எடுத்தேன்... முரளி.

கதறிக் கதறிக் காதல் சொல்லி, என் பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறானாம். ஹைய்யோ... கொடுமைடா சாமி!

ஆக்ச்சுவலி... ஆபீஸில் இந்த வாழ்த்துக் குத்துக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.

முதல் வாழ்த்து விஸ்வாவிடம் இருந்து. அவனிடம் இருந்துதான் முதல் விஷ் வரும். செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதும், ஏழெட்டு காலண்டர்கள் வாங்கி, உங்க வீட்டு நாய்க்குட்டியின் பிறந்த நாள் முதல், உங்க பக்கத்து வீட்டுத் தாத்தாவின் திவசம் வரை தெரிந்துகொண்டு ஊர், உலகத்துக்கு முன்னாடி முதல் ஆளாக விஷ் பண்ணுவதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். ஹார்ம்லெஸ் கிரீச்சர். நான்தான் ஃபர்ஸ்ட் என எக்கச்சக்க ஸ்மைலிகள் அனுப்பி அப்பப்போ டயர்டாக்குவான். அவ்வளவே!

னால், கோபி, கொஞ்சம் கில்லி.

''ஹேப்பி பர்த்டே மிஸ் வேர்ல்டு!''

தொடர்கதை : ஒன்று

''தேங்க் யூ கோபி. அதுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கே. ஆமா... உனக்கு எப்படித் தெரியும்''

''பார்த்தசாரதி கோயில் குருக்கள்கிட்ட, 'இன்னிக்கு ஆவணி ஆவிட்டம்னு எப்படித் தெரியும்’னு கேக்கலாமா?''

''ஹாஹாஹா... இன்னிக்கே நீ பேப்பர் போட்டுட்டு, சினிமால டயலாக் எழுதப் போயிரலாம் மேன்!''

''கொஞ்சம் பைக்ல ஏறேன் ப்ளீஸ்!''

''எங்கே..?''

''சர்ப்ரைஸ்... வாயேன்!''

கோபி என்னை அழைத்துப் போய், 800 ரூபாய்க்கு, ஆறேழு லவ் பேர்ட்ஸ் படபடக்கும் கம்பிக் கூண்டை வாங்கி நீட்டினான்.

''ஹேய்... என்ன இது கோபி?''

''ஹேப்பி பர்த்டே காயத்ரி.''

''அச்சோ... இதெல்லாம் வேணாம் கோபி!''

''ஏன்?''

''கீழ் ஃப்ளாட்ல லவ் பேர்ட்ஸ் வாங்கிட்டு வந்து வளர்த்தாங்க. சரியாக் கவனிக்காம எல்லாமே செத்துப்போச்சு கோபி!''

''இல்ல காயத்ரி... இதை நீ வளர்க்கக்கூட வேணாம். ரெண்டு நாள் வெச்சுட்டு, பர்த்டே அன்னிக்கு திறந்துவிட்ரு!''

''அடடா... அப்போ டைரக்டர் விக்ரமன் சாருக்கு வி.ஆர்.எஸ் குடுத்துர வேண்டியதுதான் கோபி. தாங்கலைடா சாமீ!''

நேற்று பஷீர். பஷீரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பார்த்தால், அஜ்மல் கசாப் சாயல். பழகினால், டபுள் லொள்ளு சபா மனோகர்.

''ஹேப்பி பர்த்டே மேடம்... இந்தாங்க...'' என கேட்பரீஸ் நீட்டினான் பஷீர்.

''இதை நான்தான் குடுக்கணும் பஷீர்.''

''இல்ல மேடம். டி.வி விளம்பரத்துல சொல்லுவாங்க... 'ஏதாவது நல்ல விஷயம் பண்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடணும்’னு...''

''ஓ... நீ என்ன நல்ல விஷயம் பண்ணப்போறே பஷீர்?''

எல்லாத் திசைகளிலும் உஷாராகப் பார்த்துவிட்டு, பணிவன்புடன் சொன்னான். ''ஐ லவ் யூ மேடம்!''

''வ்வ்வ்வாட்? பஷீர், ஆர் யு கிரேஸி? காமெடி பண்ணாத!''

''ஏன் மேடம்? யாரையாச்சும் நீங்க லவ் பண்ணீங்களா மேடம்? பரவாயில்ல மேடம்...''

''டேய், லூஸாடா நீ..?''

தொடர்கதை : ஒன்று

''இல்லன்னா, இப்போ ஏதாச்சும் லவ் பண்றீங்களா மேடம். அதுவும்கூட பரவால்ல மேடம்...''

''ஏய், பஷீர்...''

''நீங்க இனிமே யாரையாச்சும் லவ் பண்ணீங்கன்னாக்கூட  பரவாயில்ல மேடம்.''

''பஷீர், நான் கெட்ட வார்த்தை பேசி நீ இதுவரை கேட்டது இல்லைன்னு நினைக்கிறேன்.''

''ஸாரி மேடம். நான் என் ஃபீலிங்க்ஸை சொல்லிட்டேன். உங்களுக்கு ஃபிலீங்ஸ் வந்தா... சொல்லுங்க மேடம். எவ்ளோ வருஷம் ஆனாலும் நான் வெய்ட் பண்றேன் மேடம்!''

12 மணிக்கு முதல் போன். யார் இது?

ஷிவானி என்றது டோனியின் மைக்ரோ மேக்ஸ்.

''ஹேய்ய்ய்... ஹேப்பி பர்த்டே பப்ளி. ஏய்... வாசு கால் பண்ணி அழறான்டி.''

''என்னவாம்?''

''அவன் உன்னை எக்கச்சக்கமா லவ் பண்றானாம். அலைஞ்சு திரிஞ்சு போத்தீஸ்ல டிசைனர் சாரி எடுத்து, உனக்கு கிஃப்ட் குடுக்க வெச்சுருந்தானாம். ஆனா, நீ அன்னிக்கு கோபியோட பைக்ல போனியாமே?.''

''ஓ அதுவா... ஏன், அவன் ஆட்டோல என்னை ஃபாலோ பண்ண வேண்டியதுதானே?''

''நக்கலா... மவளே இவன் பரவாயில்ல. மினிதான் உன் மேல செம காண்டுல இருக்கா!''

''மினியா... ஏன்?''

''அவ வாசு மேல டமக்கு டமக்கு டம்ல இருக்கா. அதான்!''

''ரெண்டு பேரையும் 'விருதகிரி’க்கு அனுப்பி, மரண பயத்தைக் காட்டிருவோமா ஷிவ்ஸ்?''

அதற்குள் வெயிட்டிங்கில் சாப்ளின்,  ஆதி, சங்கீதா, பாலு சார், முரளி, தாமரை, பஷீர்...

ர்த்டே டிரெஸ்ஸில் அழகாக இருந்தேன். அபார்ட்மென்ட் பார்க்கிங் ஏரியா வந்தால்,  பக்கத்து ஃப்ளாட் கய்ஸ். ஸ்கூட்டியின் மீது  ஒற்றை ரோஜா - கிரீட்டிங்ஸ்.

எப்போதும் ரெண்டு பட்டன் கழட்டி, அஞ்சு நாள் தாடியுடன் திரியும் எதிர் ஃப்ளாட் பையன் சத்தமாக, ''ஓ.கேன்னு சொன்னா, உயிரையே கொடுப்பேன். த்தா... இன் ஷர்ட்டு, பெர்ஃப்யூம் பார்த்து எதாவது அசிங்கத்துல வுழுந்துடாம உஷாரா இருந்துக்க. த்தா... நான்லாம் உன்னை  எங்க வெச்சுருக்கேன் தெரியும்ல..? த்தா...'' என எங்கேயோ பார்த்துப் பேசியபடி குறுக்கே குறுக்கே நடந்தான்.

அவனது நண்பன் ஒருவன் என் பக்கத்தில் வந்து,  ''ஏங்க, ஹலோ, தோ பாருங்க, அதான் மேட்டர் புரியுதுல, தல பிளேடால கையைக் கிழிச்சுக்கிது... நேத்து நைட் உங்களுக்கு விஷ் சொல்றேன்னு தண்ணி குழாயைப் பிடிச்சு உங்க ஃப்ளாட்ல ஏறப் பாத்துச்சு. பேட்ரோல் வண்டில புடிச்சுட்டுப் போயி டேஷன்ல ஒக்காரவெச்சுட்டாங்க. காத்தால வளர்மதியக்கா போன் போட்டு சொன்னப்புறம்தான் வுட்டாங்க. ஏங்க... சும்மா தலகிட்ட எதாவது பேசுங்க...''

''ம்... செல்வராகவன் படம் அதிகமாப் பாக்க வேணாம்னு உங்க தலகிட்ட சொல்லுங்க.''  

பீஸில் நுழைந்தால், யாருமே இல்லை.

''மேடம்... கான்ஃபெரன்ஸ் ஹால்ல மீட்டிங்!''

நுழைந்தால்... டொப்பென்று ஃபேஷன் க்ராக்கர்ஸ் வெடித்து, ஜிகுஜிகு துகள்கள் கொட்டின. 'வாம்மா துரையம்மா... இது வங்கக் கடலம்மா’-ஐ பாட் அலறியது, ''ஹேப்பி பர்த்டே  டு யூ'' என கோரஸ். நான் நெகிழ்ந்து நிற்க, ஆபீஸே கூடி கிஃப்ட் கொடுத்தது.

''மதியம் தலப்பா கட்டில ட்ரீட். காயத்ரி, உன் பர்ஸ்ல இருக்கிற எல்லா கார்டையும் எடுத்துவெச்சுக்க!''

''காயத்ரி... இந்த உற்சாகத்தில் பாதிப் பங்கு என்னோடது. அண்ணனோட விடுதலைக் கொண்டாட்டத்தையும் இதோட சேர்த்துக்கலாம். இந்தா என் கடன் அட்டையையும் வெச்சுக்க...'' என்றான் சுரேஷ். 'நாம் தமிழர்’ இயக்கக்காரன்.  எனர்ஜி பேட்டரி மாதிரி இருப்பான். சனிக் கிழமைகளில் பிரபாகரன், பெரியார், சேகுவேரா, பாப் மார்லி தேநீர் சட்டைகளுடன் திரிபவன். ''ராஜபக்ஷேவை லண்டன்ல எப்பிடி ஓட ஓட விரட்டுனோம் பாத்தியா?'' எனக் கண்கள் பளபளக்க விவரித்தான் சுரேஷ்.

''எல்லாம் நம்மள இம்ப்ரெஸ் பண்ண....'' என்பாள் ஷிவானி.

''நம்மள இல்லடி... காயத்ரியை...'' என்றாள்  பிரியா.

யங்கித் தயங்கி பக்கத்தில் வந்தான் வாசு.

''காயத்ரி... எல்லோரும் உனக்கு வாழ்த்து சொல்லி போன் பண்ணி இருப்பாங்க. அதனாலதான் நான் பண்ணலை.''

''இட்ஸ் ஓ.கே. அதனால் என்ன வாசு?''

''உனக்குப் புரியலையா? அப்ப உனக்கு நான் ஒண்ணுமே இல்லையா..?''

''என்ன... இல்லையா?''

''இல்ல... அது...''

தொடர்கதை : ஒன்று

''ட்ரீட்னு சொன்னாங்க... இன்னும் கிளம்பலையா?'' - மினி அங்கு வர, வாசு வேகமாக ரிவர்ஸ் கியர் போட்டான்.

வெளியே வந்து என் ஸ்கூட்டியை எடுத்தேன். இரண்டு டயரும் பஞ்சர். வாசலைத் தாண்டி தன் ஸ்கூட்டியில் வாசுவுடன் போய்க்கொண்டு இருந்தாள் மினி.

காயத்ரி... உன்னைத் தேடி செல்வான்னு யாரோ வந்து இருக்காங்க...'' ரிசப்ஷன் ஆன்ட்டி.

போனால், கனல் கண்ணன் - பீட்டர் ஹெயின் - அனல் அரசு காம்பினேஷனில், செல்வா. பழைய வீடு இருந்த தெருவின் கவுன்சிலர். கொஞ்சம் முரடு, கொஞ்சம் குழந்தை ரவுடி.

''என்ன காயத்ரி... பொறந்த நாளுன்னா எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டியா?''

''நான் என்ன சோனியா காந்தியா..? என் பிறந்த நாளு ஊருக்கே தெரியறதுக்கு?''

''அப்பிடின்டிறியா? சரி விடு... இப்போ என்ன வயசு உனக்கு?''

''எதுக்கு?''

''அப்பிடின்டிறியா? சரி விடு... என்னைப் பாத்தா, கபில்தேவ் மாதிரியா இருக்கு?''

''என்னது..?''

''அப்பிடின்டிறியா? சரி விடு... பசங்கதான் அப்பிடி சொல்றாங்க. உனக்கு ஒரு கிஃப்ட் தரலாம்னு நினைச்சேன். எங்கயாச்சும் போலாமா?''

''ஓ... வர்ற சன்டே போலாமே! ஜக்கி வாசுதேவ் சத்சங்கம் இருக்கு. உங்க ஒய்ஃபுக்கும் சேர்த்து நானே டிக்கெட் வாங்கட்டுமா?''

''அப்பிடின்டிறியா? சரி விடு!''

ரவு வீட்டுக்கு வந்தேன். ஏழெட்டு கிஃப்ட்ஸ் செல்ஃபில் புதிதாக ஏறின. அப்பாவுக்கு அன்று என் பிறந்த நாள் என்று தெரியும். எடுத்துவைத்த கேக் துண்டை அதிகாலையில் அவர்தான் சாப்பிட்டு இருக்கிறார். ஆனாலும், வாழ்த்தக்கூட மாட்டார்.

''ஏன்டி... சந்துரு உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றான்...''

சந்துரு. என் அத்தைப் பையன். பிஸியோதெரபிஸ்ட். செகண்ட் ஹீரோயின் மாதிரி கையில் அர்ச்சனைத் தட்டுடன் நின்றான்.

''அம்மா கேசரி குடுத்துவிட்டுச்சு. இது காளிகாம்பாள் கோயில் பிரசாதம் காயத்ரி... உனக்காகத்தான் ப்ரே பண்ணேன். அம்மாக்கு பேக் பெயின்னு சொன்னாங்க. கிளினிக் கூட்டிட்டு வர்றியா..?''

''பள்ளிக்கரணையில வீடு கட்டிட்டுத்தான் இவளுக்குக் கல்யாணம்ப்பா...'' - அம்மா சொன்னதுக்கு அப்படி வெட்கப்பட்டு சிரித்தான்!

ணி இரவு 11.30. மொபைலையே பார்த்தபடி படுக்கையில் கிடந்தேன். எத்தனை பேர் வாழ்த்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் ஹைய்யோ... என்னை யாரென்று அறியாத நண்பர்கள்கூட ஆரவாரமாக வாழ்த்துகிறார்கள்.

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை பதறிப் பதறி மொபைலை எடுத்துப் பார்க்கிற பழக்கம் எனக்கு. இரவானால், தலையணைக்கு அடியில், குளிக்கப் போனால்கூட, பாத்ரூமுக்கு மொபைலோடுதான் போகிறேன். ஏன்? யாரால்? எப்போது இருந்து?

ஒரே பதில்... கதிர்!

தோ... இந்த நாள் முடியப்போகிறது கதிர். 12-க்குப் பக்கத்தில் முள் துடிக்கிறது கதிர். இதுவரை உன்னிடம் இருந்து ஒரு வாழ்த்து, வார்த்தைகூட இல்லையே கதிர்.

நீதான் வந்தாய் கதிர். ஆறேழு மாதங்களாக என் பின்னால் வந்தாய் கதிர். தயங்கித் தயங்கி என்னிடம் சொன்னாய் கதிர். நான்தான் உன் இதயம் என்றாய் கதிர். உலகம் என்றாய் கதிர். உயிர் என்றாய் கதிர். உனக்குத் தெரியுமா கதிர், யாரோ ஒருவனுக்காக நான் என் வாழ்நாளெல்லாம் சுமந்து, திரிந்து, நிறைந்து, ததும்பிய அத்தனை அன்பையும் உன் மேல்தான் கொட்டினேன் கதிர்.

'and they lived happily for ever’ என்ற தேவதையின் கதை  என் கதைதான் என நம்பினேன் கதிர். நீதான் நம்பிக்கை கொடுத்தாய் கதிர்.

ஆனால்... என்ன ஆச்சு கதிர்?

நீ ஓடி ஓடி உருகி உருகிக் காதலித்த  பெண்ணுக்கு இன்று பிறந்த நாள் கதிர். உனக்கு இந்தத் தேதி நினைவில் இல்லையா? இல்லை, என்னையுமா கதிர்?

ப்போ போன் பண்ணலாமா?

ப்ச்... என்ன சொல்வான்?

''இன்னிக்கு என்ன நாள் தெரியுமா கதிர்?''

''ஏன் கேக்கிற?''

''சொல்லேன் கதிர்.''

''யேய்... பிஸியா இருக்கேன்.''

''ப்ளீஸ் சொல்லேன் கதிர்.''

''சனிக் கிழமை. அதுக்கென்ன இப்போ?''

''இன்னிக்கு என்ன விசேஷம் கதிர்?''

''டார்ச்சர் பண்ணாத. என்னன்னு நீயே சொல்லு.''

''நிஜமாவே இன்னிக்கு என்ன விசேஷம்னு ஞாபகம் இல்லியா கதிர்?''

தொடர்கதை : ஒன்று

''போனை வைக்கிறியா?''

மைகள் பிசுபிசுக்கப் புரண்டு படுக்கிறேன். என் கண்ணீர்த் துளிகள் பரவுகின்றன.

அரைத் தூக்கத்தில் என் அம்மா என்னைத் தட்டிக்கொடுக்கிறாள். ''என் செல்லக் குட்டி, என் தங்கக் கட்டி, என் வைரப் பொட்டி காயத்ரிம்மா, தூங்குப்பா'' - அனிச்சையாக அவள் விரல்கள் என்னை வருடிக் கொடுக்கின்றன.

என் மனசு அரற்றுகிறது... 'அம்மா... எனக்கு வரப்போறவனும் உன் புருஷன்போலவே இருப்பானோனு பயமா இருக்கும்மா!’

(இன்னும் ஒன்று...)