எதைப் பற்றியும் கவலைப்படாமல், தலை நகரத்தை நோக்கி நடந்தான். இரண்டு நாட் களாயின. அவன் தாய் கொடுத்துவிட்ட உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது. பசியில் வாடினான் மானோ. தன் கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொடுத்து, ஒரு வழிப்போக்கனிட மிருந்து சிறிது ரொட்டித் துண்டை வாங்கினான். தான் சாப் பிடும் முன், தன் செல்ல நாய்க்குக் கொஞ்சம் கொடுத்தான். அதைச் சாப் பிட்ட நாய், சுருண்டு விழுந்து இறந்தது. ரொட்டியில் விஷம் கலந்திருந்ததை அறிந்த மானோ, தனது செல்ல நாய்க்காக வருந்தினான்.
அப்போது, வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த மூன்று வல்லூறுகள் இறங்கி வந்து, நாயின் உடலைத் தின்னத் தொடங்கின. சிறிது நேரத்தில் நாயின் உடலிலிருந்த விஷத் தால், அந்த மூன்று வல்லூறு களும் செத்து விழுந்தன.
அதேநேரம், குதிரைகளின் குளம்படிச் சத்தம் நெருங்க, ஒரு புதருக்குள் மறைந்தான் மானோ. வந்தவர்கள் வழிப் பறித் திருடர்கள் ஏழு பேர். அவர்கள் ஆபரணங்களும், விலையுயர்ந்த ஆடைகளும் அணிந்திருந்தனர். அவர்களின் குதிரைகளில் பொன்னும் மணியும் நிரம்பிய பைகள் கட்டி வைக்கப் பட்டிருந்தன.
"இவ்வளவு பொன்னும் பொருளும் இருந்து என்ன பலன், பசிக்குச் சாப்பிட எதுவும் இல்லையே!" என்றான் ஒருவன். "ஆகா... கவலைப்படத் தேவையில்லை. இந்த வல்லூறுகளைச் சாப்பிட்டுப் பசியாறுவோம்" என்றான் அவர்களின் தலைவன். அதன்படி அவர்கள் சாப்பிட, சிறிது நேரத்தில் ஏழு பேரும் இறந்து போனார்கள். இதைக் கண்ட மானோ புதரிலிருந்து வெளியே வந்தான்.
தனது நாயின் மாமிசத்தைத் திருடிய வல்லூறுகள் தனக்கே சொந்தம். அதேபோல், அந்த வல்லூறுகளைச் சாப்பிட்ட இந்தத் திருடர்களும், அவர்களின் செல்வங்களும் தனக்கே சொந்தம் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் மானோ. தலைவனின் ஆடைகளை அணிந்து கொண்டு, அவனது செல்வங்களையும் எடுத்துக் கொண்டு, அவனது குதிரையிலேயே அரண்மனைக்குச் சென்றான்.
நாள் முழுக்க... சுலபமான, மட்டமான விடுகதைகள் மற்றும் புதிர்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன இளவரசி, மானோவைக் கண்டதும் மலர்ந்தாள். அவனது ஒளி பொருந்திய கண்களில் அறிவின் தீட்சண்யத்தைக் கண்ட அவள், அவனைப் பேச அனுமதித்தாள்.
அவையை வணங்கி முன்னால் வந்த மானோ, தனது புதிர்க் கதையைக் கூறினான்.
சுமையோடு கிளம்ப
கூட்டாளி கூடவந்தான்...
வழியில சுமை குறைய
மறுபடி சுமை நெறைய
சுமையால செத்தான் கூட்டாளி
அவனால செத்தது மூணு பேரு
அந்த மூணால செத்தது ஏழு பேரு
ஏழில ஒண்ணு தன்னால
எல்லாச் சொத்தும் பொன்னால
வந்தேன் ராணி முன்னால.
-இதுதான் அந்தப் புதிர்.
எவ்வளவோ முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியாமல் தலை குனிந்தாள் இளவரசி. அவள் மட்டுமல்ல அங்கிருந்த மந்திரிகள், அவையோர்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனது வெற்றியை அறிவித்த மன்னர், மானோவுக்கு இளவரசியை மணம் முடிக்க ஒப்புக் கொண்டார். பிறகென்ன... இனியாவது விடை கூறலாமே என்று கேட்க.. கூறலானான் மானோ. அதுதான் நமக்குத் தெரியுமே!
|