Published:Updated:

ஆபத்தி்ல் உதவிய தேனீ தோழி !

ஆபத்தி்ல் உதவிய தேனீ தோழி !

ஆபத்தி்ல் உதவிய தேனீ தோழி !

ஆபத்தி்ல் உதவிய தேனீ தோழி !

Published:Updated:

ஆபத்தில் உதவிய தேனீ தோழி !
டாக்டர் என்.ஸ்ரீதரன்

ஆபத்தி்ல் உதவிய தேனீ தோழி !

ஆட்டு மந்தை ஒன்று, காட்டு எல்லையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, கொள்ளிக் கண்ணன் புலியின் உறுமல் கேட்டது. உடனே ஆடுகள் நாலா பக்கமும் பாய்ந்தோடின. ஓர் ஆடு, குட்டிபோடும் நிலையில் இருந்தது. குழப்பத்தில் திசை தெரியாமல் காட்டுக்குள்ளே சென்றுவிட்டது. அங்கிருந்த குகை ஒன்றில் தங்கியது. அந்த இடம் பிடித்துப்போனதால், அங்கேயே வசித்தது. குகை அருகே பசுமையான புல்வெளி, சிறிது தொலைவில் அருவி நீர் என ஆனந்தமாக வாழ்ந்து வந்தது.

சிறிது காலத்தில் குட்டிகளை ஈன்றது. அவற்றின் பாதுகாப்புக்காக... உடைந்த பாறையை நகர்த்தி, குகையின் மேல் கதவுபோல் மூடியது. கொஞ்சம் இடைவெளி தெரிந்தாலும், பெரிய மிருகங்கள் நுழையாதபடி இருந்தது. அதேநேரம் ஆட்டுக் குட்டிகள் இடைவெளி வழியே வெளிப்புறத்தைப் பார்க்க முடிந்தது. தாய் ஆடு "அருமைக் குட்டிகளே! இந்தக் காட்டில் ஒரு புலி இருக்கு. அது எந்த சமயத்திலும் வரலாம். நீங்க உள்ளேயே இருக்கணும். நான் வந்து குரல் கொடுத்தால்தான் பாறையை நகர்த்தணும்" என்று எச்சரித்தது.

தாய் ஆடு, தினமும் வெளியே சென்று திரும்பியபின், 'மே... மே...' என்று கத்தும். குட்டிகள், தாய் தவழ்ந்து உள்ளே நுழையும் அளவுக்கு பாறையை நகர்த்தும். இதை கொள்ளிக் கண்ணன் புலி பல நாட்களாகக் கவனித்து, ஒரு தந்திரம் செய்தது. அதுவும் ஆடுகளைப் போல், 'மே... மே...' என்று கத்தி, பயிற்சி செய்தது.

ஒருநாள், தாய் ஆடு புல் மேய்ந்துவிட்டு அருவியிலிருந்து கொட்டித் திரண்ட நீரை குடித்துக் கொண்டிருந்தது. அப்போது நீரில் ஒரு தேனீ தத்தளிப்பதைப் பார்த்து, ஒரு மரக்கட்டையின் பட்டையை தண்ணீரில் போட்டது. தேனீ அதன் மேல் ஏறித் தப்பியது. "இந்த உபகாரத்தை மறக்க மாட்டேன். என்றாவது என் உதவி தேவைப்பட்டால் நிறைவேற்றுவேன். நாம் அடிக்கடி சந்திப்போம்" என்றது தேனீ.

அன்றிலிருந்து வெள்ளாடும் தேனீயும் நெருங்கிய தோழிகளாயின. இரண்டும் அடிக்கடி சந்தித்து உரையாடும். ஒருநாள், தாய் ஆடு குகைக்குத் திரும்பியதும், குட்டிகள் "அம்மே, நீ போன கொஞ்ச நேரத்தில் 'மே, மே'ன்னு சப்தம் கேட்டுச்சு. ஏன் சீக்கிரம் திரும்பிட்டேன்னு ஆச்சரியம். நீ சொன்னபடியே பாறை ஓட்டை வழியா பார்த்தோம். கொள்ளிக் கண்ணன் புலி வெளில இருந்தது. அதுதான் அப்படி கத்தியிருக்கு. நாங்க பாறையை நகர்த்தலை. கொஞ்ச நேரம் கத்திப் பார்த்துட்டுப் போயிடுச்சு. அது மறுபடியும் வருமோனு பயமாயிருக்கும்மா" என்று நடுங்கின. இதைக் கேட்டு, தாய் ஆடும் பயந்துபோனது. இருப் பிடத்தை மாற்ற முடிவு செய்தது.

மறுநாள் தன் தோழியான தேனீயைச் சந்தித்தது. "கொள்ளிக் கண்ணன் புலியால எங்க உசிருக்கு ஆபத்து. தப்பிக்க ஒரேவழி, வீட்டை மாத்திக்கிறதுதான். நீதான் நாலா பக்கமும் பறந்து போறவளாச்சே... எங்களுக்கு பாதுகாப்பான இடம் ஏதாவது கண்ணுல பட்டா, வந்து சொல்லு" என்றது.

"எதுக்கு வீட்டை மாத்தணும்? போற இடத்தில் இந்த வசதி கிடைக்குமா? புலி மோப்பம் பிடிச்சு அங்கேயும் வந்துட்டா? இனி நீ மேயப் போனதும், நான் உன்னோட குட்டிகளுக்கு காவல் இருக்கேன். புலி மறுபடியும் வந்தா ஒரு கை பார்க்கிறேன்" என்று சவால்விட்டது.

ஆட்டுக்குச் சிரிப்பு. 'ஏழு அடி நீளம், மூணு அடி உசரம் உள்ள புலிக்கு எதிரில், தேனீ எம்மாத்திரம்?' என்று நினைத்தது. அதன் மனதைப் புண்படுத்த விரும்பாததால் "சரி" என்றது.

நாள்கள் நகர்ந்தன. கொள்ளிக் கண்ணன் புலிக்கு, மீண்டும் குட்டி ஆடுகளின் நினைவு வந்தது. நாக்கில் நீர் ஊற, அந்த குகைக்கு விரைந்தது. அப்போது, தாய் ஆடு மேயப் போயிருந்தது. குகை வாசலை மூடியிருந்த பாறை அருகே சென்ற புலி, 'மே... மே...' என்று கத்தியது. காவலுக்காக ஒரு செடிமேல் உட்கார்ந்திருந்தது தேனீ.

இம்முறை, கொள்ளிக் கண்ணன் எப்படியும் ஓர் ஆட்டுக் குட்டியையாவது சாப்பிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அது, பாறையைப் பிறாண்டி அசைக்கத் தொடங்கியது. குட்டிகள் பயந்துபோய் 'மே...மே...' என்று அலறின. நிலைமை மோசமாகிவிட்டதை அறிந்த தேனீ, பறந்துபோய் ஒரு மரத்தில் தேன்கூடு கட்டியிருந்த தேனீக்களை உதவிக்கு அழைத்தது.

அவ்வளவுதான்! 'சர்... சர்'ரென்று நூற்றுக்கணக்கில் தேனீக்கள் பறந்துவந்து, புலியைக் கொட்ட ஆரம்பித்தன. இந்த தாக்குதலைப் புலியால் தாங்க முடியவில்லை. கண்ணைத் திறப்பதுகூட கஷ்டமாகிவிட்டது. 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று அந்த இடத்தைவிட்டு ஓடியே போய்விட்டது.

ஆடு, குகைக்குத் திரும்பியதும் நடந்ததை அறிந்தது. தேனீக்கு நன்றி தெரிவித்தது. புலி இந்தப் பக்கம் இனிமேல் தலைகாட்டாது என்று தேனீ உறுதியளித்தது.

'நாம் யாருக்காவது உதவினால்... அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்' என்பதை ஆடு புரிந்துகொண்டது.

 
     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism