Published:Updated:

மழை வாழ்த்து

இளங்கோ கிருஷ்ணன், படம்: எம்.மாதேஸ்வரன்

மழை வாழ்த்து
##~##

மழையே உன்னை வணங்குகிறோம்
எங்கள் நகரத்துக்கு நீதான் குளிர்ச்சி கொண்டுவருகிறாய்
புழுதியடர்ந்த சாலைகள் உன்னால் துலங்குகின்றன
வடிவான எங்கள் பெண்களின் அழகுகளை
எங்களுக்குக் காட்டுகிறாய்
மழையே உன்னைப் போற்றுகிறோம்
சாக்கடைகள் உன்னால் சுத்தமாகின்றன
சாலைக்கு வரும் பேறு பெறுகின்றன
பிளாஸ்டிக் கழிவுகள்
பீர் பாட்டில்கள்
நாப்கின்கள்
நிரோத்துகள்
என எங்கள் நேற்றுகளின் ரகசியங்களை
நீ சாலையில் ஊர்வலம் செலுத்துகிறாய்
மழையே உன்னை வாழ்த்துகிறோம்
பழைய சுவர்களின் சுண்ணப்பூச்சுகளைப்
பெயர்த்துப் போடுகிறாய்
நீர் காணாத மரங்களின் கிளைகளை
முறித்துப் போடுகிறாய்
மழையே உன் பாங்கில் செயலற்றுப்போகிறோம்
எம் பிள்ளைகளுக்கு விடுமுறை அளிக்கிறாய்
பெரும் நோயாளிகளை மரிக்கச்செய்கிறாய் 
அநாதிகளை
தெருநாய்களை
குடிகாரர்களை
சாக்கடைப் பெருச்சாளிகளை
போக்கிடமற்றுச் சிதறடிக்கிறாய்
மேம்பாலங்களை ஸ்தம்பிக்கச் செய்கிறாய்
சேரிகளைக் கலங்கச் செய்கிறாய்
எம் மக்களை நாளையற்றவர்கள் ஆக்குகிறாய்
இவ்வளவு பெரிய நகரத்தில்
ஒரு பூச்சி போல் எங்களை உணரச் செய்கிறாய்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz