Published:Updated:

கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’

கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’

பிரீமியம் ஸ்டோரி
கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’
கருவாச்சி காவியம் - 25
கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’
கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’
 
கவிப்பேரரசு வைரமுத்து
கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’
கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’

‘கு ய்யோ முறையோ’ன்னு ஊரே கூடி நிக்குது கட்டையன் வீட்டு வாசல்ல. தகவல் தெரிஞ்சு மொதலக்கம்பட்டி ஆளுக வேற சாமியாடி வந்துட்டாக சண்ட புடிக்க.

‘‘பொறுமையா இருங்கப்பா’’ன்னு சொல்லிப்பாக்குதுக உள்ளூர்ப் பெருசுக.

‘‘பொறுமை என்னய்யா பொறுமை. இன்னைக்கி ஆட்டக் கடிச்சான்; நாளைக்கி மாட்டக் கடிச்சு மனு சனக் கடிப்பான்.பாத்துக்கிட்டே பல்லாங் குழி ஆடச் சொல் றீகளா?’’

‘‘பதறாதீகப்பா. பஞ்சாயத்துல பேசிக் கிருவோம்.’’

‘‘பஞ்சாயத்தென் னய்யா பஞ்சாயத்து? ஒலக்கையக் கள வாண்டு புட்டான்னு பிராது குடுத்தா, துரும்பு அபராதம்னு தீர்ப்புச் சொல்ற பஞ்சாயத்து. விடுங்கய்யா, தகப்பனையும் மகனையும் சேத்துப் பாறைக்கறி போட்டு, ‘காக்கா நீ தின்னு, கழுகு நீ தின்னு’ன்னு பரசி விட்டுப் போயிர்றோம் பரசி.’’

இம்புட்டுச் சலம்பல் நடக்குது. தகப்பனும் மகனும் வீட்டுக்குள்ள இருக்காங்களே தவிர வெளியே வந்தபாடக் காணம்.

‘‘ஏ கூப்பிடுங்கடா அவன, இல்ல உள்ள வந்து கொல்லுவோம்.’’

‘‘ஏம்ப்பா இந்தத் தவ்வுத் தவ்வுறீகளே, கொலக்குத்தமா ஆகிப்போச்சு?’’

‘‘ஒன் வீட்டு ஆட்ட நீ வெட்டிக்கிட்டா அது கொலை இல்ல; என் வீட்டு ஆட்ட நீ வெட்னா அது கொலதான்.’’

‘கிறீச்’னு தொறக்குது தலவாசக் கதவு.

என்னமோ விருந்துக்கு வந்தவுகள விசாரிக்க வந்த மாதிரி சத்தமில்லாம நடந்து வாராரு சடையத்தேவரு. அவர் வழக்கமா வெத்தல இடிக்கிற கல்லுமேல தன்ன இடுப்புக்குக் கீழ கொஞ்சங் கொஞ்சமா எறக்கிவச்சு உக்காந்துட்டாரு.

பையில இருந்த பாக்க எடுத்து வெத்தல ஒரல்ல போட்டு டொக்கு டொக்குனு தட்டிக்கிட்டே கேக்குறாரு: ‘‘ஆடு சுட்டுத் தின்டவன் என் மகன் தான்னு சாட்சி இருக்கா?’’

‘‘சாட்சி வேணுமா சாட்சி... வரச் சொல்லு ஒன் மகன; வகுத்த வகுந்து உள்ளயிருக்குற ஈரல எடுத்து இந்தான்னு காமிக்கிறோம்.’’

‘‘இருக்கலாம்... ஈரல்கூட இருக்கலாம். அது ஒங்க வீட்டு ஆடுன்னு எழுதியிருக்குமா ஈரல் மேல.’’

‘‘யப்பா சடையத்தேவா! நீ வாய் பெருத்த ஆளு; வக்கீல் மாதிரி பேசுவ. சாட்சி இல்லாம நியாயம் கேக்க வர மாட்டமப்பா’’ - உருமாப் பெருமாத் தேவரு பொறுப்பா பதில் சொல்ல, ‘‘என்ன சாட்சி?’’னு சாணியில விழுந்த மறு மாத்தத்த எடுக்கிற மாதிரி சடையத்தேவரு அலட்சியமாக் கேட்கவும் கடுப்பாகிப் போனாரு காவக்கார சக்கணன்.

‘‘கொண்ணவாயன அடிச்சு உப்பந்தரிசு ஓடையில போட்டது, மாடுகளப் புடிச்சு ஒடசாலி மரத்துல கட்டி வச்சது, கருவாச்சி கெடாய நக்கிலிச்சான் பாறையில வெட்டிப் பாறைக்கறி போட்டது எல்லாத்துக்கும் கண்ல பாத்த சாட்சி இருக்கு. என்னமோ நாங்கள்லாம் கேணப் பயக மாதிரி கிறுக்குக் குத்தாத பெருசு’’.

‘‘இப்ப எல்லாரும் கூடி எதுக்கு வந்திருக்கீக?’’

கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’

‘‘தண்டம் வாங்க வந்திருக்கோம்’’ - உள்ளூர்ப் பெருசு நிதானமாகச் சொல்ல, ‘‘தண்டத்த நீங்க வாங்கிக்கங்க, அவன் தலைய நாங்க வாங்கிக்கிறோம்’’னு மொதலக்கம்பட்டி ஆளுகள்ல ஒருத்தன் எருமைத் தொண்டையில கரகரன்னு பேச, ‘‘எவன் தலையடா வாங்குவீக?’’ன்னு வீச்சரிவாளோட வெளிய தவ்வி வந்துட்டான் கட்டையன்.

அதுக்குள்ள அவன் கைத்தடி களுக்குத் தகவல் போயி வேல்கம்பு வெட்டரிவாளோட வந்து குமுஞ்சு போனாக.

அவன் ஒண்ணு சொல்ல, இவுக ஒண்ணு சொல்ல, அவன் அரிவாள் எடுக்க, இவுக சூரிய எடுக்க ‘‘வேணாம்டா வெட்டுப்பலி குத்துப்பலி ஆகிப்போச்சுன்னா ஏழு தலமொறைக் கும் எந்திரிக்க முடியாதடா’’ன்னு பெருசுக சத்தம் போட்டு அமத்த, கடைசியில ‘பதிமூணே கால் ரூவா’ தண்டத்தோட முடிஞ்சுபோச்சு பஞ்சாயத்து.

காளியம்மன் கோயில் வாசல்ல மொனையில்லாத மம்பட்டி, மூக்கில்லாத கடப்பாரைய வச்சுக் கண்ணீரு ஒழுக ஒழுகக் குழி தோண்டிக்கிட்டிருக்கா கருவாச்சி.

கால்சட்ட வழியா ஒண்ணுக்குப் போயிக்கிட்டு மூக்கு ஒழுக அழுது நிக்கிறான் சின்னப் பய அழகுசிங்கம்.

பொணங் கெடக்குற மாதிரி அட்டத்துலேயே கெடக்கு பூலித்தேவன் தோலு.

‘‘நான் ஒன்னிய ஏய்க்க நெனைக்கல; நீ என்னிய ஏச்சுப்பிட்டியே ஆத்தா. வளத்த பாசத்துல புத்தி மாறிட்டேன்; வெட்ட மாட்டேன், விட்ருன்னேன். வெட்டவச்சுட்டியே. ஒன் வாசல்ல வந்து கெடா அறுத்திருந்தா ரத்தம் ஒனக்கு; கறி எங்களுக்கு. இப்ப ஒனக்குக் காணிக்கை செலுத்த நான் புடிச்சு வளத்த பூலித்தேவன் தோல்தானாத்தா இருக்கு; இந்தா ஏத்துக்க.’’

தோலத் தூக்கிக் கடைசியா ஒரு தடவ மோந்து பாத்துட்டு அதுல மஞ்சத் தண்ணி தெளிச்சுக் கும்புட்டுப் போட்டா குழியில; அழுதா. ‘‘வாடா மகனே’’னு அவன இழுத்துப் பெறங்கையில மண்ணுத் தள்ளவச்சா. மிச்ச மண்ண மம்பட்டிவச்சு இழுத்தா; குழிய மூடுனா. மம்பட்டிய எறிஞ்சிட்டு தலைப்பிள்ளையப் புதைச்சவ மாதிரி தலையில அடிச்சு அடிச்சு ஒப்புச் சொல்லி அழுதா.

‘‘பெத்தெடுத்து நான் வளத்த
பெரியமகன் மண்ணுத் தள்ள
தத்தெடுத்து நான் வளத்த
தங்கமகன் காங்கலையே!

புல்லு மணம் மாறலையே!
புழுக்கை இன்னும் காயலையே!
காயடிச்ச பிள்ளையப் போய்
நாயடிச்சுத் தின்னுருச்சே!

பெறவின்னு ஒண்ணிருந்தா
பிள்ளையாக நீ வாடா!
ஆடாகப் பெறந்தாலும்
அடிவயித்தில் சுமப்பனடா!’’

குழி மேல விழுந்து அழுது கெடந்தவளப் பதறிப்போயித் தூக்குனாக பஞ்சாயத்துக்குப் போயி வந்த ஆளுக. ‘‘ஆத்தா செத்தே பொழச்சுக் காமிக்கிறவ - ஆடு செத்தாப் பொழைக்க மாட்டியா? எந்திரி தாயி எந்திரி.’’

அவ கையில குடுத்த தண்டப் பணம் பதிமூணே கால் ரூவாயையும் காளியம்மன் கோயில் உண்டியல்ல போட்டுக் கண்ணத் தொடைச்சுக் கிட்டா கருவாச்சி.

‘‘பிள்ளைக்கும் சொகமில்ல; ஒன் ஒடம்பும் சுடுது. வா எங்க வீட்டுல வந்து ரெண்டு நா இரு; வா.’’

கனகாம்பரமும் பவளமும் கருவாச்சியக் கூட்டிட்டுப் போறாக கையோட.

‘‘அழுகாதடா மகனே!’’- அழுகுசிங்கத்தத் தூக்கித் தோள்ல வச்சுக்கிட்டான் மொதலக்கம்பட்டி அன்னக்கொடி; கருவாச்சியக் கட்டிக்கிற வேண்டிய மொறமாமன்.

மொதலக்கம்பட்டி அன்னக்கொடி நல்ல வளத்தி. ஆள் கறுப்புன்னாலும் அம்சமான அழகன். சின்ன வயசுல ஊளமூக்கு ஒழுக கருவாச்சிய மொதலக்கம்பட்டிக் குத் தூக்கிட்டுப் போறப்பவெல்லாம் ‘‘அந்தா பணியாரம் கேட்டு ஆத்தாகிட்ட அழுதுக்கிட்டிருக் கான் பாரு. அவன் தான்டி ஒம் புருசன்’’னு அன்னக்கொடியக் காமிப்பா பெரியமூக்கி. குடும்பம் இடையில நொந்து நொடிச்சுப் போச்சு; பஞ்சம் பொழைக்க, வடக்க கண்காணாத தேசத்துக்குப் போயித் தகவல் அத்துப் போச்சு. உண்மையா ஒழச்சு, நேர்மையாப் பொழைச்சு முறுக்குச் சுட்டு வித்து நிமிந்திருச்சு குடும்பம். காலுக்குச் செருப்பு, கைக்குக் கடிகாரம்னு ஏகத் தடபுடலாகி சொந்த ஊருக்குத் திரும்பி நெலபுலம் வாங்கி வட்டிவாசிக்கெல்லாம் குடுத்து, வாழ்வு பெருத்துப்போனாலும், பழைய பந்தம் பாசம் உறவு மட்டும் கரையாத கல்லா நெஞ்சுக்குழியிலயே கெடக்கு.

சுப்பஞ் செட்டியார் வீட்டு உள் திண்ணையில உக்காந்து அழகுசிங்கத்தை இழுத்து மடியில உக்காரவச்சுக்கிட்டு ‘‘முட்டாயி வாங்கிக்கடா மகனே முட்டாயி’’ன்னு உள் பையில கைய விட்டு எட்டணாவ எடுத்து நீட்னான் அன்னக்கொடி.

கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’

வாங்கக் கைய நீட்டிட்டு அன்னக் கொடிய ஒரு பார்வை, ஆத்தாள ஒரு பார்வை மாத்திமாத்திப் பாத்தான் அழகுசிங்கம்.

‘‘நாங்க அசலாள் இல்லப்பா, ஒன் சித்தப்பன்தான்; வாங்கிக்கடா ராசா வாங்கிக்க.’’

காசை அவன் சட்டைப் பையில போட்டுவிட்டுக் கண்ணையும் தொடச்சு விட்டான்.

‘‘அழுகப் பெறந்த வம்ச மாடா, நீயும் ஒங்க ஆத்தாளும்? ஆம்பள இல்லாத வீடுன்னுதானடா ஆட்டப் புலி அடிச்சுப் புடுச்சு. ஒன் சித்தப்பன் ஒன்கூடவே இருக்கேன்னு வச்சுக்க... இது நடந்திருக்குமா? ஒங்க வீட்டுச் சாணியிலயாச்சும் ஈ ஒட்டியிருக்குமா?’’

கதவுல முதுகு சாச்சுக் கால்நீட்டி உள்வீட்டுல ஒக்காந்திருந்த கருவாச்சிக்குத் துணுக்குன்னுச்சு.

அவன் இன்னும் சத்தம் கூட்டிப் பேசுறான்... காது கேக்கட்டும் கருவாச்சிக் குன்னு.

‘‘எச்சிபட்டுப் பண்டம் பழுதாகிப் போச்சுன்னு நான் நெனைக்கலப்பா; பொதைச்சு வச்சு எடுத்தாலும் தங்கம் தங்கந்தானடா மகனே. ஏங்கூடவே இருந்திர்றியா?’’

பையில போட்ட துட்ட எடுத்துத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிட்டு ஆகட்டும்னு தலையாட்டினான் அழகுசிங்கம்.

உள்ளயிருந்து கத்திச் சொன்னா கருவாச்சி, ‘‘துட்டத் திருப்பிச் சித்தப்பன் பையிலயே போட்டுர்றா செல்லம்.’’

அவன் போடல; கையில வச்சுக்கிட்டுக் கனாக் கண்டுக்கிட்டே யிருக்கான்.

‘‘நீ வெவரமாயிருக்க. ஆத்தாளுக்குத் தான் பத்தாது... சின்ன வயசுலயே மனசுல முடிச்சுப் போட்டு விட்டாகளா... அவுத்தாலும் அவுக்க முடியல; அத்தாலும் அக்க முடியல. மனசு மறுகுதடா மகனே. வசதி இருக்குடா சித்தப்பனுக்கு; வந்திரு. அப்பன் நானிருக்க நீங்க அனாதை ஆகலா மாடா? நாளப்பின்னப் பள்ளிக்கூடத்துல போயிச் சேரப் போறன்னு வச்சுக்க; ஒம் பேரு என்னான்னு கேட்டா என்ன சொல்லுவ?’’

எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி அந்தச் சின்னப்பய சொன்னான், ‘‘அ...ல...கு... சி...ங்...க...ம்...’’

‘‘சரி... என்னா அழுகுசிங்கம்னா என்ன சொல்லுவ?’’ பய மேலயும் கீழயும் முழிச்சான்.

உள்ளயிருந்து ஆத்தாகாரி கத்துனா; ‘‘க.அழகுசிங்கம்!’’

இதெல்லாம் கேட்டுக்கிட்டேயிருந்த பவளம் இப்ப உள்ள புகுந்தா. ‘‘இன்னும் பழச மறக்கல போலருக்கு. க... கட்டையன் தானே.?’’

‘‘இல்ல; கருவாச்சி.’’

கொஞ்சநேரம் அது ஆளில்லாத வீடா அமைதியாகிப்போச்சு.

‘‘குடுத்த துட்ட சித்தப்பன் பையில போடுறா’’ன்னு போடச் சொல்லிட்டு, அவன அடிச்சு இழுத்துத் தூக்கி உள்ள ஓடிப்போனா கருவாச்சி.

சொக்கத்தேவன் பட்டியக் கடக்கிற வரைக் கும் அன்னக்கொடி குனிஞ்ச தல நிமிரல. கண்ணுல விழுந்த தூசியத் தொடைக்கிறவன் மாதிரி கண்ணீரையும் தொடைச் சுக்கிட்டான், தலையில கட்டுன துண்ட அவுத்து. அவ பொழப்புக்குள்ள வந்த ஒரு நல்ல ஆத்மாவும் வேட்டிய மடிச்சுக் கட்டிக் கிட்டுப் பொடி நடையாப் போயிருச்சு.

ரெண்டாம் நாளு கருவாச்சி லேசாப் பேச்சு குடுத்தா: ‘‘ஒம் புருசன் இங்க வாரதே இல்லையா கனகம்?’’

கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’

‘‘வருவாக. வாழப்பழச் சீப்பு ஒண்ணத் தோள்ல போட்டு, முறுக்கு மிச்சரு சிலேபின்னு வாங்கி ஒண்ணாச் சரடு சுத்தி ஒரே பையில போட்டு எப்பவுமே சாயங்காலம் வருவாக. என் பொண்டாட்டிய விடிஞ்சு கூட்டிட்டுப் போறேன்னு ‘ரா’த் தங்கல் தங்குவாக. ‘சோலி’ முடிஞ்சதும் சொல்லாமப் போயிருவாக.’’

‘‘இது என்னாடி பொழப்பு..? வாழவும் வாழாம; தீக்கவும் தீக்காம..? எதுக்கும் ஒரு முடிவு இருக்கு. இதுக்கு இருக்கா இல்லையா?’’

‘‘நான் ஒரு முடிவுக்கு வந்துட்டனக்கா. காஞ்ச கத்தாழ நாராப் போயிட்டாரு எங்கப்பன். ஒரு மகளக் கட்டிக் கொடுத்தும் வாழல; ஒரு மகளக் கட்டிக் குடுக்கவே முடியல. நான் மண்டையக் கிண்டயப் போட்டுட்டாப் பொம்பளப் பிள்ளைக ரெண்டும் அனாதிக்காட்ல அலைஞ்சிருமேன்னு பொலம்பிப் பொலம்பி இத்துப் போனாரு. பொழப்பு தான் நல்ல பொழப்பா இல்லாமப் போச்சு அவருக்கு. சாவாவது நல்ல சாவு சாகட்டுமேன்னு அக்கா தங்கச்சிக கூடி ஒரு முடிவு பண்ணிட்டோம்.’’

‘‘என்னா முடிவு பண்ணீக?’’

‘என் புருசனுக்குக் கழுத்து நீட்ட என் தங்கச்சியச் சம்மதிக்கவச்சுப் புட்டேன்.’’

கருவாச்சி ஒரு பேச்சும் பேசல.

‘‘ஒனக்கு அது புடிக்காத முடிவா இருக்கலாம். ஒம் பொழப்புலயும் எம் பொழப்புலயும் நம்மளுக்குப் புடிச்சதா நடந்துக்கிட்டிருக்கு?’’

‘‘இது ஒங்க அப்பனுக்குத் தெரியுமா?’’

‘‘தெரியும்.’’

‘‘என்ன சொன்னாரு?’’

‘‘ஓட்டச் சட்டின்னாலும் கொழுக்கட்ட வெந்தாப் போதும்’’னு பெருசா இழுத்துப் பெருமூச்சுவிட்டுச்சு பெருசு.’’

பொம்பளைக ரெண்டு பேரும் போயிட்டா, இந்தக் கெழவன் கதி என்னான்னு யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சுபோனா கருவாச்சி.

மறுநாள் பொழுசாய வந்துட் டானய்யா முத்துக் காமு, காடுமேடு மேஞ்ச ஆடு மாடு வீடு சேர.

இந்த மொற வாழப்பழச் சீப்பையும் முறுக்கையும் காணோம்.

செக்குல தலையக் குடுத்தவன் மாதிரி தலையில எண்ணெய் ஒழுக வந்தவன், கையில மஞ்ச மஞ்சேர்னு ஒரு மஞ்சப் பைய வச்சிருக்கான்.

பிரிச்சுப் பாத்தா அர வீசை ஆட்டுக் கறி - எலும்பு கிலும்பு இல்லாம.

‘‘குழம்பு வை பாதிய; வறுத்திரு பாதிய’’ன்னு சொல்லிப்புட்டு வாசம் புடிக்க உக்காந்துட்டான் வாசல்லயே.

கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’

‘‘யண்ணே! எப்பக் கூட்டிட்டுப் போகப் போற எங்க கனகத்த?’’- கருவாச்சி லேசா அவன அசைச்சுப் பாக்குறா.

‘‘நானா மாட்டேங்குறன்...? ஒருத்திக்கு ரெண்டு பேரையும் வச்சுப் பொழைக்கிறேங்கறேன். மாமனுக்கும் மனசு இல்ல; மச்சினிச்சிக்கும் மனசில்ல.’’

சுவர்ல பூச்சி புடிக்கிற பல்லிய வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு, பல்லியப் பூச்சி முழுங்கின தும் பார்வையத் திருப்பினாரு.

‘‘மனசக் கல்லாக்கிக்கிட்டுச் சொல்றேன் தாயி. கல்யாணம் பண்ணி அவளயும் கூட்டிட்டுப் போகச் சொல்லு’’- இத்துப்போன போர்வையை இழுத்துப் பொத்தி இருமிக்கிட்டே சொன்னாரு சுப்பஞ் செட்டி.

‘‘பழைய பாக்கியக் கழிச்சிவிட்ருங்க. பவளத்தையும் கூட்டிட்டுப் போயிடறேன்.’’

‘‘பழைய பாக்கின்னா?’’ ‘‘வளவியிலேயே பொழங்கிப் பொழங்கி மாமனுக்கு வைர மோதிரம்ங்கிறது மறந்தே போச்சே.’’

‘‘ஒரு ஈயச் சொம்பு வாங்கக்கூட வக்கில் லாமக் கெடக்கேன். வைரமோதிரத்துக்கு எங்க போவேன் மாப்பிள்ள?’’

செத்தவடம் அங்க சத்தம் செத்துப்போச்சு; யாரும் பேசல. தட்டுல வச்ச சோளக்களியில ஈ ஒண்ணு மாட்டிக்கிட்டு முழிக்கிறதப் பாத்துக் கிட்டே கழுத்துல கெடந்த தங்கச் சங்கிலியச் சப்பிக்கிட்டு நிக்கிறான் அழகுசிங்கம். அவன உத்து உத்துப் பாத்தா கருவாச்சி. அந்த மூணு பவுன் சங்கலிய ‘படக்’குன்னு கழத்துனா. அழுத பிள்ளைய அணச்சு வாயப் பொத்துனா.

‘‘இந்தாங்க; இத வைங்க. நான் நகை போடப்போறதில்ல. நகை போட்டு அழகு பாக்க எனக்குப் பொம்பளப் பிள்ளையும் இல்ல. இத உருக்கி ஒரு மோதிரம் செஞ்சு குடுத்திருங்க. என் தங்கச்சிக பொழப்பு கரையேறிடும், இவளுக போனாப் போறாளுக. ஒங்களுக்கு என்னைக்கும் கூட இருக்கப்போற மக நாந்தான்.’’

படுத்துக்கெடந்த மனுசன் படார்னு எந்திரிச்சு அவ கையப் புடிச்சு மூஞ்சி யில வச்சுக்கிட்டு மாடுமாதிரி அழுதாரு.

அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும் நெஞ்சுல கைவச்சு நின்னு போனாக.

‘‘எங்களுக்குக் குடுத் துட்டு நீ என்ன செய்வ தாயி? என்ன செய்வ?’’

பொத்தல் விழுந்த போர்வைய எடுத்துக் கண்ணத் தொடச்சுக் கிட்டே கதர்றாரு சுப்பஞ் செட்டியாரு.

‘‘எனக்கு என்னய்யா இருக்கு? ஒரு முழக் குச்சுன்னாலும் ஒழுகாத குச்சு; கால் வயித்துக் கஞ்சின்னாலும் கடனில்லாத கஞ்சி.’’

இந்தக் குழப்பத்துல இன்னும் கறித்தண்ணி வைக்கலையேங்கிற கவலையில காதுல இருந்த அரைப்பீடி பத்தவச்சு, புண்பட்ட நெஞ்சப் புகையவிட்டு ஆத்துன்னு ஆத்திக்கிட்டி ருக்கான் முத்துக்காமு.

 
கவியரசு வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’
\ வளர்ந்துகொண்டே வரும்
ஓவியம்: ம.செ.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு