பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண விஜயம்
கிருஷ்ண விஜயம் 129
கிருஷ்ண விஜயம்
கிருஷ்ண விஜயம்
 
கவிஞர் வாலி
கிருஷ்ண விஜயம்
கிருஷ்ண விஜயம்
கிருஷ்ண விஜயம்

பவுண்டரீகன் கதை

பரீட்சித்து மன்னன்
பணிவுடன் மொழிந்தான் சுகப்
பிரமத்தை நோக்கி; விழிகளில்
பிரகாசத்தைத் தேக்கி!

‘அஞ்சுக முகம் படைத்த
அய்யனே! எனக்கு
அறிவு கொளுத்தி- என்
அறியாமையைக் கொளுத்திய
மெய்யனே!

தங்கள்
தயையால்
அடியேன்
ஆன்மானுபூதி வரப் பெற்றேன்;

தன்னைத்
தானறிதல்தான்-
தவத்திற்கெல்லாம் மேலான
தவமெனக் கற்றேன்!

நாட்பட
நாட்பட- ஒருவன்
தன்னையே பிரமமெனத்
தெளிய வேண்டும்;

ஓரைந்து புலன்களும்
ஓரைந்து பொறிகளும்-
ஒடுங்கி அந்த பிரமத்துள்
ஒளிய வேண்டும்!

சுருங்கச்
சொன்னால்...

இறைவனையே
இடையறாது-
எண்ணி எண்ணி
எவன் ஏகாங்கியாய் இருப்பனோ

அவன்
அந்த எண்ணங்களால்-
சுயம் இழந்து
சுத்த சைதனியம் ஆகிறான்;
அவன் வேறு
ஆதி வேறு எனும்
பேதங்கள் அற்றுப்
பேசரும் பிரமமாகிப் போகிறான்!

மனிதம்
மறைந்து மறைந்து-
புனிதம்
புகுந்து புகுந்து-

பகவானிடத்தில்
பக்தி செலுத்துபவனின்-
ஆக்கை யானது
அருளளி பிலிற்றி-

தெய்வாம்சத்தோடு
திகழ்கிறது;
அதன்பின்
அதுவே...

ஒவ்வொரு நொடியும்-
ஒவ்வொரு நொடியும்-
ஓங்காரமாய் உருப்பெறும்
ஓர் அற்புதம் நிகழ்கிறது!

எனவே-
எவன்-
எல்லாவற்றிலும் தன்னையும்;
எல்லாவற்றையும் தன்னுளும்;

காண்கிறானோ அவன்
கலக்கிறான் பிரமத்துடன்;
இத்தகு
இதம்தரும்...

கைவல்லிய ஞானம்
கைவரப் பெறாதவன்-
கருவறையைத் திரும்பவும்
காண்கின்றான் சிரமத்துடன்!

அய்யனே!
அடியேன்-
தங்கள் உபதேசத்தைத்
தவறின்றி உணர்ந்தேனா?

புலன்களைப்-
பொறிகளைப்-
பின்தள்ளிப் புத்தியால்
பிரமஞானத்தைப் புணர்ந்தேனா?

என்று-
எதிரே எழுந்தருளியுள்ள-

பகவான் சுகரிடம் வினவினான்-
பரீட்சித்து;
பதிலிறுத்தது சுகர் என்னும்
பழமறை வித்து!

‘‘அரசே! நீ
அறிந்தாய் நன்று- எது
அப்பழுக் கற்ற
ஆன்மானு பூதி என்று!

சிறுகச்
சிறுகத்-
தியானித்துத்
தியானித்துத்-

தன்னைத்
தானே-
தேவெனத்
தேர்தல் வேண்டும்; அன்னணம்-
தெளிந்து
தேர்ந்தார்க்குத்-
துக்கம் சுகம் என்னும்
துவிதம் இல்லை யாண்டும்!

தருக்கால்
செருக்கால்-
தானே கண்ணனென்று
திரிந்தவன் கதையன்று-

உனக்கின்று
உரைக்கிறேன் கேள்;
ஆசைப்பட்டாலும்- வைத்தூறால்
ஆக முடியுமா வாள்?

‘குருச’ என்று
குறிக்கப் பெறும் ஒரு நாடு;
குறுநில மாயினும்
குறிஞ்சி நிலம் எனும்படி-
குறுக்கும் நெடுக்கும்
குன்றுகள் நிறைந்த நெடுங்காடு!

பவுண்டரீகன் எனும்
பெயர் தாங்கிய

அரசன் ஒருவன்
அதை ஒழுக்கமொடு
ஆண்டு வந்தான்;
ஆதலால் புகழ் நீண்டு வந்தான்!

எனினும் விதி
எவரை விட்டது?
பவுண்டரீகன்
புத்தியும் கெட்டது!

தனக்குத்
தானே-
தவறாக எடை போட்டுத்
தன்னை எண்ணிக் கொண்டான்...

கண்ணன் என்று; காயாம்பூ
வண்ணன் என்று!

அமைச்சர்களின்
அவையைக் கூட்டினான்;
நியாயமற்ற தன்
நினைப்பை ஒரு
நீண்ட விரிவுரையாய்
நிகழ்த்திக் காட்டினான்!

‘‘அமைச்சர் பெருமக்களே!
அவைக்குப் பீடு தருமக்களே!

அரசியலிலும்-
அறத்திலும்-
ஆழங்காற் பட்ட
ஆன்றோர்களே! சான்றோர்களே!

கிருஷ்ண விஜயம்

அண்மையில்தான்
அடியேன்-
ஓர்ந்தேன்
ஓர் உண்மையை; என்னுள்
இருக்கக் கண்டேன்
இறைக்கே உரிய வண்மையை!

நான்தான்
நீள் விசும்புவிட்டு-
நிலம் வந்த வாசுதேவன்;
நான்மறை பேசுதேவன்!
மண்ணும்-
மன்பதையும்-
அறங்கெட்டு
அழிதல் கண்டு-
ஆருயிர் அனைத்தையும்
ஆற்றுப்படுத்த-

நரனாய் வந்த
நாரணன் நான்;
முதல் நடுவு முடிவு- எனும்
மூன்றும் அற்ற பூரணன் நான்!

நானே
நிஜமான கண்ணன்;
நீருண்ட
நீலமேக வண்ணன்!

வண்ணமிகு துவாரகையில்
வசிப்பவன்...

அசல்
அல்ல; நகல்; நான்
ஆதவன்;
அவன் அகல்!

இனிமேல்-
இந்நாட்டின் கண் உள்ளோர்...

என்னையே கண்ணனாய்
எண்ண வேண்டும்;

பூஜையும்
புனஸ்காரமும்- என்
பாதங்களுக்கே
பண்ண வேண்டும்;
வரம் என்ன
வேண்டுவ தாயினும்-
நகரத்தார் என் மாளிகையையே
நண்ண வேண்டும்;

நவநீதமோ தயிரோ- எனக்கு
நைவேத்தியம் செய்துவிட்டுப்-
பிறகு- என்
பிரசாதமாய்- அதை
ஊரவர்
உண்ண வேண்டும்!’’

பவுண்டரீகன் இவ்வாறு
பிரகடனப் படுத்தினான்;
அந்த
அளவோடு நில்லாமல்...

பட்டுப்
பீதாம்பரத்தைக்-
கண்ணன் போலவே இடுப்பில்
கச்சமாய் உடுத்தினான்!

கவின்மிகு நெற்றியில்-
கஸ்தூரி திலகம் இட்டான்;
குஞ்சியை வாரி- மயிற்பீலியைக்
குழற் கற்றையினில் நட்டான்!

சங்கும்-
சக்கரமும்- தானே
தயார் செய்து- அவற்றைக்
கரங்களில் தாங்கித் தன்னைக்
கரியமாலாகவே நினைந்தான்;
வலமார்பில் ஸ்ரீவத்சத்தை-
வண்ணமுற வனைந்தான்!

மற்றும் அந்த
மாயவனுக்குரிய அனைத்து...

அணிமணிகளை
அணிந்து நின்றான்; பின்-
வேய்ங்குழலை
விலாவில் செருகிக்கொண்டு-
துரகம் பூட்டிய தேரேறித்
துவாரகை சென்றான்!

பவுண்டரீகனின்
பால்ய சினேகிதனான-
காசிராஜனும்- அவனது
காரியத்தை ஒப்பினான்;
‘நீதான்
நிஜக் கண்ண’னெனச் செப்பினான்!

கண்ணன் வேடம்
கட்டிய...

பவுண்டரீகன்
பரந்தாமனைச் சந்தித்துப்
பித்தேறிப் பேசினான்; தன்
பிரதாபத்தை வீசினான்!

‘கண்ணா! நீ
கடவுளின் அம்சம் அல்ல;

மாயா ஜாலத்தாலும்- உனது
மாய் மாலத்தாலும்...

பல காலமாய்ப்
பழக்கி வைத்திருக்கிறாய்-
ஆயர்குல மக்களை
அவ்வாறு உன்னைச் சொல்ல!

நான்தான்
நானிலத்தில் உள்ள-

தூர்த்தர்கள் எல்லோரையும்
தும்சம்- செய்ய
அவதாரம் எடுத்திருக்கும்
ஆதி நாராயணன் அம்சம்!

வீணாகப் போலி
வேஷம் போட்டுக் கொண்டு...

எல்லோரையும் நீ
ஏய்த்தது போதும்;

மாடுகளையும்
மக்களையும் நல்ல
மேய்ப்பன் போல்
மேய்த்தது போதும்!

கட்டு- உன்
கடை;
உன்னை மன்னிக்கிறேன்;
என்னைச் சரண் அடை!

இல்லையேல்
இக்கணமே...

நானும்
நீயும்-
பொருத நேரும்; அன்னணம்
பொருதினால்
உன் தலை பூமி சேரும்!’

பவுண்டரீகன் இப்படிப்
பகர்ந்ததும்...
எம்பிரான் கண்ணன் அவனை
எச்சரித்தான்;

ஆயினும்
அவன் &
‘போருக்கு வா! என்னுடன்
பொரு!’ என்று...

நந்தகுமாரனை
நச்சரித்தான்!

கண்ணன் அவன்
கழுத்தைச் சட்டெனச்
சக்கரத்தால் அரிந்தான்;
சடலமாய் அவன் சரிந்தான்;
எனினும்
எஞ்ஞான்றும்..

தன்வேடம் தாங்கி
தன்னையே வாசுதேவனாய்-
பாவித்துக் கிடந்த
பவுண்டரீகனுக்கு-

வீடு தந்தான் கண்ணன்;
விசும்பனைய வண்ணன்!

(தொடரும்)

கிருஷ்ண விஜயம்
 
கிருஷ்ண விஜயம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு