பிரீமியம் ஸ்டோரி
தேசாந்திரி
தேசாந்திரி
தேசாந்திரி
தேசாந்திரி
 
தேசாந்திரி

மழையின் பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில் நீர் வழிந்து
கொண்டிருக்கிறது

- தேவதச்சன்

பூ னாவுக்கு அருகில் உள்ளது லோனாவாலா. இது ஒரு மலைவாசஸ்தலம். சஹ்யாத்ரி என்ற மலைத் தொடரின் மீது அமைந்துள்ளது இந்த ஊர். லோனாவாலா என்பது சம்ஸ்கிருதப் பெயரான லோனவளி என்ற சொல்லில் இருந்து உருவானது. அதற்கு அர்த்தம் குகைகள் நிறைந்த பகுதி என்பதாகும். இது உண்மை என்பது போல, இந்த மலையின் பல்வேறு பகுதிகளிலும் புத்த துறவிகள் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன. லோனா வாலாவுக்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது. அது அங்குள்ள பெரிய ஏரி!

தேசாந்திரி

நரசய்யாவின் ‘கடலோடி’ என்ற புத்தகத்தை வாசித்த நாளில், முதன்முறையாக இந்த ஊரைப் பற்றி அறிந்தேன். அவர் இந்த நகரில் தனது கடற்படைப் பயிற்சிக்காக வந்து தங்கியிருந்ததைப் பற்றி மிக அழகாக எழுதியிருந்தார். லோனாவாலாவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை அதுதொடர்ந்து தூண்டிக் கொண்டே இருந்தது. புகைப்படக் கலைஞரான இன்னொரு நண்பர், ‘இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக மழை பெய்யும் இடம் லோனாவாலா. அதை மழைக் காலத்தில் நீங்கள் சென்று பார்க்க வேண்டும்’ என்று கடிதம் எழுதியிருந்தார்.

லோனாவாலாவுக்கு, ஒரு மழைக் காலத்தின் துவக்க நாளில் போய் இறங்கியிருந்தேன். பொதுவாக, எல்லா மலை நகரங்களுமே மிக அழகானவையாக இருக்கும். லோனாவாலாவும் உடல் எங்கும் பாசி படர்ந்து விட்டது போன்று, பசுமையை நம் மீது படரவிடும் பேரழகு கொண்டது.

வருடத்துக்கு சில நாட்கள் அபூர்வம் போல மழை பெய்யும் ராமநாதபுர மாவட்டத்தில் வசித்த எனக்கு, மழை எப்போதுமே தேடிச் சென்று பார்க்க வேண்டிய அதிசய மானது. லோனாவாலாவில் நான் சென்று இறங்கியபோதே சாரல். சாலைகள் ஈரத்தில் ஊறியிருந்தன. கட்டடங்கள், வாகனங்கள், தனியே வாலாட்டியபடி நின்றிருக்கும் குதிரைகள் என யாவிலும் மழையின் சுவடுகள்.

‘மழை, பல கோடித் தந்திகளை உடைய ஒரு வாத்தியக் கருவி’ என்று எழுதினார் பாரதியார். மிகுந்த கவித்துவமான கற்பனை. லோனாவாலா வின் தெருக்களில் மழைக்குள்ளாகவே ஆட்கள் கடந்து செல்வதும், சிறிய இயக்கம் நடந்து வருவதும் பழகியிருந்தது. தங்கியிருந்த விடுதியில் அறையின் படுக்கை முதல் தண்ணீர்க் குழாய் வரை யாவிலும் குளிர்ச்சி பீறிட்டுக் கொண்டு இருந்தது. விடுதியின் எல்லா அறைகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தியிருந்தார்கள். ஜன்னலுக்கு வெளியே, பகலை விழுங்கியபடி பெய்துகொண்டு இருந்தது மழை.

மழையைப் பார்க்கத் துவங்கினேன். பீம்சிங் ஜோஷி பாடுவது போல மழை மெதுவாகத் துவங்கி, பார்த்துக்கொண்டு இருந்தபோதே ஒரு இடத்தில் மையம் கொண்டு அங்கேயே சஞ்சாரம் செய்யத் துவங்கியது. அதன் வேகமும் விஸ்தாரமும் கூடிக்கொண்டே வந்து, ஒரு புள்ளியில் மழை தெரியவில்லை. நெசவுத் தறியில் நூல்கள் ஒன்று சேர்ந்து ஓர் உடையை உருவாக்குவது போல தண்ணீர் வஸ்திரம் ஒன்றை மழை நெய்துகொண்டு இருந்தது. லயம் என்ற சொல்லின் அர்த்தம் அந்த நிமிஷத்தில் கண்முன்னே கூடியிருந்தது. பின் ஒரு காற்று, மழையின் ஊடாகக் கடந்தபோது மழை சிதறியது. இப்போது மழை, ஒரு காட்டுவாசியின் நடனத்தைப் போல, அதுவரை கண்டறியாத நடன அசைவுகளோடு துள்ளியும் குதித்தும் வடிவம் அற்றதொரு நடனத்தை நிகழ்த்திக்கொண்டு இருந்தது.

மழை சிறு வயதிலிருந்தே புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு மாயம்தான். மழையை முழுமையாக யாராலாவது பார்க்க முடியுமா? நாம் பார்ப்பது, பெய்யும் மழையின் சிறு பகுதியைத் தானே!

தேசாந்திரி

மழையின் சத்தம் எங்கிருந்து உருவாகிறது? மழை சத்தமிடுவதில்லை. அது பூமியில் விழுவதால் ஏற்படும் சத்தத்தைதான் நாம் மழையின் சத்தம் என்கிறோமா? அப்படியென்றால், அது மண்ணின் சத்தமில்லையா? மழை, துளியா அல்லது கூட்டமா? தான் எங்கே விழப்போகிறோம் என்று மழைத் துளிக்குத் தெரிந்திருக்குமா? மழை, மண்ணில் விழும்வரை நம் கண்ணில் தெரிகிறது. மண்ணுக்குக் கீழேயும் அது போய்க்கொண்டேதானே இருக்கும்? என்றால், மழை தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறதா? மழைக்கு எத்தனை விரல்கள் இருக்கின்றன? அது ஏன் உலகோடு தாளமிசைத்தபடி இருக்கிறது? சில நேரம் மழை குழந்தையின் சிரிப்பைப் போலிருக்கிறது சில நேரம் மிருகத்தின் மூர்க்க உறுமல் போல இருக்கிறதே... அது ஏன்?

சிறுவயதில், ஊரில் மழை பெய்யத் துவங்கியதும் பெண்கள் மழைக்குள்ளா கவே ஓடி, தூம்புவாய்களில் தண்ணீர்க் குடங்களை வைத்துப் பிடிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆண்கள் மழை மழை என்று உற்சாகமாகச் சொல்லும் போதெல்லாம் பெண்கள் தண்ணீர் தண்ணீர் என்று சொல்வார்கள். மழையை ரசித்து, வர்ணித்து வேடிக்கை பார்ப்பதைவிடவும், சேகரிக்கவும் பாதுகாக்கவும் தேவை யான தண்ணீர் என்று பெண்களுக்குப் புரிந்திருக்கிறது.

மழை எத்தனையோ கொண்டு வருகிறது. மழை பெய்து முடித்த பிறகு மண்ணில் இருந்து எழும் வாசத்தை நுகர்ந்திருக்கி றீர்களா? மண் பூக்கும் நேரமிது. எல்லா நறுமணங்களைவிடவும் அதி சுகந்தமானது மண்ணின் வாசனை.

மழை பெய்யத் துவங்கியதும் மனித சுபாவம் மாறத் துவங்கி விடுகிறது. யாரும் குரலை உயர்த்திப் பேசிக்கொள்வதில்லை. மாறாக, மழை பெய்யும்போது யார் யாரைப் பார்த்தாலும், முகத்தில் மெல்லிய சிரிப்பு கரை தட்டி நிற்பதை உணர முடிகிறது. மழை ஒரு தியானத்தைப் போல மெள்ள நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது. ஈரத்தின் நுண்கால்கள் நம்மைப் பற்றி ஏறுவதும் உடல் தன் சுபாவத்தில் இருந்து நழுவி மென் உணர்வுகொள்வதும் தவிர்க்க முடியாததாகிறது. சாத்தப்பட்ட ஜன்னல் கதவுகளை மின்னல் வெளிச்சம் தட்டித் திறக்க முயற்சிக்கிறது. மழை, வானத்தை மறைத்து விடுகிறது.

தேசாந்திரி

மழைக்குப் பிந்திய இரவுகள் அடர்த்தியானவை. வீடுகளில் வெளிச்சம் முந்திய நாட்களை விடவும் அதிக பிரகாசம் கொண்டது போலத் தோன்றும். பெயர் தெரியாத பூச்சிகள் சுவர்களில், வாசல் படிகளில் அலையும். இரவில் பெய்யும் மழை ஒரு ரகசியம். அது நம் கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் பெய்கிறது.

லோனாவாலாவில் மழை காலையில் துவங்கி முடிவற்றுப் பெய்துகொண்டே இருந்தது. யாவரும் மழைக்குப் பழகி யிருந்தார்கள். மழைக்கோட்டு அணிந்த ஒரு சிறுமி சைக்கிளில் சுற்றி வந்து, என் விடுதியின் எதிரில் இருந்த கடையில் ரொட்டிகள் வாங்கிப் போகிறாள். ரொட்டிக்குள்கூட மழையின் ஈரம் படிந்துதான் இருந்தது. ரேடியோவில் இருந்து வரும் பாடல், மழையில் கரைந்து ஓடிக்கொண்டு இருந்தது.

சாலைகளில் வழிந்து செல்லும் தண்ணீரில் கால்களை உரசியபடியே ஒரு ஆள் கடந்து போவது தெரிந்தது. மழையை வேடிக்கை பார்க்கத் துவங்கியதி லிருந்து மனம் மெள்ளத் தன் எடையை இழப்பதையும், ஈரம் உறிஞ்சும் காகிதத்தைப் போல நான் மழையை உறிஞ்சிக்கொண்டு இருப்பது போலவும் தோன்றியது.

விடுதியில் இருந்து இறங்கி, ஓர் உணவகத்துக்குப் போனபோது அமைதி யாக இருந்தது. உணவகத்தில் இருந்த எவரும் மழையை வேடிக்கை பார்க்க வில்லை. அவர்கள் தற்செயலாகத் திரும்பி வெளியே பார்த்துவிட்டு, பிறகு மௌனமாக தேநீர் அருந்திக்கொண்டு இருந்தார்கள். மழை, உணவுக்குப் புது ருசி தந்துவிடுகிறது. வழக்கமாகச் சாப்பிடும் கோதுமை ரொட்டிகூட அப்போது தனித்த ருசியுடையதாக மாறியிருந்தது. மழைக்குள்ளாகவே நடந்து சென்றேன். உருளைக் கிழங்கு ஏற்றி வந்த டிரக்கில் ஒருவன் ஈரம் சொட்ட உட்கார்ந்திருந்தான். அந்த மூட்டைகளில் இருந்து ஓர் உருளைக் கிழங்கு, ரோட்டில் உதிர்ந்து ஓடியது.

ஓரிடத்தில், மழைக்குள்ளாக ஒரு சிறுமி ஆரஞ்சு நிறக் குடையைப் பிடித்தபடி சாவகாசமாக நடந்து வந்தாள். அவளது கையில், நாலைந்து ஊதா நிற மலர்கள் இருந்தன. அவள் ஓரிடத்தில் நின்று எதையோ உற்றுப் பார்த்தாள். பிறகு யாருடனோ பேசிக்கொண்டு போவது போல, தனியே ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தாள்.

நான் அவள் அருகில் போய், ‘அங்கே என்ன இருக்கிறது?’ என்று பார்த்தேன். ஒரு தவளை தன் பருத்த கண்கள் இரண்டையும் உருட்டியபடி உட்கார்ந்து இருந்ததைக் காட்டினாள். மழையில் நனைந்து நனைந்து, அதன் தோல் கறுப்புப் படிந்த பச்சை நிறத்தில் இருந்தது. அந்தச் சிறுமி தவளையிடம் என்ன பேசிக்கொண்டு இருந்தாள் என்று தெரியவில்லை. ஆனால், அவள் என்னைப் பார்த்ததும் வெட்கத்துடன் சிரித்தபடி நடந்து போகத் துவங்கி னாள்.

தேசாந்திரி

நான் தவளையைப் பார்த்தேன். அதனிடம் சலனமே இல்லை. அது எப்போதாவது ஒரு முறை கண்களை இங்குமங்கும் திருப்பி மழை பெய்கிறதா என்று பார்த்துவிட்டுத் திரும்பவும் கண்களை மூடிக்கொண்டுவிடுகிறது.

எனக்கும் தவளையோடு ஏதாவது பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால், தவளையோடு பேசும் வயதை நான் கடந்துவிட்டேன் என்று அறிவு சொன்னது. என்ன பேசுவது என்றும் தெரியாதவனாக இருந்தேன். அந்தச் சிறுமியின் மீது பொறாமையாக இருந்தது. பேசத் தெரியாமல் நடந்து, அறைக்குத் திரும்பி வந்தேன்.

மழை பெய்துகொண்டே இருந்தது. லோனாவாலாவில் இருந்த மூன்று நாட்களில் கொஞ்சங் கொஞ்சமாக மழையின் பேச்சைக் கேட்கப் பழகியிருந்தேன். மழையில் பகலும் இரவும் கரைந்து போய்க்கொண்டே இருந்தன.

அங்கிருந்து ஊர் திரும்பிய பிறகு சில நாட்களுக்குப் பிறகும்கூட உறக்கத்தில் மழையின் முணுமுணுப்பு கேட்டது. அன்றிலிருந்து மழையும் நானும் சக பயணிகள் போல ஏதேதோ நகரங்களில் ஒருவரையருவர் சந்தித்துக்கொள்வதும் சிரித்துக் கொள்வதுமாக, நீள்கிறது எங்கள் பயணம்.

மழையோடு நட்பு கொள்ளாதவர் எவர் இருக்கக் கூடும், சொல்லுங்கள்?!

 
தேசாந்திரி
(அலைவோம்... திரிவோம்!)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு