பிரீமியம் ஸ்டோரி
வந்த நாள் முதல்...
வந்த நாள் முதல்...
வந்த நாள் முதல்...
வந்த நாள் முதல்...
 
வந்த நாள் முதல்...

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள.

- திருவள்ளுவர்

வந்த நாள் முதல்...

காற்றின் பெருவெளியில்
ஒரு மணியோசை.
விசிறிய தானியம் போலச்
சிதறிய புறாக்கள்
மேகத்தில் மறைகின்றன.
நீ வானம் பார்த்துக் குனிகிறாய்.

வந்த நாள் முதல்...

சிறிய இறகு ஒன்று
மெல்ல மிதந்து வந்து
உன் தோளில் படிகிறது
அதைப் பார்க்கத் திரும்புகிறாய்.

நான் நிற்கிறேன்

புன்னகையுடன்
ஒருவரையருவர் பார்த்துத்
தலை குனிகிறோம் மூடிய இமையென.
தோளிலிருந்து காற்றில் நழுவி
அசைந்து அசைந்து
தரை திரும்புகிறது இறகு.

அது ஒரு புராதன ஆலயம்.
நீ பிரார்த்தனையுடன் வருகிறாய்
எனக்குப் பிரார்த்தனைகளில்லை
எனினும் வருகிறேன்.

தெய்வ சந்நிதியில் தினமும்
நிகழ்கிறது நம் சந்திப்பு.

வந்த நாள் முதல்...

கவிழ்த்த சந்தனம் போல
கொட்டிக்கிடந்தது மாலை வெயில்
தூசி மிதக்கும் சாய்ந்த ஒளித் தூண்கள்.
சரிந்து வீழ்ந்த கரிய நிழல் தூண்கள்
சிற்பம் புடைத்த கற்தூண்கள்
நிரம்பிய ஆயிரங்கால் மண்டபம்.

ஊரிலிருந்து வந்த உறவினர்கள்
தரிசனத்துக்காக உள்ளிழுக்க
நான் சிற்பம் பார்த்து
வெளியில் நிற்கிறேன்.
வாய் பிளந்த யாழிகள்
கல் மரமென முளைத்த தூணில்
காய்த்த வாழைக் குலைகள்
பார்த்துக் குனிகிறேன்.
கற்பாளங்கள் பாவிய தரையில்
ஒரு நிழல் மேகமென ஊர்ந்து முன் வருகிறது.
நிழல் தொடர்ந்து நிமிர்கிறேன்.
நீ.
நீர் சொட்டக் குளித்து வருவது போல
கூந்தலில் வெளிச்சம் வழிய நிற்கிறாய்.
மஞ்சள் நீரென உன் தலையில் வழிந்து
தரையில் பெருகுகிறது சூரியன்.

நூற்றாண்டுகளுக்கு முந்திய கல் மண்டபத்தின்
இந்நொடியில் நாம் மட்டும் இருந்தோம்.

கண் மலர்த்தி ஒரு பார்வை.
நைவேத்தியம் செய்கையில்
அர்ச்சகர் சற்றே திறந்து மூடும்
பாத்திரமென
பார்த்துத் தணிகின்றன உன்
இமைகள். பிறகு நீள நிழல் முன் வர
நீ தயங்கிப் பின் வருகிறாய்
பொதுவானது போல
நம் இருவருக்கும் ஒரே நிழல்
இப்போது.

தலை குனிந்து வருகிறாய்.
என்னைத் தொடுமுன் வளைகிறது
நிழல்
நுழைவாயிலின் வெயிலிலிருந்து
உள் வந்ததும்
கல்தூணில் மறைகிறது உன் நிழல்.
காலணி விடுத்து வருவதைப் போல
நிழல்விட்டு நீ மட்டும்
கோயிலின் உள்ளே
பிரவேசிக்கிறாய்.
நானும் பின் வருகிறேன்.
வெள்ளி நிறக் கம்பிகள்
இருபுறமும் தடுத்த சந்நிதானம்.
வரிசையாக எல்லோரும் நின்று
வணங்க
நீ பெண்கள் பகுதியில்
உன் நேர் எதிரில்
நான் ஆண்கள் பகுதியில்
உபயம் எழுதிய குழல் விளக்குகள்
சுவர்க் கடிகாரங்கள் பார்த்துத்
திரும்புவதைப் போல
நீ என்னைப் பார்க்கிறாய்.
அலைந்த உன் விழிகள்
நான் பார்த்ததும் இமைகள்.

வந்த நாள் முதல்...

அர்ச்சகர் தீபம் எடுத்து வர
தொட்டு வணங்கும் கூட்டம் கடந்து
நம் முறை வருகிறது.
தொடுவதற்காக கை நீட்டுகிறோம்.
தீக்குள் விரலைவைத்தால்
தீண்டும் இன்பம்.
நம் கைகளுக்கிடையில் வளரும்
நெருப்பின் பூவிதழ்கள்
இரு கண்களிலும் எரிகிறது தீபம்.
பார்வையின் வெப்பம் கைகளில் தகிக்க
இமைகள் போதாதென
கைகளால் கண் மூடினோம்.
இது தொட்டு வணங்கும் பாவனை.

கவிழ்ந்து நிமிரும் விழிகளில்
புன்னகை மிளிர கூட்டத்தில் நிற்கிறாய்.
உறவினர்கள் பார்த்துப் பேசித்
திரும்புகிறேன்.
நீ இல்லை.
தேடும் இடமெல்லாம்
உன் சிற்பங்கள்.
மெல்ல நகர்ந்து யாரும் அறியாமல்
தேடித் திரும்புகையில்
என் தேடலின் முற்றுப்புள்ளியென
உன் விழிகள்.
அறிந்ததன் பார்வை.
துவங்குகிறது சந்தியாகால பூஜையின்
நாயன இசை.

காணிக்கையிடும் உண்டியல் அருகே
நிற்கிறாய்.
கண்களின் வழியே நாம் நிரம்ப
நழுவி விழுகிறது நாணயம்.
இன்றைய நாளின் சேமிப்பென
நான்கு பார்வைகள்
இரண்டு புன்னகைகள்
திரும்பி நடக்கிறாய்.

குங்குமக் கரைசலாய்
தேங்கிக் கிடக்கிறது
அந்தி வெயில்
உன்னைக் கண்டதும்
தூணில் மறைந்த நிழல் வெளிவர
அழைத்து நடக்கிறாய்.
தோளில் அணிந்த துகில்
தரை புரள நடக்கும் ராஜகுமாரி போல
உன் நிழலுடன் நீ நடந்து
செல்கிறாய்.

அசோக மரங்களின் பின்னால்
குங்குமத் திலகமாய் நழுவும் சூரியன்
நாயன இசையுடன்
கோயிலின் வாயிலில்
கருந்திரையென மெல்ல அவிழ்ந்தது
இருள்.

மறுநாள்.
விழிச்சுடர்களுடன்
இருளிலிருந்து வருகிறாய்.
மெர்க்குரி விளக்குகளின்
வெளிச்சத்தில்
மண்டபம் இருளில் வரைந்த
தட்டையான ஓவியம் போல்
இருக்கிறது.
யாருக்காகவோ காத்திருப்பது போல்
நிற்கிறேன்.
யாரையோ பார்க்க வருவது போல்
வருகிறாய்.
எனினும் நம் கண்கள் அறியும்
சூக்குமம்.
ஒரு பார்வை.
பார்த்த விழியை இமை அணைத்துப்
பாந்தமாய் எடுத்துச் செல்கிறாய்.
நறுமலர் வாசனைகொண்ட
சந்நிதானம்
கூட்டத்தில் எதிரெதிரே நிற்கிறோம்.
பிரார்த்தனைக்கென மூடிய
இமைகளின் நடுவே
நம் விழிகள் திறந்திருக்கின்றன.
அம்பாள் உள்ளிருப்பதாக கண்களால்
காட்டுகிறாய்
நான் உன்னைப் பார்க்க
நீ மூடிய இமைகளால் என்னைப்
பார்க்கிறாய்.
அர்ச்சகர் குங்குமம் தர
வணங்கிய கை பிரித்து வாங்குகிறாய்.
கண்ணாடி முன் செல்கிறாய்.
தூணில் சாய்த்துக்கட்டிய
கண்ணாடியிடம் வருகிறேன்.
எதிரெதிரே முதுகு காட்டி நிற்கிறோம்
எனினும் கண்ணாடி
விரிந்த சதுர விழியாக மாறுகிறது.
நீ நகர்ந்ததும் என் முகம்.
நான் சற்று விலகினால் உன் முகம்
கண்ணாடிக்குள் புன்னகைத்துவிட்டு
நேரில் ஏதும் அறியாதவள் போல
நடக்கிறாய்.
சுற்றுப்பிராகாரம்.
நிலா வெளிச்சம்.
மடப்பள்ளியை ஒட்டி வளையும்போது
தலைசாய்த்துப் புன்னகைக்கிறாய்.

வந்த நாள் முதல்...

அந்த இடத்தை நான்
நினைவுகொள்ள
உன் கூந்தலிலிருந்து உதிர்கிறது
ஒரு கனகாம்பரம்.
பூஜையின் நாயன இசை
பெருகுகிறது.
இவ்விதமாக...
கோயிலுக்கு வருகின்றன
முன்னிரவுகள்
வெயில் படர்ந்த மாலைப்
பொழுதுகள்.
புறாக்கள் சடசடத்துப் பறக்க
கோபுரத்தைக் கடந்து செல்கின்றன.
நாம் பார்த்த மேகங்கள்.

அது ஒரு தீப நாள்
மண் விளக்கில் திரியிட்டு
பிராகாரத்தில் நிற்கிறாய்.
நான் அருகில் வருகிறேன்.
போ என்பதை நாணத்துடன்
சொல்கின்றன
உன் விழியும், அசையும் சுடரும்.
நான் விலக
வீசும் காற்றில் மஞ்சள் விழி
அணையாதிருக்க
குவித்த கைகளால்
இமை செய்கிறாய்
இருளும் ஒளியுமாய் நிகழ்ந்தது
நம் கணம்.

யாருமற்றிருந்த இன்னொரு
நாள்.
பூஜைக் கூடையுடன் வருகிறாய்.
நானும் அர்ச்சனைத் தட்டு
வாங்குகிறேன்.
சந்நிதியில் இருவர் மட்டும்
எதிரெதிரே நிற்கிறோம்.
அர்ச்சகர் பூஜை செய்ய
என் நட்சத்திரம் கேட்கிறார்.
தெரியாமல் நான் விழிக்க c
புன்னகைக்கிறாய்.
பிறகு உன்னைப் பார்த்து
என் பெயர் சொல்கிறேன்.
நட்சத்திரம் தெரிந்தும் நீ
என்னைப் பார்த்து உன் பெயர்
சொல்கிறாய்.

மாலைகளுடன் திரும்பி
வருகின்றன
நம் அர்ச்சனைத் தட்டுகள்.
யாருமற்ற பிராகாரத்தில்
நாம் மட்டும் நடக்கிறோம்.
துர்க்கை சந்நிதியில்
நீ கண் மூடிப் பிரார்த்திக்க
உன் அர்ச்சனைத் தட்டை
நான் மாற்றி எடுத்துக்கொள்கிறேன்.
தெரிந்ததும் நாணமும் கோபமும்
மிளிரப் பார்க்கிறாய்.
மாலை மாற்றிக்கொள்வதாக
கற்பனை நமக்கு.
அன்று வெகுநேரம் கோயிலில் இருந்து
பிரிகிறோம்.
விளக்குகள் அணைய இருளில்
மறைகிறது கோபுரம்.

கடைசியாக அந்தத் திருவிழா நாளில்
நாம் பார்த்துக்கொண்டோம்.
நதியெனப் பெருகி வரும்
மனிதத் தலைகளின் நடுவே c
நிற்கிறாய்.
படிப்புக்கென நகரம் செல்வதைச்
சொல்ல இயலாது நானும் நிற்கிறேன்.
ஒலிபெருக்கிப் பாடல்கள்
சிதறும் வானவெடிகள்
ஒற்றை விளக்கைக்
குடையெனப் பிடித்து
இருளில் நிற்கிறது கோபுரம்
நூலறுந்த பலூன்கள்
வானில் பறக்கின்றன.
குழந்தையின் அழுகுரலோடு
தொலைந்தவர்கள் பற்றிய அறிவிப்பு.
அதில் நம் பெயர்கள் இல்லை.

பிரிவது தெரியாமல் புன்னகைத்து
சந்திக்கலாம் என்று விடைகொடுக்கிறாய்
பிறகு நாம் சந்திக்கவேயில்லை.
கடக்கும் மனித முகங்களில்
கலந்து மறைகிறது உன் முகம்.
ஊரின் கொண்டாட்டத்தில்
சோகம் கொண்டு விடை பெறுகிறேன்.

பூஜையின் நாயன இசை
அழுகுரலென ஒலிக்க
பிராகாரத்தின் கல் மாடத்தில்
எண்ணெய்க் களிம்பும்
புகைக் கரியும் சூழ,
பரந்த இருளின் முன்
தனிமைகொண்டு
எப்போதும் நடுங்கிக்கொண்டு
இருக்கக்கூடும்
அந்த மண் விளக்குச் சுடர்
நம் நினைவாக!

 
வந்த நாள் முதல்...
-(நாளை மற்றுமொரு நாளே)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு