##~## |
எழுதுவதல்ல கவிதை
உறங்குவதற்கு முன்பு
விழிக்கும் கவிதைகள்
விழித்த பின் உலர்ந்துவிடுவதை
எப்போதும் தவிர்க்க முடிவது இல்லை.
எழுதுகோலும் தாளும்
இல்லாதபோது தோன்றும்
கவிதைகள் துரதிருஷ்டமானவை.
எழுதிய கவிதைகளைவிட
எழுத நினைத்த கவிதைகள்
அதிகம்.
மிகச் சிறந்த கவிதைகள்
இன்னும் எழுதப்படவே இல்லை.
ஆக, எழுதியதால் மட்டுமே
கவிதையைக் கவிதை என்று
சொல்வதற்கில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- சு.இரமேஷ்
வெளிச்சத்தின் இருள்
பகலிலும் எரிந்தது
தெரு விளக்கு
விளக்குக் கம்பத்தில்
காக்கை
விரட்டப்படாத
இருளாகத் தனித்திருந்தது!
- மா.தாமோதரன்

வெயில் தேங்கும் கிண்ணம்
ஜன்னல் வழியே நுழையும்
சொற்ப வெயில்
பாப்பாவுக்கான கிண்ணத்தில்
தேங்குகிறது
அதை
செர்லாக் கலக்குவதற்கு
எடுத்துப் போகிறாள்
மனைவி!
- இளங்கோ
ஆதியும் அந்தமும்
அடர் வனமொன்றில்
புதைந்திருக்கும்
உன் மௌனத்தின்
சொற்களுடன் எழுகிறது
ஒரு பறவை... ஒரு மிருகம்
பெரு மழையன்றில்
குளிர்ந்திருக்கும்
உன் பார்வையின்
ஆழங்களுடன் விழுகிறது
ஒரு ஆலங்கட்டி... ஒரு பாறை
மென்கொலுசொலியில்
ஒளிர்ந்திருக்கும்
உன் புன்னகையின்
நெளிவுகளுடன் சுரக்கிறது
ஒரு துளி பால்...
ஒரு துளி விஷம்
மீளாத் துயரத்தில்
மீட்டியவாறே இருக்கும்
உன் சுவாசத்தின்
ராகங்களுடன் துளிர்க்கிறது
ஒரு வாழ்வு... ஒரு மரணம்!
- வேல் கண்ணன்
பாடங்கள்
சரிகாஷா செத்தாள்
'ஈவ் டீஸிங்’ தடை வந்தது
நாவரசு செத்தான்
'ராகிங்’ தடை வந்தது.
ஓமலூர் சுகன்யா செத்தாள்
பள்ளிக் கிணற்றை மூடினோம்
செம்மொழிக் கவிதை வந்ததால்
பள்ளியையே மூடினோம்
மாணவர் மரணங்களில்
அரசுக்குப் பாடங்கள்
மாணவர் பாடங்களில்
நாகரிகத்துக்கு மரணங்கள்!
- எஸ்.தளவாய்சாமி
