Published:Updated:

டாமியும் ரோஸியும் !

டாமியும் ரோஸியும் !

பிரீமியம் ஸ்டோரி

தாரிக்

டாமியும் ரோஸியும் !

ஒரு வீட்டுல டாமி என்கிற நாய்க் குட்டியும் ரோஸி என்கிற பூனையும் 'பெட் அனிமல்ஸா’ இருந்துச்சாம். அந்த வீட்டுல ஒரு குட்டிப் பாப்பா புதுசா வாங்கி வந்த ஷூவைப் போட்டுக்கிட்டு 'க்குயிங்... க்குயிங்...’ன்னு வீடு முழுக்க நடந்து அலம்பல் பண்ணிட்டு இருந்தாளாம். இதைப் பார்த்த டாமி, தானும் அதுபோல ஷூ போட்டுக்கிட்டு 'க்குயிங்... க்குயிங்...’னு நடக்க ஆசைப்பட்டுச்சாம்.

டாமி, நேரா ஷூ கடைக்கு ஓடிப்போய் ''கடைக்காரரே! கடைக்காரரே! எனக்கு ஒரு ஷூ வேணும். எடுத்துப் போடுங்க...''ன்னு கேட்டுச்சு. ''உனக்கு ஒரு ஷூ எங்கேர்ந்து பத்தும்? நாலு ஷூ வாங்கணுமே..!''ன்னு சொன்ன கடைக்காரர், விதவிதமா ஷூக்களை எடுத்துப் போட்டாரு. ஆனா, அது எதுவுமே டாமிக்குப் பிடிக்கலை. ''எனக்கு 'க்குயிங்... க்குயிங்...’னு கத்தற ஷூதான் வேணும்''ன்னு சொல்லிச்சு.

''அது பழைய மாடல் ஆச்சே! இப்ப லேட்டஸ்ட்டா லைட் வெச்ச ஷூ எல்லாம் வந்துடுச்சு. மியூசிக் வர்ற மாதிரி எல்லாம் இருக்கு...''ன்னு கடைக்காரர் சொல்லிப் பார்த்தாரு. டாமி கேட்கலை. சரின்னு 'க்குயிங்... க்குயிங்...’னு கத்தற ஷூக்களை அது சைஸுக்கு கலர் கலரா எடுத்துப் போட்டாரு. அதுல சிவப்பு கலர்ல இருந்த ஷூ ரொம்ப பிடிச்சுப் போச்சு. ரெண்டு செட் ஷூக்களை டாமி கால்ல கடைக்காரர் மாட்டி விட்டாரு. டாமிக்கு குஷியோ குஷி!

##~##

நேரா வீட்டுக்கு வந்துச்சு. நாலு காலும் துள்ளித் துள்ளிக் குதிச்சு நடந்துச்சு. வீடு முழுக்க 'க்குயிங்... க்குயிங்... க்குயிங்...’ சத்தம்! எல்லாரும் டாமியையே பார்த்தாங்க. இதைக் கவனிச்ச பூனை ரோஸிக்கு பொறாமை வந்துடுச்சு. அதுவும் ஷூ கடைக்கு ஓடிப் போய், ''எனக்கும் அதே மாதிரி ஷூ வேணும்...''ன்னு கேட்டுச்சு. ஆனா, அதோட அதிஷ்டம், 'க்குயிங்... க்குயிங்...’னு கத்தற ஷூ ஒரு ஜோடி மட்டும்தான் இருந்துச்சு. கடைக்காரர் கடையையே புரட்டிப் போட்டு தேடிட்டாரு. வேற இல்லை. ரோஸி ரொம்ப சோகமாயிடுச்சு. அதைப் பார்த்த கடைக்காரர், ''இதுக்கு ஏன் ரோஸி வருத்தப்படறே... முன்னங்காலுக்கு மட்டும் இந்த ரெண்டு ஷூக்களைப் போட்டுக்கோ. பின்னங்காலை வைக்கும்போது நீயே 'க்குயிங்... க்குயிங்...’னு கத்திக்கோ... பிரச்னை தீர்ந்தது!''னு சொன்னார்.

டாமியும் ரோஸியும் !

ரோஸி உற்சாகமா தலைய ஆட்டிட்டு, வீட்டுக்கு வந்துச்சு. ஒரு ஜோடி ஷூவை போட்டுக்கிட்டு 'க்குயிங்... க்குயிங்...’னு கத்த ஆரம்பிச்சுடுச்சு.

இதைப் பார்த்த டாமி, ''என்ன நீ இப்படி பண்றே?''னு கேட்டுச்சு. ''இதுதான் சிக்கனமான வழி! கடைக்காரர் எனக்கு ஒரு ஜோடி ஷூவை மிச்சப்படுத்திக் கொடுத்துட்டாரு!''னு சொல்லிட்டு 'க்குயிங்... க்குயிங்...’னு கத்திக்கிட்டே ஓடிடுச்சு.

'ஆஹா! கடைக்காரர் நம்மை நல்லா ஏமாத்திட்டாரே!’னு கோவமான டாமி, நேரா கடைக்குப்போய், ''நீங்க இப்படி பண்ணது சரியா?''னு கத்த ஆரம்பிச்சது. டாமியை சமாதானம் பண்ண எவ்வளவோ ட்ரை பண்ண கடைக்காரர் கடைசியா, ''அதுக்கேன் டென்ஷன் ஆகுறே டாமி, நீ நாலு காலுக்கும் ஷூ போடாம 'க்குயிங்... க்குயிங்...’னு கத்திக்கோ... ரொம்ப சிக்கனம் பண்ண மாதிரி ஆயிடும். உன் நாலு ஷூவையும் திருப்பி வாங்கிக்கறேன்!''னு சொன்னார். ''நல்ல யோசனையா இருக்கு. ஓகே!''னு சொன்ன டாமி, ஷூக்களைக் கழட்டிக் கொடுத்துட்டு, ''க்குயிங்... க்குயிங்...''னு கத்திக்கிட்டே நேரா ரோஸி கிட்டே வந்துச்சு. ''நான்

டாமியும் ரோஸியும் !

எவ்வளவு சிக்கனம் பண்ணிட்டேன் பாத்தியா?''னு வெறுப்பேத்துச்சு.

இதைப் பார்த்த ரோஸி, அதுவும் கடைக்குப்போய், தன் ஜோடி ஷூவைக் கொடுத்துட்டு ''க்குயிங்... க்குயிங்...''னு கத்திக்கிட்டே திரும்பி வந்துடுச்சு.

வீட்டில் டாமியும், ரோஸியும் ஆளாளுக்கு ''க்குயிங்... க்குயிங்...''னு சதா கத்திக்கிட்டே இருக்கறதைப் பார்த்த வீட்டு எஜமான், ''என்னடா இது! நாய் நாய் மாதிரி கத்தாம, பூனை பூனை மாதிரி கத்தாம, 'க்குயிங் க்குயிங்’னு கத்துதுங்க... ரெண்டுக்கும் ஏதோ ஆயிடுச்சு. கொண்டு போயி எங்கேயாவது தூரத்துல விட்டுட்டு வந்துடலாம்!''னு சொன்னாரு.

'அடடா! தப்புப் பண்ணிட்டோமே... நாம நாமா இருந்தாதான் இங்கே மரியாதை. மத்தவங்களைப் பார்த்து நம்மை மாத்திக்கிட்டா, முதலுக்கே மோசமாயிடும்’னு ரெண்டும் புரிஞ்சுக்கிட்டு பழையபடி நடக்க ஆரம்பிச்சுடுச்சு. டாமி, நாய் மாதிரி கத்தறதையும்... ரோஸி, பூனை மாதிரி கத்தறதையும் பார்த்த எஜமான், 'சரி இருந்துட்டுப் போகட்டும்’னு தன் வீட்டிலேயே வெச்சுக்கிட்டாரு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு