##~## |
பெருவாழ்வு
சந்துக்குள்ளே வண்டி நிறுத்த
சமர் செய்ய வேண்டும் சண்டியராக
மொட்டை மாடியில் துணிகள் காய
அனுமதி உண்டு அட்டவணைப்படி
தொட்டிப் பூவின் வேர்கள்கூட
கட்டடத்தைப் பிளக்கும் என்பர்
விருந்தினர் வந்துவிட்டால்
படுக்கை மேல் பாத்திரம் இருக்க
வரவேற்பறையில் உடை மாற்றம்
குடித்தனத் தொல்லைகளை
சகித்து வசிக்கும் காலத்தில்
நான்கு குழந்தைகளுடன்
இரண்டு கார்கள் ஒரு லாரி
ஆடுகள் பசுமாடு பூனை நாய்
உட்பட்ட விலங்குகளும் போதாதென
தண்டவாளங்களோடு
சொந்த ரயிலும் வைத்துக்கொண்டு
பெரு வாழ்வு வாழ்கிறாள் என் மகள்
நாற்காலியின் அடியில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- இளையநிலா ஜான்சுந்தர்
ஆல் அவுட்
மேலிருந்த
கண்ணீர் அஞ்சலிக்காரன்
எட்டவில்லைபோல.
கீழிருந்த
குடும்பத்தார்களை
கழுதை மென்றுகொண்டிருந்தது!
- பா.ராஜாராம்

பெவிலியனுக்குத் திரும்பாதவர்
இழுத்துக்கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து
மாமா
அத்தையை
சாகக் கொடுத்த பிறகு
திரும்ப வந்துவிட்டார்.
இப்ப அத்தை மட்டுமே
ஓடிப் போனவளாகவே
இருக்கிறாள்!
- பா.ராஜாராம்
பூங்காற்றுத் திரும்புமா?
சற்று முன்
இறந்தவனின்
சட்டைப் பையில்
செல்போன்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
கையில் எடுத்த
காவலர்
'சார், யாரோ
அம்முனு கால் பண்றாங்க’
என்கிறார்
ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து
மூடுகின்றன!
- வே.பாபு
அந்நியம்
இதுவரை
எத்தனையோ
கோயில்களில்
கடவுள் தரிசனம்
கண்டிருக்கிறேன்
பக்கத்தில் இருந்தவர்
ஒருவரின் முகம்கூட
நினைவில் இல்லை!
- கவிஜி
