Published:Updated:

அம்மா,அப்பா அமலா !

அம்மா,அப்பா அமலா !

சிறுகதை                                                                                                                           கீதா பென்னெட்

அம்மா,அப்பா அமலா !

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த ஒரு மெகா மாலில் மெஹந்தி டிசைன்ஸ் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள் அமலா. செல்போன் சிணுங்கியபோது கூப்பிடுவது அப்பாதான் என்று அவளுக்குத் தெரியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பேபி... இதோ இன்னும் பத்து நிமிஷத்திலே அங்க வந்துடுவேன்...''

எதிரே ஓர் இளைஞன் வந்து நின்றான். 'எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே!' என்று நினைக்கும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்...

''ஹேய்... நீ அமலாதானே? உன்னோட திருவல்லிக்கேணி வீடு இருந்த தெருவிலே நானும் இருந்திருக்கேன். மாதவன்...''

''ஓ.. யா... ஞாபகம் வருது. என்ன பண்ணிக்கிட்டிருக்கே?''

''எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். இப்போ இந்த புத்தகக் கடையிலே நிக்கறதால படிப்பாளினு நினைச்சுடாதே. என் கேர்ள் ஃப்ரெண்டும் நானும் சினிமா பார்க்கப் போறோம். அவ வர்ற வரைக்கும்... டைம் கில்லிங் இங்கே! ஆமாம்... நீ?''

''அப்பாகூட 'சோழா ஷெரட்டன்’ல லஞ்ச் போக கிளம்பிட்டிருக்கேன்...''

அவளும், அதே சினிமா பார்க்க அதற்குப் பின் அங்கு வரப் போவதை அவனிடம் சொல்லவில்லை.

அவளுடைய செல் மறுபடியும் குரல் கொடுக்க, ''எக்ஸ்க்யூஸ்மீ... நைஸ் மீட்டிங் யூ!'' என்று அவனிடம் விடைபெற்று நகர்ந்தாள். பார்க்கிங்கிலிருந்த ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு 'சோழா’ விரைந்தாள். சில நொடிகளில் ரெட் கலர் பி.எம்.டபுள்யூ காரில் அப்பாவும் அங்கு வந்தார். இருவரும் டேபிள் பார்த்து அமர்ந்தார்கள்.

''நேத்து நைட் ஃப்ளைட்லதான் பாரீஸ்லயிருந்து வந்தேன். நீ ஏதோ அவசரமா பேசணும்னு சொன்னதால இந்த மீட்டிங்குக்கு வந்தேன்...''

அமலாவுக்கு சிரிப்புதான் வந்தது. பெற்ற பெண்ணோடு பேச வருவதுகூட அவருக்கு மீட்டிங்! பேரர், லஞ்ச் ஆர்டரை எழுதிக் கொண்டு நகர்ந்தார்.

''என்ன விஷயம் பேபி?''

''டாட்... எனக்கு கல்யாணம். ஐ அம் எங்கேஜ்ட்...'' என விரலில் மின்னிய மோதிரத்தைக் காட்டினாள். உற்சாகமாக ''கங்கிராட்ஸ்'' என்றவர், பின் சற்றே கவலையாக, ''பையன் என்ன படிச்சிருக்கான்? என்ன வேலை? உன் அம்மா நாலு பேர்கிட்ட அவனோட குடும்பப் பின்னணி என்னனு விசாரிச்சாளா?'' என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார்.

''இது லவ் மேரேஜ்பா!'' என்றவள்... தயங்கி, ''இப்பல்லாம் என்னுடைய ஆபீஸ் சம்பளம் மட்டும் போதல. அதனால கல்யாணங்களுக்கு மெஹந்தி போடறேன். அப்படி ஒரு மெஹந்தி பார்ட்டியிலதான் அஜீத்தை சந்திச்சேன். ஒரு பிரைவேட் கம்பெனியில ஃபைனான்ஸிங் கன்சல்டன்ட்!''

இதைக் கேட்டதுமே சீறினார் ராகவன்... ''உன் அம்மா மட்டும் விவாகரத்துக்குப் பின்னால, மாசா மாசம் கொடுக்கிறேன்னு சொன்ன ஒரு பெரிய தொகையை வாங்க சம்மதிச்சிருந்தா... நீ இப்படி பார்ட் டைம் வேலை பார்க்கற நிலைமை வந்திருக்குமா..?''

அவள் ஒன்றும் சொல்லவில்லை. உணவைத் துழாவிக் கொண்டே இருந்தாள்.

''உனக்கு அப்ப ஏழு வயசு இருக்கும். திடீர்னு என் எக்ஸ்போர்ட் பிஸினஸ் பிக் அப் ஆயிடுச்சு. பணம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டிச்சு. கால்ல சக்கரம் கட்டிட்டு அமெரிக்கா, பாரீஸ்னு ஓடினேன். வசதியும் நம்ம ஸ்டேட்டஸும் எங்கேயோ போயிடிச்சு. ஆனா, உன் அம்மா, 'நீங்க என்கூட இருபத்தி நாலு மணி நேரம் இருக்க வேண்டாம். ராத்திரியாவது என்னையும் குழந்தையையும் பார்க்க வீட்டுக்கு வரக்கூடாதா?’னு தொணதொணக்க ஆரம்பிச்சா....''

சிறு இடைவெளி விட்டவர், தொடர்ந்தார்.

''ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து லஞ்ச்சோட வீட்டுக்குத் திரும்பினப்போ, உன் அம்மாவும், அந்த சந்திரசேகரனும் நெருக்கமா இருந்ததைப் பார்த்துட்டேன்...''

சற்று தயங்கி, ''நெருக்கம்னா..?'' என்றாள்.

''சோபாவில பக்கத்திலே பக்கத்திலே உட்கார்ந்துகிட்டிருந்தாங்க. அவ அழுதபடி என்னவோ அவங்கிட்ட சொல்லிட்டிருந்தா. அவன் அவ கையைப் பிடிச்சிட்டிருந்தான். நான் தாலி கட்டின பெண்டாட்டிய இன்னொருத்தன் கைப்பிடிக்கிறதா? என்னாலே அதை ஏத்துக்க முடியல...''

அமலாவுக்கு இந்தக் கதை எல்லாம் அப்பா, அம்மா தவிர்த்து அவர்களின் நண்பர்கள், உறவினர்கள், வழக்கறிஞர் மூலமாக சிறிது தெரிந்திருக்கவே... குரலில் கோபம் கூட்டிக் கொண்டாள்.

''கல்யாணத்துக்கு முந்தியே அம்மா வீடும், சந்திரசேகரன் அங்கிள் வீடும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். அம்மாவும், அங்கிளும் பள்ளிக்கூடத்திலிருந்து காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்ச க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு உங்களுக்குத் தெரியாதா டாடி?''

''தெரியும். உன் அம்மாவும் திரும்பத் திரும்ப 'எங்களுக்குள்ளே எந்த விகல்பமும் இல்லை. அவன் ஒரு நல்ல சிநேகிதன் மட்டும்தான்’னு சொல்லிட்டிருந்தா...''

''டாட்... உங்களை இப்ப நான் ஒண்ணு கேட்கலாமா?''

''ஷூட்!''

''அம்மாவைப் பிரியணும்னு கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னாலயே உங்க சென்னை செக்ரட்டரி ராதிகா, பாரீஸ் செகரட்டரி சூஸிகூடயெல்லாம் உங்களுக்கு தொடர்பிருந்ததுதானே..?''

சற்றே தயங்கியவர், ''ம்... தோளுக்கு மேலே வளர்ந்துட்ட பொண்ணு. நேருக்கு நேரா கேள்வி கேட்கிறே..? யெஸ்... சூஸி எனக்கு ஒரு கிரேட் கம்பானியன். இன்னிக்கு வரைக்கும். பட் ராதிகா, பாஸ்ட் டென்ஸ்!''

''ஓ! நீங்க மட்டும் இந்தியாவில ஒருத்தி, பாரீஸ்ல ஒருத்தி, அமெரிக்காவில ஒருத்தினு ஒரு அந்தப்புரமே வெச்சிருப்பீங்க. ஆனா, உங்க பெண்டாட்டி ஒரு ஆண்கூட சிநேகிதமா தன் மனசுல இருக்கிறதை பகிர்ந்துக்கிட்டா உடனே விவாகரத்து?''

ராகவன் சிரித்தார். ''நீங்க என்னதான் வாய் கிழிய 'ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா’னு போராடினாலும்... இதுதான் காலம் காலமா நடக்கிற விஷயம்..!''

''தட்ஸ் புல் ஷிட் டாட். என் திருமணத் தகவலைச் உங்ககிட்ட சொல்லத்தான் வந்தேன். அஜீத்தும் நானும் 'ராவணன்’ படத்துக்குப் போறோம். நீங்களும் வாங்க... அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.''

அதற்கு பதில் சொல்லாதவர், ''ராவணன் காலத்திலிருந்தே இது நடக்கிற விஷயம்தான். ராமன் தன் பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு தீ குளிக்கச் சொல்றான். அவ அதை செஞ்ச பிறகும் அவளை காட்டுக்கு அனுப்பறான். அதை ஏத்துக்கறீங்க. ஏன்னா ராமன் கடவுள்!''

''ஆனா டாட்... எங்க தலைமுறையில ஆண், பெண் நடுவில ஒரு ஆரோக்கியமான நட்பு இருக்கு. நம்பிக்கைதான் ஒரு திருமணத்துல முக்கியமான விஷயம்னும் அஜீத்தும் நானும் புரிஞ்சிக்கிட்டிருக்கோம்...'' - சொன்னவாறே எழுந்து கொண்டாள்.

''நீ ரொம்ப வெகுளியா இருக்கே பேபி. ஆண்கள் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ஒரே மாதிரிதான்...'' என்றவர், ''ஸாரிம்மா... எனக்கு வேற வேலை இருக்கு. கங்கிராட்ஸ்!''

- அவரும் எழுந்து கொண்டார்.

அந்த பெரிய காம்ப்ளக்ஸின் மாடியில் இருந்த கூட்டமெல்லாம் தியேட்டருக்குள்ளே சென்ற பின்னும் தனியாக நின்றிருந்தாள் அமலா.

''ஹேய் அமலா... என்ன டிக்கெட் கிடைக்கலையா...''

- புத்தக கடையில் பார்த்த மாதவன் நின்றிருந்தான்.

''டிக்கெட் இருக்கு. ஆனா, என் ஃபியான்ஸேதான் கடைசி நிமிஷத்திலே வரலைனு எஸ்.எம்.எஸ். அனுப்பிட்டான். அதான் வீட்டுக்குப் போயிடலாமானு யோசிச்சுக்கிட்டிருக்கேன்...''

''என் கேர்ள் ஃப்ரெண்டும் வீட்டை விட்டு வரமுடியலனு இப்பதான் அனுப்பிச்சா. எங்கிட்டேயும் டிக்கெட் இருக்கு. டோன்ட் மைண்ட்... நாம பார்க்கலாமே..?'' என்றான்.

அப்படி யதார்த்தமாக அவன் கேட்டது அவளுக்கும் பிடித்தது. ''வாட் தி ஹெல்... வா போகலாம்..!'' என்றாள்.

படம் முடிந்தது. பார்க்கிங்கில் ''பை!'' என்று மாதவன் நகர்ந்தபோது, அஜீத் அவளுக்காக காத்து நிற்பது தெரிந்தது. அவள் முகத்தில் சந்தோஷம் வெளிச்சம் போட, ''ஹாய் அஜீத்... நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டியே!'' என்றாள்.

அதை காதில் வாங்காமல், ''பை சொல்லிட்டுப் போறானே, யார் அவன்?'' என்றான்.

''மாதவன். திருவல்லிக்கேணியில எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்தான். எல்.கே.ஜி-யிலிருந்து ஃபிப்த் வரைக்கும் ஒண்ணா படிச்சோம். அவனோட கேர்ள் ஃப்ரெண்டும் வரலையாம். நீயும் வரலை. வாங்கின டிக்கெட்டை வேஸ்ட் பண்ணவும் எங்க ரெண்டு பேருக்குமே மனசு வரல...''

''அப்படின்னா... ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உட்கார்ந்துகிட்டு  படம் பார்த்தீங்க?''

அவன் குரலில் தொனித்த கோபத்தை இப்போதுதான் அவள் உணர்ந்தாள். ''அதுல என்ன தப்பு? ஜஸ்ட் பக்கத்து பக்கத்து ஸீட்ல உட்கார்ந்தோம். படம் பார்த்தோம். பேசினோம்...'' என்றாள்.

''நமக்கு எங்கேஜ்மென்ட் ஆயிடுச்சு அமலா. அதுக்கப்புறமும் இந்த மாதிரி வேறொருத்தன்கூட சினிமா போறவளா என் வருங்கால பெண்டாட்டி?''

''என்ன பேசறே? படம் பார்க்கணும்கிற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும்தான் சேர்ந்து உட்கார்ந்தோம்.''

''நீ என்ன வேணும்னாலும் சொல்லு. ஆனா எனக்குப் பிடிக்கல...'' - அவன் முகத்தில் தெரிந்த கோபமும் வெறுப்பும் அவள் இதற்கு முன் பார்த்திராதது.

அமலா துளியும் தயங்கவில்லை. சட்டென்று தன்னுடைய கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, அவன் கையில் திணித்துவிட்டு, ''என் அப்பா சொன்னப்போ நான் நம்பல. ஆனா, இப்பதான் புரியுது. ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்... குட் பை'' என்றபடியே தனியே நடந்தாள்.

ஏதும் விளங்காதவனாக நின்றான் அஜீத்.

ஓவியம்: ஸ்யாம்