பிரீமியம் ஸ்டோரி
துர்கா !
##~##

'ஏன் வராகன் கைது செய்யப்பட்டார்? துர்கா என்ன செய்யப் போகிறாள்?' என்று கடந்த அத்தியாயத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு... எப்படியெல்லாம் புதுப்புது பாணியில் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள்... வாசகிகளே! வாய்ப்பு கொடுத்தால், 'எங்களாலும் சாதிக்க முடியும்' என்பதை அழகாக நிரூபித்து வருகிறீர்கள்... பிரமிக்கிறோம்!

திருநின்றவூர் - குப்பிபாய், நாகப்பட்டினம் - ஸ்ரீதேவி, செங்கல்பட்டு - துர்கா, உடுமலைப்பேட்டை - அனிதா, சூளைமேடு - உஷாகுமாரி, சென்னை - சுஜாதா... ஆகிய ஆறு பேரும் வராகன் லஞ்சம் வாங்கியதால் கைது எனவும், இது அவன் மேல சுமத்தப்பட்ட பழி எனவும் இருவித மாக சிந்தித்திருக்கிறார்கள்!

ஈரோடு - சாந்தி... மனைவி கல்பனாவின் பணத்தாசைதான் வராகனை படுகுழியில் தள்ளிவிட்டதாக யோசித்திருக்கிறார்.

மதுரை - சாமுண்டீஸ்வரி, கள்ளநோட்டு குற்றத்தை வராகன் மேல் சுமத்துகிறார்.

அம்பத்தூர் - வசுமதி... வராகன், யூனியன் லீடர் - அதனால் கலவரம், விளைவு கைது என்கிறார்.

வேளச்சேரி - பிரேமா, கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி தொழிலாளிக்கு விபத்து... பொறுப்பு வராகன் என கதையை நகர்த்தப் பார்க்கிறார்.

துர்கா !

பவானி - கிருத்திகா, துர்காவை தன் கம்பெனிக்கு இழுக்க நினைக்கும் இன்னொரு கம்பெனியினர், வராகனை பகடைக் காயாக உருட்டுவதாக சொல்கிறார்.

மடிப்பாக்கம் - சுஜா, 'இது வராகன் நடிக்கும் ஒரு விளம்பரப் படத்துக்கான படப்பிடிப்பு’ என்று வித்தியாசமாக கற்பனை செய்திருக்கிறார்!

சென்னை - மல்லிகா அன்பழகன், வராகனுக்கு இன்னொரு திருமணம். உண்மை அறிந்த அந்தக் குடும்பம், கடைசி நேரத்தில் கொடுத்த புகாரின் பேரில் கைது! - அற்புதமான சிந்தனை! இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டார் இந்தச் சகோதரி!

சென்னை - மீனாட்சி... அலுவலகப் பணம் 3 லட்ச ரூபாய் களவாடப்படுகிறது! பழி வராகன் மீது விழுகிறது! கைது அரங்கேறுகிறது! 24 மணி நேரத்தில் பணத்தைக் கட்டச் சொல்லி எச்சரிக்கை வருகிறது!

- இப்படி சட்சட்டென ஸீன்களை மாற்றி, அசத்தலாக கதையை நகர்த்துகிறார்...

பிரமாதம்!

தன் கருத்தை அழகாக தெளிந்த குரலில் பதிவு செய்து, புதுத்திருப்பத்தை கச்சிதமாக, மாடர்னாக கையாண்ட மீனாட்சிதான் இந்த எபிசோட் இயக்குநர். வாழ்த்துக்கள்!

போலீஸ் ஜீப்பை, பின் தொடர்ந்து தன் கால் டாக்ஸியை விரட்டச் சொன்ன துர்காவை பதற்றம் பற்றிக் கொண்டது. 'கல்பனா ஒரு மாதிரி நடந்து கொண்டாலும், அவள் கணவர் வராகன் நல்ல மனுஷனாச்சே? எந்த ஒரு தப்பு தண்டாவுக்கும் போக மாட்டாரே... எதுக்காக இந்த அரெஸ்ட்?’

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஜீப் நிற்க, வராகனை உள்ளே அழைத்துப் போனார்கள். கால் டாக்ஸியை நிறுத்திப் பணம் தந்து கட் செய்த துர்கா, அன்வருக்கு போன் செய்தாள்...

''அக்கா, நீ சொன்னபடி நான் ஆஸ்பத்திரிக்கு வந்துட்டேன்...''

துர்கா !

''அங்க நான் பிறகு வரேன். முதல்ல நீ உனக்குத் தெரிஞ்ச நல்ல வக்கீல் யாரையாச்சும் கூட்டிக்கிட்டு நேரா 'ஜி 2’ போலீஸ் ஸ்டேஷனுக்கு வா. விவரமெல்லாம் அப்புறம் சொல்றேன்... சீக்கிரம்!''

அரை மணி நேரத்தில் வக்கீல் நண்பருடன் அன்வர் வர, ஸ்டேஷன் வாசலிலேயே காத்திருந்த துர்கா விவரம் சொன்னாள். மூவரும் உள்ளே நுழைந்தார்கள். துர்காவைப் பார்த்ததும் ''துர்கா...'' என்று பதற்றமாக ஓடி வந்தார் வராகன்.

''எதுக்காக அரெஸ்ட் பண்ணினாங்க!''

சொன்னார். வக்கீலுக்கு அந்தப் போலீஸ் அதிகாரிகளைத் தெரியும் என்பதால், அவர் பேசத் தொடங்கினார். துர்கா அருகில் வந்தாள்.

''டி.எஸ்.பி. ஜார்ஜ் நம்பர் இருக்கா?''

''தெரியுமா உங்களுக்கு?''

''நல்லா! துர்கானு சொல்லுங்க...!''

டயல் செய்து துர்காவிடம் தர, மல்லிகா வழக்கில் இவளைப் பாராட்டிய அந்த ஜார்ஜ் இணைப்பில் வர, தன்னை துர்கா மீண்டும் நினைவுபடுத்தி, விவரம் சொல்ல,

''நானே வர்றேன்மா!''

இருபது நிமிடங்களில் வந்துவிட்டார்.

''சார்கிட்ட நடந்ததை சொல்லுங்கண்ணே!''

''ஆபீஸ்ல சிஸ்டம் மூலமா சம்பள பட்டுவாடாவுக்கு ஏற்பாடு செஞ்சிட்டிருந்தேன். என் மனைவியோட தம்பிக்கு விபத்துனு தகவல் வந்தது. சட்டுனு கிளம்பிட்டேன். நான் செஞ்ச தப்பு, பாஸ்வேர்டை லாக் பண்ணாம புறப்பட்டதுதான். ஒப்படைச்சது சக ஊழியர் சங்கர்கிட்ட. திரும்பி வந்தா, மூணு லட்சத்தை யாரோ சாதுர்யமா அடிச்சிட்டாங்க. பழி என் மேல. 24 மணி நேரத்துல கட்டச் சொன்னாங்க. முடியல. போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்க!''

''ஏன்... எங்க யாருக்கும் தகவல் தரல?''

''கல்பனா ரகளை பண்ணுவா. நானே சமாளிச் சுக்கலாம்னு இருந்தேன். சேர்மன்கிட்ட அவகாசம் கூட கேட்டேன்மா. ஏற்கெனவே அவர் ஆசைப் பட்ட தப்பான காரியங்களுக்கு உதவாததால, என்னை அவருக்குப் பிடிக்காது. நேர்மையா இருக்கறதால ஆபீஸ்ல எதிரிகள் அதிகம். சந்தர்ப்பத்துக்கு காத்துக்கிட்டு இருந்தாங்க. கிடைச்சதும் அசிங்கப்படுத்திட்டாங்க!''

- வராகன் கண் கலங்கினார்.

''அட்வகேட் பெயில்ல எடுக்கட்டும். நான் ரெகமெண்ட் பண்றேன். பணத்தைக் கட்டி கேஸ் நடக்கவிடாம பாத்துக்கோங்க...'' என்றார் டி.எஸ்.பி.

துர்கா !

''சரி சார்!''

ஃபார்மலிட்டிகளை முடித்து வராகனை வெளியே கொண்டு வர பிற்பகல் ஒரு மணி ஆகிவிட்டது.

வக்கீலுக்கு நன்றி சொல்லி அனுப்பிய பிறகு...

''மூணு லட்சத்துக்கு நான் எங்கேம்மா போவேன்? கட்டலைனா, வேலையில நிலைக்க முடியாது!''

''சார்... பணத்தைக் கட்டலாம். இனி, அங்க வேலைக்கு போக வேண்டாம்!'' என்றான் அன்வர்.

''ஆமாண்ணே! எங்க சேர்மன்கிட்ட சொல்லி வேலைக்கு நான் ஏற்பாடு பண்றேன்!''

''சரிம்மா! ஆனந்த் ஆஸ்பத்திரியில... நீ போய்ப் பாரு!''

''நீங்க?''

''அங்கே கல்பனா இருப்பாளே... நான் வரல!''

''வாங்கண்ணே! அவங்க இருந்தா என்ன? நீங்களும் வாங்க!''

மூவரும் ஆஸ்பத்திரிக்கு வர, அன்வரும் வராகனும் வெளியிலேயே நிற்க, துர்கா அறைக்குள் நுழைய எத்தனிக்க, உள்ளிருந்த வந்த குரல்கள் காதில் விழுந்தன. ''பாருடா ஆனந்த்... காலையில வந்திருப்பா உன் பொண்டாட்டி. இன்னும் இங்கே வரல. அவளுக்கு திமிரு. நம்ம குடும்பத்தைவிட, ஊர் உலகத்துல உள்ளவங்க ஒசத்தி!''

கல்பனா, சுதா உள்ளே இருந்து விளாசிக் கொண்டிருக்க, துர்கா நுழைந்தாள்!

''ஊருக்கு உழைச்சு முடிச்சாச்சா?''

ஆனந்தே கொஞ்சம் கடுப்பில்தான் இருந்தான். முகத்தில் சிரிப்பில்லை. வராகன் உள்ளே நுழைய,

''என்னங்க... ஆபீஸுக்கு நீங்க போகலையா... துர்காவை எங்கே பார்த்தீங்க?''

வராகன் தாள முடியாமல் சகலத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டார். ''துர்காவும், அன்வரும் இல்லைனா... இப்ப கம்பிக்கு பின்னால இருப்பேன்!''

''உள்ள வா அன்வர்!''

- துர்கா அழைக்க, அவனும் நுழைய, சுதாவின் முகம் மாறியது.

''ஏன் இப்பிடி கவனக் குறைவா இருந்தீங்க? இப்போ பணத்துக்கு எங்கே போறது? உங்களுக்கு பொறுப்பே இல்லையா?'' என்று சிடுசிடுத்தாள் கல்பனா.

''ஆமாம் மாப்ளே... கல்பனாவை இப்படி ஒரு சிக்கல்ல மாட்டி விட்டுட்டீங்களே?''

- ராஜம் வேறு எண்ணெய் ஊற்ற... கடுப்பாகிவிட்டாள் துர்கா.

''நிறுத்துங்க கொஞ்சம். சிக்கிக்கிட்ட அண்ணன் நிலைகுலைஞ்சி நிக்கறார். ஆறுதலா பேசாம அவர் மேல குற்றம் சாட்டறீங்க?''

''தலையெழுத்து துர்கா... இவளைக் கட்டிக்கிட்டு நான் படற சங்கடம் யாருக்குத் தெரியும்?''

துர்கா !

''அண்ணே... பணத்துக்கு ஏற்பாடு செய்யலாம். அன்வர்... வட்டிக்கு உடனே யாராவது தருவாங்களா?''

''ஆள் இருக்குக்கா... ஆனா, வட்டி கொஞ்சம் கூட ஆகும்!''

''அதை இப்பப் பாக்க முடியாது. நீ உடனே ஏற்பாடு செய்...''

''சரிக்கா!''

- அவன் புறப்பட, சுதா நைஸாக நழுவி வெளியே வந்தாள்.

''அன்வர்... நில்லு!''

''என்ன வேணும் ஒனக்கு? துர்கா அக்காவை புரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா நடக்கலைனா, உங்க குடும்பத்துல சத்தியமா யாரும் உருப்பட மாட்டீங்க. ச்சே... அசிங்கமா இருக்கு. எனக்கு பணம் அரேஞ்ச் பண்ணணும். உங்கிட்ட பேச நேரமில்ல. ஆள விடு!''

- வேகமாக வெளியேறினான். கல்பனாவுடன் அம்மா வெளியே வர, துர்கா மட்டும் ஆனந் துடன்!

''ஸாரிப்பா! உங்ககூட இருக்க முடியல... அண்ணனுக்கு வேண்டியதை ஏற்பாடு செஞ்சுட்டு வந்துடறேன். நீங்ககூட எங்கிட்ட கோவப்பட்டீங்களா?''

''ஸாரிடி! மனசுல ஒரு தவிப்பு இருந்தது. இப்ப புரிஞ்சுக்கிட்டேன். ஸாரி துர்கா. மும்பை போனியே... எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?''

''பிரமாதமா செஞ்சேன். நான் அண்ணனைக் கூட்டிட்டு சேர்மனைப் போய் பார்க்கறேன்!''

வெளியே நின்றிருந்த வராகனிடம் வந்தாள்.

''என் கூட வாங்கண்ணே!''

''சரி துர்கா!''

''என்னங்க எங்கே போறீங்க?'' - என்றாள் கல்பனா.

''சுடுகாட்டுக்கு! உன்னைக் கட்டிக்கிட்ட எனக்கு கடைசில அமைதி தரப் போற இடம் அதுதான். இவ ஒருத்தி உங்க வீட்டு மருமகளா வரலைனா, உங்க குடும்பம் தெருவுல நின்னிருக்கும். நீ வாம்மா..!''

ராஜமும், கல்பனாவும் உள்ளே வர, ஆனந்த் அருகில் இருந்த சுதா, ''அம்மா! நாளுக்கு நாள் துர்கா கை ஓங்குது நம்ம குடும்பத்துல...'' என்றாள்.

ஆனந்த் கடுப்பானான்.

''என்னை வெச்சுக்கிட்டே துர்காவை குறை சொல்ல உங்களுக்கெல்லாம் வெக்கமில்ல? எனக்கென்னனு அவ போயிருந்தா, உன் புருஷன் இப்ப ஜெயில்ல. எல்லாரையும் தன் மனுஷங்களா அவ நேசிக்கறா. பாரபட்சமே இல்லை. இதைப் புரிஞ்சுக்காம எப்பவும் மாமியார், நாத்தனார்களா நடந்தாத்தான் பெருமைனு நீங்க நினைச்சா, நடத்துங்க. இப்போ எல்லாரும் தயவு செஞ்சு கிளம்புங்க. வீட்டுக்குப் போய், வயிறு முட்ட சாப்பிட்டு, துர்கா தலையை உருட்டுங்க!''

- கண்களை வெறுப்புடன் மூடிக்கொண்டான்!

அதேநேரம் வராகனை சேர்மனிடம் அழைத்து வந்தாள் துர்கா. சகலமும் சொன்னாள்.

''இவர் திறமைசாலி, நேர்மையானவர், நல்லவர் சார். இவருக்கு ஒரு வேலைக்கு நீங்கதான் ஏற்பாடு செய்யணும்...''

வராகனின் பயோடேட்டாவைப் பார்த்துவிட்டு, அவர் டிபார்ட்மென்ட்டுகளில் பேசினார்.

''ஓகே! ஸ்டோர்ஸ்ல ஒரு வேகன்ஸி இருக்கு... நாளைக்கே நீங்க அதுல சேரலாம். உங்க பழைய கம்பெனியைவிட அதிக சம்பளம்... சந்தோஷமா?!''

வெளியே வந்த வராகன், அழுதேவிட்டார்.

''துர்கா... நீ தெய்வம் போல!''

'ஹைய்யோ விடுங்கண்ணே. அந்தப் பணத்தைக் கட்டிட்டு, ரிலீவ் ஆயிடுங்க உடனே. நாக்கை புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்விகள கேட்டுட்டு வாங்க...''

''அந்தப் பணத்தை நான் எப்படியாவது திருப்பிக் கொடுத்திடறேன் துர்கா'' என்றவரிடம்இருந்து ஒரு புன்னகையுடன் விடைபெற்று நேராக அக்கா வீட்டுக்கு வந்து அவளை விசாரித்தாள்.

''சர்ஜரி அடுத்த வாரம்தானே அத்தான்... எவ்வளவு ஆகுமாம்..?!''

''குறைஞ்சபட்சம் ரெண்டு லட்சமாகுமாம். ஒரு ரூபா புரட்டிட்டேன் துர்கா...''

''மீதிக்கு யார்கிட்டேயாவது கடன் கேக்கலாம். தைரியமா இருங்க!''

''மாப்பிள்ளைக்கு இப்ப எப்படி இருக்கு?''

''மாவுக்கட்டு போட்டிருக்காங்க. ஒரு வாரம் ஆஸ்பத்திரில, அப்புறம் மூணு வாரம் வீட்ல ரெஸ்ட் எடுக்கணும்...''

''உனக்குத்தான் எத்தனை பிரச்னைகள் துர்கா?''

''அத்தான்! பிரச்னைகள் இல்லைனா, வாழ்க்கையில சுவாரஸ்யமே இல்ல. கமிட்மென்ட் இருந்தாத்தான் உழைக்கத் தோணும். கடன் வாங்கியாவது மத்தவங்களுக்கு உதவும்போது ஒரு மனத் திருப்தி இருக்கே... மனுஷனா பொறந்த சுகமே அப்பத்தான் புரியுது!''

அன்வரின் போன் வந்தது!

''அக்கா... பணம் சாயங்காலம் ஆறு மணிக்குக் கிடைக்கும். ஆனா, புரோ நோட் தரணும்!''

''நான் எங்கே வேணும்னாலும் கையெழுத்து போடறேன். நீ ஃப்ரியா இருந்தா, ஆஸ்பத்திரிக்கு வா!''

துர்கா ஆஸ்பத்திரிக்கு வர, ஐந்து மணியாகி விட்டது. ஆனந்தை செக் செய்து கொண்டிருந்தார் நர்ஸ்.

''எல்லாரையும் விரட்டி விட்டுட்டேன் துர்கா. நீ சாப்பிட்டியா?''

''நேத்திக்கு ராத்திரி மும்பையில சாப்பிட்டது. அதுக்குப் பிறகு சாப்பிட நேரமில்ல!''

''என்ன துர்கா நீ... தாங்குமா ஒடம்பு?''

''அது தெரிஞ்சுதான் டிபன் பொட்டலத்தோட வந்திருக்கேன். அக்கா சாப்பிடு இப்பவே!''

- சொன்னபடி அன்வர் வர, ஆனந்துக்கு ஆச்சர்யம்!

''என்ன துர்கா இது?''

''எங்கம்மா பெறாம, ஒரு தம்பி எனக்குக் கிடைச்சது நான் செஞ்ச புண்ணியம்! பணத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டான். என் வலது கையே இவன்தான் ஆனந்த்!''

''நன்றி, தம்பி!''

''எனக்குத் தம்பியா இருக்கற அன்வர், நம்ம குடும்பத்துக்கு உறவாகப் போறான்!''

''அக்கா!''

''இரு அன்வர்... சுதாவோட கல்யாண முயற்சி நடக்கற இந்த நேரத்துல... இதை உடைச்சுத்தான் ஆகணும்!''

''துர்கா! நீ என்ன சொல்ற?''

ஆனந்திடம் ஒன்று விடாமல் எல்லாம் சொன்னாள் துர்கா. ஆனந்த் ஸ்தம்பித்தான்!

''மதம் பாக்காதீங்க ஆனந்த். இவனைவிட ஒரு நல்ல பையன் சத்தியமா சுதாவுக்கு கிடைக்க மாட்டான். நம்ம குடும்பத்து மேல எனக்கு அக்கறை இல்லையா?''

''அப்படி நான் சொல்வேனா துர்கா..? சுதா வைப் பற்றி முடிவெடுக்கற உரிமை உனக்கும் எனக்கும் இருக்கா?''

''அக்கா... நான் வெளியில இருக்கேன்!''

அன்வர் போனதும்,

''உங்களுக்கு சம்மதமா ஆனந்த்?''

''நீ செஞ்சா சரியா இருக்கும். அப்பாவைக்கூட சம்மதிக்க வெச்சிடலாம். அம்மா கண்டிப்பா எதிர்ப்பாங்க. கல்பனா ஊதிப் பெரி சாக்குவா!''

''வாழப் போறது சுதாதானே?! அவ விருப்பம் இங்கே முக்கியமில்லையா?''

''அது நியாயம்தான்!''

''மாமா, வேற ஒரு வரனைக் கொண்டு வந்துட்ட காரணமா, இதைப் பேச வேண்டிய நெருக்கடி வந்தாச்சு ஆனந்த். நீங்க டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் இதை உடைச்சுட வேண்டியது

தான்.''

''இவங்க குடும்பத்தைப் பத்தி விசாரிக்க வேண்டாமா? அவங்க சம்மதம் வேண்டாமா?''

''அதையும் பேசலாம். ஆனந்த். போராடித்தான் சில நல்ல சங்கதிகளை அடைய முடியும்னா, போராடறதுல தப்பே இல்ல!''

''துர்கா... நீ மும்பை போனத பத்தி முழுசா எதையும் சொல்லலியே...?''

''அது பெரிய புயல். இப்ப வேண்டாம். கால் வலியோட, மனசும் சேர்ந்து வலிச்சா, தாங்காது!''

''உன் வேலைகளை முடிச்சிட்டு வா. ராத்திரி என் கூட ஆஸ்பத்திரில நீ இரு துர்கா!''

- பாவமாக இருந்தது!

''குழந்தை அஞ்சு இருக்காளே ஆனந்த்?''

''அவளை அப்பா பார்த்துப்பார். நீ இருந்தா எனக்கு வலியே தெரியாது துர்கா. ப்ளீஸ்!''

''சரி இருக்கேன்! வீட்டுக்குப் போய் குழந்தையைப் பார்த்துட்டு, மாமாகிட்டயும் சொல்லிட்டு வந்திடறேன்!''

''சரி... நீ புறப்படு துர்கா!''

ஆறு மணிக்கு அன்வருடன் போனாள் துர்கா. புரோ நோட்டில் கையெழுத்திட்டு, அன்வர் விட்னஸ் போட, முதல் வட்டியைப் பிடித்துக் கொண்டு 2 லட்சத்து தொண்ணூறாயிரம் கைக்கு வந்தது!

''அன்வர்... வராகன் அண்ணனுக்கு நான் தகவல் சொல்றேன். நாளைக்கு பணத்தைக் கட்டிடலாம். அவர்கூட ஆபீஸுக்கு நீயும் நானும் போயாகணும். அப்படியே அவங்க சேர்மனை நாலு கேள்வி கேக்கலாம்...''

''அதுமட்டுமில்லக்கா... அந்தப் பணத்தை அடிச்ச நிஜமான திருடனை பிடிக்கணுமில்லையா?''

''நிச்சயமா. டி.எஸ்.பி ஜார்ஜ் மூலமா இதுல சில வேலைகளைச் செய்யணும். அண்ணன் சந்தேகப்படற ஆட்களை கண்காணிக்கணும் சும்மாவா... மூணு லட்சம்!

''விடுக்கா... நமக்கு நிறைய ஆட்கள் இருக்காங்க. ஒரு வாரத்துல புடிச்சிடலாம்!''

''பணத்தை நீ பத்திரமா வெச்சுக்கறியா?''

''சரிக்கா!''

வராகனுக்கு தகவல் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். சுதா மூலம் நடேசன் சகல தகவல்களையும் அறிந்திருந்தார். கல்பனா இங்கேதான் இருந்தாள். நடேசன் மனைவி, மகள்களை விளாசிக் கொண்டிருந்தார்.

''மாப்பிள்ளைக்கு ஒரு கஷ்டம்னு வந்தப்ப, நீ பக்கத்துல இருக்கணும். துர்கா உதவறா. நீ புறப்படு கல்பனா...''

''நான் போனா அவர் முகம் கொடுத்துப் பேச மாட்டார். என் மாமியாரைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல...''

''உங்கம்மா மாதிரி ஒரு மோசமான மாமியாரையே தாங்கிட்டு துர்கா வாழலியா..? பேசறியே!''

''மாமா... மூணு லட்சம் பணத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டேன். அண்ணனுக்கு எங்க கம்பெனியில வேலைக்கும் ஏற்பாடு செஞ்சாச்சு. ராத்திரி ஆஸ்பத்திரியில ஆனந்த் கூட நான் இருந்துக் கறேன்!''

''நீ போம்மா... குழந்தையை நான் பாத்துக்கறேன்!''

உள்ளே வந்து குழந்தைக்கு உணவு கொடுத்து, அனுமதி பெற்று துர்கா நிமிர, சுதா நுழைந்தாள்!

''அண்ணி! அன்வர் சங்கதி...?''

''கவலைப்படாதே! உங்கண்ணன் வந்ததும் பொதுவுல பேசி ஏற்பாடு பண்ணலாம். இப்ப எதையும் பேச வேண்டாம்!''

''சரி அண்ணி!''

''மாமா நான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பறேன்!''

வாசலில் துர்கா இறங்கியபோது இரவு மணி 8. அப்போது கூரியர் வந்தது... ஆனந்த் பெயருக்கு!

''ஆனந்துக்கு கூரியர்ல லெட்டர் அனுப்புறது யாரு... அதுவும் இந்த நேரத்துல வந்திருக்கே?''

''காலையிலயே வந்தேன். நீங்கள்லாம் வர்றதுக்கு ராத்திரியாகும்னு சொன்னாங்க... அதான் வந்தேன்'' என்றபடியே கொடுத்தார் கூரியர் பாய்.

கவரைப் பிரித்து படிக்கப் படிக்க துர்காவின் முகம் மாறிக் கொண்டே வந்தது.

''என்னம்மா லெட்டர்ல?''

நடேசன் வாங்கிப் பிரித்தார். படித்தார்!

''என்னம்மா துர்கா இது?'' - அவரது கேள்வியில் பலமான அதிர்ச்சி இருந்தது!

என்ன கடிதம் அது?

- தொடருங்கள் தோழிகளே...

ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை.

பிரஷர் குக்கர் பரிசு!

துர்கா !
துர்கா !

 

சென்னை - மீனாட்சி, இல்லத்தரசி. ''அவள் விகடன் முதல் இதழ் தொடங்கி, இன்னிவரைக்கும் தவறாம படிச்சிட்டு வர்றேன். என்னோட படைப்புகள் நிறைய தடவை அவள் விகடன்ல அச்சானபோது கிடைத்த சந்தோஷத்தைவிட பல மடங்கு 'துர்கா'வோட மெகா சீரியலோட எபிசோட் இயக்குநரா ஆனதுல கிடைச்சிருக்கு'' என்று வாய் கொள்ளாத சிரிப்புடன் சொன்னவர், '' 'இயக்குநர்' அறிவிப்பை பார்த்த நிமிஷமே முடிவு பண்ணிக்கிட்டேன்... 'மீனாட்சி... கண்டிப்பா நாம இயக்குநர் ஆகுறோம்’னு! அதனால புக் வாங்கினதும் முதல்ல துர்கா கதையைத்தான் படிப்பேன். இந்தத் தடவ கொஞ்சம் வித்தியாசமா... ஆனா, பிராக்டிகலா இருக்கற மாதிரி கதை சொல்லணும்னு சொன்னேன்... ஜெயிச்சேன். ரொம்ப சந்தோஷம்'' என்றவரின் சிரிப்பில் குதூகலம் கொப்பளித்தது.

இவருக்கு பிரஷர் குக்கர் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் குரலிலேயே அதை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

 

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு