Published:Updated:

``வார்த்தைகள் கடத்தாத வலியை மெளனம் கடத்தும்..." நாடகக் கலைஞன் முருகபூபதி

``வார்த்தைகள் கடத்தாத வலியை மெளனம் கடத்தும்..."  நாடகக் கலைஞன் முருகபூபதி
``வார்த்தைகள் கடத்தாத வலியை மெளனம் கடத்தும்..." நாடகக் கலைஞன் முருகபூபதி

`நெருப்போடு பேச அழைக்கிறேன்

நாவை அறுத்த ஸ்திரிமுக நடிகன்...

துடிக்கும் அறுபட்ட நாவிலிருந்து

தெறித்துப் பரவும் உதிரம் அதிர வருகிறேன்... 

ரத்தத்தில் மிதந்துவரும் ஒப்பனைக்குரல்கள் 

நரம்புகளில் தாவி, பூசிப் பூசி எரியும் சுடரிடம் பேசிவருகிறேன்...'

இந்த வசனத்துடன்தான் ‘கூந்தல் நகரம்’ நாடகம் தொடங்கும். நாடகக் கலைஞர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வேலை செய்ததையும், நாடகக் கலையின் வரலாற்றையும் பேசும் நாடகம் இது. தன்னுடைய கலைக்காக நாவையே அறுத்து எறிந்த கலைஞன் பாடும் பாடல்தான் நாம் மேலே படித்தது. 

கை அசைவுகளால் கண் முன்னே வரலாற்றைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்,  நாடகக் கலைக்கான மத்திய அரசின் ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற முருகபூபதி. இந்தியா முழுவதும் பல இடங்களில் நவீன நாடகங்களை நிகழ்த்திவருகிறார். நாடகக் கலையின் மீது ஆர்வம்கொண்ட பலருக்கும் இவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.  உணர்வுபூர்வமாகப் பேசும் அவருடன், ஒரு மாலை நேரத் தேநீர் சந்திப்பு...  

"நாடகத்துக்கும் உங்களுக்குமான பந்தம் எப்போது தொடங்கியது?" 

``சைக்கிளில் சுற்றும் களக்கூத்தாடிகள், ஊர் திருவிழாவுக்கு வருவாங்க. திருவிழா முடியுற வரைக்கும் சைக்கிள்ல இருந்து இறங்காம, இடைவிடாம சுற்றிக்கிட்டே இருப்பாங்க. சைக்கிள் ஓட்டிக்கிட்டே குளிப்பாங்க, சாப்பிடவும் செய்வாங்க. மாலை நேரங்கள்ல பல நிகழ்ச்சிகள் நடக்கும். மக்களின் அன்றாட வாழ்க்கையை வெச்சு நாடகம் போடுவாங்க. திருவிழாவுல ரொம்ப ஃபேமஸ் சின்னமன்னூர் சந்திராதான். கூந்தல் முடியில் உரலைக் கட்டிக்கிட்டு சுற்றுவாங்க. பார்க்கவே பிரமிப்பா இருக்கும். சங்க இலக்கியத்துல ‘உரல் கூத்து’ இருக்கிறதையே அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த இடத்துலதான் கலை மீதான ஆர்வம் வந்தது. ஒவ்வொரு வருஷமும் திருவிழா முடிஞ்சதும், அவங்க செய்த  சாகசங்களை நாங்களே செய்துபார்ப்போம். 

ரெண்டாவது நிகழ்வு, எங்க வீட்டையொட்டிய பொட்டல்ல வருஷத்துக்கு ரெண்டு சர்க்கஸ் கம்பெனிகள் வரும். சர்க்கஸ் பெண்கள் எங்க தெருவுல இருக்கும் ஒரு வீட்டுலதான் தங்குவாங்க. தினமும் காலை 5 மணிக்கு ரிகர்சல் நடக்கும்போது, நாங்களும் சேர்ந்துக்குவோம். கோடை நேரத்துல வெளியே கிணற்றைச் சுற்றித்தான் படுத்திருப்பாங்க. நாங்க சின்னப் பசங்கங்கிறதால ரொம்பப் பாசமா கதை சொல்வாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மொழியில் கதை சொல்வாங்க. தமிழ்ல கதை கேட்டது ரொம்பக் குறைவுதான்.

மூன்றாம் நிகழ்வு, சர்க்கஸ் முடிஞ்சு கிளம்பினப்போ, கோமாளி தன்னோட `மவுத் ஆர்கனை'  விட்டுட்டுப் போயிட்டார். கைமாறி கைமாறி ரொம்ப வருஷங்களா எங்க தெருவையே அது சுற்றி வந்துச்சு. அந்த மவுத் ஆர்கன் இசைக்கு ஏத்த மாதிரி நடிச்சுப் பழகுவோம். பொதுவா, நிலம்தான் நமக்கான களம். ஆனா, அந்தரத்தில் மிதக்கும் ‘அந்தர நிலம்’ ஒண்ணைக் கண்டுபிடிச்சதே சர்க்கஸ் பெண்கள்தான். அந்த நிலத்தைப் பெண்களால் மட்டுமே கையாள முடியும். நிலம்கிறது வெறும் மண்ணு மட்டும் கிடையாதுங்கிற விஷயத்தைச் சொன்னது, சர்க்கஸ் தேவதைகள்தான். நாடகம் மீதான ஈர்ப்புக்கு சர்க்கஸ்தான் ரொம்ப முக்கியமான காரணம்.''

“சர்க்கஸ், தெருக்கூத்துனு நிறைய கலைகள் அழிஞ்சுக்கிட்டே வருதே?”

``சங்க இலக்கியம் தொட்டு, கலைக்கான பதிவுகள் இருந்துட்டுதான் இருக்கு. கலைகளுக்கு ஆதரவா அரசாங்கம்தான் இருக்கணும். ஆனா, அரசோ... மீடியாவோ வேற விஷயங்கள்ல மயங்குது. அதனால் நிகழ்த்துக் கலையை மறந்துட்டாங்க. முத்தமிழில் ஒண்ணு நாடகம். ஆனா, நாடகம் இருக்கவேண்டிய இடத்தை சினிமா ஆக்கிரமிச்சிடுச்சு. கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கைமுறை, அவர்களோட கலை, நடிப்பு, பற்றிப் பேசக்கூட யாரும் தயாரா இல்லை. பள்ளிக் கல்வியோடு நாடகமும் படிப்பா சேர்ந்தா, படிப்போடு சேர்த்து பண்பாட்டையும் மாணவர்கள் கத்துப்பாங்க. ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் `கதை சொல்லியா' ஒரு நாடகக்காரன் இருந்தால், மாணவர்களோட பிரச்னையைத் தீர்த்துவெச்சிருவான்; சமூகத்தின் மீதான பார்வையை மாற்றுவான்;  மாணவனுக்குள்ள இருக்கும் திறனை மேம்படுத்துவான். இதை அரசாங்கம்தான் முன்னெடுக்கணும். நடிப்பின் புனைவு நாடக நிலத்தில் முளைத்தெழுந்து விந்தை தரும் கலை. அது வாழும் நொடிகளுக்குள் இருக்கும் உயிர்ப்பான ரேகைகளை சுமந்து வரும் கலை. பறவை, விலங்கு எல்லைகள் கடந்த பலதேசத்து மனிதர்கள் எல்லோருக்கும், இடமளிக்கும் சர்க்கஸ் கூடாரம், எதிர்கால உலகின் நம், அகதி வாழ்வை முன்ணுணர்ந்துவிட்ட கலை நிலம் என்றே சொல்லுவேன்.

“நாடகம் என்பது வசனங்களால் நிறைந்த கலையா?”

``நாடகத்தை வசனம் சார்ந்து பார்க்கிறது ஒரு பார்வைதான். வசனமே இல்லாமல்கூட நாடகம் நிகழ்த்த முடியும். வார்த்தைகளைத் தாண்டி, உடல்மொழியையும் நிறத்தையும் கண்டுபிடிக்கிறதும் நிகழ்த்துறதும்தான் நாடகக் கலை. சில சமயங்களில் வார்த்தைகளால் கடத்த முடியாத வலியை மெளனம் கடத்தும். மனிதனோட உண்மையான முகத்தைக் கண்டுபிடிக்க, நிச்சயம் நாடகத்தால மட்டும்தான் முடியும். நடிகனோட உடல், பல்லுயிரியா இருக்கணும். மரமா, பூச்சியா, குரங்கா மாறணும். பல உயிர்களை ஒரு உடம்புக்குள்ள வெச்சிருக்கிறவன்தான் நடிகன்.''

“நாடகக் கலையை வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?”

``ரொம்பக் குறைவான நபர்கள்தான் நாடகத் துறையில் வேலை செய்றாங்க. நாடகத் துறைக்கு வரவோ, கலையை ரசிக்கவோகூட யாருக்குமே விருப்பம் இல்லைங்கிறதுதான் உண்மை. ஆனா, அதையும் தாண்டி நாடகம் இருந்துட்டுத்தான் இருக்கும். நாடகக் கலை ஒருபோதும் அழியாது. நாடகத் துறையைப் பயன்படுத்தி சினிமாவுக்குப் போனவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, புகழோட உச்சியிலயும் பணத்தோட சுழற்சியிலும் சிக்கிக் காணாமப் போயிடுறாங்க. பண்பாடு சார்ந்த நடிகர்கள் வந்தா மட்டும்தான் இந்தக் கலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.''

“ ‘மணல்மகுடி’ குழு எப்படி உருவானது?”

``ஆரம்பத்தில் பெயர் வைக்காமதான் நாடகம் நடத்திக்கிட்டிருந்தோம். தனக்கான பெயரைத் தானே உருவாக்கிக்கட்டும்னு விட்டுட்டேன். 2000-த்துல `தேரிக்காடு'ன்னு ஒரு பகுதியில் ‘கூந்தல் நகரம்’ நாடகத்தைப் போட்டோம். அந்த ஏரியா முழுவதுமே மணல் பாங்கான மடிப்பு மடிப்பான நிலம். அந்த இடத்துலதான் ‘மணல்மகுடி’ பெயர் உருவாச்சு. `மணல்மகுடி'ன்னா பூமியின் இசைனு அர்த்தம். ஒவ்வொரு நாடகத்துக்கும் குரல், இசை, நிறம் இருக்குன்னு கண்டுபிடிச்சது அங்கேதான். பெரியார் பிறந்த பூமிங்கிறதால் எங்க நாடகத்துக்குள்ள ஒருபோதும் மதவாதம் நுழைஞ்சது கிடையாது.''

“ஒரு நாடகத்தின் முன்தயாரிப்பு வேலைகள் எப்படி இருக்கும்?”

``சும்மா ஸ்க்ரிப்ட் எழுதினோம், படிச்சோம்னு நாடகம் பண்ணிட முடியாது. ‘கோமாளி’ நாடகத்துக்காக, சிற்பம், ஓவியக் கலைகள், தெருக்கூத்துன்னு நிகழ்த்துக் கலைகளில் கோமாளிக் கதாபாத்திரம் எப்படி இருந்ததுன்னு முழுசா தெரிஞ்சுக்கவே, ரெண்டு வருஷங்கள் என் குழுவோடு டிராவல் பண்ணேன். அந்தப் பயணம்தான், ஒவ்வொரு நடிகனையும் அந்த கேரக்டருக்குள்ள கொண்டுபோகும். அதற்குப் பிறகுதான் ரிகர்சல். இறுதியா களத்தில் இறங்கி நடிக்கும்போது உயிரோட்டமா இருக்கும்.''

 " `மணல்மகுடி'  நாடகத்தைத் தொடர்ந்து பிற நாடகங்கள் பற்றிச் சொல்லுங்கள்.”

`` ‘மாயக் கோமாளிகளின் ஜாலக் கண்ணாடிகள்’தான் கடைசியா போட்ட நாடகம். அதற்கு முன்னாடி ‘நீர் நாடோடிகள்’ நிகழ்த்தினோம். முழுக்கவே பி.எஸ்.ஜி கல்லூரி மாணவிகளை முன்னிலைப் படுத்தி நடிச்ச நாடகம் இது. கடல் கொண்டுபோன நகரமும் பண்பாடும் பற்றியது. சென்னை வெள்ளத்தை மையமா கொண்டு இந்த நாடகத்தை இயற்றினோம். ‘‘மிருக விதூஷகம்’, ‘குகைமரவாசிகள்’னு நிறைய நாடகங்கள் இந்தியா முழுவதும் நிகழ்த்திட்டோம். தவிர, ‘ஆண் பிரசவித்தக் கதை’னு ஆணுக்குப் பிரசவம் நடந்தா என்ன ஆகும்னு ஒரு நாடகத்தை கிராமத்தில் போட்டோம். நாடகக் கலைஞனோட வேலை, வெறும் நாடகம் போடுவது மட்டுமல்ல; நம்முடைய வரலாற்றையும், பண்பாட்டையும், சமூகப் பிரச்னைகளையும் திரும்பத் திரும்பப் பேசிக்கிட்டே இருக்கணும்.''

“நாடக நிலத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகள்?”

``நாடக நிலத்துக்குள்ள வந்துட்டாலே, பார்வையாளர்களின்  கண்களில் தளும்பும் கண்ணீர்தான் மறக்க முடியாத விஷயமா இருக்கும். பெண்கள் பற்றியான ‘சூர்ப்பணங்கு’ நாடகத்துக்கு, பெண் வேஷத்தில் ஆண்களே நடிச்சாங்க. அந்த நாடகம் முடிஞ்சதும், பல மாணவிகள் களத்திலேயே விழுந்து கும்பிட்டாங்க. ‘இந்த நாடகத்துல எங்களைப் பார்த்தோம். பெண்களுக்கான முழு சுதந்திரத்தையும் பார்த்தோம்’னு விழுந்து வணங்கினாங்க. குறிப்பா, ஒரு பெண் போலீஸ், மரத்தைத் தழுவி அழுதுக்கிட்டிருந்தாங்க. ‘எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. என் சுதந்திரத்துல நான் இருக்கேன்’னு அழுதுக்கிட்டே மரத்தைக் கட்டிப்பிடித்து பாம்பு மாதிரி நெளிஞ்சாங்க. நாடகம்,சாதாரணமா யாரையும் கடந்துபோய்விடாது; பார்வையாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.''

“உங்க நாடகங்களைப் புரிந்துகொள்வது சிரமமாக இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறதே?”

``முதல் பார்வையிலேயே நாடகங்கள் புரிஞ்சிடணும்னு அவசியம் இல்லை. இந்த வாழ்க்கையைப் புரிஞ்சிக்க முடியுதா? அது மாதிரிதான். ஆனா, உணர முடியும். நாடகத்தை எப்பவும் மேலோட்டமா பார்க்கக் கூடாது. எடுத்துக்காட்டா,  பெளத்தம், சமணம் எல்லாம் வாழ்வுமுறையைச்  சார்ந்தவை. அது மாதிரிதான் தியேட்டரும் பயிற்சியும். பார்க்கப் பார்க்கத்தான் புரியும். எந்த ஒரு விஷயத்தையும் தேட ஆரம்பிக்கும்போதும் அதன் புரிதல் விளங்கும். நடிக்கும் நடிகனின் இசை, வார்த்தை, சொல்லாடல், உடல்மொழி வழியாகப் புரிந்துகொள்ள முடியும். முகபாவனைகள்தான் நடிப்புனு பேசுவோம். அதனால் பல நாடகங்களில் முகத்தைத் துணியால் மூடிக்கிட்டு  நடிச்சிருக்கோம். அப்போதான் நடிகனின் ரத்தம், சதை, எலும்புகளும் நடிப்பதை உணர முடியும். கவிதையைத் திரும்பத் திரும்பப் படிக்கிற மாதிரிதான் நாடகமும். பார்த்துப் பழகினாத்தான் சாத்தியப்படும்.''

“மணல்மகுடியின் நாடகங்களில் வித்தியாசமான கோமாளிகள் வருகிறார்கள்... எப்படி அவர்களை வடிவமைக்கிறீர்கள்?”

`` ‘கோமாளி’, `பஃபூன்', `கட்டியங்காரன்', ‘சூத்திரதாரி’னு கோமாளிக்கு பல பெயர்கள்  இருக்கு. கோயில் சிற்பங்கள்ல தொடங்கி எழுத்து வரைக்கும் கோமாளி இருக்கான். வரலாற்று நாடகத்தில்கூட கோமாளி மட்டும் நிகழ்காலத்தில் வாழ்ந்துகிட்டிருப்பான். ராஜா காலத்துக் கதையில், இன்றைய அரிசி விலையில் இருந்து பிரதமரின் செயல்பாடுகள் வரை எல்லாத்தையும் விவாதிப்பான். பார்க்கிறவங்க அவனைப் பைத்தியமா பார்ப்பாங்க. ஆனா, அவன் மட்டும்தான் புத்திசாலி. காலமற்ற காலத்துல அகாலத்தில் வாழ்கிறவன். இந்தியக் கலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட காலமற்ற மனிதன் கோமாளி. இவனுக்கு உறவோ, காதலோ கிடையாது. மக்களோட அசிங்கத்தையும், கோபத்தையும், வலியையும் சுமந்துச் சுற்றும் சமகால மக்களின் குரல்தான் கோமாளி. நிகழ்த்துக் கலைகளில் மிகவும் முக்கியமானவன்.''

“வித்தியாசமான இசைக்கருவிகளை உபயோகிக்கிறீர்களே எதற்காக?”

``சங்க காலத்திலிருந்தே நமக்குத் தெரிந்த பல இசைக்கருவிகளைப் பயன்படுத்தியாச்சு. புதுசா ஒரு இசையையும் சத்தத்தையும் பார்வையாளர்களுக்குக் கொடுத்தா மட்டும்தான், அவங்களை வேற இடத்துக்கு நகர்த்த முடியும். அதனால் மற்ற நாடுகளில் இருக்கும் பழங்குடி இன மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளை எங்களுடைய நாடகத்தில் பயன்படுத்துறோம். இசைக்கருவிகளைத் தேடி நான் எங்கேயும் போகலை. அதுவா என் கைக்கு வந்துச்சு. இந்தியாவைத் தாண்டி எங்கேயும் போனது கிடையாது. ஆனா, பல நாட்டு இசைக்கருவிகளை என் நாடகத்தில் பயன்படுத்துறேன். ''

“நவீன நாடகம், சினிமாவிலிருந்து எப்படி வேறுபடுகிறது?”

``நாடகம்கிறது நொடி நேரத்தில் பிறந்து மறையும் நடிப்பு. ஆனா சினிமா, பதிவுசெய்யப்பட்ட படம். டிஜிட்டலில் பதியப்பட்ட ஒன்றைத் திரையில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவத்தைவிட, நடிகன் வீதியில் நடிக்கும் பொழுதுகளை நேரில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் மிகப்பெரியது. நாடகத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போதுதான் இது சாத்தியமாகும். உலகளவில் பல இயக்குநர்கள் நாடகத்தை மதிச்சு வணங்குறாங்க. ஆனா, இந்தியாவுல எத்தனை இயக்குநர்கள் நாடகத்தைப் பார்க்க வர்றாங்க? நம்ம சினிமா இயக்குநர்கள், நாடக நடிகர்களைப் பயன்படுத்திக்கிறாங்க; ஆனா, நாடகத்தை மறந்துடுறாங்க. தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வலிமை நாடகத்துக்கும் நிகழ்த்துக் கலைகளுக்கும் உண்டு. நாடக நடிப்பு உடல் ஊடக பயன்பாட்டுக்கு மட்டுமல்ல அது நாடக நிலத்தில் கலையின் தானியங்களை பிரசவிப்பதற்காக இப்பூமிக்கு வந்த அதிசயப் பறவைகளே நாடகக் கலைஞர்கள்.