Published:Updated:

சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!

சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!

பிரீமியம் ஸ்டோரி
சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!

விசித்திரப் பந்தயம்!

##~##

பெரிய செல்வந்தரான ஷேக் இறந்ததும், அவருடைய மகன்கள் இருவரும் தந்தையின் உயிலைத் தேடி எடுத்தார்கள். அவர்களின் தந்தை, ஒரு விசித்திர மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர். உயிலும் விநோதமாக இருந்தது.

'இருவரும், அவரவர் ஒட்டகங்களில் தலை நகருக்குச் செல்ல வேண்டும். யாருடைய ஒட்டகம் கடைசியாக தலைநகரை அடைகிறதோ, அவருக்குத்தான் சொத்து’ என்பதே உயிலின் வாசகம்.

மகன்கள் இருவரும் தங்களது ஒட்டகங்களில் புறப்பட்டனர். தலைநகரை நெருங்கியதும், ஒட்டகங்களின் மீது இருந்தபடியே சுற்றிச் சுற்றி வந்தார்கள். இருவருக்கும் முதலில் செல்ல மனமில்லை. மிகவும் களைத்துப்போய், மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது, அந்த வழியாக ஒரு முதியவர் வந்தார். விஷயம் அறிந்த அவர், ஓர் ஆலோசனை கூறினார். உடனே இருவரும் ஒட்டகங்களில் ஏறி, தலைநகரை நோக்கி விரைந்தார்கள். முதியவர் அப்படி என்ன சொன்னார்?

சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!

இருவரும் ஒட்டகங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவன், தான் அமர்ந்திருக்கும் ஒட்டகத்தை தலைநகருக்குள் முதலில் கொண்டுசென்றுவிட்டால், அவனது ஒட்டகம் கடைசியாகத்தானே தலைநகரை அடையும்?

பயம்!

ஒருவன், காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான். பசி எடுக்கவே, ஒரு மரத்தின் உயரத்தில் பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மீது ஏறி, கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது, கிளை முறிந்துவிட்டது. சட்டென்று சுதாரித்த அவன், வேறு ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்தான்.

குனிந்து பார்த்தால், தரை வெகு கீழே இருந்தது. ''என்னைக் காப்பாற்றுங்கள்'' எனப் பயத்தில் அலறினான்.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!

அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். அவனைப் பார்த்ததும், சிறிய கல் ஒன்றை எடுத்து மேலே எறிந்தார். அவன் பயத்துடன், ''பெரியவரே, உதவி கேட்டால், கல்லால் அடிக்கிறீரே?'' என்றான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை எடுத்து, அவன் மேல் வீசினார். அவன் கோபமாகி, விடுவிடுவென இறங்கிவந்து அவரைத் திட்டினான். பெரியவர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே, ''தம்பி, நான் உன்னைப் பார்த்தபோது பயத்தில் இருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும், என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். கீழே இறங்கி வந்து, உன்னைக் காப்பாற்றிக்கொண்டாய்'' என்றார்.

பயம், ஒருவனை முட்டாளாக்கிவிடும்.

பங்கு போடு!

ஒரு காட்டில், இரண்டு காட்டு நாய்கள் ஒன்றாக வசித்தன. ஒருநாள், இரண்டும் ஒரு மானை வேட்டையாடின. ஆனால், அதைப் பங்கு பிரிப்பதில் சண்டை வந்துவிட்டது. அதனால், அவை இரண்டும் அதே காட்டில் இருந்த வயதான சிங்கத்திடம் சென்று உதவி கேட்டன.

அந்தச் சிங்கத்துக்கு வயதானதால், முன்பு போல வேட்டையாட முடியவில்லை. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டது. அந்த மான் இறைச்சியை வேண்டுமென்றே ஒன்று சிறிதாகவும் ஒன்று பெரிதாகவும் பிரித்து, ''ஆஹா, ஒன்று பெரிதாகிவிட்டதே. சரி, இதில் கொஞ்சம் எனக்கான தீர்ப்புக் கூலியாக எடுத்துக்கொள்கிறேன்'' என்று சொல்லி, கொஞ்சம் கடித்துக்கொண்டது.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!

பிறகு, மற்றொன்று பெரிதாக இருக்கிறது எனச் சொல்லி, அதிலிருந்தும் சிறிது கடித்துக்கொண்டது. இப்படியே அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் கடித்துக் கடித்து, இறுதியில் எலும்புகள் மட்டுமே இருந்தன.

''என்னால் பிரிக்க முடியவில்லை. இந்த எலும்புகளையாவது நீங்கள் சரியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு சிங்கம் நகர்ந்தது.

'சிங்கத்திடம் முறைத்துக்கொள்ள முடியாது’ என நினைத்த இரண்டு காட்டு நாய்களும், 'என்ன கொடுமை சார் இது?’ என்று நொந்துகொண்டன.

புத்தனும் திருடனும்!

புத்தர் ஒருநாள், மடத்தின் பின்புறம் இருந்தார். அப்போது மடத்தின் உள்ளே, யாரோ எதையோ எடுக்கும் சத்தம் கேட்டது. உடனே புத்தர் உள்ளே வந்து பார்த்தார்.

ஒரு திருடன் அங்கே இருந்த வெள்ளிக் கிண்ணம் ஒன்றை எடுத்தான். புத்தரைப் பார்த்ததும் கிண்ணத்தைப் போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.

அதைப் பார்த்த புத்தர், அந்த வெள்ளிக் கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ஓடினார். அவன் இன்னும் வேகமாக, அங்கும் இங்குமாக வளைந்து நெளிந்து ஓடினான். ஆனாலும் புத்தர் விடவில்லை. வேகமாக விரட்டிச்சென்று அவனைப் பிடித்துவிட்டார்.

சின்னச் சின்ன வண்ணக் கதைகள்!

''ஐயா... தெரியாமல் செய்துவிட்டேன். என்னை விட்டுவிடுங்கள்'' என்று திருடன் பதறினான்.

புத்தர் அமைதியாக, அவனிடம் அந்தக் கிண்ணத்தை நீட்டினார். ''அடுத்தவர் ஆசைப்படுகிற, அவர்களுக்குப் பிடித்த பொருளை நான் வைத்துக்கொள்வது இல்லை. இந்தா... இதை நீயே வைத்துக்கொள்'' என்று சொல்லிக் கொடுத்தார்.

திருடன் திகைத்துவிட்டான். அன்றிலிருந்து அவன், அவருடைய சீடனாக மாறிவிட்டான்.

- ஸ்ரீதேவி ரோஜா, காரமடை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு