Published:Updated:

தீனாவின் தீபாவளி !

ஆயிஷா இரா.நடராசன், படங்கள் : தமிழ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

தீனா, சமீப காலமாக வீட்டில் தங்குவதே இல்லை. இதனால், அம்மாவுக்கு ரொம்பக் கவலை. தீனாவின் அப்பாவுக்கு, ஊர் ஊராகச் செல்லும் விற்பனை பிரதிநிதி வேலை. விடிந்தால் தீபாவளி. அவர் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வந்துவிடுவார். அவர் வரும் நேரம் வீட்டில் தீனா இல்லை என்றால்... நினைத்தாலே பதறியது அம்மாவுக்கு.

ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மாவுக்கு டேக்கா கொடுத்துவிட்டுக் காணாமல்போவான். பிறகு, வெகுநேரம் கழித்து வருவான். 'எங்கே போனாய்?’ என்று கேட்டால், ஏதாவது சொல்லிச் சமாளிப்பான்.

அம்மாவுக்கு ஆத்திரமும் அழுகையும் அதிகமானபோது, வாசல் பக்கம் சத்தம். தீனாவின் அப்பா வந்துவிட்டார். விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். 'வேலைப் பளுவில் மகனைக் கோட்டைவிட்டோமே...’ என்று வேதனைப்பட்டார். இருவரும் மகனைத் தேடிப் புறப்பட்டனர்.

எவ்வளவு நேரம் தேடியும் தீனா தென்படவில்லை. மற்ற பையன்கள் விளையாடும் இடங்களில் தீனா இல்லை. அப்படியென்றால், எங்கேதான் போகிறான்? அவன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குச் சென்று விசாரிப்பது என முடிவுசெய்தார்கள்.

அங்கே, மாணவர்கள் யாரும் இல்லை. விளையாட்டு ஆசிரியர் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். ''இப்பெல்லாம் பசங்க முன்ன மாதிரி இல்லை. வீட்டுக்குத் தெரியாம சினிமாவுக்குப் போயிருக்கலாம்'' என்று சொல்லி, அவர்களை மேலும் கலவரப்படுத்தினார்.

தீனாவின் தீபாவளி !

பிறகு அவரும் தேட வந்தது, அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஒரு தெருவில் தீனாவைப் பார்த்துவிட்டார்கள். ''அவனைக் கண்காணிப்போம். அப்போதுதான் என்ன செய்றான்னு தெரிஞ்சு திருத்தலாம்'' என்றார் ஆசிரியர்.

தீனா பார்க்க முடியாத தொலைவில் மறைந்துகொண்டு கவனித்தனர். தீனாவின் கையில் ஒரு மூங்கில் கூடை இருந்தது. அவன் வீடு வீடாகச் சென்றான். ஏதோ சொல்கிறான்... சில வீடுகளில் பலகாரங்களைக் கொடுக்கிறார்கள். சில வீடுகளில் திட்டுவது தெரிந்தது. சிலர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு வீட்டில் நாய் குரைத்து விரட்டியது. அம்மா, தாங்க முடியாமல் அவனிடம் செல்ல எத்தனித்தார்.

தீனாவின் தீபாவளி !

''நோ... வெயிட்'' என்றார், விளையாட்டு ஆசிரியர். ''உங்களுக்கு இந்தக் காலப் பசங்களைத் தெரியாது. இந்தப் பண்டங்களை டாஸ்மாக் வாசலில் விற்று, அந்தப் பணத்தில் சினிமாவுக்குப் போவாங்க. பின்னாடியே போய், முழு கேங்கையும் பிடிக்கணும்'' என்று மேலும் திகிலை ஏற்படுத்தினார்.

தீனாவைப் பின்தொடர்ந்தார்கள். அவன் பல வீதிகளைக் கடந்து, ஒரு கட்டடத்தினுள் நுழைந்தான். அது, பார்வையற்றோர் இல்லம். அம்மா, அப்பா மற்றும் ஆசிரியர் மூவருமாக வாசல் அருகே சென்றனர். ''தீனா அண்ணன் வந்துட்டார்'' என்று உள்ளிருந்து சத்தம் கேட்டது.

''ரகு, இந்தா பலகாரம். ரஃபீக்... இது உனக்கு. புவனா, இதோ இது உனக்கு'' உள்ளிருந்து கேட்ட தீனாவின் குதூகலக் குரல் ஆச்சர்யப்படுத்தியது.

இவர்கள் உள்ளே நுழைந்தார்கள். தீனா நின்றிருந்த இடத்துக்கு அருகே, கட்டிலில் ஒரு பாதிரியார் படுத்திருந்தார். காலில் மாவுக்கட்டு. தன் பெற்றோரையும் ஆசிரியரையும் அங்கே பார்த்த தீனாவுக்கு பேச்சே வரவில்லை.

தீனாவின் தீபாவளி !

''வாங்க, நீங்கதான் தீனாவோட பேரன்ட்ஸா?'' பாதிரியார் நிமிர்ந்து படுக்க, தீனா உதவினான்.

''பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வருவோம். ஒருநாள் பந்து இங்கே விழுந்துருச்சு. எடுக்க வந்தேன். அதிலிருந்து பழக்கம்'' - தீனா விளக்க முயன்றான்.

''ஞாயிற்றுக்கிழமைகளில் தீனா இங்கே வருவான். பார்வையற்ற இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்வான், பேப்பர் படிச்சுக்காட்டுவான்'' என்ற பாதிரியார் தொடர்ந்தார்.

''பத்து நாள் முன்னாடி, தடுக்கி விழுந்ததில் எனக்கு கால் எலும்பு முறிஞ்சுபோச்சு. இந்தக் குழந்தைகளுக்கு என்னைத் தவிர யாருமே இல்லை. தீனாதான் பள்ளி முடிஞ்சு இங்கே வந்து, எனக்கும் குழந்தைகளுக்கும் உதவியா இருக்கான். பண்டிகைக்கு எதுவும் செய்ய முடியலை. தீனா வீடு வீடாகப் போய்... இனிப்பு, பலகாரம் வாங்கி வந்திருக்கான்'' என்றவரின் குரல், நன்றியால் தழுதழுத்தது.

''யு ஆர் கிரேட் தீனா. 'பசங்க எதைச் செய்தாலும் அது தப்பாகத்தான் இருக்கும்’னு நினைச்சது என்னோட பெரிய தப்பு'' என்ற ஆசிரியர், தீனாவைத் தட்டிக்கொடுத்தார்.

அப்பா, தீனாவின் தலையைப் பெருமையோடு கோதிவிட்டார். ''உங்ககிட்டச் சொல்லாதது தப்புதான்.. ஸாரி'' என்ற மகனை, அம்மா தழுவிக்கொண்டார்.

அடுத்த நாள் தீபாவளியை, அவர்கள் அங்கேதான் கொண்டாடினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு