Published:Updated:

தேவதைக் கதைகள் - மந்திரப் புசணிக்காய் !

கே.முரளிதரன் ஓவியம் :ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி
##~##

வெகுகாலத்துக்கு முன்பு, ஓர் ஊரில் சகோதரர்கள் இருவர் வசித்துவந்தனர். அண்ணன், குறுக்குப்புத்தி உடையவன். தம்பியோ, மிகவும் நல்லவன். எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று நினைப்பவன். இருவரும் தகுந்த வயது வந்ததும், கல்யாணம் செய்துகொண்டனர்.

அண்ணன், ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். தம்பி கல்யாணம் செய்துகொண்டது ஓர் ஏழைப் பெண்ணை. அண்ணன், தன் மனைவியின் பணத்தில் வசதியாக வாழ்ந்தான். தம்பியின் வீட்டில் எப்போதும் கஷ்டம்தான்.

ஒருமுறை விதைக்கும் பருவம் வந்தது. தம்பியிடம் விதைப்பதற்குக்கூட நெல் இல்லை. அண்ணனிடம் சென்று, விதைநெல் கொடுத்து உதவுமாறு கேட்டான். ஆனால் அண்ணன்,  'இப்படி எதையாவது கேட்டுக்கொண்டு இனிமேல் என் வீட்டுக்கு வராதே'' என்று சொல்லிவிட்டான்.

என்ன செய்வதென்றே தெரியாமல், ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து அழுதான் தம்பி. அப்போது அந்த மரத்தில் வசித்த தேவதை, அவன் முன்பு தோன்றினாள். 'அழாதே! நல்லவர்களுக்குச் சோதனை வரும். ஆனால்,  கடவுளால் கைவிடப்பட மாட்டார்கள். நீ தொடர்ந்து உயிர்களிடம் அன்பு செலுத்து' என்றாள்.

தம்பிக்கு தேவதையின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. வீட்டுக்குச் சென்றான். அவன் வீட்டின் கூரையில், நிறைய சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. ஒருநாள், திடீரெனப் பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அங்கிருந்த கூடுகளில் சில, கலைந்து கீழே விழுந்தன.

பெரிய சிட்டுக்குருவிகள் தப்பிச் சென்றுவிட்டன. ஒரே ஒரு குஞ்சுக் குருவிக்கு கால் பிசகிவிட்டது.  இதைப் பார்த்த தம்பி, ''கவலைப்படாதே, நான் உனக்கு மருந்து போடுகிறேன்'' என்று சொல்லி,  அதன் காலில் மருந்துபோட்டு, வைத்தியம் செய்தான். அடுத்த இரண்டு, மூன்று நாட்களிலேயே குருவியின் கால் சரியாகிப் பறந்தது.

தேவதைக் கதைகள் - மந்திரப் புசணிக்காய் !

சிறிது நேரம் கழித்து, வாசலில் குருவி கத்தும் சத்தம் கேட்டது. தம்பி அருகே சென்று பார்த்தான். அந்தக் குஞ்சுக் குருவியின் வாயில் பூசணி விதை ஒன்று இருந்தது. தம்பியிடம் அதைக் கொடுத்துவிட்டுப் பறந்தது.

அந்த விதையைத் தன் வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விதைத்தான். அடுத்த வாரத்திலேயே அந்த விதையிலிருந்து மிகப் பெரிய கொடி வளர்ந்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அந்தக் கொடியில் மிகப் பெரிய பூசணிக்காய் ஒன்று காய்த்திருந்தது. தம்பியும் அவன் மனைவியும் அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று வெட்டினார்கள். அந்தப் பூசணிக்காயில் இருந்து விதவிதமான, சுவையான உணவுகள் வெளிப்பட்டன. வீடே அந்த வாசனையால் நிறைந்தது. இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள்.

''போதும். மிச்சத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்போம்'' என்றான் தம்பி. அப்படியே செய்தார்கள்.

அடுத்த நாள் காலையில், தோட்டத்துக்குச் சென்றான் தம்பி. அப்போது, இன்னொரு பூசணிக்காய் காய்த்திருந்தது. அதை வெட்டிப் பார்த்தபோது, அதிலிருந்து விதவிதமான ஆடைகள் வந்தன. இருவரும் அவற்றை உடுத்தி மகிழ்ந்தார்கள். மற்றவர்களுக்கும் கொடுத்தார்கள்.

மூன்றாம் நாள் காலையில், இன்னொரு பூசணிக்காய் காய்த்திருந்தது. அதிலிருந்து தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கொட்டின. இருவரும் ஆனந்தத்தில் உறைந்தார்கள்.

தேவதைக் கதைகள் - மந்திரப் புசணிக்காய் !

அந்தச் செல்வத்தை வைத்து வீடு, நல்ல வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். ஏழைகளுக்கும் உதவி செய்தார்கள்.

தம்பி இப்படி வாழ்வது அண்ணனுக்குத் தெரியவந்தது. அவன் தம்பியிடம் வந்து, ''எப்படி இதெல்லாம் நடந்தது?'' என்று கேட்டான். தம்பியும் நடந்ததைச் சொன்னான்.

உடனே அண்ணன், வீட்டுக்குச் சென்று தன் வீட்டில் கட்டியிருந்த சிட்டுக்குருவிக் கூடுகளைப் பார்த்தான். ''சூறாவளிக் காற்று அடிக்கவில்லையே... சரி நாமே கலைப்போம்'' என்றாள் அவன் மனைவி. வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து, அந்தக் கூடுகளை எல்லாம் கலைத்தான் அண்ணன். அதில் பல குருவிகள் அடிபட்டுப் பறந்துபோய்விட்டன.

சிறிது நேரம் கழித்து, வீட்டுக்கு வெளியில்  குருவியின் சத்தம் கேட்டது. அண்ணன் வெளியில் சென்று பார்த்தான். ஒரு குருவியின் வாயில் பூசணி விதை இருந்தது.

தம்பியைப் போலவே தனக்கும் பூசணி விதை கிடைத்ததில் அவனுக்கு சொல்ல முடியாத ஆனந்தம். தம்பி செய்ததைப் போலவே வீட்டின் பின்புறம் அதை விதைத்தான்.

அடுத்த நாள் காலையில் பார்த்தபோது, அந்த விதை மிகப் பெரிய கொடியாக வளர்ந்திருந்தது. அதில் மிகப் பெரிய பூசணிக்காய் ஒன்று காய்த்திருந்தது. அண்ணனும் அவனது மனைவியும் சந்தோஷத்துடன் அந்தப் பூசணியைத் தூக்க முடியாமல் தூக்கி, வீட்டுக்குள் கொண்டுபோனார்கள்.

''இதிலிருந்து கிடைக்கும் பரிசுப் பொருட்களை யாரும் பார்த்துவிடக் கூடாது. கதவை நன்றாக சாத்திவிட்டு வா'' என்றான் அண்ணன்.

அவன் மனைவி அப்படியே செய்தாள். பிறகு, பூசணிக்காயைக் கத்தியால் வெட்டினான் அண்ணன். அவ்வளவுதான். அதிலிருந்து இரண்டு ராட்சதர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள், அண்ணனையும் அவன் மனைவியையும் கையில் இருந்த தடியால் அடி அடி என அடித்தார்கள். கதவும் மூடியிருந்ததால், அவர்கள் கத்தியது வெளியில் யாருக்கும் கேட்கவில்லை. அவர்களை அடித்துவிட்டு, அந்தக் குண்டர்கள் மறைந்துவிட்டார்கள்.

அடி வாங்கி மயங்கிக்கிடந்த இருவரும், அடுத்த நாள் மயக்கம் தெளிந்து, தோட்டத்துக்குச் சென்று பார்த்தார்கள். அங்கே, தங்க நிறத்தில் ஒரு பெரிய பூசணிக்காய் காய்த்திருந்தது.

முதல் நாள் வாங்கிய அடி ஞாபகத்துக்கு வந்தாலும், பூசணிக்காய் தங்க நிறத்தில் இருப்பதால், அடியை மறந்து மகிழ்ச்சி ஏற்பட்டது. அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று அறுத்தார்கள். அவ்வளவுதான். அந்தப் பூசணிக்காய் பெரிய சத்தத்துடன் வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய தீப்பிழம்புகள் அண்ணனின் வீட்டை முழுமையாக எரித்துவிட்டன. அவனது பொருட்கள் எல்லாம் எரிந்தன. இருவரும் எப்படியோ தப்பித்து வெளியே வந்தார்கள்.

இதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் முடியாமல், உதவியும் கேட்க முடியாமல், மனைவியுடன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான் அண்ணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு