என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

நல்லதங்காள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

எட்டு வயதில்தான்
முதல்முறையாக அவன்
கிணற்றைப் பார்த்தான்.

அவர்கள் மாறி வந்த ஊரின்
வீதிகள் நடுவிலும்
தெரு மூலைகளிலும் இருந்த
கிணறுகளை
எட்டிப் பார்த்துக்கொண்டே
பள்ளிக்குப் போவான்.
சில கிணறுகள் ஈர வாசனையுடன்
தலையில் பூச்சூடிப் பின்னலிட்ட பெண்போல
சகடைச் சக்கரம்
கயிற்று வாளியுடன் நிற்கும்.

நல்லதங்காள்

சில கிணறுகள் அடி தெரியாத
ஆழத்துடன்
இருட்டுக் குரலாய் அவனை அழைக்கும்...

சில பாழுங் கிணறுகளில்
முயல் பழி வாங்கிய
சிங்கத்தின் பிம்பத்தையும்
அவன் உற்றுத் தேடினான்...
பள்ளிவிடும் சமயம்
ஊரின் எல்லாக் கிணறுகளும்
அவனுக்காகக் காத்திருக்கும்.
அவன் அவற்றைப் பார்த்து
விசாரித்தபடியே
புத்தகச் சுமையுடன் மெதுவாய் நடந்து
தன் வீடு திரும்புவான்.

கிணறுகள் அவனுக்கு அறிமுகமான
நாட்களில் ஒன்றில்தான்
கோயில் சுவரில்
நல்லதங்காள் சுவரொட்டியைப் பார்த்தான்.
வழக்கமாய்
சினிமாவுக்கு அழைத்துப்போகும்
அம்மா
அவனைக் கூட்டிப்போகவில்லை.
பின்னொரு நாள்
அம்மா சொன்ன நல்லதங்காள்
கதையைக் கேட்ட பிறகு
கிணறுகளின் பக்கம்
அவனை யாரும் பார்க்கவேயில்லை!