Published:Updated:

கிச்சா என்றொரு ஹீரோ! - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியங்கள்: பாலா

##~##

 நேற்று இரவு 10.30 மணிக்கு கடலைப் பார்த்தபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த கிச்சா என்கிற கிருஷ்ணசாமி, தற்கொலை செய்துகொள்ளலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.

அவன் பார்வை, தூரத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலின் வெளிச்சப் புள்ளிகளின் மேல் நங்கூரமிட்டிருந்தது. கதையின் 14-வது வார்த்தைக்கான காரணம் மூன்று.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. அவமானம், 2. அவமானம், 3. அவமானம்.

முதல் அவமானம், ஒரு வாரம் முன்பு நிகழ்ந்தது. கிச்சா, தன் பழைய ஸ்கூட்டரின் அரதப்பழைய டியூபை நடைப்பாதைக் கடையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருந்தபோது, அருகில் வந்து நின்ற ஆடி காரின் கண்ணாடி இறங்கி, குளிர் கண்ணாடி கழற்றியபடி இறங்கிய சபேஷ், ''டேய்... நீ கிச்சா இல்ல?'' என்றான்.

''ஆமாம். நீ சபேஷ்தானே?''

கிச்சா என்றொரு ஹீரோ! - சிறுகதை

''யா... என்னடா இப்படி ஆயிட்டே? அடையாளமே தெரியலை! கன்னம் ஒட்டிப்போயி... எலும்பு துருத்தி... முடி கொட்டி... எனி ஹெல்த் ப்ராப்ளம் மேன்?''

''ஆமாம்னா, நீ வைத்தியம் பண்ணப் போறியா... டாக்டராடா நீ?''

''அதே கோபம்! ஸ்கூல்ல எப்படி இருந்தியோ அப்படியே இருக்கே!''

''நீதான் அடையாளமே தெரியாம மாறிட்டே! கன்னம் உப்பி, தொந்தி போட்டு, ஹேர் கலரிங் செஞ்சி... உனக்குத்தான் ஹெல்த் ப்ராப்ளம் இருக்கற மாதிரி தெரியுது. ஒபிசிட்டி டாக்டரைப் பாரு. ஹார்ட் அட்டாக்குக்கு ஒன் ஆஃப் தி ரீசன்ஸ்!''

''ஏய்! ஏன்டா இப்படி சூடாகறே? எத்தனை வருஷமாச்சி பாத்து? என்ன இங்க நிக்கிறே?''

''பஞ்சர் போட்டுட்டு இருக்கேன்.''

''மை காட்! பி.காம்., படிச்சுட்டு பஞ்சர் போடுறியா? ஐ கான்ட் பிலீவ் இட் மேன்.''

''செருப்பால அடிப்பேன்! என் வண்டிக்கு இந்தக் கடையில பஞ்சர் போட்டுட்டிருக்கேன்.''

''இப்படித் தெளிவாச் சொல்லணும். வா... ஒரு ஐஸ்க்ரீம் சாப்ட்டுட்டு வரலாம்.''

''நான் ஐஸ்க்ரீம் சாப்பிடறதில்ல!''

''காபி... அதுவும் குடிக்கிறதில்லையா?''

''சரி'' என்று கிச்சா அவனுடன் ஹோட்டலுக்குச் சென்றிருக்கக் கூடாது.

கிச்சா என்றொரு ஹீரோ! - சிறுகதை

''தம்பி... ஒரு பிஸ்தா ஐஸ்க்ரீம் டபுள் ஸ்கூப் வித் ஆல்மண்ட் டாப்பிங்ஸ்! ஒரு காபி...'' என்று சபேஷ் ஆர்டர் செய்ததிலேயே திமிர் தெரிந்தது.

''என்ன பண்ணிட்டிருக்கே கிச்சா?''

''காபிக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன்.''

''வெரி வெரி டல் ஜோக் மேன்!''

''ஒரு ஜவுளிக் கடையில பில்லிங் செக்ஷன்ல வேலை பாக்கறேன்.''

''என்ன தர்றான்?''

''ஃபைவ் தவுசண்ட்.''

''தூக்கி வீசிட்டு எங்கிட்ட சேர்ந்துடு கிச்சா. இந்தா...'' - மடக்கி மடக்கி ஒரு முழ நீளத்துக்கு இருந்த தன் விசிட்டிங் கார்டை நீட்டினான்.

''ரன்னிங் மை ஓன் சாஃப்ட்வேர் கம்பெனி. ஸேஃப் கிங். 200 பேரு ஸ்டாஃப்ஸ். உன் ரெஸ்யூம் முதல்ல மெயில் பண்ற. செவன்ல ஆரம்பிக்கலாம். என்ன சொல்றே?''

''நான் உங்கிட்ட வேலை கேட்டனா?''

''தன்மானம்? அதெல்லாம் பாத்தா, உருப்பட முடியுமா? நீயும் பி.இ., சேருடானு பத்து தடவை சொன்னேன்... கேக்கலை. பி.காம்., அதுவும் ஒரு லொக்கடா காலேஜ்ல சேர்ந்த. ப்ளஸ் டூல

நீ கிளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க். நான் 30-வது ரேங்க். இப்ப நிலைமையைப் பாத்தியா?''

''பிரச்னை அது இல்ல சபேஷ். நீ அஞ்சு லட்சம் கேபிடேஷன் கொடுத்து வாங்கினே! உங்கப்பனால அது முடிஞ்சது. எங்கப்பனால அது முடியலை. எனக்கு உன்னோட காபி சாப்பிடப் பிடிக்கலை... போடா!'' - வேகவேகமாக வெளியேறிய கிச்சா, அன்று ஆக்ரோஷமாக தன் டைரியில், 'உயிர் காப்பான் தோழன் என்பதெல்லாம் சும்மா. மட்டம்தட்டி மகிழ்பவனே நண்பன்’ என்று எழுதினான்.

வமானம் நம்பர் இரண்டு, நான்கு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.

18 குடித்தனங்கள் இருக்கும் ஸ்டோர்ஸில் பாத்ரூமுக்கு இடம் பிடிக்கும் அதிகாலை அவசரத்தில் இருந்தபோது, வந்துசேர்ந்த வீட்டு ஓனர் கிட்டத்தட்ட இரண்டு டஜன் குடித்தனக்காரர்கள் மத்தியில்...

''கிருஷ்ணசாமி சார்! எல்லாரும் உசத்திக் கொடுக்க சம்மதிச்சிட்டாங்க. நீங்கதான் அடம்பிடிக்கிறீங்க. என்னதான் சொல்றீங்க?''

'பேராசைப்படாதீங்க. சாம்பிள் சோப் சைஸுல 18 போர்ஷன். மொத்தத்துக்கும் மூணே டாய்லெட். மழை பேஞ்சா ஒழுகிற இடத்துல வெக்கிறதுக்கே, தனியா ஒரு டஜன் பாத்திரம் தேவைப்படுது. ராபர்ட் கிளைவ் காலத்துக்கு அப்பறம் வெள்ளையே அடிக்கலை. ஒரு வாட்ச்மேன் கிடையாது. மாசத்துல 15 நாள் மோட்டர் ஓடாது. இப்படி 18 போர்ஷனாப் பிரிச்சு வாடகைக்கு விடறதே சட்டப்படி தப்பு. தனித்தனியா மீட்டர் இருக்கா? தனித்தனியா வேல்யூவேஷன் போட்டு ப்ராப்பர்ட்டி டாக்ஸ் கட்டுறீங்களா? இந்தப் பொம்மை வீட்டுக்கு 2,000 ரூபாயே அதிகம். திடீர்னு 500 ரூபாய் ஏத்துறது சட்டப்படியும் தப்பு; நியாயப்படியும் தப்பு. நான் கோர்ட்டுக்குப் போவேன், ஆமாம்...’ என்று தொண்டை நரம்புப் புடைக்க கத்த நினைத்தும், ''ஆறு மாசம் கழிச்சு ஏத்துங்க சார்... ப்ளீஸ்...'' என்றுதான் சொல்ல முடிந்தது.

கிச்சா என்றொரு ஹீரோ! - சிறுகதை

''இதப் பாருய்யா... இனிமே உனக்கு 'சார்’ மரியாதை எல்லாம் கிடையாது. வாடகை குடுக்க வக்கில்லைனா, காலி பண்ணிட்டுப் போகவேண்டியதுதானே? வாடகை உசத்திக் கொடுக்க முடியாதுனா, ஒரு வாரத்துல காலி பண்ணிடு. தகராறு வேணாம்.''

அவர் மிரட்டிவிட்டுப் போனதும் கிச்சாவை வீட்டுக்குள் இழுத்த திருமதி சுமதி கிச்சா, 80-களின் ஹீரோயின் போல லொடக்கென்று தாலியைக் கழற்றி அவன் முன்னால் நீட்டினாள். மாங்கல்யம் ஆடியது.

''இதை வித்து அவர் பிரச்னையை முதல்ல தீர்த்துட்டு வாங்க!''

''அறைஞ்சிடுவேன்! முதல்ல கழுத்துல போடுடி அதை!''

பொண்டாட்டியைத் தவிர, வேறு யாரிடம் கோபப்பட முடிகிறது!

அன்றிரவு மொட்டைமாடியில் நிலவொளியில் 'பேராசை பிடித்த வீட்டுச் சொந்தக்காரர்களை, மூன்று கேஸ் சிலிண்டர்களை மிச்சப்படுத்தச் சொல்லும் விளம்பரத்தில் வரும் கொதிக்கிற மகா பாத்திரத்துக்குள் தூக்கிப்போட வேண்டும்!’ என்று டைரியில் எழுதினான்.

வமானம் நம்பர் மூன்று, முந்தா நாள் தொலைபேசி மூலம் நடந்தது.

கடை வேலை முடிந்து, மின்சார ரயிலில் பயணித்து, ஸ்டேஷன் பார்க்கிங்கில் பல வண்டிகளின் சிக்கல்களுக்கு நடுவிலிருந்து தன் ஸ்கூட்டரை சிரமப்பட்டு விடுவித்து,  டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவரிடம் சிக்கி, எல்லாம் சரியாக இருந்தும் 10 ரூபாய் தந்து வீடு வந்து காபி கேட்டு, ''காபித்தூள், பால், சக்கரை மூணும் வாங்கிட்டு வந்துட்டிங்கனா, உடனடியா காபி போட்டுடலாம்... இன்னும் கேஸ் தீராம இருந்தா!'' என்று மனைவியிடம் வாய்மொழி பெற்று... 'ச்சே! போங்கடா’ என்ற எரிச்சலுடன் மொட்டைமாடி வந்து வானத்தில் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிற கடவுளைப் பார்த்து ''இது உனக்கே நியாயமா இருக்கா படவா, ராஸ்கல்!'' என்று சண்டைபோடத் தொடங்கியபோது ஒலித்தது போன்.

''சொல்லுங்க மாமா!''

''காலைல வீட்டுக்கு வந்திருந்தேன் மாப்பிளை.''

''அப்படியா மாமா?''

''சுமதி சொல்லலையா?''

''சொல்லிருந்தா அப்படியானு கேட்டிருக்க மாட்டேன் மாமா.''

''விடுங்க. சுமதி எல்லாம் சொன்னிச்சி.''

''எல்லாம்னா..?''

''நிலவரத்தை...''

''மோடியோட தேர்தல் வெற்றி நிலவரமா மாமா?''

''புரியாத மாதிரி பேசாதீங்க மாப்ளை.''

''புரியற மாதிரி பேசுங்க மாமா.''

''நம்ம வெல்லம் மண்டில கணக்குப்பிள்ளைக்கு வயசாயிடுச்சி.''

''சரி.''

''கேட்ராக்ட் ஆபரேஷன் செஞ்சிக்கிட்டு லீவுல இருக்கார்.''

''சரி.''

''அப்படியே அவரை நிறுத்தி ரெஸ்ட் குடுத்துடலாம்னு நினைக்கிறேன்.''

''நல்ல யோசனைதான்.''

''6000 குடுத்துட்டிருந்தேன்.''

கிச்சா என்றொரு ஹீரோ! - சிறுகதை

''ஓகோ.''

''புதுசா யாரையாச்சும் சேர்த்தா ஒரு ரூபா சேர்த்துக் குடுக்கலாம்னு திட்டம்.''

''செய்ங்க.''

''யாரோ ஒருத்தரை நான் எதுக்கு யோசிக்கணும்? புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.''

''புரியுது மாமா. உங்ககிட்ட மாசாமாசம் கை நீட்டி சம்பளம் வாங்கிக்கச் சொல்றீங்க!''

''அப்படியே தொழிலும் கத்துக்கிட்ட மாதிரி ஆச்சு.''

''மாமா... இதுவரைக்கும் நான் எப்பவாச்சும் உங்களை மரியாதைக்குறைவா பேசிருக்கனா?''

''இல்ல.''

''இனிமேயும் அப்படியே நடந்துக்கணும்னு ஆசைப்படறேன் மாமா. அதனால போனை வெச்சிடறேன்!''

வமானம் ப்ளஸ் அவமானம் ப்ளஸ் அவமானத்தின் விளைவாகத்தான் கிச்சாவுக்கு அப்படி ஒரு யோசனை! சுமதிக்கு அவள் அப்பா வெல்லம் மண்டியைப் பார்த்துக் கொள்ளும் ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்துவிட மாட்டாரா என்ன?

தீர்மானத்துடன் எழுந்தான் கிச்சா!

கடலை நோக்கி அடியெடுத்து வைத்தபோது... சற்று தூரத்தில் கூச்சலும் குழப்பமும் கேட்டுத் திரும்ப... இவனை நோக்கி குள்ளமான ஒரு நிழலுருவமும், அதைத் துரத்தியபடி உயரமான நிழலுருவமும் அந்த இருவருக்கும் பின்னால் நிறைய இடைவெளிவிட்டு பல நிழலுருவங்களும் வந்துகொண்டிருக்க...

அருகில் வந்ததும், அந்தச் சிறுமி கிச்சாவின் பின்புறம் ஓடிவந்து ஒளிந்துகொண்டு பயத்துடன் மூச்சு வாங்கினாள்.

''அங்கிள்... அங்கிள்! என்னைக் காப்பாத்துங்க!''

பின்னால் துரத்தி வந்தவன் கையில் குறை நிலவொளியிலும் மின்னும் கத்தி!

''டேய் நகர்றா... ஏய் குட்டி.. வாடி இங்க!''

''யார்றா நீ?''

''அங்கிள்! என்னை இவன் கடத்திட்டான். என்னைக் காப்பாத்துங்க! ப்ளீஸ்...''

''அப்படியே இறக்கினா, குடல் வெளில வந்துடும். விடுடா அவளை...'' அவன் கத்தியை ஆட்டி மிரட்டினான்.

அவன் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தான் கிச்சா. சபேஷ§ம், ஹவுஸ் ஓனரும், மாமனாரும் லோக்கல் நாடக மேடையில் வெளிச்சத்தின் வண்ணம் மாறுவதைப் போல மாறிமாறித் தெரிந்தார்கள்.

நான்தான் தாவினேனா? நான்தான் தாக்கினேனா? அவன் மூக்கில் வழியும் ரத்தம் என்னால்தானா? கத்தி எகிறிச் சென்று விழுந்தது எப்படி?

கிச்சாவுக்கே எதுவும் புரியவில்லை.

இப்போது ஓடிவந்து சேர்ந்த போலீஸ்காரர்கள் அவர்களைப் பொறுக்கி எடுத்துக்கொள்ள... அந்தச் சிறுமி, ''டாடி!'' என்று சூட்கேஸ் வைத்திருந்த நபரிடம் ஓடிச்சென்று கட்டிக்கொள்ள...

கிச்சா என்றொரு ஹீரோ! - சிறுகதை

றுநாளாகிய இன்றைய செய்தித்தாளில் 'துணிகரச் செயல் புரிந்த வீரர் கிச்சா என்கிற கிருஷ்ணசாமி இவர்தான்’ என்று புகைப்படத்துடன் செய்தி!

'பிரபல வைர வியாபாரி லால்சந்த். இவரின் எட்டு வயது மகள் கடத்தப்பட்டார். கடத்தல்க£ரன் 25 லட்சம் பணம் கேட்டான். அதைத் தர லால்சந்த் முன்வந்தார். ஆனால், காவல் துறையினர் பொறிவைத்துப் பிடிக்க நினைத்தனர். சொன்னபடி கடற்கரையில் பணத்துடன் லால்சந்த் காத்திருக்க... கடத்தல்காரன் போலீஸ் பின்னணியில் இருப்பதை அறிந்ததும் சிறுமியை ஒப்படைக்காமல் ஓடினான்.

சினிமாவில் வரும் காட்சிபோல அங்கே வந்தார் கிச்சா என்கிற கிருஷ்ணசாமி. தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், கத்தி காட்டி மிரட்டிய கடத்தல்காரனை அடித்துத் துவம்சம் செய்து குழந்தையை மீட்டார்.

அவரின் இந்தச் செயலைப் பாரட்டி, வீரதீரச் செயல் புரிந்தோருக்குக் கொடுக்கப்படும் விருதுக்காக தமிழக அரசு அவரைப் பரிந்துரைத் திருக்கிறது. தவிர... லால்சந்த், குழந்தையை மீட்க எடுத்துவந்த 25 லட்சத்தையும் கிச்சாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.’

சபேஷ், ஹவுஸ் ஓனர், மாமனார் மூவருக்கும் கிச்சா தொலைபேசி வழியே நன்றி சொன்னபோது, அவர்கள் எதற்கு என்று கேட்டபோது, எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டான்.

தற்சமயம் கிச்சா, 'கிரிமினல்கள் பிறப்பது இல்லை; இந்தச் சமூகத்தால் உருவாக்கப் படுகிறார்கள் என்பார்கள். ஹீரோக்களும்கூட பிறப்பது இல்லை; உருவாக்கப்படுபவர்கள்தான்’ என்று தன் டைரியில் எழுதிக்கொண்டிருக்கிறான்!

கிச்சா என்றொரு ஹீரோ! - சிறுகதை