Published:Updated:

இது காதல் இல்லாத கதை!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: மணிகண்டன்

இது காதல் இல்லாத கதை!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: மணிகண்டன்

Published:Updated:
இது காதல் இல்லாத கதை!

சென்னை. கோல்ஃப் க்ளப். 80 ஏக்கரில் விரிந்திருந்த அந்தப் பரந்த புல்வெளியில், சிறிய பேட்டரி கார்கள் ஆங்காங்கே மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன. புல்வெளியின் தெற்கு ஓரத்தில் தனது பந்துக்கு ஆங்கிள் பார்த்துக்கொண்டிருந்தான் 27 வயது மிதுன்.

அந்த மிதுன்... அழகன். அவனுடைய தலைமுடிகள் கழுத்தைத் தாண்டி வளர்ந்து, நெளிநெளியாக தோளில் அழகாகப் படர்ந்திருந்தன. டி-ஷர்ட், த்ரி ஃபோர்த், கையில் ஏதோ கச்சாமுச்சா பேண்டு. அவன் பாக்கெட்டில் இருந்த க்ரெஸ்ஸோ கிராண்ட் மொனாக்கோ செல்போனின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய். காலில் கணுக்கால் வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
நீண்டிருக்கும் சுப்ரா ஸ்னீக்கர்ஸ். ஹெட்போனில் ஜஸ்டின் பெய்பரின், 'ஐ நோ யூ லவ் மீ... ஐ நோ யூ கேர்...’ பாடல். சந்தேகத்துக்கு இடமின்றி மிதுன் அதிநவீனப் பணக்கார இளைஞன். தன் அப்பாவின் நிறுவனங்களுள் ஒன்றைப் பார்த்துக்கொண்டு, பெற்றோருடன் வசிக்காமல் தனியாக ஒரு அபார்ட்மென்ட்டில் வசிக்கிறான். இன்னும் திருமணம் ஆகவில்லை.

க்ளப்ஹெட்டின் முனையை ஒருமுறை தடவிப் பார்த்துக்கொண்ட மிதுன், கீழே இருந்த வெள்ளைப் பந்தை ஓங்கி அடிக்க, பந்து ஜிவ்வென்று உயர்ந்து... சில விநாடிகளுக்குள் 50 அடி தொலைவில் இருந்த மரங்களுக்கு மேல் அழகாகப் பறந்துசெல்ல... பின்புறம் இருந்து 'குட் ஸ்ட்ரோக்...’ என்று குரல் கேட்டது.

மிதுன் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் இருந்து வினோத் இவனை நோக்கி, 'ஹாய்...’ என்று கை காட்டினான். அவன் அருகில் இரண்டு பெண்கள். மிதுனை நெருங்கிய வினோத் பளீர் சிரிப்புடன், ''எப்படி இருக்கே?'' என்று கேட்டான்.

''ஃபைன்... வெரி ஃபைன் வித் மை கோல்ஃப் அண்ட் ஹைலேண்ட் பார்க் ஸ்காட்ச் விஸ்கி' என்றான் மிதுன்.

சத்தமாகச் சிரித்த வினோத், ''இவ... திவ்யா. இது... வந்தனா. திவ்யாவோட க்ளாஸ்மேட். இது மிதுன். தமிழ்நாட்டின் ஆயிரம் பணக்காரர்களில் ஒருவன்' என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தான். திவ்யா, இந்தக் காட்சிக்குப் பிறகு வரப்போவது இல்லை. எனவே, அவளை வர்ணித்து வார்த்தைகளை வீணாக்க வேண்டாம். ஆனால், வந்தனா கதை முழுவதும் வரப்போவதால் சம்பிரதாயப்படி அவளை வர்ணித்தே ஆகவேண்டும்.

வந்தனா... கடவுள், அசுரர்களுடன் பிரச்னைகள் ஏதும் இல்லாத ஒரு ரிலாக்ஸ் தருணத்தில், சாவகாசமாகப் பார்த்துப் பார்த்துப் படைத்த அழகி. எனவே, பெண்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாத மிதுன், தனது வழக்கத்துக்கு விரோதமாக அவளை உற்றுக் கவனித்தான். அவள் குர்தாவும் ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்திருந்தாள். தலையை கிராப் செய்திருந்தாள். நெற்றியில், காதுகளில், கழுத்தில் ஒன்றும் இல்லை. தான் ஒரு பெண் என்பதற்கான அடையாளங்களை அவள் பிடிவாதமாக மறுத்திருந்தாள். ஆனால், ஓர் ஓவியன் அவளைப் படமாக வரைந்தால், கழுத்துக்கு கீழ் பிரஷை வெளிநோக்கிப் பெரிதாக வளைக்க வேண்டியிருக்கும்.

''ரொம்பத் தப்பு...' என்றாள் வந்தனா, மிதுனை நோக்கி.

''என்ன?''

''இப்ப நீங்க பார்த்த இடம்...'

''ஓ... ஸாரி' என்ற மிதுன், மிகவும் அவமானமாக உணர்ந்தான்.

அவனின் முகமாற்றத்தைக் கவனித்த வந்தனா, ''இட்ஸ் ஓகே. ஹெட்போன்ல ஜஸ்டின் பெய்பரா?''

''மை காட்..! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?'

''கால்ல ஜஸ்டின் போடுற சுப்ரா ஸ்னீக்கர்ஸ். அதனால ஒரு கெஸ்!'

''க்ளவர் கெஸ்...' என்ற மிதுன், வினோத்தை நோக்கி, ''அப்புறம் வினோத்... என்னடா விசேஷம்?'' என்றான்.

''நானும் திவ்யாவும் லவ் பண்றோம்...' என்று வினோத் கூற, அந்த திவ்யா லேசாக வெட்கப்பட முயற்சித்து பரிதாபமாகத் தோற்றுப்போனாள்.

''கடைசில நீயும் அந்த மாயைல மாட்டிக்கிட்ட. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...' என்று மிதுன் கூற, திவ்யாவின் முகம் மாறியது.

''மிதுன்... கிண்டல் பண்ணாத. நாங்க சீரியஸா லவ் பண்ணிட்டு இருக்கோம்' என்றான் வினோத்.

''டீப் லவ்? காதல்ங்கிறதே சுத்த ஹம்பக். இதுல சீரியஸ் லவ் வேறயா?'

வினோத் கோபமாக, ''காதல்னு ஒண்ணு இல்லாமலா நம்ம நாட்டுல இவ்வளவு பேரு காதலிச்சிட்டு இருக்காங்க?''

''ஒரு விஷயம் தெரிஞ்சிக்க வினோத். 'இந்தியா’ ஒரு செக்ஸுவலி ஸ்டார்வ்டு கன்ட்ரி!'

''புரியல...''

இது காதல் இல்லாத கதை!

''வினோத்... நம்ம எல்லாருக்கும் 14, 15 வயசுலயே செக்ஸ் ஆசை வந்துடுது. ஆனா, பரஸ்பரம் ஆணும் பெண்ணும் சுலபமாக் கிடைக்கிறதில்லை. அப்படியே கிடைச்சாலும் நேரடியாப் படுக்கைக்குப் போகமுடியாம நம்ம கலாசாரம் தடுக்குது. அதுக்காகத்தான் ஓரப்பார்வையில் கிளுகிளுத்து, கன்னம் சிவக்கப் பேசி, விடிய விடியத் தூங்காம மெசேஜ் அனுப்பி, அபத்தமா கவிதை எழுதிக் காதலிக்கிறாங்க. அப்புறம் கையைத் தொட்டு, கழுத்தைத் தொட்டு, கொஞ்சம், கொஞ்சமா முன்னேறி அடுத்த கட்டத்துக்குப் போறாங்க. ஸோ... இங்க 'காமம்’ சுலபமாக் கிடைக்காததால, செக்ஸ் வெச்சுக்க கண்டுபிடிச்ச குறுக்கு வழி 'காதல்’.''

''வாவ்... கிரேட்...'' என்று வந்தனா கைதட்ட, மிதுன் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

மிதுனின் வாதத்தில் கோபமான திவ்யா, ''வினோத்... நான் கிளம்பறேன்' என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நடந்தாள்.

''என்னடா நீ?' என்ற வினோத், வேகமாக திவ்யா பின்னால் ஓடினான்.

''உங்க ஃப்ரெண்டுக்கு ஏன் இவ்வளவு கோபம்?' என்றான் மிதுன், வந்தனாவிடம்.

''உண்மை எப்பவும் கசக்கும்.'

''என் கருத்தை ஆதரிக்கிற முதல் பெண் நீங்கதான். தேங்க்ஸ்... உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே?'

''எம்.பி.ஏ., பண்ணிட்டு இருக்கேன். அம்மா அப்பா ரெண்டு பேரும் லண்டன்ல ஃபேமஸ் சர்ஜன்ஸ். அண்ணனும் டாக்டர். மூணு பேரும் லண்டன்ல இங்கிலீஷ்காரங்க உடம்பை அறுத்து பவுண்ட், பவுண்டா சம்பாதிச்சுட்டு இருக்காங்க. ஆனா, நான் இந்தியாவை விட்டுட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டேன். ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சிட்டு இருக்கேன்!''

''குட்... நீங்களும் காதலுக்கு எதிரியா?'

''உலகத்துல இல்லாத ஒரு விஷயத்துக்கு நான் ஏன் எதிரியா இருக்கணும்? 'காதல்’ங்கிறது ஒரு ஹார்மோன் சமாசாரம். அப்புறம் நீங்க சொல்ற மாதிரி, லவ் இஸ் எ ஃபர்ஸ்ட் ஸ்டெப் டு கெட் இன் டு பெட். அதுவும் இந்தியாவில் காதலை வெச்சுக்கிட்டு செல்போன் ரீசார்ஜ், கிரீட்டிங் கார்ட்ஸ், வேலன்டைன் டே கிஃப்ட், கதைகள், சினிமானு ஒரு பெரிய பிசினஸே நடக்குது!''

''யு ஆர் கரெக்ட். காதலுக்காக இங்கே எவ்ளோ மனித எனர்ஜி வேஸ்ட் ஆகிட்டிருக்குத் தெரியுமா?''

''எஸ். நம்ம ரெண்டு பேரோட எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருக்கு. நம்ம அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். நிறையப் பேச வேண்டியிருக்கும்.''

சந்தித்தார்கள்; பேசினார்கள்.

மிதுன், வந்தனாவுக்கு கோல்ஃப் விளையாடக் கற்றுத்தந்தபோது, வந்தனாவின் பின்னால் நின்றுகொண்டு, அவள் முதுகை அணைத்தபடி க்ளப்பைப் பிடித்திருந்த வந்தனாவின் கை மீது தன் கையை வைத்து, ''இப்படி க்ளப்பைத் தூக்கி...' என்று ஓங்கி பந்தை அடித்தான். பந்து வேகமாகப் பறந்து செல்ல, வந்தனா திரும்பி அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

''ஏய்... என்ன இப்படிப் பார்க்கிற? லவ்வா?'

''சீ... ஆனா, நார்மல் பையனும் பொண்ணும் இந்த மாதிரி பொசிஷன்ல நின்னா கைப்பட்டவுடனே லவ் பண்ணி, அடுத்த செகண்ட் கனவுல ஹனிமூன் போயிருப்பாங்க.'

சத்தமாகச் சிரித்த மிதுனிடம் வந்தனா, ''உங்கிட்ட க்ளோஸா பழகப் பழக எனக்குப் பயமாயிருக்கு' என்றாள்.

''என்ன பயம்?'

''நான் ரொம்ப நெருக்கமாப் பழகுறவங்க எல்லாம் என்னை விட்டுப் பிரிஞ்சுடுவாங்க. சின்னக் குழந்தைல நான் பிரியமா வளர்த்த ஒரு நாய்க்குட்டி, கார் ஏறிச் செத்துடுச்சு.'

''அய்யய்யோ... அப்ப நானும் அவுட்டா?'

''ச்சீ... அப்புறம் எங்க எதிர் வீட்டுல வித்யானு ஒரு பொண்ணுகூட ரொம்ப க்ளோஸா இருந்தேன். அஞ்சு வருஷப் பழக்கம். அவங்க அப்பாவுக்கு துபாய்ல வேலை கிடைச்சு குடும்பத்தோட போய்ட்டா. அப்புறம் ஸ்கூல்ல ஸ்வேதானு ஒரு ஃப்ரெண்டு. எல்.கே.ஜி-ல இருந்து ப்ளஸ் ஒன் வரை க்ளோஸ் ஃப்ரெண்டு. பாத்ரூம் ஆரம்பிச்சு டீச்சர்கிட்ட பனிஷ்மென்ட் வரை ஒண்ணா சேர்ந்துதான் போவோம். அவங்க அப்பாவுக்கு ஏதோ கவர்மென்ட் வேலை. திடீர்னு மதுரைக்கு டிரான்ஸ்ஃபர் வந்திருச்சு அவருக்கு. அவ ஊருக்குக் கிளம்பறப்போ, எக்மோர் ஸ்டேஷன்ல ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் அழுதோம். முதல்ல அடிக்கடி போன் பேசிட்டு இருந்தா. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டச் விட்ருச்சு. அதான் எனக்கு ஒரு பயம்!'' என்றாள்.

மிதுன், அவள் தலைமுடியைக் கலைத்துச் சிரித்தான்.

காதல் இல்லாமலே இருவரும் மீண்டும் மீண்டும் சந்தித்தார்கள். ஜான் கால்பியின் ஓவியங்கள் பற்றி பேசினார்கள். ஃபிலிம் சேம்பரில் ஈரானியத் திரைப்படங்கள் பார்த்தார்கள். லேண்ட்மார்க்கில், வி.எஸ். நைப்பாலின், 'எ பெண்ட் இன் தி ரிவர்’ நாவல் வாங்கினார்கள். ஒவ்வொரு நிமிடம் கடக்கும்போதும், இருவரும் இன்னும் இறுக்கமாகிக்கொண்டே இருந்தார்கள்.

திகம் கூட்டம் இல்லாத ஒரு தியேட்டரில், ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டு  இருந்தார்கள். படத்தில் நிறைய சூடான காட்சிகள். ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தனா, மிதுனின் தோளில் சாய்ந்துவிட்டாள். வந்தனாவின் சூடான மூச்சுக்காற்று, மிதுனின் கழுத்தில் பட... மிதுன், வந்தனாவின் தோள்களை இறுக்கி அணைத்தான். இருட்டில் அவளுடைய உதடுகளை, தன் உதடுகளால் தேடிக் கண்டுபிடித்தான். படத்தில் வந்ததைவிட நீ..............ளமாக இருந்தது அந்த முத்தம்!

''முத்தம் கொடுக்கிறப்ப நடுவுல ஒரு பயம்' என்றான் மிதுன்.

''என்ன பயம்?'

''இதனால என் மேல உனக்குக் காதல் வந்துடுமோனு''

''சேச்சே... இது ஒரு காதல் இல்லாத கதை!''

டுத்து வந்த ஞாயிற்றுக் கிழமையில் வந்தனா, மிதுனின் அபார்ட்மென்ட்டுக்கு வந்திருந்தாள். ஹாலில் கீபோர்டைப் பார்த்தவுடன், ''ஏய்... உனக்கு கீபோர்டு வாசிக்கத் தெரியுமா?'' என்றாள்.

''ம்...' என்ற மிதுன், கீபோர்டில் ஒரு நோட்டை வாசிக்க, வந்தனா பின்னால் இருந்து அவனை அணைத்துக்கொண்டே, ''இது... பீத்தோவன்... ஃபர் எலிஸ்...' என்றாள்.

''குட்...'' என்ற மிதுன், அப்படியே அவள் கழுத்தில் முத்தமிட்டு, ''வேற என்ன வேண்டும்?'' என்றான்.

''மொஸார்ட்டோட மேஜிக் ஃபுளூட்!''

வந்தனா, அவன் முதுகில் சாய்ந்திருக்க மிதுன் வாசிக்க ஆரம்பித்தான். அந்த இசையும் ஸ்பரிசமும் அவர்களை வேறோர் உலகத்துக்கு இட்டுச் சென்றது. சட்டென்று இசைப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பிய மிதுன், அவளை ஆவேசத்துடன் அணைத்துக்கொண்டான்.

பெரிய பயணம் ஒன்று மேற்கொண்டது போல் இருந்தது. வழியெங்கும் நீரோடைகள். ஆசை தீர நனைந்தார்கள். முங்கி, முங்கிக் குளித்தார்கள். உடல் எங்கும், மனசு எங்கும், சந்தோஷம் பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடியது. குளித்துவிட்டுக் கரையேறியபோது உடல் எங்கும் வியர்வைத் துளிகள்.

''இப்ப காதல் வந்துருச்சா?'' என்றான் மிதுன்.

''இல்லை. காதல்ங்கிறது, காமத்தை அடைவதற்கான வழி. நம்மால் நேரடியாவே காமத்தை அடைய முடியறப்ப, காதலுக்கு இங்க அவசியம் இல்லை.''

''வெரிகுட்... இந்தத் தெளிவு எப்போதும் இருக்கணும்.''

ருந்தது. ஒரு வருடத்துக்குப் பிறகும் அந்தத் தெளிவு இருந்தது. இடைப்பட்ட காலத்தில், இருவரும் ஒரே அபார்ட்மென்ட்டில் வசிக்கத் தொடங்கினார்கள்.

அலுவலகத்தில் மிதுனின் மொபைல் சிணுங்கியது. வந்தனா!

''ஹாய் வந்தனா... வீட்டுக்கு வந்துட்டியா?'

''நான் வந்து ரெண்டு மணி நேரமாகுது. எப்படா வீட்டுக்கு வர்ற?'

''இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபீஸ்ல இருந்து கிளம்பிடுவேன். ஒரு மணி நேரம் டிராவல். அதிகபட்சம் ரெண்டு மணி நேரத்துல வீட்ல இருப்பேன்.''

ஒரு மணி நேரம் கழித்து, மிதுன் கிளம்பி கார் பார்க்கிங் வந்தபோது, அங்கே வந்தனா நின்றுகொண்டிருந்தாள்.

''ஹேய்... நீ எங்க இங்க?'

''வரணும்னு தோணுச்சு... வந்துட்டேன்.'

''நானே இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்திருப்பேன்ல!''

''தெரியும். இருந்தாலும் ஒரு மணி நேரம் முன்னாடி இருந்தே, உன்கூட கார்ல பேசிட்டே வரலாம்ல. அதான்... கால் டாக்ஸி பிடிச்சு இங்கே வந்துட்டேன்!'' என்ற வந்தனாவை மிதுன் பிரியத்துடன் நோக்கினான்.

ன்று வந்தனா மொபைலில் 'மிதுன் செல்லம் காலிங்’! தன் அலுவலகத்துக்கு அழைத்தான்.

ரிசப்ஷனிலேயே காத்திருந்த மிதுன், வந்தனா கையைப் பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான். அறை வாசலில் வந்தனாவின் கண்களைப் பொத்தினான்.

''ஏய்... என்னடா பண்ற? எதுக்கு என்னை இங்க வரச் சொன்ன?'

''சொல்றேன்...'' என்ற மிதுன் அவள் கண்களைப் பொத்திக்கொண்டு அறைக்குள் அழைத்துச் சென்றான். சில விநாடிகள் கழித்து அவன் கையை எடுக்க... கண்களைத் திறந்த வந்தனா ஆச்சர்யத்தில், ''மை காட்..!' என்று உற்சாகத்துடன் கத்தினாள்.

இது காதல் இல்லாத கதை!

வந்தனாவின் எதிரில் அவளுடைய பள்ளித் தோழி ஸ்வேதா சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.

''ஸ்வேதா...' என்று கத்திய வந்தனா பாய்ந்து ஸ்வேதாவை அணைத்துக்கொண்டாள்.

''கடவுளே... இனிமே என் லைஃல உன்னைப் பார்க்கவே மாட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன்' என்ற வந்தனாவின் கண்கள் கலங்கியிருந்தன.

''நானும்தான்...'

''நீ எப்படி இங்க வந்த?'

''நான் எங்கே வந்தேன்... உன் ஹீரோதான் என்னைத் தேடி, கண்டுபிடிச்சு அழைச்சுட்டு வந்தாரு'' என்று ஸ்வேதா கூற... வந்தனா கண்களில் கேள்வியுடன் மிதுனை நோக்கினாள்.

''உன்னை சர்ப்ரைஸா சந்தோஷப்படுத்த நினைச்சேன். என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். நீ ஒரு நாளைக்கு நாலு தடவை ஸ்வேதா பேரைச் சொல்லிட்டு இருப்ப... அதான் அவளைக் கண்டுபிடிச்சு, உன் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தினா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். செஞ்சுட்டேன்!'

அதன் பிறகு ஸ்வேதா ஏதேதோ பேச, வந்தனாவின் பார்வையோ மிதுன் மீதே ப்ரேமையுடன் நிலை கொண்டிருந்தன!

நாட்கள் ஓடின. உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அவர்களின் உறவுக்கும் ஒரு முடிவு வந்தது.

''மிதுன்... ஒரு முக்கியமான விஷயம். வீட்ல எனக்கு லண்டன்லயே ஒரு டாக்டர் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. வந்து கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க. மெயில்ல போட்டோ பார்த்தேன். பிசிக்கலி ஹி இஸ் ஓ.கே. பேசினான்... ரெண்டு நாள் சாட் பண்ணோம். நாட் பேட்.'

''நீ என்ன சொன்ன?''

''என்ன சொல்றது... ஓ.கே. சொல்லிட்டேன். நெக்ஸ்ட் வீக் எங்கேஜ்மென்ட். ஏன் கேட்கிற? என் மேல லவ்வு, கிவ்வுனு ஏதாச்சும்...''

''சேச்சே... காதல்னு ஒண்ணு இருந்தாதானே வர்றதுக்கு. நான்தான் காதலே இல்லைனு சொல்லிட்டு இருக்கேனே...''

''ஸோ... நம்ம உறவு ஒரு முடிவுக்கு வருது. இனிமேலும் நம்மளால நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும்னு நம்புறேன்.''

''ஷ்யூர்... எப்பப் போற?'

''நாளைக்கு லூஃப்தான்ஸால... ராத்திரி ரெண்டு மணிக்கு ஃப்ளைட்.'

இது காதல் இல்லாத கதை!

றுநாள் இரவு. மீனம்பாக்கம் விமான நிலையம். மிதுனும் வந்தனாவும் 11 மணிக்கே விமான நிலையத்துக்கு வந்துவிட்டனர். ஏனோ இருவரும் ஒன்றும் பேசத் தோன்றாமல் மௌனமாக அமர்ந்திருந்தனர். இருவரது முகத்திலும் ஒரு வாட்டம்!

''நாம பழக ஆரம்பிச்சு ஒரு வருஷம் இருக்குமா?'' என்றாள் வந்தனா.

''ம்... இருக்கும். ரொம்ப வேகமா ஓடிருச்சுல்ல?''

''ரொம்ப சந்தோஷமா இருந்தா, நேரம் ஓடறதே தெரியாதுனு சொல்வாங்க.''

''ஆமாம். ரொம்ப சந்தோஷமாதான் இருந்தோம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள். ஒரே மாதிரியான ரசனை!''

''ஏன்னு தெரியல... மனசுல ஒரு பாரம் இருக்கு. உனக்கு?''

''பாரம்னு சொல்ல முடியாது. ஆனா, ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அது என்னனு சொல்லத் தெரியலை!''

சில விநாடிகள் மௌனமாக இருந்த வந்தனா, ''ஓ.கே. மிதுன். போய் போர்டிங் பாஸ் வாங்கலாம்'' என்று எழுந்தாள்.

இருவரும் கவுன்டரை நெருங்கினர். டிக்கெட், பாஸ்போர்ட் காண்பித்து வந்தனா போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டாள். சில நிமிட மௌனம் உடைத்துப் பேசினாள் வந்தனா.

''நான் கிளம்புறேன் மிதுன். அடுத்து இமிக் ரேஷன் க்ளியரன்ஸ்... உள்ளே போயிட்டா திரும்ப வர முடியாது. ஏதாச்சும் சொல்லணுமா?''

''நத்திங்... நத்திங் டு ஸே எனிதிங்!'

''ஒரு விஷயம் கவனிச்சியா மிதுன்? இந்த ஒரு வருஷத்துல நாம ஒரு தடவைகூட சண்டையே போட்டுக்கலை!''

''ஆமாம்... நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங். அதான் சண்டையே வரல.'

''ஏன்னு தெரியல... திடீர்னு எனக்கு அழுகை, அழுகையா வருதுடா. உனக்கு?'' என்ற வந்தனா அழுதேவிட்டாள்.

''எனக்கு அழுகை எல்லாம் வரல...'' என்று கண்கலங்கிய மிதுன், ''ஆனா, உன்னைப் பிரியறதை நினைக்கறப்ப... ஏதோ ஒரு ஃபீலிங்'' என்றான்.

''என்ன ஃபீலிங்?''

''அதான் என்னனு தெரியலை...''

''தட் இஸ் லவ்...'' என்று கூறிய வந்தனா, பேக்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக கவுன்டரை நோக்கிச் சென்று, ''ஐ வான்ட் டு கேன்சல் தி டிக்கெட்...' என்றாள். மிதுனின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு, ''ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? காதல்னு ஒண்ணு இருக்குடா' என்றாள்.

''ஆமாம்... காதல் இருக்கு வந்தனா. எங்க வீட்டுல நாளைக்கே பேசிடுறேன். நீ உங்க அப்பாகிட்ட பேசிடு. இவ்வளவு நாளாப் பழகுறோம். அப்பல்லாம் தோணாம, இப்ப நீ கிளம்புற நேரத்துல தோணுது பாரேன்...'' என்று காதலுடன் கூறினான் மிதுன்.

''அது என்னனா, க்ளைமாக்ஸ ரயில்வே ஸ்டேஷன்லயோ, ஏர்போர்ட்லயோ வெச்சுக்கிட்டாதானே எஃபெக்ட்டா இருக்கும்!''

''இதோட மழையும் பெஞ்சிருந்தா இன்னும் எஃபெக்ட்டா இருந்திருக்கும்!''

இருவரும் சத்தமாகச் சிரித்தனர், காதல் பொங்க!

இது காதல் இல்லாத கதை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism