Published:Updated:

சூரியனைக் காணோம் !

மா.பிரபாகரன் ஓவியம்: மகேஸ்

சூரியனைக் காணோம் !

மா.பிரபாகரன் ஓவியம்: மகேஸ்

Published:Updated:
##~##

ஒரு நாள், காலையில் கண் விழித்த அந்தக் குட்டிச் சேவல் திடுக்கிட்டது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சூரியன் வரும்போது கூவி, ஊரார் அனைவரையும் எழுப்புவது அதன் வழக்கம். அன்றைக்கு சூரியன் வருவதற்கான அறிகுறியே இல்லை.

'இன்றைக்குச் சூரியன் வராவிட்டால், என்ன ஆகும்? மனிதர்கள்  வேலைக்குச் செல்ல மாட்டார்கள்; பறவைகள் இரை தேடப் போகாது; செடிகளில் பூக்கள் மலராதே...’ என்று நினைத்த குட்டிச் சேவல், கூண்டின் ஒரு மூலையில் இருந்த தாத்தா சேவலிடம் ஓடியது.

''தாத்தா, சூரியனைக் காணோம். எல்லோரும் என்னை நம்பித் தூங்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?'' என்று படபடப்புடன் கேட்டது.

அதற்குத் தாத்தா சேவல், ''ஊழிக்காலத்துலதான் சூரியன் வராது. இப்ப கண்டிப்பா வரும். நீ போய்க் கூவு. என்னைத் தொந்தரவு பண்ணாதே!'' என்றபடி சுகமாகச் சுருண்டுகொண்டது.

'இந்தத் தாத்தா எப்பவும் இப்படித்தான். எல்லா விஷயத்திலும் அசட்டை’ என்று மனதில் எண்ணியபடி, அந்தக் குட்டிச் சேவல் அம்மா கோழியிடம் ஓடியது. ''அம்மா சூரியனைக் காணோம். தாத்தாகிட்ட சொன்னா, ஊழி... சோழினு குழப்புறார்!'' என்றது.

அதற்கு அம்மா கோழி, ''தாத்தா சொன்ன மாதிரி செய். சூரியன் வந்துரும்'' என்றது.

'இதென்ன அம்மாவும் இதையே சொல்கிறாள்.  சூரியன் வரும் அறிகுறியையே காணோமே!’ என்று  சலித்துக்கொண்டது குட்டிச் சேவல்.

சூரியனைக் காணோம் !

இருட்டைப் பார்த்தால், நடுச்சாமம் மாதிரி இருக்கிறது. தப்பாகக் கூவப்போய்... கண்விழிக்கும் மக்கள், 'எங்களின் தூக்கத்தைக் கெடுத்துட்டியே’ என்று அடிக்க வந்துவிட்டால் என்ன செய்வது? ஒருவேளை காலம் தாழ்ந்து கூவினால், 'இவ்வளவு நேரம் என்ன செய்தே?’ என்றும் கோபப்படுவார்களே...

எஜமானியம்மாளை நினைத்தும் குட்டிச் சேவலுக்குப் பயம். அவள் கையில் எப்போதும் குச்சி ஒன்று இருக்கும். கோபம் வந்துவிட்டால், அதைத் தூக்கி மேலே வீசுவாள். இதுவரை குட்டிச் சேவல் அடி வாங்கியதில்லை. 'இப்போது தப்பாகக் கூவி, எஜமானி என்னைப் பிடித்து, நாலு சாத்து சாத்தினால் என்ன ஆகும்? சே... இந்தச் சூரியனால்  எனக்குத்தான் எவ்வளவு பிரச்னைகள்!’

சூரியனைக் காணோம் !

இப்படி தவித்த குட்டிச் சேவல், 'தாத்தாவும் அம்மாவும் சொன்ன பிறகு ஏன் தயங்க வேண்டும்? எதற்கும் இருக்கட்டும்’ எனக் கூண்டில் இருந்தபடியே 'கொக்கரக்கோ...கோ’ என மூன்று முறை கூவியது.

அந்தக் குட்டிச் சேவலின் குரலைக் கேட்கும் யாருக்கும் முதலில் சிரிப்புதான் வரும். அதன் குரல், முழுமையாக வளர்ந்த சேவலின் குரல் போன்று கம்பீரமாக இருக்காது. ஆனாலும் மக்கள் அதன் குரலைக் கேட்டு கண் விழிப்பார்கள். அதை நினைத்து மிகவும் பெருமிதப்படும்.

இப்போது கூவிவிட்டதே ஒழிய, அதற்கு உள்ளூர நடுக்கம். சில நிமிடங்கள் கழித்து, வெளியே மரக் கிளைகளில் பறவைகள் படபடக்கும் ஓசை. மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளின் குளம்படி சப்தம்.

'அப்பாடா... விடிந்துகொண்டுதான் இருக்கிறது. அப்புறம் ஏன் இருள் விலகாமல் இருக்கிறது... வெளியே சென்றால்தான் உண்மை தெரியும்’ என நினைத்தது.

சரியாக ஆறு மணிக்கு எஜமானி அம்மாள் கூண்டைத் திறந்துவிட்டாள். குட்டிச் சேவல் வெளியே தாவியது. அதன் முகத்தில் சிலீரெனக் குளிர்ந்த காற்று மோதியது. வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன. அதனால்தான் சூரியன்  முகத்தைக் காட்டவில்லை. குட்டிச் சேவலுக்கு விஷயம் புரிந்தது. அதற்கு ஒரு சந்தேகம்... 'கூண்டில் சிறு வெளுப்புகூட வரவில்லை. கூண்டின் கணகணப்பிலும்  மாற்றம் இல்லை. பிறகு எப்படி தாத்தாவும் அம்மாவும் 'இது நடுச்சாமம் அல்ல’ என்று உறுதியாகச் சொன்னார்கள்?’

குப்பைமேட்டை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருந்த அம்மா கோழியிடம் ஓடியது குட்டிச் சேவல்.

சூரியனைக் காணோம் !

''நடுச்சாமம் என்று எப்படிச் சொன்னாய்? கோட்டான்களின் அலறல் கேட்டதா? சாமக்கோடாங்கி குறிசொல்லிக்கொண்டு போனானா? நள்ளிரவில் மலரும் மலர்களின் வாசனை வந்ததா?'' என்று கேட்டது அம்மா கோழி.

'ஓ... இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா’ என்பது போல குட்டிச் சேவல் அமைதியாக இருந்தது.

அம்மா கோழி தொடர்ந்தது. ''ஒருநாள் என்பது ஆறு சிறுபொழுதுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு சிறுபொழுதுக்கும் தனி குணம் உண்டு. அதற்கேற்ப உயிரினங்களின் செயல்பாடுகள் இருக்கும். இவைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவை, நாளடைவில் ஒரு காலக் கடிகாரமாக மூளையில் பதிவாகிவிடும். அதன் மூலம் நேரத்தைக் கணிக்க வேண்டும். நீ இன்னும் வளரணும் தம்பி'' என்ற அம்மா கோழி, குட்டிச் சேவலின் முதுகில் செல்லமாகக் கொத்திவிட்டுப் போனது.

'தாத்தாவிடம் இருந்து சூரியனை வரவேற்கும் பொறுப்பை வாங்கிவிட்டோம். இனி நாம்தான் பெரிய ஆள் என்று கர்வமாக இருந்தேனே? எனக்குத் தெரியாத விஷயங்கள் இன்னும் ஏராளம் இருக்கும் போலிருக்கே... இனிமேல் பெரியவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்’ என்று நினைத்தபடி அமைதியாக நடக்க ஆரம்பித்தது குட்டிச் சேவல்.