Published:Updated:

அந்த சில நிமிடங்கள்!

வேணு சீனிவாசன், ஓவியம்: கண்ணா

பிரீமியம் ஸ்டோரி
##~##

 லைப்பாதையில் கார் வளைந்து வளைந்து சென்றது. ஓவ்வொரு திருப்பத்திலும் ஆகாஷ் கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவனுடைய அக்கா அனுஷாவின் எண்ணங்கள் எங்கோ இருந்தன.

ஒரு திருப்பத்தில் எங்கோ வித்தியாசமான ஓசை கேட்டது. ''என்ன அது?'' என்று கேட்டார் அப்பா.

''மரம் முறியுதுங்க'' என்றார் டிரைவர்.

இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையோடு பார்த்துக்கொண்டனர். ''அதோ பாருங்க... ஒரு சின்ன குன்று தெரியுது. அங்கே இருக்கிற எஸ்டேட்டை நான் வாங்கப்போறேன். பயணியர் தங்கும் விடுதியும், யோகா மையமும் கட்டப்போறேன்'' என்றார் அப்பா.

''அப்பா, இந்த வழியில்தான் காட்டு யானைங்க அடிக்கடி போகுமாமே?'' என்று கேட்டாள் அனுஷா.

''நோ பிராப்ளம். காட்டு யானைங்க வராதபடி  மின்சார வேலி போட்டுடலாம்'' என்றார் அவர்.

''குடிசையைப் பிச்சி எறியுதுங்க. கரும்புத் தோட்டத்தை அழிக்குதுங்க. அதுங்களை சும்மா விடக் கூடாதுப்பா'' என்றான் ஆகாஷ்.

காட்டு யானைகள் இந்தப் பகுதிக்குள் நுழைவது பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி செய்தி வருவதை ஆகாஷ் படித்திருந்தான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சாலைக்கு நடுவே, ஒரு குட்டி யானை துதிக்கையை வேகமாக ஆட்டியபடி ஓடிவந்தது.

அந்த சில நிமிடங்கள்!

''காரை நிறுத்திடு'' என்றார் அப்பா.

குட்டி யானை காரின் அருகில் வந்து சுற்றிச் சுற்றிப் பார்த்தது. காரின் கதவில் தும்பிக்கையை வைத்து முகர்ந்தது. பெட்ரோல் வாசம் பிடிக்கவில்லையோ என்னவோ, தும்பிக்கையை தூக்கிப் பிளிறியது. உடனே பாதையின் மேல் பக்கத்தில் மரங்களின் அடர்த்திக்குப் பின்னால் மிகப் பெரிய உருவம் அசைந்தது. குட்டி யானையின் அம்மா.

குட்டிக்கு ஏதாவது ஆபத்து என்றால், அவர்களைத் தாக்குவதற்குத் தயார்நிலையில் நிற்கிறது என்பது புரிந்தது. ''காட்டை விட்டுட்டு எதுக்காக இங்கே வருதுங்க'' என்று எரிச்சல் காட்டினார் அப்பா.

''அப்பா, அது இருக்கிற இடத்துல நாம் வீடுகளைக் கட்டிட்டோம், அணைகளை கட்டிட்டோம். நெடுஞ்சாலைகளை ஏற்படுத்திட்டோம். அதுங்க உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் இடம் மாறும்போது... அங்கே காடுகளுக்குப் பதிலாக கரும்பு வயல் இருக்குது, குடிசைங்க இருக்குது. அதுங்க என்ன செய்யும்?'' என்றாள் அனுஷா.

''ஆரம்பிச்சுட்டா அனிமல் அரசி. யானை என்ன செய்யுமோனு டென்ஷனா இருக்கு. நீ வேற'' என்று பயமும் கோபமும் கலந்து, அக்காவை முறைத்தான் ஆகாஷ்.

அனுஷா, விலங்குகள் விரும்பி. எப்போது பார்த்தாலும் தோட்டத்தில்தான் இருப்பாள். அணில், சிட்டுக்குருவிகளுக்கு உணவு கொடுப்பாள். தம்பியிடம் பேசுவதைவிட, தும்பியோடு நிறைய நேரம் பேசிக்கொண்டிருப்பாள்.

டிரைவர் வண்டியை மெதுவாக ரிவர்ஸ் எடுத்தபோது, பெரிய யானை பாதையை மறித்துக்கொண்டு பின்னால் நின்றது. இப்போது அடர்ந்த மரங்களின் நடுவே, வேறு சில யானைகள் தெரிந்தன. ஓரக் கண்களினால்  கவனித்தபடியே மரக்கிளைகளை உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தன.

கார் என்ஜின் ஓட்டத்தை அணைத்துவிட்டு, கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக யானைகளைப் பார்த்தபடி பயத்தோடு உட்கார்ந்திருந்தனர்.

பெரிய யானை இரண்டு அடிகள் முன்னால் வந்து, காரை தும்பிக்கையால்  மெதுவாகத் தள்ள ஆரம்பித்தது. கார், மலைப்பாதையின் விளிம்பை நோக்கி நகர்ந்தது. ''அப்பா, பள்ளத்துல கார் விழுந்துடுமா? இறங்கி ஓடிடலாம்'' என்று அச்சத்தோடு கத்தினான் ஆகாஷ்.

அந்த சில நிமிடங்கள்!

''பொறுமையா இருங்க. சமயம் பார்த்து இறங்கணும். இல்லேன்னா யானைங்ககிட்டே மாட்டிப்போம். அதுங்க கோவப்படலே, சும்மா விளையாடுதுங்க'' என்றார் டிரைவர்.

அந்த வார்த்தைகள் ஆறுதலைத் தந்தாலும் 'அடுத்து என்ன நடக்குமோ’ என்ற பரபரப்பு தொற்றியது. கார் முனகிக்கொண்டே பின்னால் நகர்ந்தது. டிரைவர் காரின் கதவைத் திறந்துகொண்டு லாகவமாக வெளியே பாய்ந்தார். அவரைத் தொடர்ந்து அனுஷா, பிறகு ஆகாஷ்.

இதைப் பார்த்த குட்டி யானை, அவர்களை துரத்த ஆரம்பித்தது. அப்பா மட்டும் காருக்குள் மாட்டிக்கொண்டார். சற்று தொலைவு அவர்களை துரத்திய குட்டி யானை, என்ன நினைத்தோ திரும்பி காரை நோக்கி வந்தது. அப்பா உள்ளேயே உட்கார்ந்துவிட்டார்.

டிரைவர் சுற்றிலும் பார்த்தார். மலைச்சரிவில் தேயிலைத் தோட்டம் தெரிந்தது. ''அனுஷா, நீ இங்கேயே இருந்து காரைக் கவனிச்சுக்க. நாங்க ஆட்களைக் கூட்டிட்டு வர்றோம். பயப்படாதே, ஒண்ணும் ஆகாது'' என்றார்.

புதருக்குப் பின்னால் மறைந்துகொண்டு, அப்பாவுக்கு எதுவும் ஆகக் கூடாது என்ற பதைபதைப்போடு காத்திருந்தாள் அனுஷா. சற்று நேரத்தில், தேயிலைத் தோட்ட ஆட்களுடன் டிரைவர் வந்துவிட்டார்.

அவர்கள், தாரை தப்பட்டையைத் தட்டி சத்தம் எழுப்பினர். தாயும் குட்டி யானையும் மரங்களுக்கிடையே நுழைந்து மறைந்துவிட்டன.

அப்பா, காரைவிட்டு வெளியே வந்தார். ஆகாஷ§ம் அனுஷாவும் அவரைக் கட்டிக்கொண்டார்கள். ''நல்லவேளை, யார் செய்த புண்ணியமோ... யானைங்க ஒண்ணும் செய்யலை'' என்று ஒருவர் சொன்னதும், அப்பா மற்றும் ஆகாஷ் பார்வை இயல்பாக அனுஷா பக்கம் சென்றது.

''கொஞ்ச நேரம் உள்ளே மாட்டிகிட்டதுக்கே இப்படி தவிச்சுப்போய்ட்டோமே. யானைகள் வர்ற வழியை வேலி போட்டு நிரந்தரமாத் தடுத்துட்டா, அதுங்க எப்படி தவிக்கும்'' என்றாள் அனுஷா.

அப்பா டிரைவர் பக்கம் திரும்பி, ''டிரைவர் காரைத் திருப்புங்க. நாங்க ஊருக்குப் போறோம்'' என்றார்.

''ஏன் சார் பயந்துட்டீங்களா?'' என்று கேட்டார் டிரைவர்.

''இல்லை... புரிஞ்சுக்கிட்டேன்'' என்றார் அப்பா.

***********

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு